இளசை சுந்தரம்
இளசை சுந்தரம் (Ilasai Sundaram) ஒரு சிறந்த சொற்பொழிவாளர்[1], எழுத்தாளர்[2], வானொலி நிகழ்ச்சித் தயாரிப்பாளர், நகைச்சுவையாளர் ஆவார்[3]. இவர் 1970 முதல் 1976 வரை எட்டயபுரம் ராஜா மேனிலைப்பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி பின்னர் அகில இந்திய வானொலியில் பணியாற்றினார். இறுதியாக மதுரை வானொலி மற்றும் பொதிகை தொலைக்காட்சி இயக்குநராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.[4]
வானொலி நிகழ்ச்சிப் பங்களிப்புகள்
தொகு1976ல் சென்னை அகில இந்திய வானொலி நிலையத்தில் கல்வி ஒலிபரப்பில் எழுத்தாளராகப் பணியேற்றார். இவர் ஐம்பதுக்கும் மேற்பட்ட வானொலி நாடகங்களை எழுதியுள்ளார். நூற்றுக்கும் மேற்பட்ட உரைச்சித்திரங்களை அளித்துள்ளார். 1982 ஆம் ஆண்டு திருச்சி அகில இந்திய வானொலி நிலையத்தில் குழந்தைகளுக்கான நிகழ்ச்சியில் வானொலி அண்ணாவாகச் செயல்பட்டார். மேலும்,
- வானொலியில் தங்கக் கப்பல் என்ற குழந்தைகளுக்கான தொடர் நாடகத்தை எழுதி, தயாரித்து வழங்கினார்.
- இந்திய விடுதலைப் போராட்ட நிகழ்வுகளை விடுதலையின் கதை எனும் தலைப்பில் குழந்தைகளுக்குக் கதை போல தொகுத்து வழங்கினார்.[5]
- திருச்சி வானொலியின் இலக்கியப்பகுதியின் பொறுப்பாளராகச் செயல்பட்டு பல புதுமையான நிகழ்ச்சிகளை நடத்தினார், புகழேணி என்ற நிகழ்ச்சியின் மூலம் தமிழகத்தின் தலை சிறந்த அறிஞர்கள் அனைவரையும் நேர்காணல் கண்டு தொடர்ச்சியாக வானொலியில் வழங்கினார்.
- பாவேந்தர் பாரதிதாசன் நூற்றாண்டு விழாவின் போது பாரதிதாசன் பரம்பரை என்ற வகையில் பல கவிஞர்களைச் சந்தித்து வானொலியில் ஒலிபரப்பினார்.
- பாவேந்தர் பாரதிதாசனின் பாண்டியன் பரிசு நாடகத்தை வானொலிக்காக உருவாக்கினார். இது சிங்கப்பூர் வானொலியிலும் சிறப்பாக ஒலிபரப்பப்பட்டது.
- திருச்சி வானொலியில் ஏறக்குறைய ஆறு ஆண்டுகள் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் பிற்பகல் 12.15 முதல் 12.30 மணி வரை நகைச்சுவை அரங்கம் என்ற சிறப்பு நிகழ்ச்சியை நடத்தினார்.
- தென்கச்சி சுவாமிநாதன் ஓய்வு பெற்ற பின்பு இன்று ஒரு தகவல் நிகழ்ச்சியை தொடர்ந்து தந்தார். இந்த நிகழ்ச்சியின் மூலம் ஏறத்தாழ இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட தகவல்களை மக்களுக்கு வழங்கியுள்ளார்.
எழுத்துப் பங்களிப்பும் பரிசுகளும்
தொகுபடைப்புகள்
தொகு- இவர் பல தமிழ் வார, மாத இதழ்களில் 250க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 175 இலக்கியக் கட்டுரைகள் 150 கவிதைகள்[6] மற்றும் 50 நாடகங்கள் எழுதிப் பிரசுரமாகியுள்ளன.
பரிசுகள்
தொகு- 1968 ஆம் ஆண்டு தாமரை இலக்கிய இதழ் கல்லூரி மாணவர்களுக்காக தமிழக அளவில் நடத்திய சிறுகதைப் போட்டியில் வெள்ளைச்சாமி மனிதனாகிய போது என்ற சிறுகதைக்கு இரண்டாம் பரிசு.
- தினமணிக் கதிர் 1981ம் ஆண்டு நடத்திய சிறுகதைப் போட்டியில் பலியாடுகள் என்ற சிறுகதைக்கு இரண்டாம் பரிசு.
- ரத்னபாலா என்ற சிறுவர் இதழ் நடத்திய சிறுகதைப் போட்டியில் புதியதளிர்கள் என்ற சிறுகதைக்கு இரண்டாம் பரிசு.
- இலக்கிய வீதி நடத்திய சிறுகதைப் போட்டியில் ஊட்டு என்ற சிறுகதைக்கு இரண்டாம் பரிசு.
- ராணி வார இதழ் நடத்திய ஆதித்தனார் சிறுகதைப் போட்டியில் எங்கள் தாய் என்ற சிறுகதைக்கு இரண்டாம் பரிசு.
நூல் பங்களிப்புகள்
தொகு- சாதகப் பறவைகள் சிறுகதைத் தொகுப்பு (1986)
- இந்நூல், மதுரைக் காமராசர் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு மாணவர்களுக்கு, மூன்றாண்டுகளுக்கு பாடநூலாக தேர்வு செய்யப்பட்டது.
- திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பி.லிட் மாணவர்களுக்கு பாடநூலாக தேர்வு செய்யப்பட்டது.
- திருச்சி தூய வளனார் கல்லூரியில் பட்டப்படிப்பு மாணவர்களுக்கு பாடநூலாகியது.
- திருச்சி எஸ். ஆர். மகளிர் கல்லூரியில் பாடநூலாகத் தேர்வு செய்யப்பட்டது.
- 1998ல் கேரளப் பல்கலைக்கழகத்தின் தமிழ் மாணவர்களுக்கு பாடநூலாயிற்று.
- இத்தொகுதியில் உள்ள சில சிறுகதைகள் மலையாளத்தில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.
- நகைச்சுவை நந்தவனம் (1995)
- வாங்க சிரிச்சுட்டுப் போகலாம் (2003)
- கர்மவீரரின் காலடிச் சுவடுகள் (2003)
- இன்று ஒரு தகவல் பாகம் -1 (2005)
- இன்று ஒரு தகவல் பாகம் -2 (2006)
- இன்று ஒரு தகவல் பாகம் -3 (2008)
மேற்கோள்கள்
தொகு- ↑ "மனிதனின் இதயத்தில் அன்பு சுரப்பது எப்படி? ஆராய்ச்சி குறித்து இளசை சுந்தரம் பேச்சு". Dinamalar. 2016-01-11. பார்க்கப்பட்ட நாள் 2021-04-06.
- ↑ "புத்தகக் குறிப்புகள்: கக்கனின் வேட்டி அழுக்கு... ஆனால் கை சுத்தம்!". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2021-04-06.
- ↑ Shrikumar, A. (2016-10-13). "The mirthful mastermind". The Hindu (in Indian English). பார்க்கப்பட்ட நாள் 2021-04-06.
- ↑ "Remembering a revolutionary", The Hindu (in Indian English), 2012-03-15, பன்னாட்டுத் தர தொடர் எண் 0971-751X, பார்க்கப்பட்ட நாள் 2024-05-18
- ↑ "இளசை சுந்தரம்: இனிமையும் இலகுவுமாக இளம் தலைமுறையினரை வழிநடத்தியவர்". இந்து, காமதேனு. https://kamadenu.hindutamil.in/life-style/a-tribute-on-ilasai-sundaram. பார்த்த நாள்: 18 May 2024.
- ↑ "Welcome To TamilAuthors.com". www.tamilauthors.com. பார்க்கப்பட்ட நாள் 2021-04-06.
வெளி இணைப்புகள்
தொகு- இளசை சுந்தரம் இணையதளம் பரணிடப்பட்டது 2011-01-30 at the வந்தவழி இயந்திரம்