இந்தோனேசிய மக்களவை

இந்தோனேசிய குடியரசின் பிரதிநிதிகள் சபை

இந்தோனேசிய மக்களவை அல்லது இந்தோனேசிய குடியரசின் பிரதிநிதிகள் சபை (ஆங்கிலம்: House of Representatives (Indonesia); (DPR) இந்தோனேசியம்: Dewan Perwakilan Rakyat Republik Indonesia) என்பது இந்தோனேசிய மக்களின் கலந்தாய்வுப் பேரவையின் (People's Consultative Assembly) (MPR) அவைகளில் ஒன்றாகும்.

இந்தோனேசிய மக்களவை
House of Representatives
Dewan Perwakilan Rakyat Indonesia
DPR
2024-2029
மரபு சின்னம் அல்லது சின்னம்
வகை
வகை
உருவாக்கம்29 ஆகத்து 1945; 79 ஆண்டுகள் முன்னர் (1945-08-29); 15 பெப்ரவரி 1950; 74 ஆண்டுகள் முன்னர் (1950-02-15)
தலைமை
தலைவர்
குசுயாலா தேவி
(Puan Maharani Nakshatra Kusyala Devi), மக்களாட்சி போராட்டக் கட்சி
1 அக்டோபர் 2019 முதல்
துணைத் தலைவர்
அடீசு காதீர்
Adies Kadir, கோல்கார் கட்சி) (Golkar Party)
1 அக்டோபர் 2024 முதல்
கட்டமைப்பு
உறுப்பினர்கள்580
அரசியல் குழுக்கள்
அரசாங்கம் (348)

நம்பிக்கை கூட்டணி (232)

தேர்தல்கள்
அண்மைய தேர்தல்
பிப்ரவரி 14, 2024
அடுத்த தேர்தல்
2029
கூடும் இடம்
நுசந்தாரா II கட்டிடம் இந்தோனேசிய நாடாளுமன்ற வளாகம்,
ஜகார்த்தா, இந்தோனேசியா
வலைத்தளம்
dpr.go.id

இந்த அவை இந்தோனேசிய மக்களின் கலந்தாய்வுப் பேரவையில் (MPR) கீழவையாகக் கருதப்படுகிறது. அதே வேளையில் பிராந்திய பிரதிநிதி மன்றம் (DPD) என்பது மேலவையாகச் செயல்படுகிறது.

இந்தோனேசிய அரசமைப்புச் சட்டம், மக்களவை, மேலவை என வெளிப்படையாகக் குறிப்பிடவில்லை என்றாலும், இந்தோனேசிய மேலவையுடன் (DPD) ஒப்பிடும்போது இந்தோனேசிய மக்களவை (DPR) அதிக அளவில் அதிகாரம், சிறப்புரிமை மற்றும் கௌரவத்தைப் பெறுகிறது.

பொது

தொகு

ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை பொதுத் தேர்தல் மூலம் மக்களவை உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப் படுகிறார்கள்.[1][2]

தற்போது, 575 உறுப்பினர்கள் உள்ளனர்; 2019-ஆம் ஆண்டுத் தேர்தலுக்கு முன்னர் 560 நாடாளுமன்ற உறுப்பினர்கள், மக்களவையில் உறுப்பியம் பெற்று இருந்தார்கள்.

வரலாறு

தொகு

1915-ஆம் ஆண்டில், டச்சு கிழக்கிந்தியத் தீவுகளுக்கு ஒரு சட்டமன்றத்தை நிறுவுவது பற்றி விவாதிக்க, இந்தோனேசிய தேசியவாத அமைப்பின் (Indonesian Nationalist Organisation) உறுப்பினர்களான புடி உத்தோமோ (Budi Utomo) மற்றும் பலர்; நெதர்லாந்து நாட்டிற்குச் சென்றனர். இதைத் தொடர்ந்து திசம்பர் 1916-இல் வோக்சுராட் (Volksraad; People's Council) எனும் மக்கள் மன்றம் நிறுவுவதற்கான சட்ட முன்வரைவு நிறைவேற்றப்பட்டது.[3]

1918-இல் மக்கள் மன்றம், முதன்முறையாகக் கூடியது. உள்ளூராட்சி மன்றங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அதன் பத்தொன்பது உறுப்பினர்களில் பத்து பேர் இந்தோனேசியர்கள் ஆவார்கள். பத்தொன்பது பேரில் மற்ற ஐந்து பேர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர்.

மக்கள் மன்றம்

தொகு

இருப்பினும், அந்த மன்றம் அறிவுரை வழங்கும் அதிகாரத்தை மட்டுமே கொண்டிருந்தது. இருப்பினும் நிதி தொடர்பான செயல்பாடுகளில் தலைமை ஆளுநருடன் (Governor-General) கலந்தாலோசிக்க வேண்டும். காலப் போக்கில், மக்கள் மன்றம் 60 உறுப்பினர்களுடன் வளர்ச்சி கண்டது.[4]

1925-இல், மக்கள் மன்றம், சில கூடுதலான சட்டமன்ற அதிகாரங்களைப் பெற்றது. இருப்பினும், வரவு-செலவுத் திட்டத்திற்கும் உள் சட்டத்திற்கும் அந்த மன்றம் கட்டுப்பட்டாக வேண்டும். அத்துடன், தலைமை ஆளுநரை நீக்கும் அதிகாரம் அதற்கு இல்லை.[4]

சூலை 1941-இல், வோக்சுராட் மக்கள் மன்றம், 6,000 இந்தோனேசியர்களைக் கொண்ட ஒரு போராளிக் குழுவை உருவாக்க முயற்சி செய்தது.[5] இருப்பினும், பிப்ரவரி 1942-இல், ஜப்பானிய படையெடுப்பு தொடங்கியது. இதன் காரணமாக, மே 1942-இல் வோக்சுராட் மக்கள் மன்றம் கலைக்கப்பட்டது.[6]

ஜப்பானிய படையெடுப்பு

தொகு

ஜப்பானியர்கள் 1942-இல் டச்சு கிழக்கிந்தியத் தீவுகளைக் கைப்பற்றினர். பின்னர், 1943-இல், இந்தோனேசியாவின் நிர்வாகத்தில் இந்தோனேசிய ஆலோசகர்களை (Sanyo) நியமித்தனர்; மற்றும் ஜகார்த்தாவில் ஒரு புதிய மத்திய ஆலோசனைக் குழுவை (Chuo Sangi-kai) உருவாக்கி, அதற்கு தலைவராக சுகார்னோவை நியமித்தனர்.[7]

மார்ச் 1945-இல், ஜப்பானியர்கள், இந்தோனேசியாவிற்கான ஓர் அரசியலமைப்பை உருவாக்க ஒரு குழுவை நிறுவினர். இதைத் தொடர்ந்து, 1 சூன் 1945-இல், சுகார்னோ இந்தோனேசியாவின் பஞ்சசீல (Pancasila) கொள்கைகளை உருவாக்கினார்.[8][9]

ஈரவை முறை

தொகு

ஆகத்து 7, 1945 அன்று, இரோஷிமாவில் அணுகுண்டு வீசப்பட்ட மறுநாள், இந்தோனேசிய விடுதலைக்கான ஏற்பாட்டுக் குழு (Panitia Persiapan Kemerdekaan Indonesia) (PPKI) நிறுவப்பட்டது. சுகர்னோ தலைவராகவும், அட்டா (Hatta) துணைத் தலைவராகவும் நியமிக்கப்பட்டனர். சுகர்னோ மற்றும் அட்டா ஆகியோர் 17 ஆகத்து 1945 அன்று, இந்தோனேசியாவின் விடுதலையை (Proclamation of Indonesian Independence) அறிவித்தனர்.[10] ஆகத்து 18, 1945-இல், இந்தோனேசியாவின் தற்காலிக அரசியலமைப்பாக ஓர் அரசியலமைப்பு உருவாக்கப்பட்டது.[9]

சனவரி 1948-இல், டச்சு அதிகாரிகள் இந்தோனேசியாவிற்கான தற்காலிகக் கூட்டரசு மன்றத்தை (Provisional Federal Council for Indonesia) நிறுவினர். 1949 திசம்பரில், 150 உறுப்பினர்களைக் கொண்ட மக்களவையுடன், ஈரவை முறை (Bicameral System) இந்தோனேசிய அரசமைப்பில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.[11]

மேற்கோள்கள்

தொகு
  1. Sekretariat Jenderal DPR RI (2015)
  2. Yulisman (2019)
  3. Ricklefs (1982) p. 164
  4. 4.0 4.1 Ricklefs (1982) p. 153
  5. Ricklefs (1982) p. 184
  6. Cribb (2001) p. 282
  7. Ricklefs (1982) p193
  8. Ricklefs (1982) p. 197
  9. 9.0 9.1 Cribb (2001) p272
  10. Ricklefs (1982) pp. 197–198
  11. Kahin (1952) p. 138

சான்றுகள்

தொகு

மேலும் காண்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்தோனேசிய_மக்களவை&oldid=4182526" இலிருந்து மீள்விக்கப்பட்டது