ஆனந்த சமரக்கோன்

ஆனந்த சமரக்கோன் (Ananda Samarakone, சிங்களம்: ආනන්ද සමරකෝන්) என அழைக்கப்படும் எகோதகாகே ஜோர்ஜ் வில்பிரட் அல்விசு சமரக்கோன் (Egodahage George Wilfred Alwis Samarakoon, 13 சனவரி 1911 - 5 ஏப்ரல் 1962) இலங்கையில் சிங்கள இசைத்துறையில் ஒரு முன்னோடியாகவும், 20ஆம் நூற்றாண்டில் சிங்கள இசையில் செல்வாக்குச் செலுத்திய மூவருள் ஒருவராகவும் குறிப்பிடப்படுகிறார். மற்ற இருவர், சுனில் சாந்த, அமரதேவ என்பவர்களாவர். இவர் ஒரு இசைக்கலைஞர் மட்டுமன்றி, சிங்கள மொழியில் சிறந்த பாடலாசிரியரும், திறமை மிக்க ஒரு ஓவியரும் ஆவார். இவர் "சிறீ லங்கா தாயே" என்ற இலங்கையின் நாட்டுப்பண்ணை இயற்றி இசையமைத்தவர் ஆவார்.

ஆனந்த சமரக்கோன்
Ananda Samarakoon
பின்னணித் தகவல்கள்
இயற்பெயர்எகொடகாகே ஜோர்ஜ் வில்பிரட் அல்விஸ் சமரக்கோன்
பிற பெயர்கள்ஆனந்த சமரக்கோன்
பிறப்புசனவரி 13, 1911
பிறப்பிடம்இலங்கை
இறப்புஏப்ரல் 5, 1962(1962-04-05) (அகவை 51)
இசை வடிவங்கள்சிங்கள இசை
தொழில்(கள்)பாடகர்-கவிஞர்
ஆசிரியர்
இசைத்துறையில்1938–1962

ஆரம்ப காலம்

தொகு

இலங்கையில் பாதுக்கை என்னும் இடத்தில் சாமுவேல் சமரக்கோன், டொரிங்கா ஆகியோருக்குப் பிறந்த இவர் பிறப்பால் கிறித்தவர். இவருக்கு இடப்பட்ட பெயர் "ஜோர்ஜ் வில்பிரட் அல்விஸ்" என்பதாகும். பள்ளிப் படிப்பை முடித்தபின், 1931 இல் இலங்கைத் தொழில்நுட்பக் கல்லூரியில் சேர்ந்து, பயிற்சி பெற்றார். 1936 ஆம் ஆண்டு, தனது இருபத்து ஐந்தாவது வயதில் இந்தியாவில் உள்ள சாந்திநிகேதனுக்குச் சென்று அங்கே நந்தல போஸ் என்பவரின் கீழ், ஓவியம் பயின்றார். இசையையும் ஒரு துணைப் பாடமாக அவர் பயின்றார். அங்கே இவரது கல்வி ஆறு மாதங்கள் மட்டுமே நீடித்ததாகத் தெரிகிறது. இலங்கை திரும்பிய இவர், 1937 இல், தனது முன்னோரின் மதமான பௌத்தத்துக்கு மாறினார், பெயரையும் ஆனந்த என்று மாற்றிக்கொண்டார்.[1]

ஆக்கங்கள்

தொகு

1940 இல் இவர் எழுதிய எண்டத மெனிக்கே என்னும் இசைப் பாடல், தற்கால சிங்கள இசைக்கலைக்கு ஒரு அடித்தளமாக அமைந்ததுடன், சமரக்கோனுக்குப் புகழையும் தேடிக்கொடுத்தது. இதன் வெற்றியைத் தொடர்ந்து 1940களின் முதற்பாதியில் பல ஆக்கங்களைச் சிங்கள இசைத்துறைக்கு அளித்தார். இக்காலமே இவரது பொற்காலம் என விமர்சகர்களால் குறிப்பிடப்படுகிறது. இவரது ஆக்கங்களில், பொடிமல் எதனோ, விலே மலக் பிபிலா, அசே மதுர, சுனிலா குவனே, புஞ்சி சுதா, நில்வல கங்கே, சுமனோ, புதுமு குசும், சிரி சரு சார கெதே என்பவை இவரது ஆக்கங்களில் பெரிதும் புகழ் பெற்றவை.

இவற்றுடன், ஒரு மாணவர் பரம்பரை ஒன்றை உருவாக்குவதிலும் அவர் சிறந்த பங்களிப்புச் செய்துள்ளார். சிங்கள இசைத்துறையில் புகழ் பெற்றவர்களான ஆர். ஏ. சந்திரசேன, டபிள்யூ. டி. அமரதேவ ஆகியோர் இவரது மாணவர்களாவர்.

நாட்டுப்பண்

தொகு

1940 இல் இவர் எழுதிய நமோ நமோ மாதா என்னும் சிங்கள தேசபக்திப் பாடலே இலங்கையின் நாட்டுப்பண்ணாக 1951 நவம்பர் 22 இல் அன்றைய அரசால் ஏற்றுக் கொள்ளப்பட்டது.[2] நமோ நமோ மாதா பாடலை இரவீந்திரநாத் தாகூர் தனது மாணவர் ஆனந்த சமரக்கோனுக்காக எழுதியதாகவும், இப்பாடலைப் பின்னர் சமரக்கோன் சிங்களத்தில் மொழிபெயர்த்து இசையமைத்தார் எனவும் வேறு தகவல்கள் தெரிவிக்கின்றன.[3][4] எனினும் இப்பாடல் நமோ நமோ என அமங்கலமான எனும் எழுத்தில் தொடங்குவது அபசகுனமானது என்றும், நாட்டுக்குத் துரதுர்ஷ்டத்தைக் கொண்டு வரும் என்றும் ஒரு பிரிவினர் வாதிட்டதில், ஸ்ரீ லங்கா மாதா என்னும் வரி முதல் வரியாகச் சேர்த்துக் கொள்ளப்பட்டது. இதை சமரக்கோன் வன்மையாக எதித்தார் என்றும், தன்னுடைய பாடலைத் தனது அனுமதியின்றி மாற்றியது பற்றி மிகவும் அதிருப்தி கொண்டிருந்தாரென்றும் கூறப்படுகிறது.

இறுதிக் காலம்

தொகு

இவரது வாழ்க்கையில் நடந்த பல சம்பவங்களால் இவர் பெரிதும் பாதிப்படைந்திருந்தார். முக்கியமாக, 1945 ஆம் ஆண்டில், ஐந்து வயது நிரம்பிய இவரது ஒரே மகன் அகால மரணமானது இவரைப் பெரிதும் பாதித்ததாகக் கருதப்படுகிறது. இதைத் தொடர்ந்து நாட்டை விட்டு வெளியேறிய அவர் 1951 வரை இந்தியாவில் காலத்தைக் கழித்ததாகத் தெரிகிறது. இக்காலத்தில் இவர் பாடல் எதுவும் எழுதியதாகத் தெரியவில்லை.

ஓவியத்துறையில் நாட்டத்தைத் திருப்பிய இவர், அத்துறையிலும் தனது திறமையை வெளிப்படுத்தினார். இந்தியாவில் மும்பாய், புது டெல்லி, பெங்களூர் ஆகிய நகரங்களிலும், மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும் இவரது ஓவியக் கண்காட்சிகள் இடம் பெற்றிருப்பதாகத் தெரிகிறது.

1951 க்குப் பின்னர் இவரது ஆக்கங்கள் பல முன்னர் போல் சோபிக்கவில்லை என்றும், அவற்றின் கலைத்துவம் படிப்படியாக வீழ்ச்சியடைந்து வந்தது என்றும் விமர்சகர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள். இக்கால கட்டத்தில் திரைப்படத்துறையிலும் ஈடுபட்டிருந்த இவரால் குறிப்பிடத்தக்க வகையில் கலைத்துவம் கொண்ட ஆக்கங்கள் எதையும் தர முடியவில்லை என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.

இவ்வாறான போக்கின் உச்சக் கட்டமாக தனது 51 ஆவது வயதில், அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலை செய்துகொண்டார்.[2]

இவற்றையும் பார்க்கவும்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Hettiarachchi, Kumudini (4 பெப்ரவரி 2001). "When words killed a great man". சண்டே டைம்சு. {{cite web}}: Check date values in: |date= (help)
  2. 2.0 2.1 Saparamadu, Sumana (2006). "Ananda Samarakoon – The composer of our national anthem". சண்டே ஒப்சர்வர். Archived from the original on 2012-02-02. பார்க்கப்பட்ட நாள் pepravari 6, 2016. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. Habib, Haroon (17 மே 2011). "Celebrating Rabindranath Tagore's legacy". தி இந்து. http://www.thehindu.com/opinion/lead/celebrating-rabindranath-tagores-legacy/article2026880.ece. 
  4. Haque, Junaidul (7 மே 2011). "Rabindranath: He belonged to the world". டெய்லி ஸ்டார்]]. http://archive.thedailystar.net/newDesign/news-details.php?nid=184548. 

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆனந்த_சமரக்கோன்&oldid=3576565" இலிருந்து மீள்விக்கப்பட்டது