பகீரத தபசு புடைப்புச் சிற்பம், மாமல்லபுரம்

(அருச்சுனன் தபசு இலிருந்து வழிமாற்றப்பட்டது)

பகீரத தபசு எனப் பொதுவாக அழைக்கப்படும் பெரிய புடைப்புச் சிற்பத் தொகுதி மாமல்லபுரத்தில் தலசயனப் பெருமாள் கோயிலுக்கு பின்புறத்தில் அமைந்துள்ள பெரிய பாறையில் செதுக்கப்பட்டுள்ளது. விண்ணவர், மனிதர், விலங்குகள், பறவைகள் மற்றும் இயற்கை அம்சங்கள் எனப் பல வகையானவற்றையும் சித்தரிக்கின்ற இச் சிற்பம் ஏதோ ஒரு புராணக் கதை நிகழ்வை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப் பட்டது என்பதில் கருத்து வேறுபாடு கிடையாது. எனினும் இது குறிக்கின்ற நிகழ்வு எது என அடையாளம் காண்பதில் ஆய்வாளரிடையே கருத்து வேறுபாடுகள் உள்ளன.

பகீரதன் தவசுச் சிற்பம் அல்லது அருச்சுனன் தபசுச் சிற்பம்
பகீரத தபசு சிற்பத்தின் கருப்பொருளைக் குறிக்கும் பகுதி. ஒற்றைக்காலில் தவம் செய்யும் மனிதனையும், அருகே பூத கணங்கள் சூழ வரமளிக்கும் இறைவனையும் காண்க.

சுமார் முப்பது மீட்டர் வரை உயரமும், அதன் இரண்டு மடங்கு வரையிலான நீளமும் கொண்ட இப்பாறை இயற்கையிலேயே நடுவில் பிளவு பட்டிருப்பது போன்ற தோற்றத்துடன் காணப்படுகின்றது. இதை ஒரு குறைபாடாக எடுத்துக்கொள்ளாது, இப்பிளவையும் சிற்பத் தொகுதியின் கருத்துருவுக்கு அமையத் திறமையாகச் சிற்பி பயன்படுத்திக் கொண்டிருப்பதைக் காண முடிகின்றது. இது ஒரு ஆறு அல்லது நீரோட்டமாக உருவகப் படுத்தப்பட்டுள்ளது. நிலைக்குத்துத் திசையில் சிற்பத்தொகுதி நான்கு படைகள் (layers) அல்லது நிலைகளாகக் கருதி வடிவமைக்கப்பட்டுள்ளது தெரிகிறது. மேலிருந்து பார்க்கும்போது முதல் நிலை விண்ணுலகையும், இரண்டாவது விண்ணுலகுக்கும் மண்ணுலகுக்கும் இடைப்பட்ட நிலையையும், மூன்றாவது மண்ணுலகையும், அடியில் உள்ளது பாதாள உலகத்தையும் குறித்து நிற்பதாகக் கூறப்படுகின்றது.

இச்சிற்பத்தில் ஒற்றைக்காலில் நின்றபடி தவமிருக்கும் ஒரு மனித உருவமும், அவனுக்கு அருகில், சூலாயுதத்தை ஏந்தியபடி, பூதகணங்கள் புடைசூழ நின்று வரமளிக்கும் சிவனும் செதுக்கப்பட்டுள்ளது. இது பாசுபத அஸ்திரம் பெறுவதற்காக அருச்சுனன் சிவனை நோக்கித் தவமிருந்த கதையைக் குறிப்பதாகக் கருதிச் சிலர் இதனை அருச்சுனன் தபசு என அழைக்கின்றனர். வேறு சிலர் இது பகீரதன் தவம் என்கின்றனர். தனது முன்னோருக்கு இறுதிக்கிரியைகள் செய்ய விரும்பிய பகீரதன், ஆகாயத்திலிருந்து கங்கையைக் கொண்டுவர விரும்பினானாம். ஆனால், கங்கை வேகமாகப் பூமியில் விழுந்தால் உலக அழிவு ஏற்படும் என அஞ்சிய அவன் அதனைத் தடுப்பதற்காகச் சிவனை நோக்கித் தவமிருந்தானாம். சிவன் கங்கையைத் தன் தலையில் ஏந்தி மெதுவாகப் பூமியில் விழச் செய்தார் என்பது புராணக்கதை. இதுவே இச்சிற்பத்தின் கருப்பொருள் என்பது அவர்கள் கருத்து.[1] இச்சிற்பத்தில் தவம் செய்பர் மேற்குறிப்பிட்டவாறு பகீரதனோ, அருச்சுனனோ அல்ல அது சகர மாமன்னரையே குறிக்கும் என்று அச்சிற்பங்களை விரிவாக விளக்கி மகாபலிபுரத்து ஜைன சிற்பம் என்ற தனி நூலை மயிலை சீனி. வேங்கடசாமி எழுதியுள்ளார்.

இவற்றையும் பார்க்கவும்

தொகு

குறிப்புகள்

தொகு
  1. காசிநாதன், நடன., மாமல்லபுரம், மணிவாசகர் பதிப்பகம், சென்னை, 2000. பக்.38,39.