அங்குசகிரி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஒரு கோட்டை

அங்குசகிரி (Ankushagiri) என்பது தென்னிந்தியாவின், தமிழ்நாட்டின், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு மலை ஆகும். இந்த மலையில் ஓரு பெரிய கோட்டையும், சிவனுக்கும், பெருமாளுக்கும் கட்டப்பட்ட கோயில்களும், குளங்களும் பல்வேறு கட்டங்களும் அமைந்துள்ளன. இப்பகுதி மாஸ்தி பாளையக்காரர்களின் பிற்காலத் தலைநகராக இருந்தது.

அமைவிடம்

தொகு

அங்குசகிரி சூளகிரிக்கு கிழக்கில் 5 மைல் தொலைவில் அமைந்துள்ளது. இம்மலை சுமார் 3038 அடி உயரம் கொண்டது எனப்படுகின்றது.[1]

பெயர்

தொகு

இந்த மலை தோற்றத்தில் அங்குசத்தை ஒத்துள்ளதால் இப்பெயர் பெற்றதாக கூறப்படுகிறது. மேலும் இங்கு உள்ள கோட்டையை அங்குசராயலு என்ற மன்னன் கட்டத் துவங்கினான் என்றும் அதனால் அங்குசகிரி என்ற பெயரைப் பெற்றது என்ற கருத்தும் உள்ளது.[2] இது கடையெழு வள்ளல்களில் ஒருவனான நள்ளி ஆண்ட தோட்டி மலை[3] என்றும் இந்தப் பெயர் பிற்காலத்தில் சமசுகிருதமயமாக்கலால் அங்குசகிரி என்ற பெயரைப் பெற்றது என்ற கருத்தும் உள்ளது.

அங்குசராயலு சென்னபட்டணத்தின் மன்னரான ஜகதேவ ராயரின் வாரிசு ஆவார். அங்குசராயலு ஒரு பலவீனமான தலைவரான இருந்தார். இதனால் அவர் இப்பகுதியின் கட்டுப்பாட்டை இழக்கத் தொடங்கினார். இந்தக் கோட்டையை அவரிடமிருந்து மாஸ்தி பாளையக்காரரான சொக்க கவுடா கைப்பற்றிக் கொண்டனர். அதன்பிறகு அங்குசகிரி மாஸ்தி பாளைக்காரர்களின் ஆளுகையின் கீழ் இருந்துவந்தது. இந்நிலையில் மராத்திய மன்னன் வெங்கோஜி மாஸ்தி மீது படையெடுத்து அதைக் கைப்பற்றிக் கொண்டான். இதனால் மாஸ்த்தி பாளையக்காரரான பெத்த சொக்க கவுடா அங்குசகிரியை தன் தலைநகராக ஆக்கிக்கொண்டார். ஆனால் மராத்தியர்கள் அங்குசகிரியையும் கைப்பற்றிக் கொண்டனர். ஆனால் சில ஆண்டுகளுக்குப் பிறகு இது மாகடி நடபிரபுகளின் உதவியுடன் சொக்க கவுடாவால் மீண்டும் கைப்பற்றப்பட்டது. 1766-67இல் நான்கு மாதங்கள் நடந்த முற்றுகையின் முடிவில் அங்குசகிரி கோட்டையை ஐதர் அலி கைப்பற்றினர். இதனால் நாடிழந்த பாளையக்காரர்கள் மராத்தியர்களின் ஆட்சிக்கு உட்பட்டதாக இருந்த சித்தூருக்கு இடம்பெயர்ந்தனர். இருப்பினும், ஐதர் அலிக்கும் மராத்திய பேஷ்வாவுக்கும் இடையிலான அமைதி உடன்படிக்கைக்குப் பின்னர் அங்குசகிரி மாஸ்தி பாளையக்காரர்களிடம் (அப்போது அங்குசகிரி பாளையக்கார்கள் என்று அழைக்கப்பட்டனர்) திரும்ப ஒப்படைக்கப்பட்டது. பின்னர் பாளையக்காரர்கள் கர்னல் ஸ்மித்தின் கீழ் ஆங்கிலேயர்களுடன் கைகோர்த்தார். கர்னல் ஸ்மித் பின்வாங்கிய நிலையில், ஐதர் இந்தக் கோட்டையைத் தாக்கி மீண்டும் கைப்பற்றினார். 1799 இல் திப்பு சுல்தனை ஆங்கிலேயர் கொன்ற பிறகு அங்குசகிரி ஆங்கிலேயர் வசமானது. பின்னர் இப்பகுதி சென்னை மாகாணத்துடன் இணைக்கபட்டது. இதற்கிடையில், அங்குசகிரியில் வசித்தவர்கள் அங்குசகிரி கொத்தூர் (புதிய நகரம்) என்று அழைக்கப்படும் பஸ்தல-பள்ளி கிராமத்திற்கு குடிபெயர்ந்தனர்.[4]

பெருங்கற்காலச் சின்னங்கள்

தொகு

அங்குசகிரியில் பெருங்கற்காலத்தைச் சேர்ந்த கல்திட்டை வகை ஈமச் சின்னங்கள் உள்ளன. இயற்கையாக கிடைக்கும் கரடுமுரடான கற்பலகைகளைக் கொண்டு அமைக்கபட்ட கல்லறை ஒன்று நல்ல நிலையில் இங்கு உள்ளது. ஒற்றுக்கும் மேற்பட்ட பலகை கற்களைக் கொண்டு சுவர் அமைப்பை ஏற்படுத்தியுள்ளனர். அதன் மேல் மூடுகல்லாக இயற்கையாக கிடைக்கும் பெரிய கற்பாறை ஒன்று பயன்படுத்தபட்டுள்ளது. இந்த சுவர் அமைப்பு சரிந்து விழாமல் இருக்க இயற்கையாக கிடைக்கும் சதுர, செவ்வக கற்களைக் கொண்டு தாங்கு கல்வட்ட அமைப்பை நிலத்துக்கு கீழே அமைத்துள்ளனர். நிலத்துக்கு மேலும் ஒரு தாங்கு கல்வட்டம் காணப்படுகிறது.[5]

குறிப்புகள்

தொகு
  1. "தமிழிணையம் - தகவலாற்றுப்படை". www.tagavalaatruppadai.in. பார்க்கப்பட்ட நாள் 2023-02-18.
  2. முனைவர் கோ. சீனிவாசன், கிருஷ்ணகிரி ஊரும் பேரும். கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்று ஆய்வு மையம், ஒசூர். 2018 திசம்பர். p. 127. {{cite book}}: Check date values in: |year= (help)
  3. இரா. இராகவையங்கார், முகவுரை, பாரி காதை (1937), அண்ணாமலைப் பல்கலைக்கழகம், பக்கம் 17
  4. "Ankushagiri – A Forgotten Fort" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-02-18.
  5. த. பார்திபன், தென்பெண்ணை ஆற்றங்கரைக் கிருஷ்ணகிரி மாவட்ட வரலாறு பகுதி-II சங்க காலம். ஸ்ரீ விவேகானந்தர் கொடை மற்றும் அறகட்டளை, தருமபுரி. 2010 ஏப்ரல். p. 139. {{cite book}}: Check date values in: |year= (help)

வெளி இணைப்புகள்

தொகு

Forts in Tamil Nadu India, 11. Ankushagiri, By Vittal Rao

"https://ta.wikipedia.org/w/index.php?title=அங்குசகிரி&oldid=3753532" இலிருந்து மீள்விக்கப்பட்டது