ஆய் சான் இரகசியச் சங்கம்

ஆய் சான் இரகசியச் சங்கம் (ஆங்கிலம்: Hai San Secret Society; மலாய்: Kongsi gelap Hai San; சீனம்: 海山公司 Hǎi Shān Gōng Sī) என்பது 1820-ஆம் ஆண்டில், மலாயா, பினாங்கு புறநகர்ப் பகுதிகளைத் தளமாகக் கொண்டு நிறுவப்பட்ட ஒரு சீன இரகசியச் சங்கம் ஆகும்.[1] இருப்பினும் இந்தச் சங்கம் முதன்முதலில் தென்சீனாவில் தோற்றம் கண்டதாக அறியப்படுகிறது.[2]

சூன் 1874-இல் கிள்ளான் காப்பித்தான் சீனா மற்றும் அவரின் போர் வீரர்கள்

பினாங்கில் தோற்றுவிக்கப்பட்ட போது லோ ஆ சோங் (Low Ah Chong); கோக் ஆ கியோவ் (Hok Ah Keow) என்பவர்கள் அதன் தலைவர்களாக இருந்தனர். 1825-ஆம் ஆண்டில், சங்கத்தின் தலைமையகம் பினாங்கு பீச் தெருவில் (Beach Street) அமைந்திருந்தது. தற்போது அந்தச் சாலை உஜோங் பாசிர் சாலை என அழைக்கப்படுகிறது.[3]

பொது

தொகு

இந்தச் சங்கத்தில் ஹக்கா சீன இனத்தவர் பெரும்பான்மை உறுப்பினர்களாக இருந்தனர். இந்தச் சங்கம் பெரும்பாலும் கீ கின் சங்கத்தினருக்கு எதிராகச் செயல்பட்டது. 1862-1873-ஆம் ஆண்டுகளில் பேராக் மாநிலத்தில் நடைபெற்ற லாருட் போர்களில் முக்கிய இடத்தையும் வகித்தது. லாருட் போர்களில் சுங் கெங் கியூ (Chung Keng Quee) என்பவர் ஆய் சான் சங்கத்திற்குத் தலைமை தாங்கினார்.[4]

தைப்பிங் லாருட் பகுதியில், ஆய் சான் சங்கத்தின் உறுப்பினர்களாக இருந்த ஈயச் சுரங்கத் தொழிலாளர்கள், கீ கின் இரகசியச் சங்கத்தைச் சேர்ந்த சுரங்கத் தொழிலாளர்களுடன் சண்டையில் ஈடுபட்டனர். அந்த இரு இரகசியக் கும்பல்களும் கெலியான் பாவ் மற்றும் கெலியான் பாருவின் ஈய வயல்களைத் தங்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காகச் சண்டையிட்டுக் கொண்டன. இதே போல சிலாங்கூர் மாநிலத்திலும், ஈய வணிகக் கட்டுப்பாட்டிற்காக இரு தரப்புகளும் மோதிக் கொண்டன.

பங்கோர் உடன்படிக்கை

தொகு

ஆய் சான் சங்கம் பினாங்கைத் தளமாகக் கொண்ட தோக்கோங் அல்லது துவா பே கோங் எனும் சங்கத்துடன் தோழமையாக இருந்தது. தோக்கோங் சங்க உறுப்பினர்கள் லாருட் பகுதிகளில்]] ஈயம் தோண்டுவதற்கு நிதியுதவி செய்து வந்தனர்.[1]

ஆய் சான் மற்றும் கீ கின் சங்கங்களுக்கு இடையிலான இடைவிடாத சண்டைகளினால், பேராக், சிலாங்கூர் மாநிலங்களின் ஈய உற்பத்தி பெரும் பாதிப்பு அடைந்தது. பின்னர் 1874-ஆம் ஆண்டு பங்கோர் உடன்படிக்கை என அழைக்கப்படும் உடன்படிக்கை கையெழுத்தானது. இரு தரப்பினரும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். அதன் மூலம் இரு சங்கங்களுக்கும் இடையிலான சண்டை சச்சரவுகளும் முடிவுக்கு வந்தன.[1]

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 Encyclopædia Britannica
  2. Triad Societies: Western Accounts of the History, Sociology and Linguistics of Chinese Secret Societies By Kingsley Bolton, Gustaaf Schlegel, Herbert Allen Giles, Christopher Hutton, J. S. M. Ward, Mervyn Llewelyn Wynne, W. P. Morgan, William Stanton, W. G. Stirling; Contributor Kingsley Bolton, Chris Hutton; Published by Taylor & Francis, 2000; பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-415-24397-1, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-415-24397-1
  3. Straits Settlements Factory Records Vol 101 (1825) Page 1476-1480 and 1604
  4. Political and Statistical Account of the British Settlements in the Straits of Malacca, Viz: Pinang, Malacca, and Singapore By Thomas John Newbold, Published by J. Murray, 1839, Pages 13-14

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆய்_சான்_இரகசியச்_சங்கம்&oldid=4062924" இலிருந்து மீள்விக்கப்பட்டது