ஆண்டலை என்பது பிணம் தின்னும் ஒருவகை விலங்கு. இதனை ஆண்தலை என இக்காலத்தில் எழுதுகின்றனர்.[1] இது போர்க்களத்தில் பிணங்களை தின்னும் என இலக்கியங்களில் காட்டப்பட்டுள்ளது. விரும்பாத ஒருவனை ‘ஆண்தலைக்கு ஈன்ற பறழ்மகன்’ என ஒருத்தி திட்டுகிறாள். மூங்கா, வெருகு என்னும் பூனை, மூவரி, அணில், நாய், பன்றி, புலி, முயல், நரி, ஆகியவற்றின் குட்டிகள் ‘பறழ்’ என அழைக்கப்படும் எனத் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது.[2] எனவே ஆண்டலை என்பது இத்தகையதோர் விலங்கு எனத் தெரிகிறது. இது பிணம் தின்னும் விலங்கு ஆகும். இதனை ஆண்டலைப் புள் எனவும் கருதுகின்றனர்.[3][4]

ஆண்டலை ஆண்மகன் போல் பறட்டைத்தலை கொண்ட விலங்கு. இந்தப் படம் பிணம் தின்னும் அந்த விலங்கின் பிறிதோர் இனம்

தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் போர்க்களம் [5], கரிகாலன் போர்க்களம் [6], பல்யானைச் செல்கெழு குட்டுவன் போர்க்களம்

பசும் பிசிர் ஒள் அழல் ஆடிய மருங்கின்,
ஆண்டலை வழங்கும் கான் உணங்கு கடு நெறி
முனை அகன் பெரும் பாழ் ஆக (பதிற்றுப்பத்து 25)

முதலான இடங்களில் ஆண்டலை விலங்கு பிணம் தின்ற செய்தி இலக்கியங்களில் கூறப்பட்டுள்ளன.

குறளன் ஒருவன் காமம் நுகரக் கூனி ஒருத்தியைத் தடுத்து நிறுத்தும்போது அந்தக் குறளனைக் கூனி பிணம் தின்னும் நரிக்குப் பிறந்த குட்டி என்னும் கருத்துப்பட ஆண்டலைக்கு ஈன்ற பறழ்மகன் எனத் திட்டுகிறாள்.[7]

கலிங்கத்துப்பரணியில் காளி கோயிலின் சிறப்பைப் பாடும் 'கோயில் பாடியது' பகுதியில் ஒரு காட்சி வருகிறது. பலிபீடத்தில் அரிந்துவைக்கப்பட்ட, நீண்ட சிகையையுடைய ஆண்மகனின் தலையைத் தன் இனத்தைச் சேர்ந்த பறவை என்று தவறாகக் கருதிய ஆண்டலைப் புள் அருகே வருகிறது. அவ்வாறு ஆண்டலைப் புள் அருகணைய ஆண் தலை அதனை அச்சமூட்டுகிறது.[9]

அடிக்குறிப்பு

தொகு
 1. ஆண்மகன் போன்ற பறட்டைத் தலை கொண்டது போலும்.
 2. மூங்கா, வெருகு, எலி, மூவரி, அணிலொடு,
  ஆங்கு-அவை நான்கும் குட்டிக்கு உரிய. (தொல்காப்பியம் 550)
  பறழ் எனப்படினும் உறழ் ஆண்டு இல்லை (தொல்காப்பியம் 551)
  'நாயே, பன்றி, புலி, முயல், நான்கும்,
  ஆயும் காலை, குருளை' என்ப. (தொல்காப்பியம் 552)
  நரியும் அற்றே, நாடினர் கொளினே. (தொல்காப்பியம் 553)
  குட்டியும் பறழும் கூற்று அவண் வரையார் (தொல்காப்பியம் 554)

 3. சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ்ப் பேரகராதி ஆண்டலை பரணிடப்பட்டது 2013-07-31 at the வந்தவழி இயந்திரம்
 4. ஆண்டலைப் புள் படம்
 5. ஆண் தலை அணங்கு அடுப்பின்,
  வய வேந்தர் ஒண் குருதி
  சினத் தீயின் பெயர்பு பொங்க, (மதுரைக்காஞ்சி 29 முதல்)
 6. அழு குரல் கூகையோடு ஆண்டலை விளிப்பவும்;
  கணம் கொள் கூளியொடு கதுப்பு இகுத்து அசைஇ,
  பிணம் தின் யாக்கைப் பேய் மகள் துவன்றவும்;
  கொடுங் கால் மாடத்து நெடுங் கடைத் துவன்றி,
  விருந்து உண்டு ஆனாப் பெருஞ் சோற்று அட்டில் (பட்டினப்பாலை 258 முதல்)

 7. அன்னையோ! காண் தகை இல்லாக் குறள் நாழிப் போழ்தினான்,
  ஆண்தலைக்கு ஈன்ற பறழ் மகனே நீ! எம்மை,
  'வேண்டுவல்' என்று விலக்கினை; நின் போல்வார்
  தீண்டப் பெறுபவோ மற்று? (கலித்தொகை 94)

 8. புலவுஊண் பொருந்திய குராலின் குரலும்
  ஊண்தலை துற்றிய ஆண்டலைக் குரலும் (மணிமேகலை 6-77)
 9. நீண்ட பலிபீடத்தில் அரிந்து வைத்த
  நெடுங்குஞ்சிச் சிரத்தைத்தன் இனம் என்று எண்ணி
  ஆண்டலைப் புள் அருகு அணைந்து பார்க்குமாலோ
  அணைதலும் அச்சிரம் அச்சம் உறுத்துமாலோ (கலிங்கத்துப்பரணி, கோயில் பாடியது 112)

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆண்டலை&oldid=3850288" இலிருந்து மீள்விக்கப்பட்டது