சிங்கை பரராசசேகரன்

(ஆறாம் பரராசசேகரன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

சிங்கை பரராசசேகரன் (இறப்பு: 1519) என்பவன் கிபி 1478 முதல் 1520 வரை யாழ்ப்பாணத்தை ஆண்ட மன்னன் ஆவான்.

ஆறாம் பரராசசேகரம்
சிங்கை பரராசசேகரன்
யாழ்ப்பாண அரசன்
இடப் பக்கத்தில் இருந்து முதலாவதாக சிங்கை பரராசசேகரன்
ஆட்சி14781519
முன்னிருந்தவர்கனகசூரிய சிங்கையாரியன் (ஆறாம் செகராசசேகரன்)
சங்கிலியன் (ஏழாம் செகராசசேகரன்)
மனைவிகள்
  • ராசலட்சுமி அம்மாள்
  • வள்ளியம்மை
  • மங்கத்தம்மாள்
முழுப்பெயர்
சிங்கை பரராசசேகரம்
மரபுஆரியச் சக்கரவர்த்தி வம்சம்
தந்தைகனகசூரிய சிங்கையாரியன் (ஆறாம் செகராசசேகரன்)
பிறப்புநல்லூர், யாழ்ப்பாணம்
இறப்பு1519 (1520)

ஆட்சி வரலாறு

தொகு

சிங்கை பரராசசேகரன் சிறுவனாக இருந்த போது இவனது தந்தையாகிய கனகசூரிய சிங்கையாரியன் பகைவனான சப்புமால் குமாரயாக்கு அஞ்சி தொண்டை நாட்டில் இருக்கும் திருக்கோவலூர்க்கு இவனோடும், இவன் தம்பியோடும் மற்றும் பிற உறவினரோடும் தப்பிச் சென்று வாழ்ந்து வந்தான். திருக்கோவலூரில் வாழ்ந்த காலத்தில் கனகசூரிய சிங்கையாரியன் தனது மைந்தருக்கு தொண்டைமண்டலப் புலவன் ஒருவன் மூலம் தமிழ் கற்பித்தான் என்பர். 17 ஆண்டுகள் கழித்து கனகசூரிய சிங்கையாரியன் தனது மகன்களோடு சேர்ந்து படை திரட்டி வந்து, யாழ்ப்பாணத்தை மீட்டு மீண்டும் 1467 ஆம் ஆண்டு அரசன் ஆனான். 11 ஆண்டுகள் அரசுபுரிந்து இறந்த போது இளவரசன் ஆகிய சிங்கை பரராசசேகரன் அரசன் ஆனான்.

சப்புமால் குமாரயாவின் சிங்களப்படைகள் யாழ்ப்பாணத்தில் நிலைகொண்டிருந்தகாலத்தில் தமிழரின் செல்வத்தை சூறையாடியும் மற்றும் போர்க்காலத்தில் கோவில்கள் கோட்டைகள் மற்றும் துறைமுகங்கள் போன்றவற்றுக்கு பெரும் சேதம் விளைவித்தனர் என்பது, சப்புமால் குமாரயா தமிழரை வென்றதை, பௌத்த பிக்கு ஒருவரால் சிங்களத்தில் புகழ்த்து பாடப்பட்ட கோகிலா ஸந்தோஸய (குயில் விடுதூது) என்னும் நூல் கூறும். சிங்களத்தினால் யாழ்ப்பாண தமிழ் அரசுக்கு விளைவிக்கப்பட்ட சேதங்களை திருத்தி மிண்டும் போலிவுறச் செய்தவன் சிங்கை பரராசசேகரனே. இவன் அரசு கட்டிலேறிய கணத்தில் இருந்தே யாழ்ப்பாண அரசின் நலனை காப்பதில் மிக தீவிரமாக இருந்து வந்தான் என்பர். யாழ்ப்பாண அரசின் வருவாயை பெருக்கிக் கொள்ளும் பொருட்டு மாந்தை, திருகோணமலை மற்றும் காங்கேசன்துறை போன்ற துறைமுகங்களை புதுப்பித்து மீண்டும் பிற நாடுகளோடு வணிகம் இடம்பெற வழி வகுத்தான். கடல் வழி வணிகத்தையும் யாழ்ப்பாண அரசுக்கு பெரும் வருவாயிட்டித்தரும் மன்னார் முத்துக்குளிக்கும் கடல்ப் பரப்பையும், பாதுகாக்கும் வண்ணம் கடல்படையை மேல்கூறிய துறைமுகங்களில் நிறுத்திவைத்தான். மேலும் சிங்கள அரசுகளால் வரக்கூடிய பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர் நோக்கும் வண்ணம் மிகுந்த முன்னெச்சரிக்கையொடு தரைப்படைகளை புத்தளம்,மாந்தை, திருகோணமலை மற்றும் வன்னி போன்ற இடங்களில் அரணமைத்து நிறுத்திவைத்தான். மிக குறுகியகாலத்தில் இராணுவ மற்றும் பொருளாதார ரீதியில் யாழ்ப்பாண அரசை கட்டியெழுப்பி சாதனை நிகழ்த்தியது மடடுமின்றி தமிழ்த் தொண்டாற்றி யாழ்ப்பாணத்தில் கல்வி வளர்ச்சி அடைவதுக்கு வித்திட்டதும் இவனே ஆகும்.

தமிழ்த் தொண்டு

தொகு

திருக்கோவலூரில் வாழ்ந்த காலத்தில் 14ஆண்டுகள் ஒரு புலவரிடம் தமிழ் கற்று இவனும் இவன் தம்பியாகிய சிங்கை செகராசசேகரனும் தமிழில் புலமை எய்தினர் என்பர். இவனும் இவன் தம்பியும் தமிழை வளர்க்கும் பொருட்டு முதல் யாழ்ப்பாண தமிழ் சங்கத்தை நிறுவினர். மேலும் பல பாடசாலைகளை உருவாக்கி கல்வியறிவை யாழ்ப்பாணத்தில் பரப்பினர். சப்புமால் குமாரயாவினால் அழிக்கப்பட்ட சரசுவதி மகாலயம் என்னும் நூலகத்தை புதுபித்துக் யாழ்ப்பாணம் கல்வியங்காட்டில் நிறுவி இதற்கு வேண்டிய நூல்களை வடகரையில் இருந்து பெறும் பொருட்டு இராமேஸ்வரத்தில் படி எழுதும் பட்டறைகள் பல நடத்தினர் என்பர். இங்கு தமிழ் மற்றும் வடமொழியில் படியெடுக்கப்பட்ட பல ஆயிரம் அரிய நூல்கள் சரசுவதி மகாலயம் என்னும் புதிய நூலகத்தில் சேகரித்து வைக்கப்பட்டன. இந் நூலகம் கவி அரங்கேற்றிப் பரிசில் பெறும் பொருட்டு யாழ்ப்பாணம் வந்த புலவர் பெருமக்களுக்கு பெரிதும் உதவியது என்று கூறுவர். தமிழ்க் கடவுளாகிய முருகனைப் பாடிய அருணகிரிநாதர் யாழ்ப்பாணம் வந்தபோது பாடியதாக கூறப்படும் திருப்புகழ்கள் பல இங்கு வைக்கபட்டிருந்தன. சிங்கை பரராசசேகரனும் கவி பாடுவதில் மிகுந்த ஆற்றலுடையவனாக இருந்தான்.இவனும் சில ஆயிரம் தனி நிலைச் செய்யுள்களை பாடி உள்ளான், அவைகளும் இந் நூலகத்தில் வைக்கப்படிருந்தன. மிக மிக அரிய நூல்களை அதீதம் கொண்டிருந்த இந்த நூலகம் மிக துயரமான வகையில் 1619 ஆம் ஆண்டு போர்த்துக்கேயரின் தாக்குதலில் அழிக்கப்பட்டது. இவனால் கூறப்பட்ட செய்யுள்கள் சில இக்காலத்தில் கிடைத்துள்ளன, அவற்றுள் மூன்றைக் காட்டுதும்:-[1].

தொண்டை நாட்டிலுள்ள பூதூரைப் பிறப்பிடமாகவும் பொற்களந்தையை வசிப்பிடமாகக் கொண்ட புலவராகிய அந்தகக் கவி வீரராகவ முதலியார் யாழ்ப்பாணம் வந்து இவன் முன் தமது வண்ணக் கவியை அரங்கேற்றிய போது இவன் பாடிய விருத்தம்:-

விரகனா முத்தமிழ் வீர ராகவன்
வரகவி மாலையை மதிக்கும் போதெலாம்
உரகனும் வாணனு மொப்பத் தோன்றினாற்
சிரகர கம்பிதஞ் செய்ய லாகுமே

அப்புலவர் பெருமான் இவனிடம் மத்தயானையும், பிறவும், பொன்னின்பந்தமும் பரிசிலாக பெற்ற போது இவனை வியந்து பாடிய வெண்பாவை இங்கே காட்டுதும்:-

பொங்குமிடி யின்பந்தம் போயதெ யென்கவிதைக்
கொங்கும் விருதுபந்த மேற்றதே- குங்குமந்தோய்
வெற்பந்த மானபுய வீரபர ராசசிங்கம்
பொற்பந்த மின்றளித்த போது

புலவர் பாடியதற்கு பதிலாக மன்னன் பாடிய கட்டளைத் கலித்துறை:-

புவியே பெறுந்திரு வாரூ ருலவைப் புலவர்க்கெலாஞ்
செவியை சுவைபேறு மாறுசெய் தான்சிவ ஞானவனு
பவியே யெனுநங் கவிவீர ராகவன் பாடியநற்
கவியே கவியவ னல்லாத பேர்கவி கற்கவியே

மேலும் புலவரின் புலமையை புகழ்ந்து மன்னன் பாடிய கட்டளைத் கலித்துறை:-

இன்னங் கலைமகள் கைம்மீதிற் புத்தக மேந்தியந்தப்
பொன்னம் புயப்பள்ளி புக்கிருப்பா ளென்ன புண்ணியமோ
கன்னன் களந்தைக் கவிவீர ராகவன் கச்சியிலே
தன்னெஞ்ச மேதேனக் கற்றான் கனமுத் தமிழையுமே

இவன் தனது தம்பியாகிய சிங்கை செகராசசேகரனோடு சேர்ந்து தமிழ்க் கல்விக்கு மட்டுமின்றி வேறு துறைகளின் வளர்ச்சிக்காகவும் பாடுபட்டனர். குறிப்பாக மூலிகை மருத்துவ துறை வளரும் பொருட்டு, சிறந்த மூலிகை மருத்துவனான சிங்கை செகராசசேகரனோடு சேர்ந்தது யாழ்ப்பாணம் கல்வியங்காட்டில் 45 ஏக்கர் நிலத்தில் மூலிகை மருத்துவ தோட்டத்தோடு கூடிய மூலிகை மருத்துவ நிலையம் ஒன்றை நிறுவினான்.

குடும்ப வரலாறு

தொகு

இவனது தனிப்பட்ட வாழ்க்கை நிகழ்வுகள், பிற்காலத்தில் ஆரியச் சக்கரவர்த்திகளின் குடியுள் நடந்தேறிய துயர நிகழ்ச்சிகளுக்கும் குழப்பங்களுக்கும் வழி வகுத்தது எனலாம். இவனுக்கு இரு மனைவிகளும் ஒரு ஆசை நாயகியும் இருந்தனர். மனைவிகளில் மூத்தவரும் பட்டத்துராணியுமாக இருந்தவர் இராஜலச்சுமி அம்மையார். இவர் சோழகுடியில் தோன்றியவர் என்பர். சோழப் பேரரசு 13ஆம் நூற்றாண்டில் வீழ்ச்சி அடைந்த பின் அக்குடியை சேர்ந்தவர்கள் சிலர் தமிழகத்தில் சில இடங்களில் குறுநில மன்னராய் திகழ்ந்தனர் என்பதை தமிழக வரலாறு கூறும். இது போன்ற ஒரு சோழ குறுநில அரசகுடியில், இராஜலச்சுமியம்மையார் இளவரசியாக பிறந்தார் போலும். இவருக்கு சிங்கவாகு, பண்டாரம் என இரு மைந்தர்கள் இருந்தனர்.

சிங்கை பரராசசேகரனின் இரண்டாவது மனைவியாகவும் இளையராணியாகவும் திகழ்ந்தவர் வள்ளியம்மையாராவர். இவர் யாழ்ப்பாணத்தின் தலைசிறந்த பிரபுத்துவ மரபாகிய பாண்டிமழவன் வழித் தோன்றிய அரசகேசரியின் மகளாவார். இந்த அரசகேசரியின் மகன் வழிப் பேரன் தான் தமிழில் இரகுவமிசம் பாடிய அரசகேசரி என்பர் சிலர். வள்ளியம்மைக்கு முறையே பரநிருபசிங்கன், காசி நயினார், பெரியபிள்ளை என்று மூன்று மகன்களும் மரகதவல்லி என்று ஒரு மகளும் இருந்தனர். இம் மரகதவல்லியின் மணவாளனே இரகுவமிசம் பாடிய அரசகேசரியாவார்.

கடலில் முத்துக்குளிக்கும் மணவர்களை மேற்பார்வை செய்ய சென்றபோது, சிங்கை பரராசசேகரன் 'மணவ குடியிற் மலர்ந்த மல்லிகை' என்று அழைக்கப்படும் மங்கத்தம்மாளின் அழகில் மயங்கி, அவள் மிது மையல் கொண்டு அவளை தனது ஆசை நாயகியாக்கிக்கொண்டான். இவர்களுக்கு பிறந்தவர்கள் சங்கிலியன் என்னும் மகனும் பரவையார் என்ற மகளுமாகும்.

சிங்கை பரராசசேகரன் தனது பிள்ளைகள் மிது அளவுகடந்த அன்பு கொண்டிருந்தமையால், சங்கிலியனின் தவறான போக்கை கண்டிக்கவில்லை என்பர்.மன்னன் மாசிமகம் கொண்டாட கும்பகோணம் சென்றபோது, அங்கு உள்ளூர் அரசன் ஒருவனை, சங்கிலியன் அவமதித்ததால் அவன் சினம் கொண்டு இவர்களை சிறையிலிட்டிருந்தான். தந்தையையும் தம்பியாகிய சங்கிலியனையும் படையுடன் சென்று மீட்டு வந்தான் பரநிருபசிங்கன். சிங்கை பரராசசேகரன் இதனால் மகிழுந்து மகனாகிய பரநிருபசிங்கனுக்கு ஏழூரதிபன் என்னும் பட்டத்தையும் ஏழு ஊர்களையும் நன்கொடையாக வழங்கினான். ஆனால் இப்பிரச்சனைக்கு பொறுப்பான சங்கிலியனைத் தண்டிக்கவில்லை, இதனால் சங்கிலியனின் போக்கில் மற்றம் எதுவும் ஏற்படவில்லை, 1515 ஆம் ஆண்டளவில் முதலில் பட்டத்து இளவரசனாகிய சிங்கவாகுவின் உணவில் நஞ்சு கலந்து கொன்றான். இதன்பின் 1520 ஆம் ஆண்டளவில் சிறியதகப்பனாகிய சிங்கை செகராசசேகரனிடம் முலிகை மருத்துவம் கற்ற பரநிருபசிங்கன், கண்டி அரசியின் நோய் தீர்க்க கண்டி சென்றபோது, தனது மற்ற அண்ணனாகிய பண்டாரத்தை வெட்டிக் கொன்றுவிட்டு, தந்தை உயிருடன் இருக்கும் போதே யாழ்ப்பாண அரசின் முடியை கவர்ந்த சங்கிலியன், தானே சூடிக்கொண்டான். சங்கிலியனின் இக் கொடும் செயலால் துயரம் அடைந்த மன்னவன், உள்ளம் உடைந்தும், மதி பேதலித்தும் போன நிலையில் ஊமையாக சில காலம் வாழ்ந்து, உயிர் துறந்தான் என்பர்[2].

மேற்கோள்கள்

தொகு
  1. குமாரசுவாமிப்புலவர், தமிழ் புலவர் சரித்திரம், 1914. பக். 151
  2. குணராசா, க., யாழ்ப்பாண அரச பரம்பரை, 2000. பக். 89
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிங்கை_பரராசசேகரன்&oldid=3847483" இலிருந்து மீள்விக்கப்பட்டது