அம்புலி (2012 திரைப்படம்)
அம்புலி 2012 ஆம் ஆண்டு வெளியான அறிவியல் புனைவு தமிழ்த் திரைப்படம். ஓர் இரவு திரைப்படத்தின் இயக்குனர்களான ஹரிசங்கர் மற்றும் ஹரீஷ் நாராயணன் இயக்கத்தில் தமிழில் வெளியான முதல் 3டி (முப்பரிமாண படிமம் ) திரைப்படம்[1]. இந்தியில் "கால் புருஷ்" என்ற பெயரில் மொழிபெயர்க்கப்பட்டது.
அம்புலி (திரைப்படம்) | |
---|---|
இயக்கம் |
|
தயாரிப்பு | கே.டி.வி.ஆர். லோகநாதன் |
கதை |
|
இசை | கே.வெங்கட் பிரபு சங்கர் சாம் சி. எஸ். சதிஷ் மெர்வின் சாலமன் |
நடிப்பு | ஆர். பார்த்திபன் ஜெகன் பி.எஸ்.ஸ்ரீஜித் ஆர்.அஜய் அம்புலி கோகுல்நாத் சனம் ஷெட்டி |
ஒளிப்பதிவு | சதிஷ். ஜி |
படத்தொகுப்பு | ஹரி சங்கர் |
கலையகம் | கே.டி.வி.ஆர் கிரியேட்டிவ் ரீல்ஸ் |
வெளியீடு | பெப்ரவரி 17, 2012 |
ஓட்டம் | 139 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கதைச்சுருக்கம்
தொகுசர் ஆர்தர் வில்லிங்டன் கல்லூரியில் படிக்கும் நண்பர்கள் அமுதன் மற்றும் வேந்தன் இருவரும் விடுமுறையில் கல்லூரி விடுதியில் தங்கி, அந்தக் கல்லூரி அருகிலிருக்கும் பூமணந்திபுரம் கிராமத்திலுள்ள தன் காதலி பூங்காவனத்தை அடிக்கடி அமுதன் சந்திக்க எண்ணுகிறான். கல்லூரிக்கும் கிராமத்திற்கும் இடையிலுள்ள சோளக்காடு மர்மம் நிறைந்தது. அந்தக் கிராமத்தினரால் 'அம்புலி' என்று சொல்லப்படும் விசித்திரமான மிருகம் அந்தக் காட்டுக்குள் செல்வோரைக் கொன்றுவருகிறது. இதனால் தற்காப்புக்காக ஒரு தடுப்புச்சுவர் எழுப்பியுள்ளனர். வேந்தனின் எச்சரிக்கையை மீறி, பூங்காவனத்தைப் பார்க்க அந்தக் காட்டுவழியே செல்லும் அமுதன் தன்னைத் தாக்கவரும் அம்புலியிடமிருந்து தப்பித்துவந்து, வேந்தன் சொன்னது உண்மையென்று உணர்கிறான். இருவரும் ஒன்றாக அந்தக் காட்டுக்குள் சென்று தேடும்போது ஒரு மரத்தினாலான வீட்டைக் காண்கின்றனர். அங்கே செங்கோடனைக் கண்டு அவன்தான் அம்புலியென நினைத்து ஓடி வந்துவிடுகின்றனர்.
இருவரும் காட்டுக்குள் சென்றதை வேந்தன் தந்தை வேதகிரியிடம் கூறுகின்றனர். அவர் அதிர்ச்சியடைந்து தான் ஒருமுறை அம்புலி ஒருவரைக் கொன்றதைக் கண்டிருப்பதாகவும், அதனால் இருவரையும் இனி காட்டிற்குள் செல்லக்கூடாது என கேட்டுக்கொண்டு அம்புலி பற்றி தனக்குத் தெரிந்ததைக் கூறுகிறார். நாற்பது ஆண்டுகளுக்கு முன் அந்தக் கிராமத்திற்கு தன மூத்த மகனோடு வரும் பொன்னி என்ற கர்ப்பிணிப் பெண் சூரிய கிரகணத்தால் பாதிக்கப்பட்டு கோரமான பாதி விலங்கு மற்றும் பாதி மனிதன் கொண்ட உருவமைப்பில் ஒரு குழந்தை பிறக்கிறது. அது பிரசவம் பார்த்த மருத்துவச்சி சீமாட்டியின் கையைக் கடித்துவிட்டு, மற்றொரு பெண்ணைக் கொன்றுவிட்டு தப்பிவிடுகிறது. பொன்னி தற்கொலை செய்து கொண்டதாகக் கூறிமுடிக்கிறார் வேதகிரி.
பூங்காவனத்தின் தோழி வளர்மாலையைக் காதலிக்கிறான் வேந்தன். சர் ஆர்தர் வில்லிங்டன் கல்லூரியின் முன்னாள் மாணவன் மருதனைச் சந்திக்கின்றனர். அவன் அம்புலிக் கதைகளை நம்ப மறுப்பவன். மருதனின் பாட்டிதான் பொன்னிக்குப் பிரசவம் பார்த்த மருத்துவச்சி சீமாட்டி. மற்றொருவரிடமிருந்து கிடைக்கும் அம்புலியின் ஓவியத்தை வைத்து காவல்துறையில் புகாரளிக்க செல்கின்றனர். ஆனால் ஓவியத்தை ஆதாரமாக எடுத்துக்கொள்ள மறுக்கும் காவல்துறை அம்புலியின் நிழற்படத்தைக் கேட்கிறது. அம்புலியைப் புகைப்படம் எடுக்க காட்டிற்குள் செல்லும்முன், வேதகிரி செங்கோடன்தான் அம்புலியின் மூத்த சகோதரன் என்றும், கல்லூரி நிறுவனர் சர் ஆர்தர் வில்லிங்டனைக் கொன்றவன் என்றும் உண்மையைக் கூறுகிறார்.
மருதன் ஒருநாள் அம்புலி இருக்குமிடத்திற்குச் சென்று தப்பிவந்த பிறகு அம்புலியை நம்புகிறான். அவன் தன் பாட்டி சீமாட்டியிடம் அம்புலி பற்றிக் கேட்க அவள் தனக்குத் தெரிந்ததைக் கூறுகிறாள். அதே சமயம் கல்லூரியில் சர் ஆர்தர் வில்லிங்டன் அறைக்குள் செல்லும் அமுதனுக்கும் வேந்தனுக்கும் கிடைக்கும் சில ஆவணங்கள், படச்சுருள்கள் மூலம் உண்மை தெரிகிறது.
சர் ஆர்தர் வில்லிங்டன் இரண்டாம் உலகப்போரில் பிரித்தானிய ராணுவத்தில் பணியாற்றிய மருத்துவர். அவர் 150 ஆண்டுகள் வாழக்கூடிய ஒரு குழந்தையை உருவாக்கச் செய்யும் மருத்துவ ஆராய்ச்சிக்கு அவரிடம் சிகிச்சை பெற வரும் கர்ப்பிணி பொன்னியைப் பயன்படுத்திக் கொள்கிறார். அவளுக்குச் செலுத்தும் மருந்துகளின் விளைவாலும், சூரிய கிரகணத்தின் பாதிப்பிலும் அம்புலி பிறக்கிறது. பொன்னி தற்கொலை செய்துகொள்கிறாள். இதற்கு காரணமான சர் ஆர்தர் வில்லிங்டனை செங்கோடன் கொல்கிறான் என்ற உண்மை தெரிகிறது.
அனைத்து உண்மைகளைத் தெரிந்துகொண்ட பிறகு காட்டுக்குள் அமுதனும் வேந்தனும் செல்கிறார்கள். அவர்களைத் தேடி பூங்காவனமும் வளர்மாலையும் செல்கிறார்கள். அங்கே வரும் செங்கோடன் அவர்களுக்கு உதவுகிறான். அவர்களைத் தாக்க வரும் அம்புலியிடம் சண்டையிடுகின்றனர். அப்போது கிராமத்தினரை அழைத்துக் கொண்டு மருதனும், அமுதன் மற்றும் வேந்தன் முன்பே தெரிவித்த தகவலால் ராணுவத்தை அழைத்துக் கொண்டு காவல் அதிகாரியும் வர அனைவரும் சேர்ந்து அம்புலியைப் பிடித்து ராணுவத்திடம் ஒப்படைகின்றனர். அனைவரும் இனி அம்புலியால் எந்தப் பிரச்சனையும் இல்லை என்று மகிழ்கின்றனர்.
அம்புலியைக் கொண்டுசெல்லும் வண்டி டேராடூனில் விபத்துக்குள்ளாவதால் அம்புலி தப்பித்துவிடுகிறது. 'அம்புலியின் வேட்டை தொடரும்' என்ற வரிகளோடு படம் முடிகிறது.
நடிகர்கள்
தொகு- ஆர். பார்த்திபன் - செங்கோடன்
- ஜெகன் - மருதன்
- பி.எஸ். ஸ்ரீஜித் - வேந்தன்
- ஆர்.அஜய் - அமுதன்
- அம்புலி கோகுல்நாத் - அம்புலி
- சனம் ஷெட்டி - பூங்காவனம்
- ஜோதிஷா - வளர்மாலை
- உமா ரியாஸ் - பொன்னி
- தம்பி ராமய்யா - வேதகிரி
- கலைராணி - சீமாட்டி
- ராஜேந்திரன் - குகன்
- கிருஷ்ணசேகர் - வரகுணபாண்டியன்
- அசோகன் - குமரகுருபரன்
- பாஸ்கி - வேல்பாரி
- பாலாசிங் - துபாஷி
தயாரிப்பு
தொகுதமிழில் வெளியான முதல் 3டி திரைப்படம். படத்தில் 3 டி காட்சிகள் சிறப்பாக இருந்தது[2].
மானாட மயிலாட நிகழ்ச்சி மூலம் பிரபலமான கோகுல்நாத் இப்படத்தில் அம்புலியாக நடித்தார்.
வரவேற்பு
தொகுதினத்தந்தி - 3டி தொழில்நுட்பத்துடன் ஒரு மிரட்டலான படம்.
விகடன் - 40 / 100 மதிப்பெண்
www.luckylookonline.com - ‘அம்புலி’ திரைப்படம் தொழில்நுட்பரீதியாக தமிழுக்கு மைல்கல். தமிழின் முதல் ஸ்டீரியோஸ்கோபிக் 3டி படம் இது. அதாவது பைனாக்குலரில் ஒரு காட்சியைக் காண்பதைப்போன்ற அனுபவத்தை திரையில் நீங்கள் உணரலாம்[3]
இசை
தொகுஇப்படத்தில் நான்கு இசையமைப்பாளர்கள் பணிபுரிந்தனர். கே. வெங்கட் பிரபு சங்கர், சாம் சி. எஸ்., சதிஷ் மற்றும் மெர்வின் ஆகியோராவர். 2011 ஆகஸ்ட் 19 இல் காமராஜர் அரங்கத்தில் பாடல் வெளியீட்டு விழாவும், படத்தின் முன்னோட்டத் திரையிடலும் நடந்தது.
வெளி இணைப்புகள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ [=https://tamil.filmibeat.com/reviews/ambuli-3-d-review-3-aid0136.html "=முதல் 3டி திரைப்படம்"].
{{cite web}}
: Check|url=
value (help) - ↑ [=https://tamil.filmibeat.com/reviews/ambuli-3-d-review-3-aid0136.html "=3டி காட்சிகள் சிறப்பு"].
{{cite web}}
: Check|url=
value (help) - ↑ "=தமிழ் சினிமாவில் மைல்கல்". Archived from [=https://www.luckylookonline.com/2012/11/blog-post_19.html the original] on 2020-08-05. பார்க்கப்பட்ட நாள் 2019-01-31.
{{cite web}}
: Check|url=
value (help)