இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன்
இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் கி.பி. 1239 முதல் 1251 வரை பாண்டிய நாட்டினை ஆட்சி செய்த மன்னனாவான். இவனது மெய்க்கீர்த்தி "பூமலர்த்திருவும்,பொருசய மடந்தையும்" எனத் தொடங்குவது குறிப்பிடத்தக்கது.போசாள அரசனான் வீரசோமேச்சுரன் இவனது மாமன் முறையினனும் கொங்கு நாட்டு விக்கிரம சோழன் இவனது மைத்துனனும் ஆவான். மூன்றாம் இராசேந்திரன் பாண்டிய நாட்டின் மீது படையெடுத்து இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியனை வெற்றி கொண்டான்.ஆனால் இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியனின் மாமனான வீரசோமேச்சுரன் பாண்டிய நாட்டினை மீட்டெடுத்துக் கொடுத்தான். தனது சகோதரியின் மகன் என்ற காரணத்தினால் பாண்டிய நாட்டின் மீது கவனம் செலுத்தி வந்தான் வீரசோமேச்சுரன். இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் இவன் மதுரையில் உள்ள சிங்காசனத்திற்கு மழவராயன்,பல்லவராயன் எனப் பெயரிட்டிருந்தான்.இவனது பட்டத்தரசி உலக முழுதுடையாள் எனக் கல்வெட்டுக்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.