ஹியூஜென்ஸ் (விண்கலம்)
ஹியூஜென்ஸ் விண்ணுளவி அல்லது ஹியூஜென்ஸ் விண்ணாய்வி (Huygens probe), சனிக் கோளின் நிலவான டைட்டனில் தரையிறங்க ஐரோப்பிய விண்வெளி முகமையினால் வடிவமைக்கப்பட்டு நாசா, மற்றும் ஐரோப்பியக் கூட்டில் விண்ணுக்கு ஏவப்பட்ட ஓர் ஆளில்லா விண்கலம் அல்லது விண்ணுளவி[1] ஆகும். இவ்வுளவிக்கு டச்சு அறிவியலாளர் கிரிஸ்டியன் ஹியூஜென்சின் (1629-1695) நினைவாக ஹியூஜென்ஸ் எனப் பெயரிடப்பட்டது. காசினி-ஹியூஜென்ஸ் விண்கலம் கூட்டாக பூமியில் இருந்து 1997 அக்டோபர் 15 இல் விண்ணுக்கு ஏவப்பட்டது. ஹியூஜென்ஸ், காசினி என்ற தாய்க்கப்பலில் இருந்து 2004 டிசம்பர் 25 இல் பிரிந்தது. இது பின்னர் 20 நாட்கள் தொடர்ந்து 36,000 மைல் தூரம் பயணம் செய்து டைட்டனின் வளி மண்டலத்தில் வினாடிக்கு 3.6 மைல் வேகத்தில் சென்று டைட்டனில் 2005 சனவரி 14 இல் தரையிறங்கியது. இதுவே டைட்டன் துணைக்கோளில் மட்டுமல்லாது வெளிப்புற சூரியக் குடும்பத்தில் தரையிறங்கிய முதலாவது விண்கலமும் ஆகும். பூமியில் இருந்து அதி கூடியளவு தூரத்தில் தரையிறங்கிய ஒரேயொரு விண்கலமும் இதுவாகும். ஹியூஜென்சு டைட்டனில் தரையிறங்கியதில் இருந்து 90 நிமிடங்கள் வரை செய்திகளை பூமிக்கு அனுப்பிக் கொண்டிருந்தது. டைட்டானின் தள வெப்பத்தில் (-179 செ), விண்கலத்தின் மின்கலன்கள் நீடித்து இயங்க முடியாமல் உறைந்து போய் விடும்.
இயக்குபவர் | ஈசா/இசா/நாசா |
---|---|
முதன்மை ஒப்பந்தக்காரர் | Aerospatiale |
திட்ட வகை | உளவி |
செயற்கைக்கோள் | சனி |
ஏவப்பட்ட நாள் | டிசம்பர் 25, 2004 |
ஏவுகலம் | காசினி விண்கலம் |
தே.வி.அ.த.மை எண் | 1997-061C |
இணைய தளம் | ஹியூஜென் இணையத்தளம் |
நிறை | 319 கிகி |
அமைப்பு
தொகு9 அடி விட்டமும் 318 கிலோகிராம் எடையும் கொண்டது ஹியூஜென்ஸ் உளவி. ஆறு ஆய்வுக் கருவிகளைக் கொண்டது. ஹியூஜென்சின் கருவிகளை இயக்கும் மின்கலங்கள் 1.8 கிலோவாட் மின்னாற்றல் பெற்றவை. 20 நாட்கள் டைட்டான் உளவி சூழ்மண்டலத்தில் பயணம் செய்து இறங்கிய பின், மொத்தம் 120 நிமிடங்கள் மின்கலங்கள் இயக்கத்தில் இருந்து, அதன் தன்னியக்கிக் கருவிகள் வாயுவின் அழுத்தம், வெப்பநிலை, திணிவு ஆகியவற்றைப் பதிவு செய்து தாய்க்கப்பல் காஸ்சினி மூலமாகப் பூமிக்கு அனுப்பியது[2].
ஹியூஜென்ஸ் முதலில் அனுப்பிய படங்களில் இருந்து அது எண்ணெய்க்கடல் கரை எல்லையில் (Oily Ocean Shoreline) இறங்கியதாக அவதானிக்கப்பட்டது.
குறிப்புகளும் மேற்கோள்களும்
தொகு- ↑ விண்ணுளவி என்பது விண்ணில் உலவி, விண்ணில் உள்ளனவற்றை, உளவு பார்க்கும் ஓர் ஊர்தி
- ↑ "சனிக்கோளின் துணைக்கோளில் தடம் வைத்த ஈரோப்பியன் விண்ணுளவி ஹியூஜென் (சி. ஜெயபாரதன்)". Archived from the original on 2016-03-06. பார்க்கப்பட்ட நாள் 2012-12-12.
வெளி இணைப்புகள்
தொகு- சனிக் கோளின் நிலவில் திரவம் இருப்பதை நாசாவின் விண்கலம் படம் பிடித்தது, விக்கிசெய்தியில், டிசம்பர் 20, 2009
- சனிக் கோளின் நிலவில் உப்புப் பெருங்கடல் இருக்கலாம், ஆய்வுகள் தெரிவிப்பு, விக்கிசெய்தியில், சூன் 26, 2011
- ஹியுஜென்ஸ் உளவி டைட்டானில் இறங்கியது
- ஐரோப்பிய விண்வெளி ஆணையக இணையத்தளம் பரணிடப்பட்டது 2009-12-23 at the Portuguese Web Archive
- நாசாவின் காசினி-ஹியூஜென்ஸ் பக்கம்
- நியூ சயன்ரிஸ்ட் பரணிடப்பட்டது 2005-04-20 at the வந்தவழி இயந்திரம்