இரையக உண்குழலியப் பின்னோட்ட நோய்

இரையக உண்குழலியப் பின்னோட்ட நோய் (gastroesophageal reflux disease (GERD)) அல்லது அமிலப் பின்னோட்ட நோய் (acid reflux) ஒரு நீண்டகால நோயாகும், இதன்போது இரைப்பையில் இருந்து உணவுக்குழாய்க்கு இரைப்பைச்சாறும் உணவுகளும் மேல்நோக்கித் தள்ளப்படுகின்றன, w அடங்கியுள்ள அமிலத்தால் உணவுக் குழாயின் சீதமென்சவ்வு பாதிப்புறுவதால் உணவுக்குழாய் அழற்சி ஏற்பட்டு இந்த நோய் தீவிரமடைகிறது, இதனால் ஏற்படும் முக்கிய உணர்குறியாக நெஞ்செரிவு விளங்குகிறது.[1]

இரையக உண்குழலியப் பின்னோட்ட நோய்
இரையக உண்குழலியப் பின்னோட்ட நோயால் பாதிக்கப்பட்ட உணவுக்குழாயின் அடிப்பகுதி: அகநோக்கிப் படம்
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள்
சிறப்புஇரையகக் குடலியவியல்
ஐ.சி.டி.-10K21.
ஐ.சி.டி.-9530.81
ம.இ.மெ.ம109350
நோய்களின் தரவுத்தளம்23596
ஈமெடிசின்med/857 ped/1177 radio/300
ம.பா.தD005764

நோயின் காரணம்

தொகு

இரைப்பையும் உணவுக் குழாயும் (களம்) சந்திக்கும் இடத்தில் இயல்பான நிலையில் ஒரு இறுக்கி காணப்படுகிறது, இது கீழ்க்கள இறுக்கி (lower oesophageal sphincter) எனப்படும், இது இயல்பான நிலையில் இறுக்கமாகக் காணப்படுவதால் இரைப்பை-உணவுக்குழாய்ச் சந்தி மூடப்பட்டுக் காணப்படும்; உணவுக் குழாயில் இருந்து உணவு இரைப்பைக்குச் செல்லும்போது இறுக்கி தளர்வடைவதால் உணவு இரைப்பைக்குள் செல்லமுடிகின்றது. உணவு உட்கொண்ட பிற்பாடு மீண்டும் இரைப்பை-உணவுக்குழாய்ச் சந்தி மூடப்படுகின்றது, இச் செயற்பாட்டின் காரணமாக இரைப்பையில் சுரக்கப்படும் அமிலம் மேல்நோக்கிச் செல்வது தடுக்கப்படுகிறது. இரைப்பை – உணவுக்குழாய் இறுக்கி தளர்வடைந்து காணப்படும் சந்தர்ப்பத்தில் இரைப்பையில் உள்ள உணவு, இரைப்பைச்சாறு போன்ற அடக்கங்கள் இறுக்கியின் திறந்த வழியூடாக மேல்நோக்கிச் செல்லுகின்றன. இரைப்பைச்சாற்றில் அடங்கியுள்ள அமிலத்தால் உணவுக் குழாயின் சீதமென்சவ்வு பாதிப்புறுவதால் உணவுக்குழாய் அழற்சி ஏற்படுகின்றது, இதன்போது நெஞ்செரிவு நோயாளியால் உணரப்படுகின்றது.

சிலவேளைகளில் அமிலம் தொண்டையில் பின்னோட்டம் அடைவதால் சுவாசத்தொகுதியில் பாதிப்பு ஏற்படும். இது மிடற்றுத்தொண்டைப் பின்னோட்டம் எனப்படும்.

காரணிகள்

தொகு
 • பிரிபடலப் பிதுக்கம் (கையாட்டஸ் கேர்னியா): நெஞ்சறைப் பிரிபடலத்தில் (பிரிமென்றகடு அல்லது உதரவிதானம்) ஏற்படும் பாதிப்பால் இரைப்பையின் மேற்பாகம் நெஞ்சறைக்குள் பிதுங்குவதால் ஏற்படுகின்றது.
 • உடல் பருமன்: உடல் பருத்து இருப்பவர்களில் இந்நோய் இலகுவாக வரக்கூடிய சாத்தியக்கூறு உள்ளது.
 • சொளிங்கர்-எலிசன் கூட்டறிகுறி: காசுட்ரின் எனும் இயக்குநீர் மிகையாகச் சுரப்பதால், அது அமில உற்பத்தியைக் கூட்ட மிகையான இரைப்பை அமிலத்தன்மை ஏற்படுகின்றது.
 • உயர்கல்சியக்குருதி: காசுட்ரின் இயக்குநீரின் உற்பத்தியை மிகையாக்கும்.
 • தோல் தடிப்பு நோய் (scleroderma)
 • உள்ளுறுப்பு இறக்கம் (Visceroptosis) அல்லது கிளேனார்ட் கூட்டறிகுறி : இரைப்பை வயிற்றின் அடிப்பகுதியில் அமிழ்ந்து காணப்படும்.
 • பிரிட்னிசொலோன் போன்ற மருந்துகளின் பயன்பாடு;

சில மருந்துவகைகள் (கல்சியம் தடுப்பிகள், பீட்டாத் தடுப்பிகள்) போன்றன இரைப்பை – உணவுக்குழாய் இறுக்கியைத் தளர்வடையச் செய்யும் ஆற்றல் கொண்டவை. இவற்றின் தொடர்ச்சியான பயன்பாடும் இந்நோயை உருவாக்கலாம். புகைப்பிடித்தல், மிதமிஞ்சிய மதுபானப் பயன்பாடும் இந்நோயை ஏற்படுத்தும் காரணிகளாக உள்ளன.[2]

சிகிச்சை வழங்காத நோய் தீயவிளைவுகளை உண்டாக்கும். உணவுக்குழாயின் மேலணி இழையங்கள் உருமாற்றத்துக்கு உட்படும்; இந்நிலை பரட்டின் உணவுக்குழாய் (Barrett's Esophagus) எனப்படும், இந்த நிலையைத் தொடர்ந்து, இயல்புப்பிறழ்ந்த வளர்ச்சி ஏற்படும்; இறுதியில் உணவுக்குழாய்ப் புற்றுநோய் உண்டாகலாம்.

நோய் அறிகுறிகள்

தொகு

பொதுவான அறிகுறிகள்:

தொகு
 1. நெஞ்செரிவு;
 2. பின்னோட்டம்: உணவு, இரைப்பைச்சாறு
 3. விழுங்கற்கடுமை

குறைவான அறிகுறிகள்:

தொகு
 1. உணவு விழுங்கும்போது வலி;
 2. அதிகம் உமிழ்நீர் சுரத்தல்;[3]
 3. குமட்டல்[4]
 4. நெஞ்சுவலி

இப் பின்னோட்ட நோய் சிலவேளைகளில் உணவுக்குழாய்க்கு காயத்தை ஏற்படுத்தும். அவையாவன:

பின்னோட்ட நோயில் உணவுக்குழாயில் பாதிப்பு ஏற்பட்டுள்ளபோது வேறு அறிகுறிகளும் தென்படலாம்.

சில நபருக்கு காற்றுக்குடா அழற்சி, அடிக்கடி காதில் தொற்று போன்றவை பின்னோட்ட நோயால் ஏற்படலாம், எனினும் இதன் சரியான காரணங்கள் இதுவரை அறியப்படவில்லை.[4]

சிறார்களில் அறிகுறி

தொகு

கைக்குழந்தைகள், சிறார்கள் தமது உணர்குறிகளைத் தெரிவிக்க முடியாமையால், அவர்களில் இந்நோயைக் கண்டறிவது சிக்கலாக உள்ளது, எனவே கவனமான அவதானிப்பு மிக முக்கியமானது. அடிக்கடி வாந்தி எடுத்தல், காரணமின்றி துப்புதல், இருமல், மூச்சிரைப்பு போன்றவை அவதானிக்கக்கூடிய அறிகுறிகளாகும். கைக்குழந்தைகளில் ஆற்ற முடியாத அழுகை, உணவு உட்கொள்ள மறுத்தல், உணவுக்காக அழுது பின்னர் உணவு ஊட்டுகையில் உணவை உட்கொள்ளாமல் மீண்டும் அழுதல், தேவையான உடல் எடை அடையாது இருத்தல், வாய்த் துர்நாற்றம், அடிக்கடி ஏப்பம் விடுதல் போன்றன பொதுவாக அவதானிக்கக்கூடிய அறிகுறிகள் ஆகும்.

பரட்டின் உணவுக்குழாய்

தொகு

இரையக உண்குழலியப் பின்னோட்ட நோய், பரட்டின் உணவுக்குழாயை ஏற்படுத்தவல்லது. உணவுக் குழாயை ஆக்கியுள்ள மேலணி இழையங்கள் இயல்புக்கு மீறிய உருமாற்றம் அடைதல் இந்நோயில் ஏற்படுகின்றது. இது ஒரு புற்றுநோய்க்கு முன்னிலையாக உள்ள நோயாகும். நெடுங்கால நெஞ்செரிவு உள்ளோரில் இந்நோய் உண்டாகியுள்ளது எனச் சந்தேகிக்கலாம். எனவே நெஞ்செரிவு உள்ளோரின் உணவுக்குழாய் உணவுக்குழாய்-இரைப்பை-முன்சிறுகுடல் அகநோக்கி மூலம் அவதானிக்கப்படுவது மிக முக்கியமாகும்.

நோய் அறுதியிடல்

தொகு
 
அகநோக்கி மூலம் எடுக்கப்பட்ட உணவுக்குழாயின் படம், இங்கே சிவப்பாகத் தெரிவது உருமாற்றத்துக்குட்பட்ட மேலணி இழையங்கள் உள்ள பகுதி, இரைப்பையும் உணவுக்குழாயும் சந்திக்கும் பகுதியிலும் அதற்குச் சற்றுமேலும் காணப்படுகின்றது. இந்த நிலை பரட்டின் உணவுக்குழாய் ஆகும், நாட்பட்ட இரையக உண்குழலியப் பின்னோட்ட நோயால் உண்டாகின்றது.

நோயாளியின் தரவுகள் மிக முக்கியமானது, மேற்கொண்டு உணவுக்குழாய்-இரைப்பை-முன்சிறுகுடல் அகநோக்கி மூலம் உணவுக்குழாய் அவதானிக்கப்படுகின்றது. உணவுக்குழாயின் அமிலத்தன்மையை (pH) அளவிடும் முறை இன்றைய மருத்துவத்தில் இந்நோய்க்கான சிறந்த அறுதியிடல் முறை என நம்பப்படுகின்றது, இதைத் தவிர பேரியம் விழுங்கற்பின் எக்ஸ்-கதிர் அவதானிப்பும் அறுதியிடலில் ஒன்றாகும்.

சாதரணமாக உணவுக்குழாயில் அமிலத்தன்மை இருப்பது இல்லை, இரைப்பையின் உள்ளடக்கங்கள் மேல்நோக்கித் தள்ளப்படும்போது இரைப்பைச் சாற்றில் உள்ள ஐதரோக்குளோரிக் அமிலமும் உணவுக்குழாயுள் புகுவதனால் அங்கே அமில ஊடகம் உருவாகுகின்றது, எனவே உணவுக்குழாயின் அமிலத்தன்மையை (pH) அளவிடுதல் மூலம் இந்நோய் அறுதியிடப்படுகின்றது, மேலும் இம்முறை மூலம் சிகிச்சையின் விளைவுகள் சாதகமானதா என்பதும் அறியப்படுகின்றது. இந்நோய் உள்ள ஒரு நபருக்கு புரோட்டான் ஏற்றித் தடுப்பிகள் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு, நோயின் அறிகுறிகள் குறைந்தால் நோய் உள்ளதென்பதை அறுதியிடலாம்.

பொதுவாக, சிகிச்சையின் விளைவுகள் பயனளிக்காது போகும் பட்சத்தில் அல்லது உணவு விழுங்குதல் கடினம், இரத்தச்சோகை, மலத்தில் குருதி, மூச்சிரைத்தல், உடல் எடை குறைதல், குரல் மாறுதல் போன்ற வேறு புதிய அறிகுறிகள் தென்படும் சந்தர்ப்பங்களில் உணவுக்குழாய்-இரைப்பை-முன்சிறுகுடல் அகநோக்கி மூலம் உணவுக்குழாய் நோக்கப்படுகின்றது. இவ்வாறு நோக்கப்படும் சமயத்தில் உணவுக்குழாய் அழற்சியுற்றுள்ளதா என்பது கவனமாக அவதானிக்கப்படுகின்றது, வழமைக்கு மாறாகக் காட்சியளிக்கும் உணவுக்குழாயில் இருந்து நுணித்தாய்வுக்காக மிகச்சிறிய துண்டு எடுக்கப்படுகின்றது, இதன்மூலம் குறிப்பிட்ட நபருக்கு இழைய மாறுதல் ஏற்பட்டுள்ளதா என்பது அறியப்படும். உயிரகச்செதுக்கு மூலம் பரட்டின் உணவுக்குழாய், புற்றுநோய் என்பன அறியப்படுகின்றன.

சிகிச்சை

தொகு

சிகிச்சை வழங்குவதை மூன்று விதமாக வகுக்கலாம்: வாழ்வு முறையை மாற்றுதல், மருந்துகள், அறுவைச் சிகிச்சை

வாழ்க்கை முறை

தொகு

உணவு, பழக்கவழக்கங்கள் மாற்றப்படல் தேவையானது. நோய் அறுதியிடப்பட்டவர்கள் சில எச்சரிக்கை நடவடிக்கைகளைக் கடைப்பிடிப்பது நோயின் தீவிரம் அதிகமாகாமல் தடுக்கும். அவையாவன:

 • 6 தொடக்கம் 8 அங்குலம் (15 - 20 செ.மீ) வரையிலாவது தலையும் உடம்பின் மேற்பாகமும் உயர இருக்குமாறு தலையணைகளைப் பயன்படுத்தித் துயில் கொள்ளுதல் (தலை மட்டும் உயர்த்திப் படுத்தல் உகந்தது அல்ல);
 • படுக்கப்போக முன்னர் அதிகமாக உணவு உட்கொள்ளலைத் தவிர்த்தல்;
 • உணவு அருந்தியபின்னர் குறைந்தபட்சம் இரண்டு அல்லது மூன்று மணித்தியாலத்தின் பின்னரே படுக்கைக்குச் செல்லுதல்;
 • அமிலத்தன்மையான பழவகைகள் (எலுமிச்சை, தோடை) அல்லது பழச்சாறு, சொக்கலேட், கொழுப்பு உணவு, கார உணவு, காப்பி போன்றவற்றை இயலுமானவரையில் தவிர்த்தல்; உள்ளி, வெங்காயம், தக்காளி போன்றவையும் நோயைத் தீவிரமாக்கலாம்.
 • வயிற்றை இறுக்கும் ஆடைகளை அணிவதைத் தவிர்த்தல்;
 • மன அழுத்தத்தைக் குறைத்தல்;

மருந்து முறை

தொகு
 • புரோட்டான் ஏற்றித் தடுப்பிகள் (Proton pump inhibitors)

- ஒமிப்ராசோல் (omeprazole ), லன்சப்ராசோல் (lansoprazole)

 • இரையக ஹிஸ்டமின் ஏற்பித் தடுப்பிகள் (Gastric H2 receptor blockers)

- ரனிற்றிடின் (ranitidine), பொமிற்றிடின் ( famotidine)

 • அமில எதிரி (antacids)

- ஜெலுசில் (Gelusil)

 • சுக்ரால்பேட் (Sucralfate)
 • இரையக இயக்கி (gastrokinetic): கீழ்க்கள இறுக்கியை வலுவாக்குவதிலும், விரைவில் இரைப்பையில் உள்ள உணவுகளை அகற்றுவதிலும் உதவுகின்றது.

- மக்சலோன் (Maxalon) அல்லது மெட்டோக்ளோப்ராமைட் (metoclopramide)

அறுவைச்சிகிச்சை

தொகு

பரவலான முறை, நிசெனின் மேல் இரையகமடிப்பறுவைச் சிகிச்சை முறையாகும். மேல் இரையகத்தின் பகுதிகள் உணவுக்குழாயின் கீழ் இறுக்கிப் பகுதியின் மேலே மடிக்கப்பட்டுத் தைக்கப்படுகின்றது, இதன் மூலம் கீழ் உணவுக்குழாய் இறுக்கமடைந்து உணவு மற்றும் அமிலம் மேல் நோக்கித் தள்ளப்படுவதைத் தடுக்கின்றது. இம்முறை பெரும்பாலும் உதரநோக்கு அறுவைச்சிகிச்சை மூலம் மேற்கொள்ளப்படுகின்றது.

நோய்த் தடுப்பு

தொகு

இந்நோய் வாழும் முறை மூலம் எளிதில் தடுக்கப்படக்கூடியது. மேலே, சிகிச்சையில் அறிவுறுத்தப்பட்ட வாழ்க்கை முறைகள் தடுப்பு முறைக்கும் பொருந்தக்கூடியது.

 • இடது பக்கம் தூங்குவது அல்லது தலையும் உடம்பின் மேற்பாகமும் உயர இருக்குமாறு தலையணைகளைப் பயன்படுத்தித் துயில் கொள்ளுதல்
 • சிறிய அளவு உணவு அருந்துதல், குறிப்பாக படுக்கைக்கு முன்னர் அதிகமாக உணவு உட்கொள்ளலைத் தவிர்த்தல்.
 • எடையைக் குறைத்தல்
 • வயிற்றை இறுக்கும் ஆடைகளை அணிவதைத் தவிர்த்தல்,
 • மிகையாக அமிலத்தன்மையான உணவுவகைகள் உட்கொள்ளல் தவிர்த்தல்.
 • காப்பி, புகைப்பிடித்தல் மதுபானம் போன்றவற்றைத் தவிர்த்தல்.

நோயின் தீவிளைவு

தொகு

சிகிச்சை வழங்கப்படாத இரையக உண்குழலியப் பின்னோட்ட நோய் தீய விளைவை உண்டாக்கும்; வேறு நோய்களையும் உடலுக்கு ஒவ்வாத சந்தர்ப்பங்களையும் உண்டாக்கும். இந்நோயால் ஏற்படக்கூடிய விளைவுகள்:

 • ஈழை நோய்
 • மூச்சுக் குழலிய இறுக்கம்
 • நெடுங்கால இருமல், குரல் கரகரப்பு
 • பல் கோளாறுகள்
 • பரட்டின் உணவுக்குழாய்
 • உணவுக்குழாய்ப் புற்றுநோய்
 • உணவுக்குழாயில் சுருக்கம்

சிகிச்சைக்கும் வாழ்க்கை முறை மாற்றத்துக்கும் இந்நோய் கட்டுப்படாவிடின் உடனடியாக மருத்துவரை அணுகல் அத்தியாவசியமானது. பின்வரும் சந்தர்ப்பங்கள் ஏற்படினும் மருத்துவ ஆலோசனை தேவை.

 • குருதிப்போக்கு
 • கடுமையான இருமல், மூச்சுவிடல் சிரமம்
 • அடிக்கடி வாந்தி எடுத்தல்
 • குரல் கரகரப்பு
 • பசியின்மை
 • விழுங்கற்கடுமை, விழுங்கல் வலி
 • உடல் எடை குறைதல்

இவற்றையும் பார்க்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
 1. DeVault KR, Castell DO (1999). "Updated guidelines for the diagnosis and treatment of gastroesophageal reflux disease. The Practice Parameters Committee of the American College of Gastroenterology". Am J Gastroenterol 94 (6): 1434–42. doi:10.1111/j.1572-0241.1999.1123_a.x. பப்மெட்:10364004. https://archive.org/details/sim_american-journal-of-gastroenterology_1999-06_94_6/page/1434. 
 2. Gastroesophageal reflux disease; reviewed: December 10, 2010.; http://www.ncbi.nlm.nih.gov/pubmedhealth/PMH0001311/
 3. "The saliva PH test and cancer". Healingdaily.com. Archived from the original on 2018-10-04. பார்க்கப்பட்ட நாள் 2009-08-19.
 4. 4.0 4.1 4.2 Kahrilas, PJ (2008). "Clinical practice. Gastroesophageal reflux disease.". New England Journal of Medicine. 359 (16): 1700–7. doi:10.1056/NEJMcp0804684. பப்மெட்:18923172. 
 5. Wang KK, Sampliner RE (March 2008). "Updated guidelines 2008 for the diagnosis, surveillance and therapy of Barrett's esophagus". Am J Gastroenterol 103 (3): 788–97. doi:10.1111/j.1572-0241.2008.01835.x. பப்மெட்:18341497. http://www.acg.gi.org/physicians/guidelines/BarrettsEsophagus08.pdf. 
 6. "Consumer Health Information". Healthlink.mcw.edu. Archived from the original on 2009-01-22. பார்க்கப்பட்ட நாள் 2009-08-19.