மகாராஜா லேலா

மகாராஜா லேலா அல்லது டத்தோ மகாராஜா லேலா; (ஆங்கிலம்: Dato Maharaja Lela; மலாய்: Lela Pandak Lam); (இறப்பு: 20 சனவரி 1877) என்பவர் பேராக் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு தலைவர் மற்றும் தேசியவாதி ஆவார்.[1] பேராக் மாநிலத்தில் பிரித்தானியப் படைகளுக்கு எதிரான போராட்டத்தை முன்னின்று நடத்திய தலைவர் என அறியப்படுகிறார்.

மகாராஜா லேலா
Dato Maharaja Lela
இறப்பு(1877-01-20)20 சனவரி 1877
தைப்பிங், பேராக்
இறப்பிற்கான
காரணம்
தூக்கிலிடப்பட்ட மரணதண்டனை
அறியப்படுவதுபேராக் போரில் ஈடுபாடு
பாசிர் சாலாக் வரலாற்று வளாகம்

டத்தோ சாகோர் (Dato' Sagor) எனும் மற்ற ஒரு தலைவருடன் சேர்ந்து, பேராக் மாநிலத்தின் பிரித்தானிய முதல்வர் (British Resident of Perak) ஜேம்ஸ் பர்ச் என்பவரைக் கொலை செய்ய மகாராஜா லேலா திட்டமிட்டார். டுரியான் செபத்தாங் எனும் இடத்தில் நடந்த ஒரு கூட்டத்தில் மகாராஜா லேலாவின் முடிவு ஏற்றுக் கொள்ளப்பட்டது. அந்தக் கூட்டம் 21 சூலை 1875 அன்று சுல்தான் அப்துல்லா தலைமையில் நடைபெற்றது.[1]

வாழ்க்கை

தொகு

டாயாங் சலிலி (Daeng Salili) வம்சத்தின் வழித்தோன்றலான மகாராஜா லேலா, இந்தோனேசியா, சுலவேசி, லுவுக் மாவட்டத்தைச் சேர்ந்த பூகிஸ் மன்னரின் மகன் ஆவார். பேராக் சுல்தான் மூன்றாம் முசாபர் சா (Sultan Muzaffar Shah III) என்பவரின் ஆட்சியின் போது, ​​மகாராஜா லேலா, பேராக் மாநிலத்திற்கு வந்தார். முதலில் முப்தியாக (இசுலாமிய நீதிபதி) நியமிக்கப்பட்டார். பின்னர் அவருக்கு "டத்தோ மகாராஜா லேலா" என்ற பட்டம் வழங்கப்பட்டது.

ஜேம்ஸ் பர்ச் கொலை

தொகு
 
ஈப்போவில் ஜேம்ஸ் பர்ச் நினைவகக் கோபுரம்

1875-ஆம் ஆண்டு நவம்பர் 2-ஆம் தேதி மகாராஜா லேலாவும் அவரின் சீடர்களில் ஒருவரான செபுந்தும் (Sepuntum) என்பவரும் ஜேம்ஸ் பர்ச்சை ஈட்டியால் குத்திக் கொன்றனரர். அந்த நேரத்தில் ஜேம்ஸ் பர்ச், எஸ்எஸ் டிராகன் (SS Dragon) எனும் தன்னுடைய படகின் குளியல் அறையில் குளித்துக் கொண்டு இருந்தார். அப்போது அந்தப் படகு பேராக் ஆற்றங்கரையில் மகாராஜா லேலாவின் வீட்டிற்கு அருகில் பாசிர் சாலாக் எனும் இடத்தில் நங்கூரமிட்டு இருந்தது..[2]

ஜேம்ஸ் பர்ச்சின் கொலைக்குப் பின்னர் பிரித்தானிய இராணுவம் பாசிர் சாலாக் கிராமத்தைத் தாக்கத் தொடங்கியது. தாக்குதல் பல நாட்கள் தொடர்ந்தது. பின்னர் கிளர்ச்சிக்காரர்களின் தலைவர்கள் சரணடைந்தனர். பேராக் மாத்தாங் நகரில் 1876 டிசம்பர் 14-ஆம் தேதியில் இருந்து 22-ஆம் தேதி வரையில் ஒரு விசாரணை நடைபெற்றது.

நீதிமன்ற விசாரணை

தொகு

நீதிமன்ற விசாரணைக்குப் பின்னர் சுல்தான் அப்துல்லா, நிகா இப்ராகீம் ஆகிய இருவரும் பதவி நீக்கம் செய்யப்பட்டு, சீசெல்சு நாட்டிற்கு நாடு கடத்தப்பட்டனர்.

இதற்கிடையில் ஜேம்ஸ் பர்ச் கொலை வழக்கில் மகாராஜா லேலா குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது. மகாராஜா லேலா தைப்பிங்கில் 1877 சனவரி 20-ஆம் தேதி தூக்கிலிடப்பட்டார். இந்த நிகழ்வைத் தொடர்ந்து, பிரித்தானிய நிர்வாகம் தைப்பிங்கிற்கு மாற்றப்பட்டது.

கருத்துகளும் சர்ச்சைகளும்

தொகு

ஜேம்ஸ் பர்ச்சின் படுகொலைக்கான காரணம் குறித்து கருத்துகளும் சர்ச்சைகளும் உள்ளன. பேராக்கில் அடிமைத்தனத்தை ஜேம்ஸ் பர்ச் தடை செய்ததால் அவர் படுகொலை செய்யப்பட்டார் என்பது ஒரு கருத்து. பேராக் மலைக்காடுகளில் வாழ்ந்த ஒராங் அசுலி எனும் பழங்குடி மக்களைப் பிடித்து அவர்களை அடிமைகளாக விற்பதில் மகாராஜா லேலாவுக்கு வருமானம் கிடைத்து வந்தது. அந்த வருமானம் தடைப்பட்டதால், அடிமை வியாபாரிகள் சிலருடன் சேர்ந்து ஜேம்ஸ் பர்ச்டைக் கொலை செய்ய திட்டமிட்டதாகவும் ஒரு கருத்து நிலவுகிறது.[3][4]

வலதுசாரி மலாய் வரலாற்று ஆசிரியர்களிடையே மிகவும் பிரபலமான கருத்து என்னவென்றால், ஜேம்ஸ் பர்ச் உள்ளூர்ப் பழக்கவழக்கங்கள் மற்றும் கலாசார மரபுகளை அவமதித்ததால், உள்ளூர் மலாய் தலைவர்களுக்கு இடையே பதட்டத்தை ஏற்படுத்தியது. அதனால் ஜேம்ஸ் பர்ச் படுகொலை செய்யப்பட்டார் என்பதே அந்தக் கருத்தாகும்.

மகாராஜா லேலா, பொதுவாக மலாய் தேசியவாதிகளால் ஒரு நாட்டுப்புற நாயகனாகக் கொண்டாடப்படுகிறார். மேலும் அவர் பிரித்தானியக் காலனித்துவத்திற்கு எதிரான மலாய் எதிர்ப்பின் அடையாளமாகவும் பார்க்கப் படுகிறார்.[5][6]

மேலும் காண்க

தொகு

மேற்கோள்

தொகு
  1. 1.0 1.1 Winstedt, Richard Olof (1962). A History of Malaya (in ஆங்கிலம்). Singapore: Maricon and sons. p. 226.
  2. "More than just about Birch and Maharaja Lela". The Star. Malaysia. 13 November 2017.
  3. "Perak War". Britannica Online. பார்க்கப்பட்ட நாள் 25 July 2013.
  4. Leasor, James (2001). Singapore: The Battle That Changed the World. House of Stratus. pp. 45, 46. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0755100392.
  5. Akmar, Shamsul (22 July 2022). "Friday Jottings: History is written by victors and usurpers". themalaysianreserve.com.
  6. Andaya, Barbara Watson (1982). A History of Malaysia (in ஆங்கிலம்). New York: St. Martin's Press. p. 162. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-312-38120-2.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மகாராஜா_லேலா&oldid=4000661" இலிருந்து மீள்விக்கப்பட்டது