நிகா இப்ராகீம்

நிகா இப்ராகீம் (மலாய்: Orang Kaya Menteri Paduka Tuan Ngah Ibrahim; ஆங்கிலம்: Ngah Ibrahim) என்பவர் மலாயா, பேராக் மாநிலத்தில் ஒரு மலாய் தலைவர். பேராக் மாநிலத்தின் நிர்வாகத்தில் பிரித்தானியரின் தலையீட்டிற்கு எதிராக செயல்பட்டவர். 1857-இல் அவரின் தந்தை லோங் ஜாபார் (Long Jaafar) மரணத்திற்குப் பிறகு லாருட் மாவட்டத்தின் தலைவராகவும் நிர்வாகியாகவும் பொறுப்பு ஏற்றார். லாருட் மாவட்டம் தற்போது தைப்பிங் என்று அழைக்கப்படுகிறது.[1]

நிகா இப்ராகீம் தன் மகன்கள்; மற்றும் இந்தியப் பாதுகாவலருடன்; 1870-ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட படம்

நிகா இப்ராகீம், லாருட் மாவட்டத்தின் தலைவராகச் செயல்பட்ட போது லாருட்டில் ஒரு கோட்டையைக் கட்டினார். அந்தக் கோட்டை தற்போது கோத்தா நிகா இப்ராகீம் (Kota Ngah Ibrahim) என்று அழைக்கப்படுகிறது.[2]

பொது

தொகு

1872-ஆம் ஆண்டில், நிகா இப்ராகீம் தன்னுடைய லாருட் மாவட்டத்தில் கேப்டன் திரிஸ்டம் இசுபீடி (Tristam Speedy) என்பவரைத் தன் செயலாளராக (நிர்வாகி) நியமித்தார். லாருட் மாவட்டத்தின் ஈயச் சுரங்கங்களில் பணிபுரிய, நிகா இப்ராகீம் காப்பித்தான் சீனாக்களின் உதவிகளை நாடினார். அந்த வகையில் சீனாவில் இருந்து ஆயிரக் கணக்கான சீனர்கள் மலாயாவிற்குக் கொண்டு வரப்பட்டார்கள்.[3]

லாருட் மாவட்டத்தை, லோங் ஜாபார் மற்றும் அவரது சந்ததியினருக்கு பேராக் சுல்தான் இசுமாயில் முகபிடின் ரியாட் சா அன்பளிப்பாக வழங்கியதால், லாருட்டில் இருந்து கிடைத்த வருமானம் பேராக் மாநிலத்துடன் பகிர்ந்து கொள்ளப்படவில்லை. லாருட் ஈயச் சுரங்கங்களில் இருந்து கிடைத்த செல்வங்கள் அனைத்தும் நிகா இப்ராகீம் சந்ததியினருக்குப் போய்ச் சேர்ந்தன.

நிகா இப்ராகீம் மாளிகை

தொகு
 
மலேசியா, பேராக், மாத்தாங் நகரில் நிகா இப்ராகீம் மாளிகை

நிர்வாகம்

தொகு

லாருட் மாவட்டத்த்தில் நிகா இப்ராகீம் நவீன நிர்வாக அமைப்பை அமைத்தார். மாவட்டத்தின் நிர்வாகத்தில் சொந்த காவல் படை இருந்தது. அத்துடன் உரிமைகோரல் வழக்குகளைத் தீர்ப்பதற்கு ஒரு நீதிபதியைக் கொண்டிருந்தது; மற்றும் வரிகளை வசூலிக்கவும், நிதிகளை நிர்வகிக்கவும் ஒரு பொருளாளரும் நியமிக்கப்பட்டு இருந்தார்.

நாளுக்கு நாள் சீனக் குடியேற்றவாசிகளின் எண்ணிக்கை அதிகரித்தால் சண்டைச் சச்சரவு பிரச்சினைகளும் அதிகரித்தன. அதனால் எப்போதுமே ஒரு பதற்றநிலை நிலவியது. நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்கு நிகா இப்ராகீம் மிகவும் சிரமப்பட்டார். இந்தப் பிரச்சனையைச் சமாளிக்க 40 மலாய்க்காரர்களைக் கொண்ட ஒரு காவல் படையை நிறுவினார். இருப்பினும், சீனர்களால் ஏற்பட்ட குழப்பங்களையும்; மற்றும் இரகசிய சங்கங்களின் செயல்பாடுகளையும் அந்தக் காவல் படையால் கட்டுப்படுத்த இயலவில்லை.[4]

பஞ்சாப் சிப்பாய் படை

தொகு

தன் காவல்துறையை உடனடியாக வலுப்ப்படுத்த வேண்டும் என்பதை நிகா இப்ராகீம் உணர்ந்தார். எனவே புதிய ஒரு காவல் படை உருவாக்கப்பட்டது. கேப்டன் திரிஸ்டம் இசுபீடி 1873-இல் 110 சீக்கிய உறுப்பினர்களைக் கொண்ட ஒரு காவல் படையை உருவாக்கினார். அந்தக் காவல் படையினர், இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தின் பாட்டியாலா பகுதியிலிருந்து சிப்பாய் என்ற பெயரில் கொண்டு வரப்பட்டனர். அவர்கள் துப்பாக்கிகள் மற்றும் கைத்துப்பாக்கிகளுடன் காவல் பணிகளில் ஈடுபட்டனர். அத்துடன் கூடுதல் பாதுகாப்பிற்காக, அவர்களுக்கு 4 பீரங்கிகளும் வழங்க்ப்பட்டன.

பேராக் மாநிலத்தின் சுல்தானாக இசுமாயில் முகபிடின் ரியாட் சா இருந்த காலத்தில், ராஜா மூடா அப்துல்லாவுடன், நிகா இப்ராகீம் அடிக்கடி சண்டையிட்டுக் கொண்டார். ராஜா மூடா அப்துல்லா முன்னாள் சுல்தான் இசுமாயில் முகபிடின் ரியாட் சாவின் மகன் ஆவார்.

பேராக் அரச பேரவை

தொகு

சுல்தான் இசுமாயில் முகபிடின் ரியாட் சா இறந்த பிறகு, பேராக்கின் அடுத்த சுல்தானாக ராஜா மூடா அப்துல்லாவை பேராக்கின் அரச பேரவை தேர்ந்தெடுத்தது. இதன் காரணமாக நிகா இப்ராகீம் இரண்டாம் ராஜா மூடா அப்துல்லாவுடன் சண்டையிட்டுக் கொண்டார்.

பிரித்தானியர் தன்னை ஒரு சுல்தானாக அங்கீகரிக்க வேண்டும் என்று ராஜா மூடா அப்துல்லா விரும்பினார். அதனால் அவர் 1858-இல், நிகா இப்ராகீமை லாருட்டின் ஒராங் காயா மந்திரி எனும் அமைச்சராக நியமித்தார். அதன் பின்னர் அவர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன. அப்போது லாருட் பகுதியில் உள்ள ஈயச் சுரங்கத் தொழிலாளர்களுக்கும் இடையிலும் தகராறுகள் இருந்தன. இவை அனைத்தும் இறுதியில் பிரித்தானியர்கள் தலையிடுவதற்கு வழிவகுத்துக் கொடுத்தன.[5]

இறப்பு

தொகு

இறுதியில் பங்கோர் உடன்படிக்கை கையெழுத்தானது. ஈயச் சுரங்கத் தொழிலாளர்களுக்கு இடையே இருந்த பகைமை ஒரு முடிவுக்கு வந்தது. ராஜா மூடா அப்துல்லா பேராக் சுல்தானாக நியமிக்கப்பட்டார். அதே நேரத்தில் பேராக் மாநிலத்திற்கு ஒரு பிரித்தானிய முதல்வரும் நியமிக்கப்பட்டார்.

பேராக் மாநிலத்தின் பிரித்தானிய முதல்வர் ஜேம்ஸ் பர்ச்சை கொல்ல சதி செய்ததாக நிகா இப்ராகீம் மீது குற்றம் சாட்டப்பட்டது. அவர் தன் மாமனார் முகமது அமீன் என்பவருடன் சூலை 20, 1877-இல் சீசெல்சு நாட்டிற்கு நாடு கடத்தப்பட்டார். அவருடைய சொத்துகள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டன.

பார்வையற்ற நிலையில் காலமானார்

தொகு

நிகா இப்ராகீம், 1883-ஆம் ஆண்டில் விடுதலை பெற்றாலும் 1895-ஆம் ஆண்டு வரையில் பேராக் மாநிலத்திற்குத் திரும்பிச் செல்ல அனுமதி வழங்கப்படவில்லை. 1893-இல் சிங்கப்பூருக்கு அனுப்பப்படுவதற்கு முன்பு சரவாக் வெள்ளை இராசா சார்லசு புரூக்கின் மேற்பார்வையின் கீழ் 1890-இல் சரவாக்கில் வாழ அனுமதிக்கப்பட்டார். 1893-இல் சிங்கப்பூருக்கு அனுப்பப்பட்டார். 1895-ஆம் ஆண்டில், கண்கள் இரண்டும் பார்வையற்ற நிலையில் காலமானார்.[6]

19-ஆம் நூற்றாண்டில், பேராக் மாநிலத்தின் மிகவும் செல்வாக்கு பெற்ற மனிதர்; ஆயிரக் கணக்கான ஈயச் சுரங்கத் தொழிலாளர்களைக் கட்டி ஆண்டவர்; சொந்த சிப்பாய் படையைக் கொண்டு கோடீசுவராக வாழ்ந்தவர்; தம்முடைய இறுதிக் காலத்தில் சிங்கப்பூரில் தனிமை வாழ்க்கை வாழ்ந்து காலமானார்.[7]

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Salma Nasution Khoo & Abdur-Razzaq Lubis (2005). Kinta Valley: Pioneering Malaysia's Modern Development. Areca Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 98-342-1130-9.
  2. "Kota Ngah Ibrahim is a historical complex at Matang, about 6km away from Taiping town. Built in 1870, it was formerly the fort of a local warlord". visitmalaysia.info. பார்க்கப்பட்ட நாள் 11 June 2024.
  3. Triad Societies: Western Accounts of the History, Sociology and Linguistics of Chinese Secret Societies, Kingsley Bolton, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-415-15353-0, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-415-15353-9
  4. Southeast Asia: a historical encyclopedia, from Angkor Wat to East Timor, Volume 3 by Keat-Gin Ooi published by ABC-CLIO, 2004, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-57607-770-5, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-57607-770-2
  5. A History of Malaysia By Leonard Y. Andaya published by Palgrave Macmillan, 1984, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-312-38121-2, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-312-38121-9
  6. "He was frail with his eyes almost blind and died two years later before being buried". 2024 © BH, New Straits Times Press. பார்க்கப்பட்ட நாள் 11 June 2024.
  7. Papers on Malay Subjects - Page 91 - by Richard James Wilkinson published by BiblioBazaar, LLC, 2008, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-559-62546-4, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-559-62546-6

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=நிகா_இப்ராகீம்&oldid=4002693" இலிருந்து மீள்விக்கப்பட்டது