இந்தியாவில் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம்
இந்தியாவில் கருத்துச் சுதந்திரம் (Freedom of expression in India) என்பது எழுத்தின் மூலமாகவோ, பேச்சின்வழியாகவோ ஒரு கருத்தை தெரிவிக்க இந்திய குடிமக்கள் கொண்டுள்ள உரிமையாகும்.
வரலாறு
தொகுகருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் என்பது மனித இனம் காலம் காலமாக அனுபவித்துவரும் உரிமை அல்ல. இந்திய துணைக்கண்டம் அந்நியர் ஆட்சியின் கீழ் இருந்தபோதும், பல்வேறு சுதேசி சமஸ்தானங்களின் கீழ் வாழ்ந்த காலத்திலும் மக்கள் பெரும்பாலும் கருத்துச் சுதந்திரத்தைப் பெற்றிருக்கவில்லை எனலாம். ஐரோப்பாவில் நிகழ்ந்த தொழிற்புரட்சியின் விளைவாக சமூகத்தில் மிகப்பெரிய மாறுதல்கள் நிகழ்ந்தன, இம்மாற்றங்களால் நவீன முதலாளித்துவ வர்க்கம் முடியாட்சியை ஒழித்து நாடாளுமன்ற சனநாயகத்தைத் தோற்றுவித்தது. முடியாட்சியை ஒழிப்பதற்காக நவீன முதலாளித்துவம் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்னும் முழக்கங்களை மக்கள் முன் வைத்தது. தொழிற் புரட்சியின் மற்றொரு விளைவாக ஐரோப்பிய நாடுகள் உலகம் முழுக்க சந்தையைப் பிடிக்க போட்டியிட்டு இறுதியில் உலகின் பல நாடுகள் ஐரோப்பிய நாடுகளின் காலனி ஆதிக்கத்துக்கு உட்பட்டன. ஐரோப்பிய மக்களுக்கு அந்த அரசுகள் வழங்கிய கருத்துச் சுதந்திரத்தை தன் காலனி நாட்டு மக்களுக்கு அவை தர மறுத்தன.
இந்தியாவில் கருத்துரிமையின் நிலை
தொகுபிரித்தானியருக்கு அடிமையாக இருந்த காலத்துக்கு முன்னர் நெடுங்காலம் நிலவிய முடியாட்சியில் நிலவுடமைச் சமுதாயத்தில் பெரும்பான்மை மக்களுக்கு கருத்துரிமை இல்லை. சமூகம் இந்து சமயத்தின் நால்வருண கோட்பாட்டில் சாதியத்தால் இறுகிபோயிருந்தது.
விடுதலைக்கு பிந்தைய நிலை
தொகு1947 இல் இந்தியா பிரித்தானியரிடம் இருந்து விடுதலை அடைந்தது. இதே காலகட்டத்தில் உருவாக்கப்பட்ட ஐக்கிய நாடுகள் அவை 1948, 12, 10 அன்று மனித உரிமை பிரகடனத்தை வெளியிட்டது. இந்த உரிமையில் கூறப்பட்ட கருத்துச் சுதந்திரம் உட்பட உரிமைகள் உலக நாடுகள் மக்களுக்கு உறுதிசெய்யவேண்டுமென உலகை கோரியது. இதன் பின்னணியில் உருவான இந்திய அரசியல் சட்டத்தில், கருத்துச் சுதந்திரம் உள்ளிட்ட பல மனித உரிமைகளையும் பகுதி 3 இல் அடிப்படை உரிமைகள் என அறிவித்தது; அரசமைப்புச் சட்டம் பகுதி 3 இல் பிரிவு 19 (1) அ, அனைத்து இந்திய குடிமக்களுக்கும் பேச்சுரிமையையும், தான் விரும்பும் கருத்தை தெரிவிக்கும் உரிமையையும் அடிப்படை உரிமைகளாக அளிக்கிறது.
கருத்து உரிமைக்கு கட்டுப்பாடு
தொகுஅரசமைப்புச் சட்டம் பகுதி 3 இல் பிரிவு 19 (1) (அ) வில் மக்களுக்கு கருத்து சுதந்திரத்தை அளித்தது ஆனால் அரசமைப்புச் சட்டப்பிரிவு 19 (2) இல் நியாயமான குறுக்கீடுகள் என்ற பெயரில் அதற்கு வரம்பிட்டது, இதைப் பயன்படுத்தி அரசானது மக்களின் கருத்துரிமையை பல தருணங்களில் மறுக்கிறது. அதாவது இந்தியாவின் இறையாண்மையையும் ஒற்றுமையையும் காப்பதற்கும், இந்தியாவின் பாதுகாப்புக்காகவும், அயல் நாடுகளுடன் நல்லுறவை பேணுவதற்கும், பொது அமைதியை காக்கவும், ஒழுங்கை நிலைநாட்டவும், நீதிமன்றத்தை அவமதிக்காமல் இருக்கும் பொருட்டும், அவதூறு செய்வதைத் தடுக்கவும், குற்றச் செயலைத் தூண்டாமல் தடுக்கவும் என்ற காரணங்களைச் சொல்லி இயற்றப்படும் சட்டங்கள் அல்லது இந்த காரணங்களுக்காக வெள்ளையர் ஆட்சிக்காலத்தில் இயற்றப்பட்ட சட்டங்கள் கருத்துரிமையை பறித்தாலும் செல்லுபடியாகக் கூடியவை என்கிறது.[1] கருத்துரிமையை வழங்கும் பிரிவு 19(1) ஒரே வரிதான், ஆனால் கருத்துரிமையைக் கட்டுப்படுத்தும் பிரிவான 19 (2) ஏழு வரிகளை உடையதாக உள்ளது. பிரிவு 19 (2) இல் கருத்துரிமையை கட்டுப்படுத்த அரசுக்கு மட்டற்ற அதிகாரங்களை அரசமைப்புச் சட்டம் அளிக்கிறது.
தேசவிரோதச் செயல்
தொகு1860 இல் இயற்றப்பட்ட இந்திய தண்டனைச் சட்டத்தில் ஆங்கிலேய அரசு சுதந்திர இயக்கத்தை ஒடுக்க 1870 இல் தேசவிரோத செயல் குற்றத்தைத் ஒடுக்கவதற்காக பிரிவு 124 ஏ ஐக் கொண்டுவந்தது. இதன்மூலம் விடுதலைப் போரில் ஈடுபட்டவர்களை சிறையில் அடைக்கப் பயன்படுத்தியது. விடுதலைக்குப் பின்னர் பிரிவு 19(1) படி இப்பிரிவு இப்போதும் தொடர்ந்து வருகிறது.
- இப்பிரிவைப் பயன்படுத்தி தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுக்கடைகளை மூடவேண்டும் என்றும், மதுவணிகம் செய்யும் தமிழக அரசையும், முதல்வரையும் விமர்சித்துப் பாடிய கோவன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.[2]
அவதூறு தடுப்பு
தொகுஉலக நாடுகள் பலவற்றில் அவதூறு என்பது குற்றச் செயல் அல்ல அதன்மீது உரிமையியல் நடவடிக்கை மட்டுமே எடுக்க இயலும் என்பதே நிலை உள்ளது. இந்தியாவில் 1860 இல் இயற்றப்பட்ட இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 499 இன்படி அவதூறு குற்றமுறு செயல் என்று அறிவிக்கிறது. பிரிவு 500 அதற்கான தண்டனைகள் பற்றிக் கூறுகிறது.
- சென்னை மாவட்ட நீதிமன்றத்தில் மட்டும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சார்பில் 163 அவதூறு வழக்குகள் கடந்த காலத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன.[3]
- இப்பிரிவைப் பயன்படுத்தி சுப்பிரமணியன் சுவாமி, விஜயகாந்த்,[4] அரவிந்த் கெஜ்ரிவால் போன்ற பலர்மீது வழக்குகள் பதியப்பட்டுள்ளன.
நீதிமன்ற அவமதிப்பு
தொகுஇந்தியாவில் நீதிமன்ற அவமதிப்பு என்ற பெயரில் பல சமயங்களில் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தை பறிக்கிறது
- இச்சட்டத்தினால் ஈ. வே. ரா, நம்பூதிரிபாத், எழுத்தாளர் அருந்ததி ராய் ஆகியோர் தண்டிக்கப்பட்டுள்ளனர். முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்சு மீது இப்பிரிவு பாய்ந்தது.[5]
குண்டர் சட்டம்
தொகுஇந்தியாவில் 1980களில் குண்டர் தடுப்புச் சட்டம் பல மாநிலங்களில் கொண்டுவரப்பட்டது. தமிழ்நாட்டில் 1982 இல் எம். ஜி. ஆர் ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்டது. ‘கள்ளச்சாராயம் காய்ச்சுவோர், போதைப்பொருள் குற்றவாளிகள், குண்டர்கள், பாலியல் தொழில் குற்றவாளிகள், குடிசைப் பகுதி நிலங்களைப் பறிப்போர், மணல் திருட்டுக் குற்றவாளிகள், திருட்டு வீடியோ குற்றவாளிகளின் அபாயகரச் செயல்கள் தடுப்புச் சட்டம்’ என்று நீள்கிறது இந்தச் சட்டம். பல சமயங்களில் இது மக்கள் பிரச்சினைக்காகக் குரல் கொடுப்பவர்கள் மீது அரசால் பயன்படுத்தப்படுகிறது.[6]
- 2017 மே 17 அன்று ஈழப் போரில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்த சென்னை மெரீனா கடற்கரைக்குச் சென்ற மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, டைசன், இளமாறன், அருண்குமார் ஆகியோர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்கள்.[7]
- ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக புதுக்கோட்டையில் நடத்தத் திட்டமிடப்பட்ட போராட்டத்தில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கும் வாசகங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களை சேலம் கோரிமேட்டில் அரசுப் பெண்கள் கலைக் கல்லூரி முன்பு நின்றுகொண்டு விநியோகித்ததற்காக இதழியல் மாணவியான வளர்மதியும், ஜெயந்தி எனும் பெண்ணும் 2017 சூலை 12 அன்று குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.[8]
கருத்துரிமைக்கு எதிரான படுகொலைகள்
தொகுஇந்தியாவில் தாங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்காக அறிவுசீவிகள் கொல்லப்படும் நிகழ்வுகள் நடந்து வருகின்றன. அவ்வாறு கொல்லப்பட்டவர்கள்
- நரேந்திர தபோல்கர் பகுத்தறிவாளர், மூட நம்பிக்கை எதிர்பாளர், செயற்பாட்டாளர். 2013 ஆகத்து 20 அன்று துப்பாக்கியால் சுடப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்
- கோவிந்த் பன்சாரே இடதுசாரி சிந்தனையாளர் 2015 பெப்ரவரி 16 அன்று துப்பாக்கியால் சுடப்பட்டதால் 20 ஆம் தேதி மருத்துவமனையில் இறந்தார்.
- ம. ம. கல்புர்கி மூட நம்பிக்கை எதிர்பாளர், கன்னட எழுத்தாளர் 2015 ஆகத்து 30 அன்று துப்பாக்கியால் சுடப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.
- கௌரி லங்கேசு பத்திரிகையாளர், இந்துத்துவ எதிர்பாளர் 2017 செப்டம்பர் 5 அன்று துப்பாக்கியால் சுடப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.[9]
மேற்கோள்கள்
தொகு- ↑ து. பரந்தாமன், உயர்நீதிமன்ற நீதிபதி (ஒய்வு) (2017). பொங்கல் மலர். சென்னை: சிந்தனையாளன் இதழ். pp. 49–52.
- ↑ "கோவன் கைது: தமிழக அரசுக்கு ஸ்டாலின் கண்டனம்". செய்தி. தி இந்து. 30 அக்டோபர் 2015. பார்க்கப்பட்ட நாள் 23 சூலை 2017.
- ↑ "2001-ம் ஆண்டு ஜெயலலிதா 4 தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் செய்த வழக்கு: காலம் தாழ்த்தியதால் பலன் கிடைக்காமல் போனது - வழக்கை நடத்திய முன்னாள் திமுக எம்.பி. விஜயன் கருத்து; ஜெ. தொடுத்த அவதூறு வழக்குகள் என்னவாகும்?". செய்திக் கட்டுரை. தி இந்து. 25 சூலை 2017. பார்க்கப்பட்ட நாள் 25 சூலை 2017.
- ↑ "அதிகப்படியான அவதூறு வழக்கு தொடுப்பது ஜனநாயகத்துக்கு உகந்தது அல்ல: தமிழக அரசு மீது உச்ச நீதிமன்றம் காட்டம்". செய்தி. தி இந்து. 24 ஆகத்து 2016. பார்க்கப்பட்ட நாள் 23 சூலை 2017.
- ↑ "நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் மன்னிப்பு கோரினார் மார்கண்டேய கட்ஜு". செய்தி. தி இந்து. 7 சூன் 2017. பார்க்கப்பட்ட நாள் 23 சூலை 2017.
- ↑ வெ. சந்திரமோகன் (21 சூலை 2017). "அறவழிப் போராட்டத்தை அடக்குமுறையால் நசுக்கலாமா?". கட்டுரை. தி இந்து. பார்க்கப்பட்ட நாள் 23 சூலை 2017.
- ↑ "திருமுருகன் காந்தி மீது குண்டர் சட்டம்: கட்சிகள் கண்டனம்". செய்தி. http://www.bbc.com. 30 மே 2017. பார்க்கப்பட்ட நாள் 23 சூலை 2017.
{{cite web}}
: External link in
(help)|publisher=
- ↑ "குண்டர் சட்டம் - 7 முக்கிய தகவல்கள்". http://www.bbc.com. பார்க்கப்பட்ட நாள் 23 சூலை 2017.
{{cite web}}
: External link in
(help)|publisher=
- ↑ பா. ஜீவசுந்தரி (10 செப்டம்பர் 2017). "பார்வை: கொல்லப்பட்டவர்கள் நாம்தான்!". கட்டுரை. தி இந்து. பார்க்கப்பட்ட நாள் 25 செப்டம்பர் 2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|date=
(help)