லாருட் போர்கள்

லாருட் போர்கள் (மலாய்: Perang Larut; ஆங்கிலம்: Larut Wars) என்பது 1860-ஆம் ஆண்டுகளில், தீபகற்ப மலேசியாவில் நடைபெற்ற நான்கு போர்களின் தொடராகும். இந்தப் போர்கள் சூலை 1861-இல் தொடங்கப்பட்டு, 1874-ஆம் ஆண்டு பங்கோர் உடன்படிக்கை கையெழுத்தாகும் வரையில் நீடித்தன.[1][2]

பேராக் மாநிலத்தில் இருந்த ஈயச் சுரங்கப் பகுதிகளைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக, உள்ளூர் சீன இரகசியச் சங்கங்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல்களின் மூலமாக லாருட் போர்கள் தொடங்கின.[3]

பின்னர் ராஜா அப்துல்லா மற்றும் நிகா இப்ராகீம் (Ngah Ibrahim) ஆகிய இருவருக்கும் இடையே ஏற்பட்ட போட்டிப் பூசல்களினால், லாருட் போர்கள் ஒரு வாரிசுப் போராக மாறியது.

முதலாம் போர் (1861-62)

தொகு

முதலாம் லாரூட் போர் சூலை 1861-இல் தொடங்கியது. ஈயச் சுரங்கங்களுக்கான நீர்வழியைக் கட்டுப்படுத்துவதில் ஏற்பட்ட சாதாரண வாக்குவாதங்களால் தொடங்கியது. பின்னர் தீவிரமடைந்து, ஆய் சான் இரகசியச் சங்கத்தின் உறுப்பினர்கள், கீ கின் இரகசியச் சங்கத்தின் உறுப்பினர்களைக் கிலியான் பாருவில் இருந்து விரட்டி அடித்தனர்.[4]

இந்தத் தகராறுகளில் நீரிணை குடியேற்றங்களின் ஆளுநர் சர் வில்லியம் ஓர்புர் கேவனே (Sir William Orfeur Cavenagh) தலையிட்டார். அதன் விளைவாக பேராக் சுல்தான் சார்பாக லாருட் பகுதியின் அமைச்சராக இருந்த நிகா இப்ராகிம், கீ கின் சங்கத்திற்கு $17,447 இழப்பீடாக வழங்கினார்.[5][6][7][8][9]

இரண்டாம் போர் (1865)

தொகு

இரண்டாம் லாரூட் போர் 1865-இல் நடந்தது. அந்த ஆண்டு சூன் மாதம் இரண்டு எதிரெதிர் இரகசிய சங்கங்களின் உறுப்பினர்களிடையே ஏற்பட்ட சூதாட்ட சண்டையால் தூண்டப்பட்டது. ஆய் சான் சங்கத்தின் உறுப்பினர்கள் 14 கீ கின் சங்கத்தின் உறுப்பினர்களைக் கைதிகளாகத் தடுத்து வைத்தனர்; அத்துடன் அவர்களில் 13 பேரைக் கொலையும் செய்தனர்.

14-ஆவது நபர் தப்பிச் சென்று தன்னுடைய கீ கின் சங்கத் தலைவர்களிடம் நடந்தவற்றைத் தெரிவித்தார். சினம் அடைந்த கீ கின் சங்க உறுப்பினர்கள் ஆய் சான் கிராமத்தைத் தாக்கி தீயிட்டுக் கொளுத்தினர். அதில் 40 ஆண்கள் கொல்லப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக செபராங் பிறை மாநிலம் மற்றும் பினாங்கு தீவு வரை கலகங்கள் பரவின. அதே நேரத்தில் மற்ற மற்ற இரகசியச் சங்கங்களும் போராட்டத்தில் சேர்ந்து கொண்டன.

பின்னர் அரச விசாரணை நடைபெற்றது. பினாங்கின் அமைதியை மீறியதற்காக ஆய் சான் மற்றும் கீ கின்; ஆகிய இரண்டு சங்கங்களுக்கும் தலா $5,000 அபராதம் விதிக்கப்பட்டது மற்றும் அதன் தலைவர்கள் நாடு கடத்தப்பட்டனர்.[10][11][12][13]

மூன்றாம் போர் (1871-1872)

தொகு
 
நிகா இப்ராகீம்; அவருடைய மகன்களும்; மற்றும் இந்திய காவல்துறை அதிகாரி (சிப்பாய்) ஆகியோருடன் பேராக் மாத்தாங்கில் எடுத்த படம்

மூன்றாம் லாரூட் போர் 1871-இல் ஒரு கூடா உறவினால் மூண்டது. அதாவது கீ கின் தலைவர் சுங் கெங் குயி (Chung Keng Que) என்பவருக்கும்; ஆய் சான் தலைவரின் மருமகனின் மனைவிக்கும் இடையிலான கூடா உறவினால் மூண்டது. பின்னர் அந்தத் தம்பதிகள் பிடிக்கப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டு, ஒரு பன்றிக் கூடையில் வைக்கப்பட்டு, பயன்படுத்தப்படாத ஓர் ஈயச் சுரங்கக் குளத்தில் வீசப்பட்டனர். அங்கு அவர்கள் இருவரும் மூழ்கி மாண்டனர்.[14][15][16]

கீ கின் சங்கத் தலைவரின் மரணத்திற்குப் பழிவாங்கும் வகையில், கீ கின் சங்கத்தினர் சீனாவில் இருந்து பினாங்கு வழியாக 4,000 கூலிப்படைகளை இறக்குமதி செய்தனர். ஆய் சான் உறுப்பினர்கள் மீது தாக்குதல் நடந்தது. அதன் விளைவாக ஆய் சான் சங்கத்தினர் லாருட்டில் இருந்து வெளியேற்றப்பட்டனர். ஏறக்குறைய 10,000 ஆய் சான் ஆண்கள் பினாங்கில் தஞ்சம் அடைந்தனர்.[17][18][19]

சில மாதங்களுக்குப் பிறகு, உள்ளூர் மலாய்த் தலைவர் நிகா இப்ராகீம் ஆதரவுடன், ஆய் சான் சங்க உறுப்பினர்கள் மாத்தாங் மற்றும் லாருட் ஈயச் சுரங்கங்களை மீட்டெடுத்தனர். இந்த நேரத்தில், நிகா இப்ராகீமின் எதிரியான ராஜா அப்துல்லா, ஆய் சான் மற்றும் நிகா இப்ராகீமுக்கு எதிராகச் செயல்படத் தொடங்கினார். சீன சுரங்கத் தொழிலாளர்களுக்கு இடையில் நடந்து கொண்டு இருந்த போர்கள், இறுதியில் பேராக் மாநில மலாய் தலைவர்களை உள்ளடக்கிய உள்நாட்டுப் போராக மாறியது.[20][21][22]

நான்காம் போர் (1873-74)

தொகு

நான்காம் லாரூட் போர், முந்தைய போருக்கு ஓர் ஆண்டு கழித்து 1873-இல் நடந்தது. நிகா இப்ராகீம் ஆதரவுடன், ஆய் சான் சங்க உறுப்பினர்கள் மாத்தாங் மற்றும் லாருட் ஈயச் சுரங்கங்களை மீட்டெடுத்த சில வாரங்களுக்குப் பிறகு, ராஜா அப்துல்லாவால் ஆதரிக்கப்பட்ட கீ கின் சங்க உறுப்பினர்கள், ஆய் சான் சங்க உறுப்பினர்களை எதிர் தாக்குதலை நடத்தினர். சிங்கப்பூர் மற்றும் சீனாவில் இருந்து கொண்டு வர்ப்பட்ட கூலிப் படைகள் ஆயுதங்களைக் கொண்டு தாக்குதல் நடத்தினர்.[23]

மாத்தாங்கில் இருந்த நிகா இப்ராகீமின் சொத்துக்கள் அழிக்கப்பட்டன. உள்ளூர் மலாய் மக்களும் கொல்லப்பட்டனர்; மற்றும் அவர்களின் சொத்துக்களும் அழிக்கப்பட்டன. கலகங்கள் கிரியான், பங்கோர் தீவு, டின்டிங் வரை பரவின.[24]

பினாங்கு சீனர்கள்

தொகு

இந்தக் கட்டத்தில், சீனச் சுரங்கத் தொழிலாளர்கள் மற்றும் இரகசியச் சங்கங்கள்; ஆகிய இரு தரப்பும் ஏற்படுத்திய சீர்குலைவுகளைக் கண்டு மலாய்த் தலைவர்கள் அச்சம் அடையத் தொடங்கினர். லாரூட் போர்களினால் தங்களின் முதலீடுகள் அழிக்கப்படுவதைக் கண்ட பினாங்கு சீனர்கள், பிரித்தானிய அதிகாரிகளின் உதவியை நாடினர்.

கோ-குவான் (Go-Kuan) மற்றும் சி-குவான் (Si-Kuan) இனக் குழுக்களைச் சேர்ந்த 40,000 சீனர்கள்; பேராக் அரச குடும்பத்தை உள்ளடக்கிய சகோதரப் போர்களில் ஈடுபட்டனர்.[25] நீடித்த வாரிசு போராட்டத்தில் ஈடுபட்ட பேராக் சுல்தானகத்தால் ஒழுங்கைப் பராமரிக்க இயலவில்லை. பிரச்சினைகள் கட்டுப்பாட்டை மீறிப் போய்விட்டதாக மலாய்க்காரர், சீனர் மற்றும் பிரித்தானியர் கருதினர். நீரிணை குடியேற்றங்களின் 9-ஆவது ஆளுநர் சர் ஆண்ட்ரு கிளார்க் அவர்களின் உதவி நாடப்பட்டது.

பங்கோர் உடன்படிக்கை

தொகு

ராஜா மூடா அப்துல்லா சிங்கப்பூரில் இருந்த தன் நண்பர் டான் கிம் செங்கிடம் உதவி கேட்டார். டான் கிம் செங் சிங்கப்பூரில் ஒரு பிரபலமான தொழிலதிபர் ஆகும். டான் கிம் செங் சிங்கப்பூரில் உள்ள பிரித்தானிய வணிகருடன் சேர்ந்து ஆளுநர் சர் ஆண்ட்ரு கிளார்க்கிற்கு ஒரு கடிதம் எழுதினார். ராஜா மூடா அப்துல்லா அந்தக் கடிதத்தில் கையெழுத்திட்டார். பேராக் மாநிலத்தைப் பிரித்தானியர் பாதுகாப்பில் ஒப்படைக்க ராஜா மூடா அப்துல்லா தம் விருப்பத்தை அந்தக் கடிதம் மூலமாக வெளிப்படுத்தினார்.[26]

1872 செப்டம்பர் 26-இல், பிரித்தானியர் தலையிட வேண்டும் எனும் கோரிக்கை மனு முன்வைக்கப்பட்டது. அதில் ஆய் சான் இரகசிய சங்கத்தின் தலைவர் சுங் கெங் குயி உடபட 44 சீனத் தலைவர்கள் கையெழுத்திட்டு இருந்தனர். தென்கிழக்கு ஆசியாவில் தங்கள் செல்வாக்கை விரிவுபடுத்தவும், ஈய ஏற்றுமதியின் ஏகபோகத்தை வலுப்படுத்தவும்; இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும் என பிரித்தானியர் கருதினர். இதன் விளைவாக, பங்கோர் உடன்படிக்கை 1874 கையெழுத்தானது.[27][28]

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Notes on the Larut Disturbances by Khoo Kay Kim, A history of Perak, Sir Richard Olof Winstedt, Richard James Wilkinson, Sir William Edward Maxwell, republished by Malaysian Branch of the Royal Asiatic Society, 1974, PPiv&v
  2. History of Malaya, 1400-1959, Joginder Singh Jessy, Jointly published by the United Publishers and Peninsular Publications, 1963, P151
  3. A portrait of Malaysia and Singapore, Soo Hai Ding Eing Tan, Oxford University Press, 1978, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0195807227, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780195807226, PP78&123
  4. The Malayan tin industry to 1914: with special reference to the states of Perak, Selangor, Negri, Sembilan, and Pahang by Lin Ken Wong, Published for the Association for Asian Studies by the University of Arizona Press, 1965, P27
  5. A portrait of Malaysia and Singapore, Soo Hai Ding Eing Tan, Oxford University Press, 1978, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0195807227, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780195807226, PP79
  6. The Western Malay States, 1850-1873: the effects of commercial development on Malay politics, Kay Kim Khoo, Oxford University Press, 1972, P129
  7. A history of Malaya, Joseph Kennedy, Macmillan, 1970, P138
  8. A short history of Malaya, Gerald Percy Dartford, Longmans, Green, 1963, P128
  9. The Making of Modern South-East Asia: The European conquest, D. J. M. Tate, Oxford University Press, 1971, P276
  10. History of Malaya, 1400-1959, Joginder Singh Jessy, Jointly published by the United Publishers and Peninsular Publications, 1963, P152
  11. Journal of the Malaysian Branch of the Royal Asiatic Society, Volume 64, MBRAS, 1991, P10
  12. A portrait of Malaysia and Singapore, Soo Hai Ding Eing Tan, Oxford University Press, 1978, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0195807227, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780195807226, P79
  13. The impact of Chinese secret societies in Malaya: a historical study, Wilfred Blythe, Royal Institute of International Affairs, Issued under the auspices of the Royal Institute of International Affairs [by] Oxford U.P., 1969, P115
  14. Ooi, Keat Gin (2004). Southeast Asia: A Historical Encyclopedia, from Angkor Wat to East Timor. Santa Barbara, California: ABC-CLIO. p. 775. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781576077702. பார்க்கப்பட்ட நாள் 19 August 2019.
  15. The journals of J. W. W. Birch, first British resident to Perak, 1874-1875, James Wheeler Woodford Birch, Oxford University Press, 1976
  16. The Chinese in Malaya, Victor Purcell, Oxford Univ. Press, 1948, P107
  17. The Making of Modern South-East Asia: The European conquest, D. J. M. Tate, Oxford University Press, 1971, PP274&276
  18. A gallery of Chinese kapitans, Choon San Wong, Ministry of Culture, Singapore, 1963, P72
  19. Chinese secret societies in Malaya: a survey of the Triad Society from 1800 to 1900, Leon Comber, Published for the Association for Asian Studies by J.J. Augustin, 1959, P158
  20. A portrait of Malaysia and Singapore, Soo Hai Ding Eing Tan, Oxford University Press, 1978 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0195807227, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780195807226, P80
  21. The impact of Chinese secret societies in Malaya: a historical study, Wilfred Blythe, Royal Institute of International Affairs, Oxford U.P., 1969, P179
  22. Triad and tabut: a survey of the origin and diffusion of Chinese and Mohamedan secret societies in the Malay Peninsula, A.D. 1800-1935, Parts 1800-1935, Mervyn Llewelyn Wynne, Govt. Print. Off., 1941, PP267,270
  23. History of Malaya, 1400-1959Joginder Singh Jessy, Jointly published by the United Publishers and Peninsular Publications, 1963, P158
  24. A portrait of Malaysia and Singapore, Soo Hai Ding Eing Tan, Oxford University Press, 1978, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0195807227, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780195807226
  25. Journal of the Malaysian Branch of the Royal Asiatic Society, Volume 64, MBRAS, 1991, P11
  26. International Magazine Kreol (2015). "The Story of Sultan Abdullah's Exile in the Seychelles and Malaysia's National Anthem". International Magazine Kreol (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-02-21.
  27. "The Golden Chersonese And The Way Thither". digital.library.upenn.edu. பார்க்கப்பட்ட நாள் 2020-07-20.
  28. Swettenham, Frank (1941). Footprints in Malaya. London, New York, Melbourne: Hutchinson & Co. p. 33.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=லாருட்_போர்கள்&oldid=4000233" இலிருந்து மீள்விக்கப்பட்டது