ஆயுதப்படை (சிறப்பு அதிகாரங்கள்) சட்டம், 1958

ஆயுதப்படை (சிறப்பு அதிகாரங்கள்) சட்டம் (Armed Forces (Special Powers) Act, AFSPA), இந்திய நாடாளுமன்றத்தால் செப்டம்பர் 11, 1958ஆம் ஆண்டு இயற்றப்பட்ட ஓர் சட்டமாகும். இச்சட்டம் அருணாச்சலப் பிரதேசம், அசாம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து மற்றும் திரிபுரா மாநிலங்களின் "அமைதிக்குறைவான பகுதிகள்" என்று சட்டம் குறிப்பிடும் இடங்களில் இந்தியப் படைத்துறையின் ஆயுதமேந்திய படைகளுக்கு சிறப்பு அதிகாரங்களை வழங்குகிறது. பின்னதாக சூலை 1990இல் சம்மு காசுமீர் மாநிலத்திற்கு ஆயுதப்படை (சம்மு காசுமீர்) சிறப்பு அதிகாரங்கள் சட்டம், 1990 என விரிவாக்கப்பட்டது.

சட்டம்

தொகு

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் கூறுகளின்படி மாநில அரசுகள் கீழ்வரும் காரணங்களில் ஏதாவதொன்றிற்காக அவசரநிலை அறிவிக்கலாம்:

  • உள்ளூர் குழப்பங்களை உள்ளூர் காவல்துறையால் நிர்வகிக்க முடியாது நிர்வாகம் சீர்குலைதல்.
  • நடுவண் பாதுகாப்புப் படைகள் மீண்டபிறகு "அமைதி நிலை" குலைதல்/போக்கிரிகள் திரும்புதல்.
  • மாநிலத்திலுள்ள அமைதியின்மையின் அளவு உள்ளூர் படைகளால் கையாளப்பட முடியாதிருத்தல்.

இத்தகைய நிலைகளில் மாநில அரசுகள் ஒன்றிய அரசின் உதவியை நாடுதல் இயல்பு. காட்டாக தேர்தல் நேரங்களில், உள்ளூர் காவல்துறை தங்கள் வழமையான பணிகளைக் கவனித்துக்கொண்டே தேர்தல் பணிகளையும் கவனிக்க இயலாதநிலையில் ஒன்றிய அரசு தனது மத்திய சேமக் காவல் படையினை அனுப்புகிறது. புரட்சி அல்லது போராட்டம் மிகுந்து தொடர்நிலையில் அமைதிக்குறைவு ஏற்படுமேயானால் , குறிப்பாக நாட்டின் எல்லைகளை அடுத்த பகுதிகளில் அரசாண்மை அச்சுறுத்தப்படுமேயானால், ஆயுதப்படைகள் ஈடுபடுத்தப்படும்.[1]

1972ஆம் ஆண்டு 7ஆம் சட்டத்தின்படி இவ்வாறு அமைதிக்குறைவான பகுதிகள் என்று அறிவிக்கும் அதிகாரம் ஒன்றிய அரசுக்கும் விரிவாக்கப்பட்டது.[2]

இத்தகைய சூழலில் படைத்துறை வீரர்களும் அதிகாரிகளும் மாநில/மாவட்ட ஆட்சியமைப்பிற்கு கீழாக பணி புரியாத நிலையிலும் குடிசார் சட்டங்கள் மற்றும் குற்றவியல் முறைமைகள் அறியாதநிலையிலும் அவர்களது செயலாக்கத்திற்கு சட்ட அனுமதி வழங்குமுகமாக இந்தச் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. .[1][3] இச்சட்டத்தின் மூலம் ஆயுதப்படையினருக்கு எவரையும் கைது செய்யவும் சோதனை செய்யவும் குழப்பம் மீறியநிலையில் சுடவும் அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இந்தச் சட்டம் அமலில் உள்ள இடங்களில் பாதுகாப்புப் படையினருக்கு கூடுதல் அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது. சந்தேகப்படும் நபர்களை வாரண்ட் இன்றி கைது செய்யவும், விசாரணை நடத்தவும், சோதனை நடத்தவும் அதிகாரமளிக்கப்பட்டுள்ளது. ராணுவத்தினர் யாரையும் சோதனையிடவும் பொருட்களைக் கைப்பற்றவும் முடியும். ஒரு ராணுவ வீரர் பொதுமக்கள் யாரையாவது தவறுதலாகவோ தவிர்க்க முடியாமலோ சுட்டுக் கொன்றுவிட்டால், இந்தச் சட்டம் அவரைப் பாதுகாக்கும்.

வரலாறு

தொகு

இந்தியாவில் சில மாநிலங்களில் பிரிவினைவாத வன்முறை வெடித்ததையடுத்து, சர்ச்சைக்குரிய இந்தச் சட்டத்தை 1958ல் இந்தியா அமல்படுத்தியது.

  • முதன்முதலாக இச்சட்டம் மணிப்பூரில் அமல்படுத்தப்பட்டது. பின்பு பிரிவினைவாத வன்முறை நிலவிய பிற வடகிழக்கு மாநிலங்களில் இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டது. இந்தச் சட்டம் பெரும்பாலும் தவறாகப் பயன்படுத்தப்பட்டதாகவும் மணிப்பூர் மாநிலத்தில் பலர் போலி மோதல்களில் கொல்லப்படுவதற்கு இந்தச் சட்டம் காரணமாக இருந்தது என்றும் மனித உரிமைப் போராளிகள் கூறிவருகின்றனர். இந்தச் சட்டத்தை எதிர்த்து, ஐரோம் சர்மிளா என்பவர் 10 ஆண்டுகளுக்கும் மேலாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார்.
  • 1989ல் ஜம்மு காஷ்மீரில் ஆயுதம் தாங்கிய கலகம் வெடித்ததும் அம்மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் இந்தச் சட்டம் அமல்படுத்தப்பட்டது.
  • திரிபுராவில் பிரிவினைவாதகக் கலகக்காரர்களால் வன்முறை அதிகரித்ததையடுத்து 1997 பிப்ரவரியில் இச் சட்டம் அமல்படுத்தப்பட்டது.[4]

படிப்படியாக சட்டம் நீக்கம்

தொகு

அசாம், திரிபுரா மற்றும் மேகாலயா மாநிலங்களில் இச்சட்டம் முற்றிலும் நீக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து நாகலாந்து மற்றும் மணிப்பூர் மாநிலத்தில் படிப்படியாக நீககவுள்ளதாக இந்தியப் பிரதமர் அறிவித்துள்ளார்.[5]

மேற்கோள்கள்

தொகு

வெளியிணைப்புகள்

தொகு