விஷ்ணுபுரம் (புதினம்)

விஷ்ணுபுரம் ஜெயமோகன் எழுதிய புதினம். இது இவரது இரண்டாவது புதினமாகும். 1997 இல் இதன் முதற்பதிப்பு வெளியாகியது. கும்பகோணம் அகரம் பதிப்பகம் இதை வெளியிட்டது. சென்னை கவிதா பதிப்பகம் இதன் நான்காவது பதிப்பை வெளியிட்டது. ஐந்தாம்பதிப்பை நற்றிணைப் பதிப்பகம் சென்னை வெளியிட்டுள்ளது.

விஷ்ணுபுரம்
நூல் பெயர்:விஷ்ணுபுரம்
ஆசிரியர்(கள்):ஜெயமோகன்
வகை:புதினம்
துறை:{{{பொருள்}}}
மொழி:தமிழ்
பக்கங்கள்:800

கருவும் களமும்

தொகு

ஏறத்தாழ 800 பக்கம் கொண்ட நாவல் இது. விஷ்ணுபுரம் என்ற கற்பனைநகரம் இதன் கதைக்களம். அங்கே ஒரு மாபெரும் கோயில் உள்ளது. இந்த கோயிலின் கருவறைக்குள் ஒரு மாபெரும் கிடந்த கோலத்திலிருக்கும் சிலை உள்ளது. இது விஷ்ணு சிலையென வைதீர்களும், பெருமூப்பன் சிலையென செம்படவர்களும் நம்புகின்றனர். இச்சிலை யுகத்துக்கு ஒருமுறை புரண்டுபடுக்கும் என்று ஐதீகம் அங்கே உள்ளது. அந்த ஐதீகத்தை குறியீடாக ஆக்கி இந்நாவல் எழுதப்பட்டிருக்கிறது. இந்நாவல் பின் நவீனத்துவ கூறுகளைக் கொண்டது. கதை நேர்கோடாகச் செல்லாமல் முன்னும்பின்னுமாக ஊசலாடி பல இடங்களை தொட்டுசெல்கிறது. 200க்கும் மேற்பட்ட கதைமாந்தர்களின் வாழ்க்கையும் நூற்றுக்கணக்கான கதைகளும் பின்னி அளிக்கப்பட்டிருக்கின்றன. இந்தக்கதை ஒரு மிகைபுனைவு ஆகும். இது யதார்த்தமான நிகழ்ச்சிகளும் அதீத கற்பனைகளும் கலந்தவையாக உள்ளது. இது புராணத்தன்மை கொண்ட நாவல் ஆகும்.

பகுதிகள்

தொகு

இதன் அமைப்பு திருப்பாதம், உந்தி, மணிமுடி என்று மூன்று பகுதிகளாக உள்ளது. முதல் பகுதி கிபி பத்தாம் நூற்றாண்டில் விஷ்ணுபுரம் இந்து பக்தி இயக்கத்தால் செழித்திருந்த காலத்தை காட்டுகிறது. இரண்டாம் பகுதி கிபி நான்காம் நூற்றாண்டுக்குச் சென்று இந்துவேதாந்திகள் கையில் இருந்து விஷ்ணுபுரத்தை அஜிதன் என்ற பௌத்த துறவி கைப்பற்றுவதை காட்டுகிறது. மூன்றாம் பகுதி கிபி 13 ஆம் நூற்றாண்டு. இஸ்லாமியப் படையெடுப்பால் விஷ்ணுபுர ஆலயம் அழிந்து படிப்படியாக இல்லாமலாவதை காட்டுகின்றது.

முதல் பகுதியில் தொன்மங்களாக வந்தவர்கள் இரண்டாம்பகுதியில் உண்மை மனிதர்களாக வருகிறார்கள். முதல் பகுதியில் உண்மை மனிதர்களாக வந்தவர்கள் மூன்றாம் பகுதியில் தொன்மங்களாக ஆகிவிடுகிறார்கள். இந்த மாற்றங்களை இந்நாவல் விரிவாகச் சொல்கிறது

விஷ்ணுபுரத்தின் கதைக்கரு என்பது காலந்தோறும் மானுடன் கொள்ளும் ஆன்மீகமான தேடல் ஆகும். தேடுகிறவர்கள் கண்டடையும் பதில்கள் காலப்போக்கில் நிறுவனங்களாகவும் மதங்களாகவும் ஆகின்றன. புதிய தேடல்கள் பிறந்துகொண்டே இருக்கின்றன

விஷ்ணுபுரம் இந்திய மரபில் உள்ள புராணம் சார்ந்த கதைசொல்லும் முறையை பயன்படுத்திக்கொள்கிறது. இது ஒரு கலைக்களஞ்சியத்தன்மை கொண்ட நாவல். குதிரை வளர்ப்பு, யானை வளர்ப்பு, சிற்பவியல், இசை, நடனம், நாடகம், காவிய இயல் எல்லாவற்றையும் இந்த நாவல் விரிவாகவே சித்தரிக்கிறது.

இந்திய ஞானமரபை விரிவான தத்துவ விவாதங்கள் வழியாக கவித்துவமாகச் சித்தரித்துக்காட்டுகிறது இந்த புதினம்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=விஷ்ணுபுரம்_(புதினம்)&oldid=3442747" இலிருந்து மீள்விக்கப்பட்டது