வீரை அம்பிகாபதி

வீரை அம்பிகாபதி [1] 16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ்ப் புலவர்களில் ஒருவர். இவர் வீரை கவிராச பண்டிதர் என்னும் புலவரின் மகன். நெல்லை வருக்கக் கோவை, பராபரை மாலை என்னும் நூல்களை இயற்றியவர். வீரை என்னும் ஊரில் வாழ்ந்தவர்.

இவர் பாண்டியன் அவைக்குச் சென்றபோது பாண்டியனின் விருப்பப்படி தென்காசி, மதுரை, நெல்லை, கருவை ஆகிய ஊர்ப் பெயர்களும், இந்த நான்கு ஊர்களின் இறைவன் பெயர்களும் ஒரே பாடலில் வருமாறு பாடிக்காட்டித் தன் புலமையை வெளிப்படுத்தினார் என்னும் வரலாற்றைக் கூறும் பாடல் ஒன்று உண்டு. அது:

இலகேழ் அகிலத்தர் சொக்கர் முத்தீசர் இயம் தொழுவோர்
கலை தேர் தென்காசி மதுரை நெல்வேலி கருவை வந்த
பல கேள்வர் உள்ளிர் எம் பங்கு நிற்பீர் வந்து பாதம் தொழ
உலகே கயற்கண்ணியே வடிவே எங்கள் ஒப்பனையே [2][3]

இவர் தன் தந்தையைக் காட்டிலும் புலமை மிக்கவர் எனத் தெரிகிறது. இவரால் பாடப்பட்ட தனிப்பாடல்கள் பல. அவை இப்போது கிடைக்கவில்லை. இவர் பாண்டியனிடம் விருதுகள் பல பெற்றார். இவர் இறந்தபோது இவரது தந்தை பாடிய பாடல்.

பாவினும் துய்ய பராபரை மாலையைப் பாடியிட்ட
நாவிலும் தீ பற்றுமோ தெய்வமே நன் நறுங் கமலப்
பூவிலும் துய்ய பிரான் அம்பிகாபதி பொற்பு அமரும்
தேவிலும் துய்ய திருமேனி நீறு எழும்போதினிலே.[4][5]

அடிக்குறிப்பு

தொகு
  1. மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1976, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, மூன்றாம் பாகம். சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. p. 257. {{cite book}}: Check date values in: |year= (help)
  2. இது கட்டளைக் கலித்துறை யாப்பால் அமைந்துள்ள பாடல்
  3. பொருள் நோக்கில் பாடல் சொற்பிரிப்பு செய்யப்பட்டுள்ளது
  4. இதுவும் கட்டளைக் கலித்துறை யாப்பினால் அமைந்துள்ள பாடல்.
  5. பொருள் நோக்கில் சொற்பிரிப்பு
"https://ta.wikipedia.org/w/index.php?title=வீரை_அம்பிகாபதி&oldid=2717866" இலிருந்து மீள்விக்கப்பட்டது