அக்கா (இனம்)
அக்கா அல்லது ஆக்கா (Akha, Aka, தாய்லாந்து: Ai Ko (ஐகோ)) தென்கிழக்கு ஆசியாவில் வாழும் மலைவாழ் இனத்தவர். இவர்கள் தாய்லாந்து, மியான்மர், லாவோஸ், சீனாவின் யுன்னான் மாகாணம் ஆகிய இடங்களில் உள்ள மலைகளின் உயரமாக பகுதிகளில் உள்ள சிறிய கிராமங்களில் வாழ்கிறார்கள். இவர்கள் 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், பர்மா லாவோசின் உள்நாட்டுப் போரின் போது பர்மாவினதும், யுனானினதும் எல்லைப்புறப் பகுதிகளிலிருந்து சீனாவின் ஊடாக தென்கிழக்கு ஆசியாவுக்கு புலம்பெயர்ந்து வந்து குடியேறியவர்கள். தற்சமயம் இவர்களில் 60,000 இற்கு மேற்பட்டோர் வட தாய்லாந்தில் சியாங் ராய், சியாங் மாய் ஆகிய இடங்களில் குடியிருக்கின்றனர். அக்கா இன மக்களின் தொகை 600,000 இற்கு மேற்பட்டது என மதிப்பிடப்பட்டுள்ளது.[1] வந்து குடியேறிய நாடுகளில் ஒப்பீட்டளவில் இவர்கள் பெரிய சிறுபான்மையினர் எனக் கருதப்படுகிறார்கள்.
1900 களின் ஆரம்பத்தில் அக்கா இனம் பற்றிய பர்மாவின் சித்தரிப்பு | |
மொத்த மக்கள்தொகை | |
---|---|
(449,261) | |
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் | |
மியான்மர், சீனா, லாவோஸ், தாய்லாந்து | |
மொழி(கள்) | |
அக்கா, லாவோ, தாய் | |
சமயங்கள் | |
நாட்டார் சமயம் (ஆவியுலகக் கோட்பாட்டு), கிறித்தவம், பௌத்தம் | |
தொடர்புள்ள இனக்குழுக்கள் | |
கானி |
மொழி
தொகுஅக்கா இனத்தவர்கள் பேசும் மொழி திபெத்திய-பர்மிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது.[2][3] இவர்கள் பேசும் மொழி லிசு மொழியுடன் தொடர்புடையது எனக் கருதப்படுகிறது.
வாழ்க்கை
தொகுஅக்கா இனத்தவர்கள் அமைதியான வாழ்க்கையை வாழ்வதில் ஆர்வமுள்ளவர்கள். இவர்கள் விவசாயிகளாக வாழ்கிறார்கள். இவர்களது விளைநிலங்களில் அரிசி, சோளம், கோதுமை, பச்சை அவரை, வெள்ளைப்பூண்டு, மிளகாய், மற்றும் பல்வேறுபட்ட மரக்கறிகள் சாகுபடி செய்யப் படுகின்றன. இவர்கள் பன்றி, மாடு, கோழி போன்றவைகளையும் வளர்க்கிறார்கள்.
குடிசை
தொகுஇவர்கள் பாரம்பரியமாக மூங்கில் குடிசைகளில் வாழ்கிறார்கள்.
ஆடை/அணிகலன்கள்
தொகுஅக்கா இனப்பெண்கள், வெள்ளி நகைகள், பொத்தான்கள், மணிகள், நாணயங்கள் போன்றவற்றால் அலங்கரிக்கப்பட்ட தலைக்கவசங்களை அணிந்திருப்பார்கள். அடிப்படை உடைகளாக சிறிய சட்டை, மார்புத்துணி, பாவாடை போன்றவைகளை அணிகிறார்கள். இவர்களது அணிகலன்கள் முழுவதுமே பலவர்ண நாடாக்களாலும், பின்னல் வேலைப்பாடுகளாலும் அலங்கரிக்கப்பட்டிருக்கும். இவர்கள் உபயோகப்படுத்தும் அடிப்படை நிறங்களாக நீலமும், கருநீலமும் உள்ளன.
சமயம்/நம்பிக்கை
தொகுஇவர்கள் கடவளை வணங்குவதில்லை. தமது மூதாதையரையும், ஆவியையும் வணங்குகிறார்கள். ஆவியுலகக் கோட்பாட்டு மதத்தைப் பின்பற்றுபவர்கள். இவர்கள் தங்களை தமது மூதாதையருக்கும், அடுத்து வரும் தலைமுறைக்கும் உள்ள இணைப்பாகவே பார்க்கிறார்கள். இறந்தவர்களைக் கௌரவிப்பது இவர்களது மதத்தில் மிக முக்கிய விடயமாக உள்ளது.
இவர்களது ஒவ்வொரு கிராமத்துக்கும் இரண்டு வாசல்கள் உள்ளன. தீய சக்திகள் கிரமத்திலிருந்து தூரவே நின்று விட வேண்டும். கிராமத்துக்குள் வரும் ஒவ்வொருவரும் இந்த வாசல்கள் வழியாகவே உள்ளே வர வேண்டும். வாசல்களில் உள்ள மரங்கள் ஆண்களதும், பெண்களதும் பாலுறுப்புகளைத் தெளிவாகக் காட்டும் விதமாக சிற்பமாகச் செதுக்கப் பட்டிருக்கும். கிராமத்தின் வாயில்களைப் புதுப்பித்தல் ஒரு வருடாந்தச் சடங்கு போல ஒவ்வொரு வருடமும் நடைபெறும். வாயில்களைப் புதுப்பிக்கும் வேலைகளில் இளையவர்களும், முதியவர்களுமாக ஆண்கள் மட்டுமே பங்கு கொள்வார்கள். பெண்கள் இந்த வேலையில் ஈடுபடுவதற்கு கடுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது.[4] ஒவ்வொரு குடும்பத்திலும் ஒரு ஆண்குழந்தை பிறக்கும் வரை இவர்கள் குடும்பக்கட்டுப்பாடு செய்து கொள்வதில்லை.
மரணச்சடங்கு
தொகுஒரு கிராமத்தில் ஒருவர் இறந்தால் ஐந்து நாட்களுக்கு அந்தச் சடங்கு நடைபெறும். அந்த ஐந்து நாட்களும் கிராமத்தில் எவரும் வேலைக்குப் போகக் கூடாது. எல்லோரும் சடங்கில் பங்குபற்ற வேண்டும். சடங்கின் அத்தியாவசியப் பொருளாக கூராக்கிய பொல்லுத்தடி கழுத்தில் கொழுவப்பட்ட ஒரு நீர் எருமை கொண்டு வரப்படும். பின்னர் அந்த எருமை அந்தப் பொல்லால் குத்திக் கொல்லப்பட்டு, கத்திகளால் வெட்டி உண்ணப்படும். கூடவே அதிகளவு மதுபானமும் அருந்தப்படும். மற்றும் அக்கிராமத்தில் வாழும் வயதான் பெண்கள் நான்கு நாட்களுக்குத் தொடர்ந்து இறந்தவர் பிறந்ததிலிருந்து வாழ்ந்து இறந்தது வரையான வாழ்வைப் பாடலாக இராப்பகலாகப் பாடிக் கொண்டே இருப்பார்கள். மற்றும், அக்கிராமத்தில் வாழும் வயதான பெண்கள் சவப்பெட்டியைச் சுற்றி இருந்து, நான்கு நாட்களுக்குத் தொடர்ந்து இறந்தவர் பிறந்ததிலிருந்து வாழ்ந்து இறந்தது வரையான வாழ்வைப் பாடலாக பாடிக் கொண்டே இருப்பார்கள். சவப்பெட்டி பூக்களாலும், அழகிய வர்ணத் துணிகளாலும், ஒளிரும் விளக்குகளாலும் அலங்கரிக்கப் பட்டிருக்கும். சில பெண்கள் தமது பாரம்பரிய உடைகளை அணிந்து கொண்டு கிராம வீதிகளில் பாடிக் கொண்டு திரிவார்கள். அடக்கம் செய்யும் நாளில் இறந்தவரின் ஆவியை கிராமத்திலிருந்து வெளியே கலைத்து விட வேண்டும். இல்லாவிட்டால் வாழ்பவர்களுக்கு அது சிரமமாகிவிடும். இறந்தவரின் ஆவி கிராமத்திலுள்ள யாராவது ஒருவரின் வீட்டிலோ, அல்லாது யாராவது ஒருவரிடமோ ஒழிந்து கொண்டு விடலாம் என்று அவர்கள் நம்புகிறார்கள். அதனால் ஒரு மதகுருவைக் கொண்டு அந்த ஆவியைக் கலைக்கிறார்கள். மதகுரு ஒரு பெரிய சுத்தியலுடனும், ஒரு மரத்தினால் செய்யப்பட்ட பெரிய ஆண்குறியுடனும் வந்து கிராமவீதிகளிலும், வீடுகளிலும் சுத்தி பெரிய சத்தமாகக் கத்தியும், அடித்தும் ஆவியை விரட்டுவார். அதன் பின் ஐந்தாம் நாளில் அந்த வாயிலை தாண்டிப் போய் கிராமத்துக்கு வெளியே சவ அடக்கம் செய்யப்படும்.
போதைப்பழக்கம்
தொகுஅக்கா இனத்தவர் மதுபானத்துடன் அபினுக்கும் அடிமையாக உள்ளார்கள். பெருமளவில் அபின் செடியைப் பயிரிடுகிறார்கள்.[5] இது அவர்களது பாரம்பரியப் பழக்கம் இல்லை. காலனித்துவசக்திகளால் இது இவர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. இப்பழக்கத்திலிருந்து இவர்களை விடுவிக்க, பல அபின் சாகுபடி ஒழிப்புத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டாலும் போதை தரும் இன்பத்திலிருந்து மீளமுடியாதவர்களாகவே இவர்கள் இருக்கிறார்கள்.
குடியுரிமை
தொகுஅக்கா இனத்தவரில் பெரும்பாலானோர் தாய்லாந்திலும், பர்மாவிலும் குடியுரிமை பெறப்படாதவர்களாகவே இன்னும் வாழ்கிறார்கள்.[6] உறுதிப்படுத்தப்படாத தகவல்களின்படி, உள்ளூர் காவல்துறை மற்றும் இராணுவத்தால் நடத்தப்படும் தாக்குதல்களுக்கும் இலக்காகிறார்கள்.
சுற்றுலாப் பயணிகள் வருகை
தொகுகடந்த ஆண்டுகளில் அதிகரித்துள்ள சுற்றுலாப்பயணிகளின் வருகைகள் தம்மைத் தொந்தரவு செய்வதாக அக்கா இனத்தவர்கள் கருதுகிறார்கள். இளம் தலைமுறையினரின் அக்கா இனத்தவரின் வாழ்வியலில் இது பெருத்த மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றது என்கிறார்கள் அவர்கள். பலர் தமது விவசாயத் தொழிலை விடுத்து வியாபாரங்களில் ஈடுபடத் தொடங்கி விட்டார்கள். பெண்கள் விபச்சாரத் தொழிலில் ஈடுபட்டு வேறு வழியில் பணம் சம்பாதிக்கிறார்கள்.[7][8]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Introductory Information About The Akha". Archived from the original on 2010-12-05. பார்க்கப்பட்ட நாள் 2015-11-28.
- ↑ ETHNO GRAPHIC NOTES ON THE AKHAS OF BURMA |AKHA PHONOLOGY| Paul Lewis
- ↑ The Peoples of the World Foundation
- ↑ The Akha and the Spirits பரணிடப்பட்டது 2012-06-10 at the வந்தவழி இயந்திரம் By Alberto C. de la Paz
- ↑ Opium-Reduction Programmes, Discourses of Addiction and Gender in Northwest Laos Paul T. COHEN and Chris LYTTLETON| Sojourn: Journal of Social Issues in Southeast Asia |Vol. 17, No. 1 (April 2002), pp. 1-23
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2010-12-05. பார்க்கப்பட்ட நாள் 2015-11-28.
- ↑ "The Akha Heritage Foundation – www.akha.org". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2015-11-28.
- ↑ "A Brief Overview of the Akha Hill Tribe:". Archived from the original on 2016-03-03. பார்க்கப்பட்ட நாள் 2015-11-29.