அரக்கு
அரக்கு என்பது ஒருவகை இயற்கைப் பிசின் ஆகும். அரக்குப் பூச்சிகளிலிருந்து வெளிப்படும் ஒரு திரவம் காற்றில் உலர்ந்து அரக்காகிறது.அரக்கு நீரிலும் எண்ணெயிலும் கரையாது. ஒட்டும் தன்மையும் நீளும் தன்மையும் கொண்டது. அதிக அளவில் அரக்கு விளையும் நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும்.
அரக்குப் பூச்சிகள்
தொகுஅரக்குப் பூச்சிகள் மூட்டைப் பூச்சி இனத்தைச் சார்ந்தவை. இவை ஒரே இடத்தில் இலட்சக்கணக்கில் வாழும். எனவே இலட்சம் எனும் பொருள் தரும் 'லாக்'(LAC) என்ற பெயரில் இப்பூச்சி அழைக்கப்படுகிறது. மரங்களின் தன்மை பொருத்தே அரக்குப் பூச்சிகள் அரக்கு திரவத்தைச் சுரக்கின்றன. அரக்கு திரவத்தை இப்பூச்சிகள் தற்காப்புப் பொருளாகவே பயன்படுத்துகின்றன.
வாழ்க்கை முறை
தொகுஅரக்குப் பூச்சிகள் இயற்கையாக மரங்களின் கிளைகள், குச்சிகள் ஆகியவற்றில் வாழும். இவை எல்லா வகை மரங்களிலும் வாழ்வதில்லை. புரசு[1] பூவரசு, இலந்தை, பலாசு, காசுக்கட்டி போன்ற மரங்களிலேயே அதிகம் வாழ்கின்றன. இவை மரச் சாற்றை உண்டு வாழ்கின்றன. அரக்குப் பூச்சி உள்ள குச்சிகளை உடைத்து வேண்டிய மரக்கிளைகளில் கட்டி, அப்புதிய மரத்திலும் அரக்குப் பூச்சிகளைக் குடியேறச் செய்வர்.
அரக்கின் வகைகள்
தொகுபெண் பூச்சிகளின் உடலிலிருந்து பிசின் போன்ற திரவம் சுரந்து மரக் கிளைகளில் படிகிறது. இது ஒரு செ. மீ. கனத்துக்குப் படியும். இக்கிளையை வெட்டியெடுத்து அவற்றில் உள்ள அரக்கைச் சுரண்டி எடுப்பார்கள் இதுவே 'கொம்பரக்கு' எனப்படும். பின் அதனை கொதிக்கும் நீரில் போட்டு அதிலுள்ள அசுத்தங்களை அகற்றுவார்கள். இவ்வாறு சுத்தம் செய்த அரக்கு 'மணியரக்கு' எனப்படுகிறது. மணியரக்கை மேலும் தூய்மைப்படுத்தி தகடு வடிவில் தயாரிப்பார்கள். இது 'தகடரக்கு' என்று அழைக்கப்படுகிறது.
அரக்கின் பயன்கள்
தொகுஅரக்கிலிருந்து பல்வேறு பொருள்கள் உருவாக்கப்படுகின்றன.
- இசைத்தட்டுகள்,மரச்சாமான்கள், மின்தடைச் சாதனங்களின் மேல் பூச்சு, காகித அட்டைகள், நகச்சாயங்கள், கை வளையல்கள் ஆகியன தயாரிக்க அரக்கு பயன்படுகிறது.
- நீண்ட காலமாக அரக்குச்சாயம், கம்பளி , பட்டு, தோல் ஆகியவற்றுக்கு வண்ணம் பூசப் பயன்பட்டு வந்துள்ளது.
- மெருகெண்ணெய், வர்ணக்குச்சிகள், முத்திரைஅரக்கு ஆகியவைகளும் அரக்கு கொண்டு உருவாகும் பொருள்களே ஆகும்.
- இசைக்கருவி, தாமிரப் பாத்திரங்கள் விளையாட்டுப் பொருள்கள், நாற்காலி போன்றவைகளுக்கு மெருகேற்றவும் அரக்கு பயன்படுகிறது.
- கொம்பரக்கும், மணியரக்கும் மருந்துப் பொருளாகவும் பயன்படுகின்றன.
ஆதாரம்
தொகு- ↑ "அரசனை நம்பி, கைவிடப்பட்ட புரசம்". தி இந்து (தமிழ்). 23 ஏப்ரல் 2016. பார்க்கப்பட்ட நாள் 23 ஏப்ரல் 2016.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|date=
(help)