அருவங்காடு

(அரவங்காடு இலிருந்து வழிமாற்றப்பட்டது)

அருவங்காடு (Aruvankadu) நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய நகரம் ஆகும். இந்நகரம் குன்னூர் மற்றும் ஊட்டி நகரங்களுக்கு இடையே தேசிய நெடுஞ்சாலை எண் 67 இல் அமைந்துள்ளது. குன்னூர் நகரத்திலிருந்து 6 கிமீ தொலைவிலும் ஊட்டியிலிருந்து 12 கி.மீ. தொலைவிலும் அருவங்காடு அமைந்துள்ளது. பல்வேறு நகரங்கள் மற்றும் பேரூர்களிலிருந்தும் பேருந்து வசதிகளால் அருவங்காடு நகரம் இணைக்கப்பட்டுள்ளது. நீலகிரி மலை இரயில் பாதை வழியாகவும் இந்நகரம் இணைக்கப்பட்டுள்ளது.

அருவங்காடு
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் நீலகிரி
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்[1]
முதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]
மாவட்ட ஆட்சியர் ஜே. இன்னொசென்ட் திவ்யா, இ. ஆ. ப. [3]
மக்கள் தொகை 5,304 (2001)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

மக்கள் வகைப்பாடுதொகு

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 5304 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[4] இவர்களில் 53% ஆண்கள், 47% பெண்கள் ஆவார்கள். அருவங்காடு மக்களின் சராசரி கல்வியறிவு 87% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 91%, பெண்களின் கல்வியறிவு 82% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. அருவங்காடு மக்கள் தொகையில் 7% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

தொழிற்சாலைதொகு

இந்திய மத்தியப் பாதுகாப்பு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் நாற்பது தொழிற்சாலைகளில் ஒன்றான கார்டைட்டு எனப்படும் புகையற்ற வெடிமருந்துத் தொழிற்சாலை அருவங்காட்டில் உள்ளது [5].இந்திய பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் இந்திய பாதுகாப்பு ஆணையம் ஆகியவற்றின் கீழ் இயங்கும் மிகவும் பழமையான இராணுவத் தொழிற்சாலைகளில் இதுவும் ஒன்றாகும்.

கார்டைட்டு தொழிற்சாலை 1903 ஆம் ஆண்டில் அப்போதைய பிரித்தானிய அரசாங்கத்தால் ஒரு பெரிய வளாகமாக நிறுவப்பட்டது. இன்றும் கூட இராணுவத் தேவைகளுக்கான வெடிமருந்து இங்கு பேரளவில் தயாரிக்கப்படுகிறது. இவ்வெடிமருந்து சிறிய ஆயுதங்களை தயாரிப்பதற்கும், பல பீரங்கிகளில் உந்துபொருளாகவும் பயன்படுத்தப்படுகின்றது [5]. பாலாசி நகர், காரகொரை, யகதளா, ஒசட்டி போன்ற சிறிய கிராமங்கள் அருவங்காட்டைச் சுற்றி அமைந்துள்ளன. கேந்திரிய வித்யாலயா, இராணுவ ஊழியர்கள் மெட்ரிகுலேசன் பள்ளி, கார்டைட் தொழிற்சாலை மேல்நிலைப் பள்ளி மற்றும் புனித ஆன்சு கன்னி மடம் மற்றும் பெண்கள் மேல்நிலை பள்ளி ஆகிய நான்கு பள்ளிக்கூடங்கள் இங்கு கல்வி பணியாற்றுகின்றன. கார்டைட் தொழிற்சாலையுடன் இணைக்கப்பட்ட ஒரு பயிற்சி கல்லூரியும் இங்குள்ளது.

கார்டைட்டு தொழிற்சாலை கொடுக்கும் வேலையும், நீலகிரி தேயிலையையும், காய்கறிகளையும் பயிரிடுதலால் கிடைக்கும் வருவாயும் உள்ளூர் மக்களுக்கான வருவாயின் முக்கிய ஆதாரங்களாகும்.

நாகரீகமும் பொழுதுபோக்கும்தொகு

சிறீ பாறை முனீசுவரன் ஆலயம், பழமையான அருவங்காடு சிறீ முத்து மாரியம்மன் ஆலயம், கோபாலபுரம் சித்திவிநாயகர் ஆலயம், விநாயகர் கோயில், கோட்டு மாரியம்மன் கோயில், அய்யப்பன் கோயில், புனித ஆண்ட்ரூசு தேவாலயம், ஆரோக்கிய மாதா ஆலயம், அருவாங்காடு பள்ளிவாசல், புனித தாமசு பேராலயம் போன்றவை இங்குள்ள வழிபாட்டுத் தலங்களாகும்.

முக்கிய நபர்கள்தொகு

பிரித்தானிய வானியலாளரும் இயற்பியலாளருமான ராபர்ட் அன்சுபரி பிரவுன், அருவங்காட்டில் பிறந்து 8 வயது வரை இவ்வூரில் வாழ்ந்தார்.

மேற்கோள்கள்தொகு

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  4. "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". பார்த்த நாள் ஜனவரி 30, 2007.
  5. 5.0 5.1 "About Aruvankadu". ofbindia.nic.in. பார்த்த நாள் 2011-08-31.

புற இணைப்புகள்தொகு

விக்கிமீடியா பொதுவகத்தில்,
அருவங்காடு
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அருவங்காடு&oldid=2719962" இருந்து மீள்விக்கப்பட்டது