ஓம்

பிரணவ மந்திரம்
( இலிருந்து வழிமாற்றப்பட்டது)


ௐ,ஓம் (பொதுவான வரிவடிவம்:ॐ; தேவநாகரி வரிவடிவம்: ओं அல்லது ओ३म्; தமிழில்: ௐ) என்பது இந்து, பௌத்தம், சமணம், சீக்கியம் மற்றும் பூர்வீக தெற்காசிய சமயங்களில் உள்ள ஒரு புனிதமான குறியீடு மற்றும் ஒலியாகும். இக் குறியீடு இந்து சமய நூல்கள் எழுதுவதற்கு முன்பாகவும், இதன் ஓசை மந்திரங்கள் உச்சரிப்பதற்கு முன்பாகவும் பயன்படுத்தப்படும். மான்டூக்கிய உபநிடதம் முழுமைக்கும் ஓம் குறித்த விளக்கங்கள் காணப்படுகின்றன. குமரிக்கண்டத்தில் வாழ்ந்ததாக கருதப்படும் மயன் எழுதிய நூலில் ஓம் என்ற ஒலி உள் ஞானத்தை எழுப்பும் எனவும், அது ஒளிவடிவமாகவும் இருக்கும் என்றும் கூறப்பட்டுளது.[1][2]

தமிழ் மொழி ஒம்
தேவநாகரி எழுத்தில் பயன்படுத்தப்படும் ஓம் குறியீடு

ஓம்கார உச்சரிப்பு பற்றிப் பதஞ்சலி முனிவர்

தொகு

ஓம் என்பதற்கு ஆம் என்று அர்த்தம்

ஓ+ம் = ஓம்

’ஓ’ வின் உச்சரிப்பு குறைவாகவும், ‘ம்’ இன் உச்சரிப்பு நீண்டாதகவும் இருக்க வேண்டும்.

ஓம், ஓம், ஓம்,… என்று தொடர்ந்து உச்சரிக்க வேண்டும். சப்தமாக உச்சரிப்பதைக் காட்டிலும், மனதிலேயே உச்சரித்தல் நலம்.

ஓ என்று தொடங்கும்போது மனதில் தங்களுக்கு ஒரு இஷ்ட தேவதையோ அல்லது வேறு எந்த ஒரு பொருளையோ நினைக்க துவங்கிக் கொண்டால், ’ம்’ இல், அந்த நினைவினை தொடர வேண்டும்.

இதோடு சேர்ந்து நாசிப்பயிற்சியும் செய்தால் மேலும் பயனுண்டு.

மூச்சை உள்ளிழுக்கும் போது, மனதில் ‘ஓ’ வைத் துவக்கிக்கொண்டவாறு, தாங்கள் தேர்வு செய்த பொருளை மனத்தில் இருத்திக்கொள்ள வேண்டும்.

அடுத்து மூச்சை வெளி விட்டவாறு ‘ம்’ மைத் தொடரவேண்டும். எண்ணத்திலும் நிலைநிறுத்திய பொருளை தொடர்ந்தவாறு.

இவ்வாறு தொடர்ந்து பயிற்சி செய்தால், வெகு சீக்கிரமாக தாங்கள் எண்ணத்தில் நிறுத்திய பொருள் அல்லது இஷ்ட தேவதையினை மனதில் ஒருமுகப்படுத்தும் சித்தி கிடைக்கும். வேறு மாற்று சிந்தனைகள் ஏற்பட்டு மனதை அலைக்கழிக்கவிடாமல் நெருங்கிய பொருள் கைக்கிடைக்கும். அந்த நெருங்கிய பொருள் நீங்கள் யாரென்ற தன்னறிவானால், மீளாத் துயர்களில் இருந்து விடுதலை பெறும் பாதையை அறிந்து கொள்ள முடியும்

ஓம் பற்றி உபநிடதங்கள்

தொகு

ஓங்கார மந்திரம் மூன்று மாத்திரை கால அளவில் உச்சரிக்க வேண்டும். ஓம் என்ற மந்திரத்தின் பெருமையை உபநிடதங்கள் கொடி உயர்த்திப் பறை சாற்றுகின்றன. அச்சொல் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் பரம்பொருளைக் குறிக்கிறது. அச்சொல்லே பரம்பொருள் தான் என்று கூடச்சொல்லப்படுகிறது. ஓம் என்ற சொல்லில் அ, உ, ம என்ற மூன்று எழுத்துக்கள் பிணைந்திருக்கின்றன.இவைமூன்றும் மனிதனுடைய மூன்று உணர்வு நிலைகளைக் குறிப்பதாகவும், பிரம்மம் என்ற பரம்பொருளாகவே இருக்கும் நிலை இம்மூன்று நிலைகளையும் (அ-து, விழிப்பு நிலை, கனவு நிலை, தூக்கநிலை) தாண்டிய நான்காவது நிலை என்றும், அந்நிலை ஓம் என்ற உச்சரிப்பின் முடிவில் வரும் மவுனநிலை என்றும் மாண்டூக்கிய உபநிடதம் கூறுகின்றது.

பகவத்கீதையில் ஓம்

தொகு

கீதாசிரியனாகிய கண்ணன் ஓம் என்ற சொல்லே மனிதனின் கடைசி மூச்சாக இருக்கவேண்டும் என்கிறான். (கீதை 8 – 13) "எவனொருவன் பரம்பொருளாகிய ஓம் என்ற ஓரெழுத்துச்சொல்லை உச்சரித்துக்கொண்டும் என்னை மனதில் கொண்டும் இப்பூத உடலை விட்டுப்புறப்படுகின்றனோ அவன் எல்லாவற்றிற்கும் மேலான கதியை அடைகிறான்."

பிரணவ மந்திரம்

தொகு

ஓம் என்பதை பிரணவ மந்திரம் என்று இந்துகள் சொல்லுகிறார்கள். பிரணவ மந்திரமே உலகம் தோன்றுவதற்கு முன் எங்கும் நிரம்பியிருந்ததாக கருதுகிறார்கள். அ + உ+ ம் என்பதன் இணைப்பே ஓம் ஆகும். அ என்பது முதல்வனான சிவனையும், உ என்பது உமையையும் குறிப்பதாகவும் கருதுகிறார்கள்.[3] அ என்பது சிவனையும், உ என்பது உயிரையும் ம் என்பது மனதையும் குறிக்கின்றன என்பது பொதுக்கருத்தாக உள்ளது.[4]

திருமந்திரத்தில் ஓம்

தொகு
ஓமெனு ஓங்காரத் துள்ளே ஒரு மொழி
ஓமெனு ஓங்காரத் துள்ளே உருவம்
ஓமெனு ஓங்காரத் துள்ளே பல பேதம்
ஓமெனு ஓங்காரம் ஒண்முத்தி சித்தியே

என்று திரு மந்திரத்தில் திருமூலர் பாடியுள்ளார்.

கூத்தன் எழுத்தாகிய பிரணவ மந்திரம் உன் நாக்கில் பகையாகிய ஆணவம் அறும் பொருட்டு ஒலித்தபின் சிரசை நோக்கி செல்லும் .சகஸ்ரதலம் ஒளி பெற்று விரியும். அங்கு விளங்கும் சிவத்தை அறிந்து வணங்கிட வேண்டும்

சட்டைமுனி சூத்திரத்தில் ஓம்

தொகு

" ஒடுக்கமடா ஓங்காரக் கம்பமாச்சு ஓகோகோ அகாரமங்கே பிறந்ததாச்சு "

என்று சட்டைமுனி தனது சூத்திரத்தில் பாடியுள்ளார்.

சங்கரரின் ஓம் எனும் மந்திரத்திற்கான விளக்கம்

தொகு

ஆதிசங்கரர் ஓம் எனும் மந்திரத்திற்கான விளக்கத்தை தான் எழுதிய உபதேச ஸாஹஸ்ரி எனும் நூலில் விளக்கியுள்ளார். எது, ` ஞானவடிவத்தை உடையதோ,[5].ஆகாயத்தைப் போன்று வடிவம் இல்லாததோ,[6].எல்லாவற்றிற்கும் மேலானதோ, எப்பொழுதும் ஒளிர்ந்து கொண்டு உள்ளதோ,[7].பிறப்பற்றதோ,இரண்டில்லாமல் ஒன்றாகவே உள்ளதோ,[8].அழிவற்றதோ,[9]. எத்துடனும் சேர்க்கையற்றதோ,[10]. எங்கும் நிறைந்து உள்ளதோ,[11]. இரண்டற்றதோ, எப்பொழுதும் சுதந்திரமாக உள்ளதோ, அதுவே நான் ` ஓம்[12] என்று கூறப்பட்டுள்ளது. (உபதேச ஸாஹஸ்ரி 10. 1).

உசாத் துணை

தொகு
  1. ""ஓம்" என்னும் பிரணவ மந்திரத்தை உச்சரிப்பதால் உண்டாகும் பலன்கள்!". Zee Hindustan Tamil. 2021-01-22. பார்க்கப்பட்ட நாள் 2022-01-11.
  2. "Pranava Mantra (Aum/ Om Sanskrit) - Scriptural Explanation". shaivam.org. பார்க்கப்பட்ட நாள் 2022-01-11.
  3. http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=1022&Itemid=73
  4. கலாநிதி க. கணேசலிங்கம் எழுதிய சைவசித்தாந்த வினா விடை நூலின் பக்கம் 95
  5. அது ஓம் எனும் பிரம்மம் திருக் வடிவமே (பார்க்கும் வஸ்து) அன்றி, திருஷ்யம் (பார்த்து அறியத்தக்க வஸ்து அல்ல). பார்ப்பவன் ஆத்மா. எனவே அவன் ஞான வடிவானவன்
  6. குணமற்றவனும், உருவமற்றவனும், எங்கும் நிறைந்துள்ளவனுமான பரப்பிரம்மத்திற்கு ஆகாயம் ஒன்றை மட்டுமே பொதுவாக உவமையாகக் கூற இயலும்
  7. எப்பொழுதுமே தெளிவுடன் ஒளிர்ந்து கொண்டிருக்கும் பிரம்மஞானமானது கொஞ்சம் கொஞ்சமாக ஏற்படாது. அஞ்ஞானமானது (அறியாமை) அகன்றவுடன் அப்பொழுதே பிரம்மஞானம் ஏற்படுகிறது
  8. தனக்கு இரண்டாவது இல்லாத
  9. பிறப்பு இல்லை என்பதால் அழிவும் இல்லை
  10. கர்மங்கள் அல்லது புண்ணிய பாவங்களின் தொடர்பு இல்லை
  11. பிரம்மத்திற்கு என்றுமே சம்சார பந்தம் இல்லை. நான் பிரம்மனாகவே இருப்பதால் எனக்கும் என்றுமே கர்மத்தளை (உலகியல் பற்று-வெறுப்பு) இருக்கவில்லை. பந்தம் கூட ஒரு தோற்றமே
  12. ஓம்காரமானது, பரப்பிரம்மனின் அடையாளம் என்பதையும் பிரப்பிரம்மனின் வழிபாட்டிற்கு அது உறுதுணையாக உள்ளது என்பதைக் குறிப்பிடுவதற்காகவும் பயன்படுத்தப்பட்டுள்ளது

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓம்&oldid=4116820" இலிருந்து மீள்விக்கப்பட்டது