வெல்க்ரோ (Velcro) என்பது துணி ஆடைகளில் பயன்படும் “கொக்கியும் வளையமும் வகையான பிணைப்பிகள்” ஒன்றின் வணிகப் பெயர்[1] பொதுவாக இரண்டு துணிப்பகுதிகளை தற்காலிகமாக இணைக்கவும் பிரிக்கவும், ஒரு பகுதியில் மிகச் சிறிய கொக்கிகள் கொண்ட பட்டை ஒன்றும், மற்றொரு பகுதியில், ஒரு பட்டையில் இன்னும் மிகச்சிறிதான மெல்லிய இழைகள் போன்ற அமைப்பும் தைக்கப்பட்டிருக்கும் (அல்லது ஒட்டப்பட்டிருக்கும்). இப்பொழுது துணியின் இரு பகுதிகளையும் ஒன்றன் மீது ஒன்றாக வைத்து, மெல்ல அழுத்தினால், அவ்விரு பகுதிகளும் கொக்கிகள் உள்ள பகுதி மெல்லிழைகள் கொண்ட பகுதியில் மாட்டிக்கொண்டு கெட்டியாய் பிடித்துக்கொள்ளும்.[2]. இவற்றைப் பிரிக்க வேண்டுமெனில், ஒரு பகுதியைப் பிடித்துக்கொண்டு, துணியின் மறு பகுதியை விலக்கினால் “பர்ர்ர்” என்று சிறு ஒலி எழுப்பி, கொக்கிகள் இழைகளில் இருந்து விடுபட்டு துணியின் இரு பகுதிகளும் பிரிந்துகொள்ளும். பிரிக்கும் பொழுது “பர்ர்ர்” என்று ஒலி எழுப்புதால் இதனை பர்-பிணைப்பி என்றும் கூறுவதுண்டு.

கொக்கிகள் (இடம்), மெல்லிழை வளையம் (வலம்).

கொக்கிகளும் இழைகளும் கொண்ட வெல்க்ரோவின் இவ் அமைப்புகளைப் பல பொருள்களைக் கொண்டு செய்யலாம் ஆனால் முதல் முயற்சியாக பஞ்சுத் துணியில் செய்து பார்த்தனர். அவை சரியாக வேலை செய்யவில்லை[3]. . இன்று நைலானும், நெகிழிகளும்[4] இவற்றிற்கு வெகுவாகப் பயன்படுகின்றன. ஸ்பேஸ் ஷட்டில் போன்ற விண்ணோடங்களில் பயன்படும் வெல்க்ரோக்களில் டெஃவ்லான்[5] என்னும் பொருளால் செய்த இழைகளும், பாலியெஸ்ட்டர் கொக்கிகளும் பயன்படுகின்றன.

வெல்க்ரோ என்னும் பெயர் பல நாடுகளில் பதிவு செய்யப்பட்ட வணிகப் பெயர். துணியாடைகள் துறையில் வெல்க்ரோ என்பது “கொக்கி-வளையம்”, “பர்-பிணைப்பி”, "தொடு-ஒட்டி"- வகை பிணைப்பிகள் வகையில் அடங்கும் ஒன்று. ஆனால் இன்று வெல்க்ரோ என்பதே தனிவணிகப் பெயரிலிருந்து பொதுமை அடைந்துவிட்ட ஒரு பெயராக விளங்குகின்றது. வெல்க்ரோ நிறுவனத்தின் தலைமைச் செயலகம் மான்ச்செஸ்ட்டர், நியூஃகாம்சயர்,ஐக்கிய அமெரிக்காவில் உள்ளது.

வரலாறு தொகு

 
மருளூமத்தை(cocklebur or Burdock datura) போன்ற ஒருவகை செடியில்(Arctium lappa) காணப்படும் கொக்கி போன்ற நுனி

1941 ஆம் ஆண்டு சுவிர்சர்லாந்தைச் சேர்ந்த பொறியாளர் ஜியார்ஜ் டி மெஸ்ட்ரல் [6][7][8] வெல்க்ரோ என்னும் இப்பிணைப்பு முறையை புதிதாக இயற்றினார் (கண்டுபிடித்தார்). இவர் சுவிட்சர்லாந்தில் கம்யூனி (Commugny ) என்னும் இடத்தில் வாழ்ந்தார். ஒருமுறை இவர் தன்னுடைய நாயுடன் ஆல்ப்ஸ் மலைப்பகுதியில் வேட்டைக்குச் சென்று திரும்பியபொழுது, தன் ஆடைகளிலும் நாயின் உடலிலும் மீண்டும் மீண்டும் ஒட்டிக்கொண்டிருந்த மருளூமத்தைச் செடியின் விதைகளை நுண்ணோக்கியின் உதவியால் உற்று நோக்கினார். நுண்ணோக்கியில் பார்க்கும் பொழுது மருளூமத்தைச் செடியின் விதையின் முனைகளில் தெரிந்த கொக்கி போன்ற பகுதியைப் கூர்ந்து நோக்கினார். இந்த கொக்கி போன்ற அமைப்பே நாயின் முடியிலும், தன் உடைகளின் நூலிழைகளுடனும் மாட்டிக்கொண்டது என்று உணர்ந்தார். [3] இதன் பயனாக தற்காலிகமாகப் பிணைத்துக் கொண்டு பிரிக்கவல்ல எளிமையான பிணைப்பிகளை செய்யலாம் என்னும் கருத்து தோன்றியது.[7].[8] ஆனால் இதே போன்ற அமைப்பை செயற்கையாக உருவாக்கவேண்டும்.

பிரான்சில் நெசவுக்குப் புகழ்பெற்ற லியோ(ன்) (Lyon) என்னும் நகரத்திற்குச் சென்று அங்கிருந்தவர்களிடம் தன் கண்டுபிடிப்பை எடுத்துச் சொன்ன பொழுது, அவர்களில் பலர் இது அப்படி பயன்படும் என்று நம்பவைல்லை. ஆனால், அங்கிருந்தவர்களில் ஒரே ஒரு நெசவாளி மட்டும் நம்பிக்கைக்கொண்டார். அவர் பஞ்சுநூல் துணியில் மெஸ்ட்ரலுக்குச் செய்து காட்டினார். அது எதிர்பார்த்தபடி வேலை செய்தது. என்றாலுல் விரைவில் அது தன் ஒட்டும் பண்பை இழந்தது. எனவே மெஸ்ட்ரல், பஞ்சுநூலுக்கு மாறாக செயற்கை இழைகளைக் கொண்டு முயன்று பார்த்துக் கடைசியில் நைலான் இழையைக் கொண்டு செய்ய முடிவு செய்தார்.[3]. நைலான் இழைகள் பயன்படுத்துவதில் பல நன்மைகள் இருந்தன. அவற்றுள் இழைகள் எளிதில் அறாமல் இருப்பதும், நைந்து, பூஞ்சைப் படிவுகள் கொள்ளாமல் இருப்பதும், பல்வேறு தடிப்புகளில் செய்ய இயலுவதும் சிலவாகும். .[4] நைலான் அப்பொழுதுதான் புதிதாக இயற்றப்பட்டிருந்தது (கண்டுபிடிக்கப்பட்டிருந்தது), எனவே பல முயற்சி-தோல்விகளுக்குப் பிறகு கடைசியாக வெப்பக்கதிர்வீச்சு விளக்கின் உதவியால் நைலான் இழைகள் கொக்கிகள் போல் வளைவதைக் கண்டுபிடித்தனர். ஆனால், எவ்வாறு இழை வளையங்களைச் செய்வது என்று விளங்கவில்லை. இவற்றை எவ்வாறு எந்திரவியக்கமாகச் செய்வது என்றும் விளங்கவில்லை. ஒருவாறு தகுந்த வெப்பநிலை பதப்படுத்தல் முறைகளால் நைலான் இழைகள் உருக்குகுலையாமல் உறுதி பெற்று இருக்கவும், எதிர்ப்புறம், நைலான் இழைகளால் ஆன பகுதியை கத்தரிக்கோலால் மேலோட்டமாக வெட்டி பொருத்தமான கொக்கி போன்ற முனைகள் உருவாக்கவும் அறிந்து கொண்டனர். இவ்வகையான முறையில், பன்முறை ஒட்டிப் பிரிக்கும் கொக்கி-வளையங்கள் கொண்ட அமைப்புகளை உருவாக்கினர். .[3]

ஆனால் மேற்கொண்ட முறையை எந்திர இயக்கமாக்க ஏறத்தாழ பத்து ஆண்டுகள் ஆயின. .[3] மெஸ்ட்ரல் தன்னுடைய படைப்புக் காப்புரிம மணுவை சுவிட்சர்லாந்தில் 1951ல் செலுத்தினார். அக் காப்புரிமம் அவருக்கு 1955 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. அதன்பின் சில ஆண்டுகளில் செர்மனி, இங்கிலாந்து, சுவீடன், இத்தாலி, நெதர்லாந்து, பெல்ஜியம், கனடா ஆகிய நாடுகளிலும் காப்புரிமம் பெற்றார். அதன் பின் 1957ல் அமெரிக்காவில் மான்ச்செஸ்ட்டர், நியூஃகாம்சயர் சென்று அங்கு தன் நெசவகத்தை நிறுவினார். இன்று வெல்க்ரோவின் விற்பனை ஆண்டொன்றுக்கு 100 மில்லியன் அமெரிக்க டாலர் அளவில் நிகழ்கின்றது..[3]

1978இல் மெஸ்ட்ரலின் காப்புரிமம் கால அறுதி எட்டியபின், தாய்வான், சீனா, தென் கொரியா ஆகிய நாடுகள் மலிவாக இவற்றை செய்து விற்பனை செய்கின்றன.

வெல்க்ரோ என்னும் பெயர் இரண்டு பிரெஞ்ச்சு மொழிச் சொற்களின் கூட்டு: (1) ‘’velours’’ என்றால் நெருக்கமான முடிகள் போலுள்ள “வெல்வெட்டு”, இரண்டாவது சொல் நூலிழைப் பின்னல் தொழிலில் பயன்படும் குரோசே (crochet) என்னும் கொக்கிக் கம்பி. ஆகவே இரண்டு சொற்களிலும் உள்ள முதல் மூன்று எழுத்துக்களைக் கொண்டு Vel + Cro = Velcro என ஆயிற்று. [1][8][9] இன்று 159 நாடுகளில் இப்பெயரின் வடிவங்கள் 300க்கும் அதிகமான வணிகப்பெயர்களாக பதிவு செய்து உள்ளன.

பிணைப்பின் வலிமை தொகு

 
The hooks on a piece of Velcro brand fastener
 
The loops on a piece of Velcro brand fastener

வெல்க்ரோ வியப்பூட்டும் வலிமை கொண்டிருக்கின்றது. வெறும் 5 செமீ x 5 செமீ வெல்க்ரோ பட்டையானது நன்றாக பற்றியிருக்கும் பொழுது 79.5 கிகி (175 பவுண்டு) மாந்தனைத் தாங்கும்! பிணைப்பின் வலு, கொக்கிகள் எந்த அளவுக்கு நன்றாக வளையங்களைப் பற்றியுள்ளன என்பதைப் பொருத்தும், எத்தனை அடர்த்தியாக இவை பற்றியுள்ளன என்பதைப் பொருத்தும், விசை எந்த திசையில் இயங்குகின்றது என்பதைப் பொருத்தும் அமையும்.

அடிக்குறிப்புகளும் மேற்கோள்களும் தொகு

  1. 1.0 1.1 "Velcro." The Oxford English Dictionay. 2nd ed. 1989.
  2. "Velcro". Merriam Webster. அணுகப்பட்டது 2008-05-10. 
  3. 3.0 3.1 3.2 3.3 3.4 3.5 Strauss, Steven D. (December 2001). The Big Idea: How Business Innovators Get Great Ideas to Market. Kaplan Business. பக். pp.15-pp.18. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0793148375. http://books.google.com/books?id=F_yOHB54CxsC&pg=PA18&dq=velcro+George+de+Mestral&client=opera&sig=HZAGC4gb4R-JeDgd7d0n5LcYvaA. பார்த்த நாள்: 2008-05-09. 
  4. 4.0 4.1 Schwarcz, Joseph A. (October 2003). Dr. Joe & What You Didn't Know: 99 Fascinating Questions About the Chemistry of Everyday Life. Ecw Press. பக். p.178. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1550225774. http://books.google.com/books?id=vAXcX2xm6esC&pg=PA178&dq=velcro+George+de+Mestral&client=opera&sig=txJKVWx8SlBx5l0Oprs1VqTmgaQ. பார்த்த நாள்: 2008-05-09. "But not every Velcro application has worked... A strap-on device for impotent men also flopped." 
  5. டூ பாண்ட் நிறுவனத்தின் வணிகப்பெயர். இது வேதியியலில் பாலிடெட்ராபுளூரோஎத்திலீன் (Polytetrafluoroethylen)(PTFE) எனப்படுவது. இது CnF2n என்னும் வாய்பாடு கொண்டது.
  6. McSweeney, Thomas J.; Stephanie Raha (August 1999). Better to Light One Candle: The Christophers' Three Minutes a Day: Millennial Edition. Continuum International Publishing Group. பக். p. 55. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0826411622. http://books.google.com/books?id=-1Vm4OZ1B44C&pg=PA57&dq=velcro+George+de+Mestral&lr=&client=opera&sig=Ry4mpDKgBKQhaqpToo9lpzWV42Y. பார்த்த நாள்: 2008-05-09. 
  7. 7.0 7.1 "About Us:History". Velcro.uk. Archived from the original on 2008-06-14. பார்க்கப்பட்ட நாள் 2008-05-09.
  8. 8.0 8.1 8.2 Stephens, Thomas (2007-01-04). "How a Swiss invention hooked the world". swissinfo.ch. Archived from the original on 2008-06-14. பார்க்கப்பட்ட நாள் 2008-05-09.
  9. "About Us:History". Velcro. Archived from the original on 2007-08-24. பார்க்கப்பட்ட நாள் 2008-05-09.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=வெல்க்ரோ&oldid=3907771" இலிருந்து மீள்விக்கப்பட்டது