இமாச்சலப் பிரதேச வரலாறு

இமாச்சலப் பிரதேசம் 1948 இல் இந்திய ஒன்றியத்துக்குள் முதன்மை ஆணையரின் ஆட்சிப்பகுதியாக நிறுவப்பட்டது. இமாச்சலப் பிரதேச வரலாற்றில் இப்பகுதியின் சிம்லாவை ஒட்டிய மலை மாவட்டங்கள் மற்றும் தெற்கு மலைப்பகுதிகள் போன்றவை முந்தைய பஞ்சாப் பகுதியில் உள்ளடங்கி இருந்தது. 1950 சனவரி 1 இல் இந்திய அரசியலமைப்பு செயல்பாட்டுக்கு வந்த அன்று இமாசலம் சி அந்தஸ்து கொண்ட மாநிலமாக ஆனது. பின்னர் 1956 நவம்பர் 1 அன்று ஒன்றிய ஆட்சிப்பகுதி என்னும் தகுதியைப் பெற்றது. 1970 திசம்பர் 18 அன்று, இந்திய நாடாளுமன்றத்தில் இமாச்சலப் பிரதேச சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதன்படி இந்தியாவின் புதிய மாநிலமாக இமாச்சலம் 1971 சனவரி 25 அன்று உருவானது. இவ்வாறு இந்திய ஒன்றியத்தின் பதினெட்டாவது மாநிலமாக இமாச்சலப் பிரதேசம் உருவானது.

முந்தைய காலங்களில், இப்பகுதியானது சம்பா, பிலாஸ்பூர், பாகல், தாமி எனப் பல சிற்றரசுகளாக பிரிந்து இருந்தது. 1815-1816 காலகட்டத்தில் நடந்த கூர்க்கா யுத்தத்திற்குப் பின்னர், பிரித்தானிய இந்தியப் பகுதியாக மாறியது.

விடுதலைக்கு முன்பு

தொகு

முந்தைய வரலாறு

தொகு

சில ஆதாரங்களின்படி கிட்டத்தட்ட 2 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இமாசலப் பிரதேசத்தின் அடிவாரத்தில் மனிதர்கள் வசித்ததாக கண்டறியப்பட்டுள்ளது. காங்க்ராவின் பங்கனா பள்ளத்தாக்கு, நலகார்த்தின் சிர்சா பள்ளத்தாக்கு, சிர்மௌரின் மர்கண்டா பள்ளத்தாக்கு போன்ற இடங்களில் வரலாற்றுக்கு முந்தைய கால மனிதர்கள் வாழப் பயன்படுத்திய இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. மாநிலத்தின் அடிவாரப்பகுதிகளில் கி.மு. 2250 மற்றும் 1750 காலகட்டத்திற்கு இடையே, செழிப்பான சிந்து சமவெளி நாகரிகப் பகுதியில் இருந்து மக்கள் குடியேற்றம் நடந்துள்ளது.

இடைக்கால வரலாறு

தொகு

கி.பி. 883 இல் காஷ்மீர் பகுதி ஆட்சியாளரான சங்கர் வர்மா தனது செல்வாக்கை இமாசலப் பிரதேசம்வரை நீட்டித்தார். இந்த மண்டலமும், கி.பி. 1009 இல் கஜினி முகமதுவின் படையெடுப்பைக் கண்டது, அந்தக் காலகட்டத்தில் வட இந்தியாவில் உள்ள கோயில்களில் இருந்த செல்வம் சூறையாடப்பட்டது. கி.பி. 1043 இல் இராசபுத்திரர்களால் இப்பகுதி ஆளப்பட்டது.

 
சன்சார் சந்த் (c. 1765–1823)

கி.பி. 1773 இராசபுத்திரரான கடாச் மகாராஜா இரண்டாம் சன்சார் சந்த் வசம் இப்பகுதி வந்தது, 1804 இல் மாகாராஜா ரஞ்சித்சிங் படையெடுத்துவந்து இராசபுத்திரர்களின் ஆற்றலை நசுக்கினார்.

வட இந்தியாவின் சிறிய இராச்சியங்கள் முசுலீம் படையெடுப்பாளர்கள் வரும்வரை தங்கள் சுதந்திரத்தை அனுபவித்து வந்தன. பல இராச்சியங்கள் முஸ்லீம் படையெடுப்பாளர்களால் பல தடவைகள் அடியோடு அழிக்கப்பட்டன. கசினியின் மகுமூது 10 ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் காங்க்ராவை வெற்றி கண்டார். தைமூர் மற்றும் சிக்கந்தர் லோடியின் படைகள் இராச்சியத்தின் தாழ் மலைப் பகுதிகளில் அணிவகுத்து வந்து, பல சண்டைகளில் ஈடுபட்டு பல கோட்டைகளும் கைப்பற்றப்பட்டன. 1768 இல் நேபாளத்தில் கூர்க்கா பழங்குடிகள் அதிகாரத்துக்கு வந்தனர். அவர்கள் படைத்துறை வலிமையைப் பெருக்கி தங்கள் பிரதேசத்தை விரிவாக்க தொடங்கினர்.

கூர்காக்கள் நேபாளத்தில் இருந்து அணிவகுத்து பகுதிகளைக் கைப்பற்றத் தொடங்கினர். படிப்படியாக கூர்காக்களின் வசம் சிர்மௌர் மற்றும் சிம்லா ஆகியவை சென்றன. படா காஜி (தளபதிக்கு இணை) அமர் சிங் தாபாவின் தலைமையில், கூர்காகள் காங்க்ராவை முற்றுகையிட்டனர். இவர்கள் 1806 ஆம் ஆண்டில், காங்ரா ஆட்சியாளர் சன்சார் சந்த்தைத் தோற்கடித்தனர். என்றாலும் கூர்காக்களால் காங்கரா கோட்டையைக் கைப்பற்ற இயலவில்லை. 1809 இல் கோட்டை மகாராஜா ரஞ்சித்சிங்கின் வசம் வந்தது.

எனினும், சிபா இராச்சிய மன்னரான ராஜா ராம் சிங்கின் படைகள் சிபா கோட்டையை முற்றுகையிட்டு மகாராஜா ரஞ்சித் சிங்கின் படைகளைத் தோற்கடித்து மீண்டும் கைப்பற்றினர். Siba கோட்டையையும் முற்றுகையிட்டார். தோல்விக்குப்பின்னர், கூர்காக்கள் தங்கள் நாட்டின் தெற்குப்பகுதிகளில் தங்கள் ஆதிக்கத்தை விரவிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

பிரித்தானியர் காலம்

தொகு

19 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஏற்பட்ட பிரித்தானிய கூர்க்கா யுத்தத்திற்குப் பிறகு 1815-16 இல் சிம்லாவை பிரித்தானியர் தங்கள் பகுதிகளுடன் இணைத்துக் கொண்டனர். 1948 இல் 31 மலைப் பிரதேசங்கள உள்ளடக்கி இமாச்சலப் பிரதேசமானது மத்திய ஆட்சிப்பகுதியாக ஆனது, 1966 இல் கூடுதலான நிலப்பரப்பைப் பெற்றது.[1]

1857 இல் கிளர்ச்சி அல்லது முதல் இந்திய விடுதலைப் போரானது பிரித்தானிய அரசாங்கத்திற்கு எதிரான அரசியல், சமூக, பொருளாதார, சமய, இராணுவ குறைகளின் காரணமாக உருவானது. இக்காலகட்டத்தில் மலைப் பிரதேச மக்கள் நாட்டின் பிற பகுதி மக்களுடன் அரசியல் செயல்பாடுகளில் ஈடுபடவில்லை.[2]

இவர்களில் சிலர் கிளர்ச்சியின் போது பிரித்தானிய அரசாங்கத்திற்கு உதவி செய்தனர். இவர்களில் சம்பா, பிலாஸ்பூர், பாகல், தாமி போன்றவற்ற சமஸ்தான ஆட்சியாளர்கள் அடங்குவர்.

பிரித்தானிய பிரதேசங்களினுள் இருந்த மலைப்பிரதேசங்கள் 1858 இல் ராணி விக்டோரியாவின் அறிவிப்பு வெளியானபின் நேரடியாக பிரித்தானிய ஆட்சியின்கீழ் வந்தன. சம்பா, மண்டி, பிலாஸ்பூர் சமஸ்தானங்கள் பிரித்தானியர் ஆட்சியின் போது பல துறைகளில் நல்ல முன்னேற்றம் கண்டன. முதல் உலகப்போரின்போது, கிட்டத்தட்ட மலை சமஸ்தானங்களின் அனைத்து ஆட்சியாளர்களும் பிரிட்டிஷாரின் போர் முயற்சிகளுக்கு விசுவாசமாக இருந்தனர் போருக்கு ஆளணிவகையிலும், பொருள் வடிவிலும் உதவிகள் செய்தனர்.

விடுதலைக்குப் பிறகான காலம்

தொகு

விடுதலைக்குப் பிறகு இமாச்சலப் பிரதேசம் முதன்மை ஆணையரின் மாகாணமாக 1948 ஏப்ரல் அன்று செயல்பாட்டிற்கு வந்தது. இமாச்சலம் இந்திய அரசியலமைப்பு சட்டம் செயல்பாடுக்கு வந்தபின் 1951 செப்டம்பரில் சி தகுதி மாநிலமாக உருவானது. இமாச்சலப் பிரதேசம் 1956 நவம்பர் 1 அன்று ஒன்றிய ஆட்சிப்பகுதியாக ஆனது. 1970 திசம்பர் 18 அன்று, இந்திய நாடாளுமன்றத்தில் இமாச்சலப் பிரதேச சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதன்படி இந்தியாவின் புதிய மாநிலமாக இமாச்சலம் 1971 சனவரி 25 அன்று உருவானது. இவ்வாறு இந்திய ஒன்றியத்தின் பதினெட்டாவது மாநிலமாக இமாச்சலப் பிரதேசம் உருவானது.

சில நேபாளிகள் நேபாளத்தில் இருந்து பிரித்தானி கிழக்கிந்திய கம்பெனியால் கைப்பற்றப்பட்டு விடுதலைக்குப்பின் இந்திய ஒன்றியத்தில் இணைக்கப்பட்ட பகுதிகளை நேபாளத்துடன் இணைத்து அகண்ட நேபாளம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைக்கின்றனர். இக்கருத்துக்கு இப்பகுதியில் ஓரளவு ஆதரவு உள்ளது.

மேற்கோள்கள்

தொகு
  1. "History of Himachal Pradesh". Suni System (P) Ltd. பார்க்கப்பட்ட நாள் 2007-04-28.
  2. "History of Himachal Pradesh". himachalpradeshindia.com. Archived from the original on 2006-10-20. பார்க்கப்பட்ட நாள் 2006-10-26. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=இமாச்சலப்_பிரதேச_வரலாறு&oldid=3924637" இலிருந்து மீள்விக்கப்பட்டது