ஜேம்ஸ் பர்ச்

ஜேம்ஸ் பர்ச் (James W. W. Birch; James Wheeler Woodford Birch) (3 ஏப்ரல் 1826 - 2 நவம்பர் 1875) என்பவர் 1875-ஆம் ஆண்டில் பேராக் மாநிலத்தில் படுகொலை செய்யப்பட்ட ஒரு பிரித்தானிய அதிகாரி ஆவார். இந்த நிகழ்வு பேராக் போர் ஏற்படுவதற்கும்; மலாயா தீபகற்பத்தில் பிரித்தானிய அரசியல் செல்வாக்கை நீட்டிப்பதற்கும் வழிவகுத்தது.

ஜேம்ஸ் பர்ச்
James W. W. Birch
பேராக் மாநிலத்தின்
1-ஆவது பிரித்தானிய முதல்வர்

(1st British Resident of Perak)
பதவியில்
4 நவம்பர் 1874 – 2 நவம்பர் 1875
முன்னையவர்பதவி நிறுவப்பட்டது
பின்னவர் பிராங்க் சுவெட்டன்காம்
நீரிணை குடியேற்றங்களின்
2-ஆவது தலைமைச் செயலாளர்
பதவியில்
6 June 1870 – 4 November 1874
ஆட்சியாளர்விக்டோரியா அரசி
ஆளுநர் ஆரி செயின்ட் ஜார்ஜ் ஆர்ட்

எட்வர்ட் ஆன்சன்
ஆண்ட்ரு கிளார்க்
முன்னையவர்ரொனால்ட் மேக்பெர்சன்
பின்னவர்தாமஸ் பிராடெல் (உதவியாளர்)
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1826-04-03)3 ஏப்ரல் 1826
இறப்பு2 நவம்பர் 1875(1875-11-02) (அகவை 49)
பாசிர் சாலாக், பேராக், பிரித்தானிய மலாயா
காரணம் of deathவன்கொலை

1874-ஆம் ஆண்டு பங்கோர் உடன்படிக்கையைத் தொடர்ந்து, பேராக் சுல்தான் அப்துல்லா முகமது சா II (Abdullah Muhammad Shah II of Perak) தன் அரசவையில் ரெசிடெண்ட் (Resident) என்று அழைக்கப்படும் ஒரு பிரித்தானிய முதல்வரை ஏற்றுக் கொள்ள ஒப்புக் கொண்டார். 4 நவம்பர் 1874 அன்று பேராக் சுல்தானின் அரசாங்க முதல்வர் பதவிக்கு ஜேம்ஸ் பர்ச் நியமிக்கப்பட்டார்.[1][2]

பொது

தொகு

பேராக் மாநில முதல்வர் பதவிக்கு ஜேம்ஸ் பர்ச் நியமிக்கப்பட்ட பின்னர், பேராக் மாநிலத்தின் மதம், கலாசாரம் தொடர்பான விசயங்களில் ஜேம்ஸ் பர்ச் தலையிடுவதாக, சிங்கப்பூரில் இருந்த நீரிணை குடியேற்றங்களின் ஆளுநர் ஆண்ட்ரு கிளார்க்கிற்கு பேராக் சுல்தான் அப்துல்லா ஒரு கடிதக் குறிப்பை அனுப்பினார்.

சுல்தானின் அனுமதி இல்லாமலும்; மற்றும் அவரின் கீழ் இருந்த பிராந்தியத் தலைவர்களின் அனுமதி இல்லாமலும்; பேராக் மாநிலத்தின் மதம், கலாசாரம் தொடர்பான விசயங்களில் ஜேம்ஸ் பர்ச் தலையிடுவது தவறு என ஆண்ட்ரு கிளார்க்கிடம் அந்தக் கடிதத்தில் கூறப்பட்டது.

தலைவர்களின் கூட்டம்

தொகு

அந்தக் காலக் கட்டத்தில், தப்பியோடிய அடிமைகளை (Fugitive Slaves) பிணையாக வைத்துக் கொள்வது; பேராக் மாநிலத்தின் வட்டாரத் தலைவர்களின் உடைமைப் பழக்கங்களில் ஒன்றாகக் கருதப்பட்டது. மேலும், நிலக்கிழாரின் நில வரிகளைக் (Feudal Dues) கட்ட இயலாதவர்களும் நிலக்கிழாரின் அடிமைகளாகக் கருதப்பட்டார்கள். நீண்ட காலமாக இருந்து வந்த இந்தப் பழக்கத்தை ஜேம்ஸ் பர்ச் அகற்ற முயன்றார்.

ஜேம்ஸ் பர்ச் காலனிய அரசாங்கத்தின் செயல்பாடுகளில் அனுபவம் வாய்ந்தவர். ஆனால் அவரால் மலாய் மொழியில் முறையாகப் பேச இயலவில்லை. அவர் நடைமுறைக்கு கொண்டு வந்த புதிய வரி வசூல் முறையால் பல பேராக் மலாய்த் தலைவர்களின் எதிர்ப்பைத் தேடிக் கொண்டார். நிலக்கிழாரிய படைகளின் வீடுகளை எரித்தல் மற்றும் நிலக்கிழாரின் அடிமைகளைச் சரணடையுமாறு கட்டளையிட்டது போன்ற அவரின் அமலாக்க முறை மலாய்த் தலைவர்களைப் கோபப்படுத்தியது.[3]

தொடர் நிகழ்வுகள்

தொகு
 
ஜேம்ஸ் பர்ச்சின் கொலைக்கு பயன்படுத்தப்பட்டதாக அறியப்படும் வாள். தற்போது மலேசிய தேசிய அருங்காட்சியகத்தில் உள்ளது.

இருப்பினும் சிங்கப்பூரில் இருந்த ஆண்ட்ரு கிளார்க்கிடம் இருந்து சாதகமான பதில்கள் எதுவும் வரவில்லை. எனவே 21 சூலை 1875 அன்று, ராஜா அப்துல்லா, வட்டாரத் தலைவர்களின் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தார். அந்தக் கூட்டத்தின் போது ஜேம்ஸ் பர்ச்சிற்கு விசம் கொடுக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் வட்டாரத் தலைவர்களில் ஒருவரான மகாராஜா லேலா என்பவர் ஜேம்ஸ் பர்ச்சைக் குத்திக் கொலை செய்ய முன்வந்தார்.

மகாராஜா லேலாவின் முடிவு ஏற்றுக் கொள்ளப்பட்டது.[4]

1875-ஆம் ஆண்டு நவம்பர் 2-ஆம் தேதி மகாராஜா லேலாவின் சீடர்களால் ஜேம்ஸ் பர்ச் கொல்லப்பட்டார். மகாராஜா லேலாவின் சீடர்களில் ஒருவரான செபுண்டம் (Sepuntum), ஜேம்ஸ் பர்ச்சை ஈட்டியால் குத்திக் கொன்றார். அந்த நேரத்தில் ஜேம்ஸ் பர்ச், எஸ்எஸ் டிராகன் (SS Dragon) எனும் தன் படகின் குளியல் அறையில் இருந்தார். அப்போது அந்தப் படகு பேராக் ஆற்றங்கரையில் மகாராஜா லேலாவின் வீட்டிற்கு அருகில் பாசிர் சாலாக் எனும் இடத்தில் நங்கூரமிட்டு இருந்தது..[5]

நிர்வாக மாற்றம்

தொகு

கொலைக்கு உடந்தையாக இருந்ததாக நம்பப்பட்ட சுல்தான் ராஜா அப்துல்லா, பதவி நீக்கம் செய்யப்பட்டார். பின்னர் அவர் சீசெல்சு நாட்டிற்கு நாடு கடத்தப்பட்டார். அவருக்குப் பதிலாக அவரின் அரியணை போட்டியாளரான ராஜா யூசுப் (Raja Yusuf) சுல்தானாக நியமிக்கப்பட்டார்.

இந்த நிகழ்வுக்குப் பிறகு, பேராக் மாநிலத்தின் நிர்வாகம் தைப்பிங்கிற்கு மாற்றப்பட்டது. சர் இயூ லோ (Sir Hugh Low) என்பவர் புதிய முதல்வராக நியமிக்கப்பட்டார். பேராக் மீதான அவரின் புதிய நிர்வாகம், நேர்த்தியான அரசதந்திர வழியில் அமைந்தது. அவர் படிப்படியாக அடிமைத்தனத்தை தடை செய்தார். மற்றும் கடன்-அடிமைத்தனத்தைப் படிப்படியாக அகற்றினார். ஆட்சியாளர் மற்றும் தலைவர்களின் உணர்வுகளைத் தணிக்கும் வகையில், அவர்களுக்குப் போதுமான மாதாந்திர இழப்பீடுகளையும் வழங்கினார்.

நினைவகம்

தொகு
 
ஈப்போவில் ஜேம்ஸ் பர்ச் நினைவு மணிக்கூண்டு

ஜேம்ஸ் பர்ச்சின் கல்லறை, பேராக் கம்போங் மெமாலி எனும் கிராமத்தில் ஒரு பிரித்தானியக் கோட்டைக்கு அருகில் இன்றும் உள்ளது. பாசிர் சாலாக் கிராமப்புறத்தில் இருந்து சுமார் 24 கிமீ தொலைவில் ஜேம்ஸ் பர்ச்சின் கல்லறை உள்ளது. அவரின் கல்லறை தற்போது ஒரு செம்பனை தோட்டத்திற்கு மத்தியில் மறைந்துள்ளதாகவும் அறியப்படுகிறது.

ஜேம்ஸ் பர்ச்சின் நினைவாக ஒரு மணிக்கூண்டு கோபுரம் (Birch Memorial Clock Tower) 1909-ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இன்றும் ஈப்போ மாநிலப் பள்ளிவாசலுக்கு முன்னால் உள்ளது.[6][7]

கோலாலம்பூர் மற்றும் தைப்பிங்கில் உள்ள இரு சாலைகளுக்கு அவரின் பெயர் சூட்டப்பட்டதாகவும் அறியப்படுகிறது. இருப்பினும், 1957-இல் மலேசியா சுதந்திரம் அடைந்த பிறகு அதே சாலைகள் மகாராஜா லேலா சாலை (Jalan Maharajalela) என மறுபெயரிடப்பட்டது.

சிரம்பான், பினாங்கு மற்றும் ஈப்போ, சிங்கப்பூர் நகரங்களிலும் ஜேம்ஸ் பர்ச்சின் பெயரில் சாலைகள் உள்ளன.

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Untitled". Straits Times Overland Journal: p. 7. 17 June 1870. http://eresources.nlb.gov.sg/newspapers/Digitised/Article/stoverland18700617-1.2.42. 
  2. Barlow, Henry S. (1995). Swettenham. Kuala Lumpur: Southdene. p. 63.
  3. Andaya, Barbara Watson (1982). A History of Malaysia (in ஆங்கிலம்). New York, USA: St. Martin's Press. p. 161. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-312-38120-2.
  4. Winstedt, Richard Olof (1962). A History of Malaya (in ஆங்கிலம்). Marican. p. 225.
  5. "More than just about Birch and Maharaja Lela". The Star. Malaysia. 13 November 2017.
  6. "Birch Memorial. SIR JOHN ANDERSON WELCOMED AT IPOH. Description of the Clock Tower.". The Straits Budget: 5. 9 December 1909. https://eresources.nlb.gov.sg/newspapers/digitised/article/straitsbudget19091216-1.2.8?qt=%22clock%20tower%22,%20kangsar&q=%22Clock%20tower%22%20%2B%20Kangsar. 
  7. "J W W Birch Memorial Clock Tower And First Times Of Malaya Building, Ipoh" (PDF).

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜேம்ஸ்_பர்ச்&oldid=4000582" இலிருந்து மீள்விக்கப்பட்டது