ஆர். இளங்கோ

ஆர். இளங்கோ என்பவர் தமிழக ஓவியர்களுள் ஒருவர். இவர் தத்ரூப கலைபாணி ஓவியங்களை வரைவதில் வல்லுநர். இவர் இந்து சமய கோயில்களின் மூலவர்களையும், திருவண்ணாமலை ரமண மகரிஷி, சேசாத்திரி சுவாமிகள், பாண்டிச்சேரி அரவிந்தர் போன்ற ஆன்மீகவாதிகளையும் ஓவியங்களாக வரைந்துள்ளார். தமிழக கோயில் நிர்வாகத்தினர் இவர் வரைந்த மூலவர் ஓவியங்களை அங்கிகரித்து கோயிலில் வைத்துள்ளனர். கோயில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு படமாக வழங்கவும், திருநீறு பைகள் மேற் படமாகவும் பயன்படுத்தி வருகின்றனர்.

இளங்கோ
பிறப்புசென்னை, தமிழ்நாடு
தேசியம்இந்தியன்
அறியப்படுவதுஓவியங்கள்
பாணிதத்ரூப ஓவியங்கள்
வாழ்க்கைத்
துணை
நிர்மலா
பிள்ளைகள்பராந்தக சோழன், தனசேகரன்
வலைத்தளம்
www.elangoarts.com

வாழ்க்கை வரலாறு

தொகு

இளங்கோ சென்னை, ராதாகிருஷ்ணன் நகரில் ஓவியர் இராமன், கற்பகம் தம்பதிக்கு மகனாகப் பிறந்தவர். இவருடைய தந்தை இராமன் ராமன் ஆர்ட்ஸ் என்ற பெயரில் ஓவியங்களை வரைந்து தருபவராக இருந்துள்ளார். சிதைந்த ஒளிப்படங்களிலிருந்து முகங்களை அறிந்து ஓவியமாக வரையும் திறன் கொண்டவராக விளங்கினார்.

எட்டாம் வகுப்புவரை பயின்ற இளங்கோ ஓவியங்களின் மீதான ஆர்வம் காரணமாக பள்ளிப்படிப்பை தொடரவில்லை. அவர் தன் தந்தையான இராமனிடமிருந்து ஓவியக் கலையைக் கற்றுக்கொண்டார். தந்தையுடன் இணைந்து ஓவியங்களை வரைந்து தரும் பணியை செய்துள்ளார். மகரிஷி மலையரசனிடம் இறை ஓவியங்கள் வரையும் முறையைக் கற்றுக்கொண்டார். மலையரசன் ஓவியரல்ல எனும் போதும் இந்து சமய கடவுள்களின் அடிப்படை அமைப்புகள், அளவீடுகள், இறையுருவங்களின் இயல்புகள் போன்றவற்றை கற்றுதந்துள்ளார்.

இளங்கோ, நிர்மலா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.[1] நிர்மலா `ஆப்டோமெட்ரிஸ்ட்’ எனப்படும் பார்வைத் தேர்வாய்வாளராக பணியில் உள்ளார். இத்தம்பதிகளுக்கு பராந்தக சோழன், தனசேகரன் என்ற இரு மகன்கள் உள்ளனர். பராந்தக சோழன், இயக்குநர் செழியனிடம் உதவியாராக பணி செய்தார். தற்போது ஒளிப்பதிவாளராக உள்ளார். தனசேகரன் நுண்கலை படித்துவிட்டு தந்தையிடமே ஓவியம் பயின்று வருகிறார்.

இறை ஓவியங்கள்

தொகு

ஆனந்த விகடனின் முத்திரை ஓவியம் என்ற போட்டியில் இளங்கோவின் ரமன மகரிஷி ஓவியம் பரிசு வென்றது. அதனைப் பார்த்து திருவண்ணாமலை கோயிலின் மூலவரை வரைய நிர்வாகம் இளங்கோவை அனுகியது.

திருவண்ணாமலைக் கோயிலில் கருவறையருகே சுமார் இரண்டரை மாதங்களுக்குமேல் அமர்ந்து மூலவர்களை கவனித்து மாதிரி வரைபடத்தை உருவாக்கிக் குறிப்பெடுத்து அருணாச்சலேசுவரர், உண்ணாமுலையம்மன் ஆகியோரை நான்கு மாத காலத்தில் நுணுக்கமாக வரைந்தார். இவர் வரைந்த இந்த ஓவியமே தற்போது பயன்பாட்டில் உள்ள ஓவியமாகும்.[2]

அதன் பிறகு திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை திருத்தணி, பழமுதிற்சோலை ஆகிய அறுபடைவீடுகளில் உள்ள மூலவரை வரைந்துள்ளார். மேலும் திருச்சி உச்சிப்பிள்ளையார், வடபழனி முருகன், திருப்போரூர் முருகன் போன்ற தெய்வங்களின் உருவங்களையும் வரைந்துள்ளார்.

இவற்றையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. ஓவியம்: இளையராஜாவின் நெகிழ்ச்சி. ரஜினியிடம் இருக்கும் ஓவியம். விகடனின் அங்கீகாரம். - ஆர்.வைதேகி - ஆனந்த விகடன் - 26 அக்டோபர் 2020
  2. இறைவனைப் பிரதியெடுக்கும் ஓவியர், இந்து தமிழ், 2020. பெப்ரவரி. 27

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்._இளங்கோ&oldid=4160224" இலிருந்து மீள்விக்கப்பட்டது