அன்னை ஞானம்மா
இறை ஊழியர் ஞானம்மா (Servant of God Gnanama) சென்னை புனித அன்னாள் சபை மற்றும் பிரங்கிபுரம் புனித அன்னாள் சபை ஆகிய இருபெரும் கிறிஸ்தவ துறவற சபைகளை நிறுவியவர். இந்தியாவில் இறை ஊழியர் நிலைக்கு உயர்த்தப்பட்டுள்ள முதல் பொதுநிலை கத்தோலிக்கப் பெண்மணி என்ற பெருமை இவருக்கே உரியது.
சபை நிறுவனர் | |
---|---|
பிறப்பு | தாட்டிபத்ரி ஞானம்மா 1822 பிரங்கிபுரம், குண்டூர், ஆந்திரா, இந்தியா |
இறப்பு | கீழச்சேரி, சென்னை, இந்தியா | திசம்பர் 21, 1874
ஏற்கும் சபை/சமயங்கள் | கத்தோலிக்க திருச்சபை |
இளமைப் பருவம்
தொகுஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் உள்ள பிரங்கிபுரத்தில் காலி ராயண்ணா - மரியம்மா தம்பதியருக்கு 2வது மகளாக ஞானம்மா 1822ஆம் ஆண்டு பிறந்தார். இவரது முழுப் பெயர் தாட்டிபத்ரி ஞானம்மா. பங்கு ஆலயத்தில் வேதியராகப் பணியாற்றிய இவரது தந்தை காலி ராயண்ணாவால் முழு குடும்பமும் இறைப்பற்றில் சிறந்து விளங்கியது. பிரங்கிபுரம் இயேசு சபையினரின் மறைபரப்பு மையமாக இருந்ததால், ஞானம்மா சிறு வயது முதலே பக்தியில் வளர்ந்தார். நாள்தோறும் திருப்பலியிலும், மற்ற செப வழிபாடுகளிலும் ஞானம்மா ஆர்வமுடன் பங்கேற்று வந்தார்.
குடும்ப வாழ்வு
தொகுஞானம்மா 15 வயதை எட்டியபோது, 1837ஆம் ஆண்டு இன்னையா என்ற வேதியரை மணந்தார். அவர்களுக்கு தாமஸ், மரியன்னா, பீட்டர் (என்ற ராயண்ணா), ராஜநாதர் (என்ற ராஜன்னா), சௌரய்யா (என்ற சௌரப்பா) உட்பட்ட 5 புதல்வர்கள் பிறந்தனர். 1858ஆம் ஆண்டு ஞானம்மாவின் கணவர் இன்னையா காலரா நோயினால் மரணம் அடைந்தார். அப்போது ஞானம்மாவின் முதல் மற்றும் 3வது மகன்கள் சென்னையிலும், 2வது மகன் செங்கல்பட்டிலும் குருத்துவப் பயிற்சி பெற்று வந்தார்கள். மற்ற இருவரும் தாயுடன் பிரங்கிபுரத்தில் வசித்து வந்தனர். (இவர்களில், தாமஸ், மரியன்னா ஆகியோர் துறவற சபை குருக்களாக உருவாகி இறைப்பணி செய்தனர். பீட்டர் மட்டும் ஞானம்மாவின் மறைவுக்கு பிறகு திருமணம் செய்து கொண்டார்.)
இறைப்பணிக்கு தங்களை அர்ப்பணித்த மகன்களைக் காண்பதற்காக, சென்னைக்கும், செங்கல்பட்டுக்கும் ஞானம்மா அடிக்கடி பயணம் செய்வது வழக்கம். அப்போது மெட்ராஸ் பகுதியின் அப்போஸ்தலிக்க பிரதிநிதியாக இருந்த ஜான் பென்னலியை சந்தித்து, ஆசியும், அறிவுரையும் பெறுவதை ஞானம்மா வழக்கமாக கொண்டிருந்தார். இந்நிலையில் ஆயரின் அறிவுரைப்படி சென்னையில் தங்க முடிவு செய்த ஞானம்மா, 1859ஆம் ஆண்டு தம் இரு மகன்களுடன் சென்னையில் குடியேறினார். பின்னர் அவரோடு இருந்த ராஜநாதர், சௌரய்யா இருவரும் குருத்துவப் பயிற்சியில் சேர்ந்தனர். (பிற்காலத்தில், இவர்கள் இருவரும் மறைமாவட்ட குருக்களாகி இறைவனுக்கும் மக்களுக்கும் பணியாற்றினர்.)
கல்வி சேவை
தொகுஅதன்பிறகு ஞானம்மா, சென்னையில் இருந்து தமது தாயின் உறவினர்கள் வாழ்ந்த எறையூருக்கு சென்றார். எறையூரில் நாள்தோறும் திருப்பலியில் முடியாத நிலை இருந்ததால், சென்னைக்கு அருகிலுள்ள கீழச்சேரியில் குடியேற முடிவு செய்தார். 1860ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், ஞானம்மா கீழச்சேரியில் ஆலயத்தின் அருகில் இருந்த ஒரு வீட்டில் குடியேறினார். தினமும் திருப்பலியில் பங்கேற்றதுடன், நற்கருணை நாதர் முன் அதிக நேரம் செலவிடுவதிலும் ஆர்வம் கொண்டிருந்தார். கிராமத்தில் இருந்த பெண்களை ஒன்றுகூட்டி, நண்பகல் செப வழிபாட்டில் ஈடுபடச் செய்தார். பங்கில் இருந்த குழந்தைகளுக்கு மறைக்கல்வி கற்பித்தார்.
அக்காலத்தில் கீழச்சேரி மிகவும் பின்தங்கிய கிராமங்களில் ஒன்றாக இருந்தது. ஆண் குழந்தைகள் பள்ளிக்குச் சென்ற நேரத்தில், பெண் பிள்ளைகள் வயல் வேலைக்குச் சென்று கொண்டிருந்தனர். பெண் குழந்தைகளுக்கு கல்வி அளிக்கும் நோக்கத்துடன், தமது உடைமைகளை விற்று பணம் புரட்டினார். கீழச்சேரி ஆலயத்தின் அருகிலேயே, ஒரு வீட்டையும் நிலத்தையும் வாங்கினார். அருட்சகோதரர்கள் சிலரின் உதவியோடு, 1863 மே 3ந்தேதி புனித கிளாராம்மாள் பெயரில் பெண்களுக்கான பள்ளியை நிறுவினார். குழந்தைகளின் வசதிக்காக, அதே ஆண்டு ஜூன் 4ந்தேதி விடுதியையும் தொடங்கினார்.
பள்ளி மற்றும் விடுதி பற்றிய செய்தி பரவியதும், அருட்தந்தை ரத்தினநாதரும், சில பெண்களும் நிர்வாகத்தில் உதவி செய்ய முன்வந்தனர். கீழச்சேரி பங்கைச் சேர்ந்த கிராமங்கள் அனைத்திலும் இருந்த பெண் குழந்தைகள் அனைவரையும் பள்ளியில் சேர்க்க ஞானம்மா ஆர்வம் காட்டினார். ஏழை, அனாதை குழந்தைகளுக்கு இலவசமாகவே கல்வி வழங்கப்பட்டது. ஞானம்மாவின் முயற்சிக்கு பிற்போக்கு சிந்தனையாளர்கள் சிலர் தடைகளை உருவாக்கினர். அவற்றையும் மீறி ஞானம்மா பெண்களுக்கு கல்வி அளிப்பதில் வெற்றி கண்டார். அவர்கள் ஆன்மிக வாழ்விலும் வளர்ச்சி காண உதவினார்.
சபை நிறுவனர்
தொகுஞானம்மாவின் கல்வி சேவையால், கீழச்சேரி பகுதி பெண் குழந்தைகள் உலக அறிவிலும், இறை ஞானத்திலும் வளர்ச்சி கண்டனர். அவர்களில் இல்லூரைச் சேர்ந்த ஆகத்தம்மா, அருளம்மா ஆகிய மாணவிகள் துறவுநிலை ஏற்று, ஞானம்மாவின் பணியைத் தொடர முடிவு செய்தனர். அவ்வேளையில் கீழச்சேரி பங்குத்தந்தையாக இருந்த ஆரோக்கியநாதரிடம், ஞானம்மா தமது மாணவிகளின் எண்ணத்தைப் பகிர்ந்து கொண்டார். இதையடுத்து புதிய துறவற சபையைத் தொடங்குவதற்கான ஆலோசனைகளை ஞானம்மாவுக்கு வழங்கிய ஆரோக்கியநாதர், அருளம்மா, ஆகத்தம்மா இருவரையும் துறவற வாழ்வுக்கும் தயார் செய்தார்.
1871ஆம் ஆண்டு, ஆரோக்கியநாதர் பெல்லாரி ஆலயத்திற்கு இடமாற்றம் பெற்றுச் சென்றார். இதனால் அவரது ஆலோசனையின் பேரில், பெல்லாரியில் இருந்த பெங்களூர் புனித அன்னாள் சபையின் நவகன்னியர் இல்லத்தில் நுழைவுநிலை பயிற்சி பெற்றனர். 1874 பிப்ரவரி 4ந்தேதி, அருளம்மா, ஆகத்தம்மா இருவரும் ஆஞ்சலா, பிலோமினா என்ற பெயருடன் நவகன்னியர் பயிற்சியைத் தொடங்கினர். அதே ஆண்டு அக்டோபர் 10ந்தேதி, நவகன்னியர் இருவரும் ஞானம்மா முன்னிலையில் தங்கள் முதல் வார்த்தைப்பாட்டை அளித்தனர். இவ்வாறு, சென்னையின் முதல் பெண் துறவிகள் சபையான புனித அன்னாள் சபை தோன்ற ஞானம்மா காரணமாக அமைந்தார். பிற்காலத்தில், பிரங்கிபுரம் புனித அன்னாள் சபை நிறுவப்பட்டது.
நோயும் இறப்பும்
தொகு1874 அக்டோபர் 10ந்தேதி அருட்சகோதரிகள் ஆஞ்சலாவும், பிலோமினாவும் ஞானம்மாவோடு சேர்ந்து பெல்லாரியில் இருந்து சென்னை வந்து சேர்ந்தனர். அவர்கள் திரும்பி வந்த சில நாட்களிலேயே ஞானம்மாவின் உடல்நலம் பாதிக்கப்பட்டது. இடைவிடாத கடின உழைப்பும், 20 ஆண்டு காலமாக இருந்த ஆஸ்துமா நோயும் ஞானம்மாவின் உடல்நிலையை மிகவும் கவலைக்கிடமாக்கியது. டிசம்பர் மாதத்தில் தமது மரணம் நெருங்கி வருவதை ஞானம்மா உணர்ந்தார். புனித அன்னாள் சபை தொடர்ந்து வளரும் என்ற நம்பிக்கையோடு அருட்சகோதரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.
"என் அன்புச் செல்வங்களே... உங்களுக்கு பொறுப்பாய் உள்ளவர்களுக்கு கீழ்ப்படியுங்கள். ஆன்மிக வழிகாட்டிகளுக்கு செவிகொடுங்கள். இளம்பெண்களுக்கு பாதுகாப்பு அளிப்பதுடன், மறைக்கல்வியும் உலகக்கல்வியும் வழங்குங்கள். இறையன்போடு கலந்த பிறரன்பு சேவைக்காக வாழ கற்றுக்கொள்ளுங்கள். பணத்துக்கு அரசையோ, பிறரையோ நம்பியிராமல் கடின உழைப்பால் உங்களைக் காத்துக் கொள்ளுங்கள்" என்பதே ஞானம்மாவின் இறுதி அறிவுரை. கீழச்சேரி பங்குத்தந்தை இரத்தினநாதரிடம் நோயில் பூசுதல் பெற்று, 1874 டிசம்பர் 21ந்தேதி தமது 52ஆம் வயதில் ஞானம்மா இறந்தார்.
இறை ஊழியர்
தொகுஞானம்மாவின் கல்லறையில் செபம் செய்த பலரும், அவரது பரிந்துரையால் இறைவனின் ஆறுதலைக் கண்டடைந்ததாக சாட்சியம் கூறினர். இதையடுத்து இவரை புனிதர் நிலைக்கு உயர்த்துவதற்கான முயற்சிகளை சென்னை-மயிலை உயர்மறைமாவட்டம் மூலம் புனித அன்னாள் சபையினர் மேற்கொண்டனர். சென்னை-மயிலை பேராயரின் விண்ணப்பத்தை ஏற்று, ரோமில் உள்ள புனிதர் பட்டம் வழங்குவதற்கான பேராயம் மறைமாவட்ட ஆய்வுப்பணியை முறைப்படி தொடங்குவதற்கான அனுமதியை வழங்கியுள்ளது. இதன் அடிப்படையில், ஞானம்மா இறை ஊழியர் நிலைக்கு உயர்த்தப்பட்டதை 2014 மார்ச் 21ந்தேதி பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி அறிவித்தார்[1][2].
ஆதாரங்கள்
தொகு- ↑ தாட்டிபத்ரி ஞானம்மா இன்னய்யா அவர்களை, புனிதர் நிலைக்கு உயர்த்தும் முயற்சிகளுக்கு, திருப்பீடம் உத்தரவு
- ↑ "இறை ஊழியர் பட்டம் பெறும் முதல் இந்திய பெண்மணி அன்னை ஞானம்மா". Archived from the original on 2014-03-20. பார்க்கப்பட்ட நாள் 2014-03-29.