அரச சாலை (Royal Road) என்பது ஒரு பழங்கால நெடுஞ்சாலை ஆகும். இது கி.மு 5ஆம் நூற்றாண்டில் முதல் ( அகாமனிசியப் பேரரசு ) பாரசீக சாம்ராஜ்யத்தின் பாரசீக மன்னர் முதலாம் டேரியஸ் என்பவரால் மறுசீரமைக்கப்பட்டு மீண்டும் கட்டப்பட்டது. டேரியஸ் தனது மிகப் பெரிய சாம்ராச்சியம் முழுவதும் சூசாவிலிருந்து சர்திஸ் வரை விரைவான தகவல்தொடர்புக்கு வசதியாக இந்தச் சாலையைக் கட்டினார். அரசர்களின் தூதர்கள் அங்காரியம் என்ற இடத்திலிருந்து 1677 மைல்கள் (2699 கி.மீ) பயணிக்க வேண்டும் . ஒன்பது நாட்களில் சூசாவிலிருந்து சர்திஸ் வரை சென்றனர்; மொத்தமாக காலநடையாக பயணம் தொண்ணூறு நாட்கள் ஆனது. கிரேக்க வரலாற்றாசிரியர் எரோடோட்டசு இவ்வாறு எழுதினார், "இந்த பாரசீகத் தூதர்களை விட வேகமாக பயணிக்கும் எதுவும் உலகில் இல்லை." இந்த தூதர்களுக்காக எரோடோட்டசின் பாராட்டு — "பனி, மழை, வெப்பம் அல்லது இரவின் இருள் ஆகியவை இவர்கள் பொருட்படுத்தாமல் நியமிக்கப்பட்ட பணிகளை விரைவாக முடிப்பதில் இருந்து பின்வாங்குவதில்லை" — இது நியூயார்க்கில் உள்ள ஜேம்ஸ் பார்லி அஞ்சல் நிலையத்தில் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த வரிகள் சில நேரங்களில் அமெரிக்காவின் அஞ்சல் சேவையின் மதம் என்று கருதப்படுகிறது.

எரோடோட்டசு குறிப்பிட்டுள்ள அகாமனிசியப் பேரரசின் வரைபடம் மற்றும் அரச சாலையின் பகுதி

அரச சாலை தொகு

எரோடோட்டசின் எழுத்துக்களிலிருந்தும், தொல்பொருள் ஆராய்ச்சி மற்றும் பிற வரலாற்று பதிவுகளிலிருந்து சாலையின் பாதை புனரமைக்கப்பட்டுள்ளது தெரிய வருகிறது. இது லிடியாவின் ஏஜியன் கடற்கரைக்கு அருகிலுள்ள சர்திசில் தொடங்கி, அனடோலியா வழியாக கிழக்கு நோக்கி பயணித்தது சிலிசியன் கணவாய் வழியாக பழைய அசிரிய தலைநகர் நினிவேவுக்கு மேல் மெசொப்பொத்தேமியாவிற்குச் சென்று, பின்னர் தெற்கே பாபிலோனுக்கு திரும்பியது. பாபிலோனுக்கு அருகில் இருந்து, இது இரண்டு வழிகளாகப் பிரிந்துவிட்டதாக நம்பப்படுகிறது. ஒன்று வடகிழக்கு வழியாக கிழக்கு நோக்கி எகபடானா வழியாக, பட்டுப் பாதையில் பயணிக்கிறது. மற்றொன்று கிழக்கு பாரசீக தலைநகர் சூசா வழியாக, தென்கிழக்கு சக்ரோசு மலைகளில் பெர்செபோலிஸ் வரையிலும் தொடர்கிறது. பயணிகள் மற்றும் வர்த்தகர்களுக்கான இத்தகைய நீண்ட வழிகள் முடிவடைய பெரும்பாலும் மாதக் கணக்கில் ஆனது. டேரியஸின் ஆட்சியின் போது ஏராளமான அரச புறக்காவல் நிலையங்கள் ( கேரவன்செராய் ) கட்டப்பட்டன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அரச_சாலை&oldid=2976804" இலிருந்து மீள்விக்கப்பட்டது