இந்தோனேசிய அரசாங்கம்
இந்தோனேசிய அரசாங்கம் (ஆங்கிலம்: Government of Indonesia; (GOI) இந்தோனேசியம்: Pemerintah Indonesia) என்பது இந்தோனேசியாவின் அதிகாரப்பூர்வமான அரசாங்கம் ஆகும். இந்தோனேசியாவின் மத்திய அரசு (ஆங்கிலம்: Central Government; இந்தோனேசியம்: Pemerintah Pusat) என்றும் சில வேளைகளில் குறிப்பிடப்படுகிறது.
உருவாக்கம் | ஆகத்து 17, 1945 |
---|---|
உருவாக்குதல் ஆவணம் | இந்தோனேசிய அரசமைப்புச் சட்டம் (Constitution of Indonesia) |
சட்டவலயம் | இந்தோனேசியா |
வலைத்தளம் | indonesia |
சட்டவாக்கக் கிளை | |
சட்டவாக்க அவை | 1. மக்களின் கலந்தாய்வுப் பேரவை (MPR) (1. People's Consultative Assembly) (1. Majelis Permusyawaratan Rakyat )
|
கூடும் இடம் | இந்தோனேசிய நாடாளுமன்ற வளாகம் |
செயல் கிளை | |
Leader | இந்தோனேசியக் குடியரசுத் தலைவர் |
நியமிப்பவர் | தேர்தல்கள் |
தலைமையகம் | மெர்டேகா அரண்மனை, மத்திய ஜகார்த்தா |
முக்கிய உறுப்பு | இந்தோனேசிய அமைச்சரவை |
துறைகள் | 48 |
நீதித்துறை கிளை | |
நீதிமன்றம் | |
இருக்கை | ஜகார்த்தா |
இந்தோனேசிய அரசாங்கத்தின் மூன்று பாரம்பரியத் துறைகளான நிர்வாகத் துறை, சட்டமன்றத் துறை மற்றும் நீதித்துறை ஆகியவற்றின கூட்டமைப்பு என்றும் குறிப்பிடலாம்.
அரசாங்கம் என்பது நாட்டின் அன்றாட நிர்வாகத்திற்கும், நாட்டில் சட்டம் இயற்றுவதற்கும் பொறுப்பான அரசாங்க அமைப்பு ஆகும். அந்த வகையில், அரசாங்கம் என்பது நிர்வாகம் (Executive); மற்றும் சட்டமன்றம் (Legislature) ஆகிய இரு முதன்மை அமைப்புகளை ஒன்றாகக் குறிக்கவும் பயன்படுத்தப்படுகிறது.
மேலும், இந்தோனேசியக் குடியரசுத் தலைவர், இந்தோனேசிய குடியரசு துணைத் தலைவர், இந்தோனேசிய அமைச்சரவை வடிவத்தில், இந்தோனேசியாவின் நிர்வாகத் துறையைக் குறிக்க இந்தோனேசிய அரசாங்கம் எனும் சொல் தொடர் பயன்படுத்தப்படுகிறது.
தாராளவாத மக்களாட்சி
தொகுஇந்தோனேசியாவில் தாராளவாத மக்களாட்சி காலக்கட்டம் (இந்தோனேசியம்: Demokrasi Liberal) ஆகத்து 17, 1950-இல் தொடங்கியது. இந்தோனேசிய ஐக்கிய மாநிலங்கள் (United States of Indonesia) எனும் முந்தைய நிர்வாக அமைப்பு கலைக்கப் பட்டதைத் தொடர்ந்து தாராளவாத மக்களாட்சியின் காலக்கட்டம் தொடங்கியது .
இருப்பினும், 1951-ஆம் ஆண்டில், இந்தோனேசியாவில் இராணுவச் சட்டம் நடைமுறைக்கு வந்ததும், தாராளவாத மக்களாட்சி முறைமையும் ஒரு முடிவுக்கு வந்தது. அதன் பின்னர், அதிபர் சுகார்னோ சூலை 5, 1959-இல் வழிகாட்டப்பட்ட மக்களாட்சி அரசு முறைமையை (Guided Democracy) அறிமுகப்படுத்தினார்.
இந்தப் புதிய அரசாட்சி முறைமை; 1955 பாண்டுங் மாநாடு (Bandung Conference) உட்பட பல முக்கிய நிகழ்வுகளைக் காண நேர்ந்தது. அந்தக் காலக்கட்டத்தில், அதாவது 1950-ஆம் ஆண்டுகளில், இந்தோனேசியாவின் முதல் அரசியலமைப்பு சட்டமன்றத் தேர்தல்கள் (Constitutional Assembly of Indonesia) நடைபெற்றன; மற்றும் இந்தோனேசியாவில் உறுதியற்ற ஒரு நீண்ட கால அரசியல் தன்மையும் நிலவியது; அதே வேளையில் எந்த ஓர் அமைச்சரவையும் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் நீடிக்காமல் போனதும் குறிப்பிடத்தக்கது; போன்ற நிகழ்வுகளைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.
வழிகாட்டப்படும் மக்களாட்சி
தொகுவழிகாட்டப்படும் மக்களாட்சி (ஆங்கிலம்: Guided Democracy; இந்தோனேசியம்: Demokrasi Terpimpin) என்பது இந்தோனேசியாவில் 1959-ஆம் ஆண்டு தொடங்கி 1966-ஆம் ஆண்டு வரை நடைமுறையில் இருந்த ஓர் அரசியல் முறைமையாகும். இது அதிபர் சுகார்னோவின் சிந்தனையில் உருவானது. அந்த வழிகாட்டப்படும் மக்களாட்சி முறைமை, இந்தோனேசியாவில் ஓர் அரசியல் உறுதிநிலைப்பாட்டைக் கொண்டுவரும் முயற்சியாக இருந்தது.
மேற்கத்திய பாணியிலான மக்களாட்சி, இந்தோனேசியாவின் நிலைமைக்குப் பொருத்தமற்றது என்று சுகார்னோ நம்பினார். மாறாக, கிராமப் பெரியவர்களின் வழிகாட்டுதலின் கீழ், பாரம்பரியக் கிராம முறை கருத்துப் பரிமாற்றம்; மற்றும் ஒருமித்தக் கருத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு மக்களாட்சி அமைப்பிற்கு சுகார்னோ வழிவகுத்தார். அதுவே வழிகாட்டப்படும் மக்களாட்சி எனும் பெயரையும் பெற்றது.
புதிய ஒழுங்குமுறை ஆட்சி
தொகு1960-களின் இடைப்பகுதியில் இந்தோனேசியா புதிய ஒழுங்குமுறை எனும் புதிய கட்டளை (ஆங்கிலம்: New Order; இந்தோனேசியம்: Orde Baru) எனும் ஒரு புதிய ஆட்சிக்கு மாற்றமானது; நாட்டின் முதல் அதிபரான சுகார்னோவை வெளியேற்றியது. சுகார்னோ 22 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தார். அவரின் ஆட்சி இந்தோனேசியாவின் நவீன வரலாற்றில் மிகவும் கொந்தளிப்பான காலக்கட்டங்களில் ஒன்றாகும்.
அவருக்குப் பின்னர் ஆட்சிக்கு வந்த அதிபர் சுகார்த்தோ 31 ஆண்டுகாலம் இந்தோனேசியாவின் அதிபராகப் பதவி வகித்தார். இவருக்கு முன்னர் பதவி வகித்த சுகார்னோ ஒரு பொம்மை மனிதர் (Puppet Master; Dhalang) என்றும் விவரிக்கப்பட்டார். இராணுவம் மற்றும் இந்தோனேசிய பொதுவுடைமை கட்சியின் (Communist Party of Indonesia; Partai Komunis Indonesia) மூலமாக, அவருக்கு எதிரான விரோதச் சக்திகளைச் சமநிலைப்படுத்துவதன் மூலம் சுகார்னோ தம் அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொண்டார்.
இந்தோனேசிய பொதுவுடைமை கட்சி
தொகு1965-ஆம் ஆண்டு வாக்கில், இந்தோனேசிய பொதுவுடைமை கட்சி (Indonesian Communist Party; Partai Komunis Indonesia (PKI) அரசாங்கத்தின் அனைத்து மட்டங்களிலும் பரவலாக ஊடுருவியது; அது மட்டுமின்றி இராணுவத்தின் அதிகாரத்தைப் பயன்படுத்திய நிலையில், தன் செல்வாக்கையும் அழுத்தமாக நிலைப்படுத்திக் கொண்டது.[1]
செப்டம்பர் 30, 1965 அன்று, செப்டம்பர் 30 இயக்கம் (30 September Movement) நடத்திய நடவடிக்கையில் இராணுவத்தின் மூத்த அதிகாரிகள் ஆறு பேர் கொல்லப்பட்டனர். செப்டம்பர் 30 இயக்கம் என்பது இந்தோனேசிய ஆயுதப் படைக்குள் இருந்து உருவான எதிர்வினைக் குழு ஆகும். அடுத்த சில மணிநேரங்களில், மேஜர் ஜெனரல் சுகார்த்தோ தன் கட்டளையின் கீழ் படைகளைத் திரட்டி ஜகார்த்தா மாநகரத்தைக் கைப்பற்றினார்.
பொதுவுடைமைக்கு எதிரானவர்கள் என அறியப்படும் அந்த இயக்கத்தினர், தொடக்கத்தில் அப்போதைய இராணுவத் தலைவரைப் பின்பற்றி, வன்முறைகளைப் பயன்படுத்தி, நாடு முழுவதும் பொதுவுடைமைவாதிகளைத் துடைத்து ஒழித்தனர். பொதுவுடைமைக்கு எதிரானவர்கள், சுமார் அரை மில்லியன் மக்களைக் கொன்று, இந்தோனேசிய பொதுவுடைமை கட்சியையும் அழித்தனர் என்றும் குற்றம் சாட்டப்பட்டது.[2][3]
சுகார்த்தோ
தொகுஅரசியல் ரீதியாக பலவீனமடைந்த சுகார்னோ, தன் அரசியல் நிர்வாகத்தையும்; மற்றும் இராணுவ அதிகாரங்களையும் இராணுவத் தளபதி சுகார்த்தோவிடம் மாற்றிக் கொடுக்க வேண்டிய இக்கட்டான நிலை ஏற்பட்டது. அதற்குள் சுகார்த்தோ, இந்தோனேசிய ஆயுதப் படைகளின் தலைவரானார். மார்ச் 1967-இல், இந்தோனேசிய நாடாளுமன்றம் (MPRS) இராணுவத் தளபதி சுகார்த்தோவை நாட்டின் செயல்பாட்டுத் தலைவராக நியமித்தது.
ஓர் ஆண்டு கழித்து சுகார்த்தோ முறையாக அதிபராக நியமிக்கப்பட்டார். சுகார்னோ 1970-ஆம் ஆண்டு இறக்கும் வரையில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். இடதுசாரி சார்பு கொண்ட சுகார்னோவின் கீழ், இந்தோனேசியாவில் ஒரு குழப்பமான தேசியவாதம் நிலவியது; மற்றும் பொருளாதாரத் தோல்வியும் ஏற்பட்டது.
சுகார்த்தோவின் மேற்கத்திய சார்பு புதிய ஒழுங்குமுறை எனும் புதிய கட்டளை கொள்கை (New Order), நாட்டின் பொருளாதாரத்தை உறுதிப்படுத்தியது. ஆனாலும் பழைய பஞ்சசீலக் கொள்கை தொடர்ந்து நீடித்தது.
நிர்வாகத் துறை
தொகுபதவி | Name | அரசியல் இணைப்பு | தொடக்கம் | முன்னைய பதவி | |
---|---|---|---|---|---|
இந்தோனேசியக் குடியரசுத் தலைவர் | பிரபோவோ சுபியாந்தோ | கிரேட்டர் இந்தோனேசியா இயக்கம் கட்சி | 20 அக்டோபர் 2024 | இந்தோனேசிய தற்காப்பு அமைச்சு | |
இந்தோனேசிய குடியரசின் துணைத் தலைவர் | ஜிப்ரான் ரகபுமிங் ரகா | சுயேச்சை (அரசியல்) | 20 அக்டோபர் 2024 | சுராகார்த்தா மேயர் |
இந்தோனேசியக் குடியரசுத் தலைவர்
தொகுகுடியரசுத் தலைவர் மற்றும் குடியரசு துணைத் தலைவர் ஐந்தாண்டு காலத்திற்கு குடிமக்களின் வாக்கு மூலம் தேர்ந்தெடுக்கப் படுகிறார்கள். 2004-க்கு முன், மக்கள் ஆலோசனைக் குழுவால் (People's Consultative Assembly) தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஆகக் கடைசியாக, கடந்த 2024-ஆம் ஆண்டு பிப்ரவரி 14-ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது.
குடியரசுத் தலைவர் அதிகபட்சமாக ஐந்து ஆன்டு காலத்திற்கு நேரடியாகத் தேர்ந்தெடுக்கப் படுகிறார் இரண்டு தவணைகள் பதவி வகிக்கலாம்.
மேலும் அவர் ஒரு நாட்டுத் தலைவர்; ஆயுதப் படைகளின் தலைமைத் தளபதி; மற்றும் உள்நாட்டு நிர்வாகம்; கொள்கை உருவாக்கம்; வெளியுறவு விவகாரங்களுக்குப் பொறுப்பானவர். குடியரசுத் தலைவர் ஓர் அமைச்சரவையை நியமிக்கிறார். அதன் உறுப்பினர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய அவசியமில்லை.[4]
இந்தோனேசிய நாடாளுமன்றம்
தொகுஇந்தோனேசிய நாடாளுமன்றம் என்பது இந்தோனேசிய மக்களின் கலந்தாய்வுப் பேரவை (People's Consultative Assembly; Majelis Permusyawaratan Rakyat Republik Indonesia) (MPR) என்று அழைக்கப்படுகிறது. சுருக்கமாக, இந்தோனேசியாவின் அரசியல் அமைப்பின் நாடாளுமன்றம் என்று அழைக்கலாம்.
இந்தோனேசிய நாடாளுமன்றம் இரண்டு அவைகளைக் கொண்டது:
- இந்தோனேசிய மக்களவை (House of Representatives (Indonesia); Dewan Perwakilan Rakyat Republik Indonesia; (DPR) பொதுவாக இந்தோனேசியா குடியரசின் பிரதிநிதிகள் சபை என்று அழைக்கப்படுகிறது.
- இந்தோனேசிய மேலவை (Regional Representative Counci; Dewan Perwakilan Daerah; DPD) பிராந்திய பிரதிநிதி மன்றம் என்று அழைக்கப்படுகிறது. இந்தோனேசியாவின் 34 மாநிலங்களில் இருந்து ஒவ்வொரு மாநிலத்திற்கும் 4 மேலவை உறுப்பினர்கள்; (Dewan Perwakilan Daerah) (DPD) (செனட்டர்கள்) தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
இந்தோனேசிய மக்களவை
தொகுஇந்தோனேசிய மக்களவை எனும் இந்தோனேசியா குடியரசின் பிரதிநிதிகள் சபையின் உறுப்பினர்கள், பொதுத் தேர்தல் மூலமாகத் தேர்வு செய்யப டுகிறார்கள். சட்டங்களை இயற்றும் முழு அதிகாரமும் இந்தோனேசிய மக்களவைக்கு (DPR) இருப்பதால், சட்டம் இயற்றும் அதிகாரத்தின் பெரும்பகுதியை இந்தோனேசிய மக்களவை (DPR) கொண்டுள்ளது.
இந்தோனேசிய மேலவை
தொகுஇந்தோனேசிய மேலவை (DPD) என்பது இந்தோனேசிய மக்களவைக்கு (DPR) ஒரு துணை அமைப்பாகச் செயல்படுகிறது. இந்தோனேசிய மேலவை, சட்ட முன்வரைவுகளை (மசோதா) முன்மொழியலாம்; அதன் கருத்துகளை முன்வைக்கலாம்; மற்றும் விவாதங்களில் பங்கேற்கலாம்.
ஆனால் அதற்கு சட்டப்பூர்வ அதிகாரம் இல்லை. இந்தோனேசிய மக்களவைக்கு மட்டுமே சட்டம் இயற்றும் அதிகாரங்கள் உள்ளன.
இந்தோனேசிய நாடாளுமன்றம்
தொகுஇந்தோனேசிய மக்களின் கலந்தாய்வுப் பேரவை என்று முன்பு அழைக்கப்பட்ட இந்தோனேசிய நாடாளுமன்றம், இந்தோனேசியாவின் அரசமைப்புச் சட்டத்தைத் திருத்தலாம்; இந்தோனேசிய குடியரசுத் தலைவரை (அதிபர்) பதவியேற்கச் செய்யலாம்; மற்றும் இந்தோனேசிய குடியரசுத் தலைவரின் பதவி நீக்க நடைமுறைகளைச் செயல்படுத்தலாம்.
இந்தச் செயல்பாடுகளில், இந்தோனேசிய நாடாளுமன்றம், அதன் இரண்டு அவைகளின் உறுப்பினர்களை இணைப்பதன் மூலம் செயல்படுகிறது.[5][6]
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Ricklefs (1991), pp. 271-283
- ↑ Chris Hilton (writer and director).Shadowplay[Television documentary].Vagabond Films and Hilton Cordell Productions.; Ricklefs (1991), pages 280–283, 284, 287–290
- ↑ Robert Cribb (2002). "Unresolved Problems in the Indonesian Killings of 1965-1966". Asian Survey 42 (4): 550–563. doi:10.1525/as.2002.42.4.550.; Friend (2003), page 107-109, 113.
- ↑ Denny Indrayana (2008), pp. 361, 443, 440
- ↑ Denny Indrayana (2008)
- ↑ Aspinall; Mietzner (2011). "People's Forum or Chamber of Cronies". Problems of Democratisation of Indonesia.
மேலும் படிக்க
தொகு- Denny Indrayana (2008) Indonesian Constitutional Reform 1999-2002: An Evaluation of Constitution-Making in Transition, Kompas Book Publishing, Jakarta பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-979-709-394-5
- King, Blair A. (2011). "Chapter 4. Government and Politics". In Frederick, William H.; Worden, Robert L. (eds.). Indonesia: A Country Study. Area handbook series, 39. Library of Congress, Federal Research Division (6th ed.). Washington, DC: U.S. Government Printing Office. pp. 225–306. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8444-0790-6.
- O'Rourke, Kevin. 2002. Reformasi: the struggle for power in post-Soeharto Indonesia. Crows Nest, NSW: Allen & Unwin. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-86508-754-8
- Schwarz, Adam. 2000. A nation in waiting: Indonesia's search for stability. Boulder, CO: Westview Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8133-3650-3