உலோங்காபர் மனிதக்குரங்கு சரணாலயம்
உலோங்காபர் மனிதக்குரங்கு சரணாலயம் (Hoollongapar Gibbon Sanctuary)முன்னர் மனிதக்குரங்கு வனவிலங்கு சரணாலயம் அல்லது உலோங்காபர் ஒதுக்கப்பட்ட காடு என்று அழைக்கப்பட்டது. இது இந்தியாவின் அசாம் மாநிலத்தில் அமைந்துள்ள பசுமையான காடாகும். இது தனித்த நிலையிலான பாதுகாக்கப்பட்ட பகுதியாகக் கருதப்படுகிறது. இந்த சரணாலயமானது 1997 ஆம் ஆண்டில் அதிகாரப்பூர்வமாக அமைக்கப்பட்டு, மறுபெயர் சூட்டப்பட்டது. 1881 ஆம் ஆண்டில் ஆரம்பத்தில் ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த அதன் காடுகள் பின்னர் பட்காய் மலைத்தொடரின் அடிவாரத்தில் விரிவாக்கம் பெற ஆரம்பித்தன.
உலோங்காபர் மனிதக்குரங்கு சரணாலயம்[1] | |
---|---|
ஐயுசிஎன் வகை IV (வாழ்விடம்/இனங்களின் மேலாண்மைப் பகுதி) | |
மேற்கத்திய ஹுலக் கிப்பான் (ஹுலக் ஹுலக்) | |
அமைவிடம் | ஜோர்ஹாட் மாவட்டம், அசாம், இந்தியா |
அருகாமை நகரம் | ஜோர்ஹாட் |
ஆள்கூறுகள் | 26°43′00″N 94°23′00″E / 26.716667°N 94.383333°E |
பரப்பளவு | 2,098.62 ha (8.1 sq mi) |
நிறுவப்பட்டது | 1997 |
அப்போது முதல், காடு துண்டு துண்டாகப் பிரிந்தது. அது தேயிலைத் தோட்டங்கள் மற்றும் சிறிய கிராமங்களால் சூழப்பட்டுள்ளது. 1900களின் முற்பகுதியில், நன்கு சேமிக்கப்பட்ட காட்டுப் பகுதிகளை உருவாக்க செயற்கை மீளுருவாக்கம் என்ற முறையானது பயன்படுத்தப்பட்டது. இதன் விளைவாக வளமான பல்லுயிர் பெருக்கம் ஏற்பட்டது. உலோங்காபர் மனிதக்குரங்கு சரணாலயத்தில் இந்தியாவைச் சேர்ந்த ஒரே மனிதக்குரங்கு இனமான - மனிதக்குரங்கு, மற்றும் வடகிழக்கு இந்தியாவின் ஒரே இரவு நேர முதன்மைப்பாலூட்டி இனமான - வங்காள குரங்கு ஆகியவை உள்ளன.
இந்தக் காட்டின் மேல் பகுதியில் ஹூலோங் மரங்கள் (டிப்டிரோகார்ப்பஸ் மாக்ரோகார்பஸ்) அதிகமாகக் காணப்படுகின்றன. நடுப் பகுதியில் நஹார் மரங்கள் (மேசூவா பெர்ரியா) அதிகம் உள்ளன. கீழ்ப்பகுதியில் பசுமையான புதர்களும் மூலிகைகளும் காணப்படுகின்றன. சட்ட விரோதமாக மரம் வெட்டுதல், மனிதக் குடியிருப்பு ஆக்கிரமிப்புகள் மற்றும் வாழ்விட சிதறல் என்ற நிலையில் அச்சுறுத்தலை எதிர்நோக்கி உள்ளது.
வரலாறு
தொகுஉலோங்காபர் மனிதக்குரங்கு சரணாலயம் இந்தியாவின் அசாமில் உள்ள சிவில் மாவட்டமான ஜோர்ஹாட்டில் உள்ள ஹோலோங்காபர் ஒதுக்கப்பட்ட காட்டின் பகுதியாக இருந்த காட்டுப்பகுதியிலிருந்து உருவானது. ஆகஸ்ட் 27, 1881 ஆம் நாளன்று [2] இது ஒதுக்கப்பட்ட காடு என்ற நிலையினைப் பெற்றது. அங்கு உலோங் அல்லது டிப்டிரோகார்ப்பஸ் மாக்ரோகார்பஸ் வகையைச் சேர்ந்த மரங்கள் அதிகம் இருந்ததால் அதற்கு அவ்வாறு பெயர் சூட்டப்பட்டது. அந்த நேரத்தில், அது பட்காய் மலைத்தொடரின் அடிவார காடுகளின் பகுதியில் அது முக்கியமான ஒருங்கிணைந்த பகுதியாக கருதப்பட்டது.[2]
தற்போது இந்த சரணாலயத்தைச் சுற்றிலும் தேயிலைத் தோட்டங்களும் ஒரு சில சிறிய கிராமங்களும் சூழ்ந்திருந்தாலும், அது நாகாலாந்து மாநிலத்தில் காணப்படுகின்ற ஒரு பெரிய காட்டுப் பகுதியை இணைக்கும் நிலையில் அமைந்துள்ளது. ஆரம்பத்தில் அதன் பாதுகாக்கப்பட்ட பகுதியின் அளவு 0.80 சதுர மைல் ஆக இருந்தது. பின்னர் மேலும் பல பிரிவுகள் ஒதுக்கப்பட்ட பகுதியிலிருந்து நீக்கப்பட்ட நிலையில் 1896 ஆண்டில் அதன் பகுதி சுருங்க ஆரம்பித்தது.[2] 1880 மற்றும் 1920 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் தேயிலைத் தோட்டங்கள் அங்கு உருவாகத் தொடங்கின. 1960 களில் மஜூலி மற்றும் அருகிலுள்ள பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கு, வெள்ளத்தால் தங்கள் நிலங்களை இழந்திருந்த காரணத்தால், புனர்வாழ்வு அளிப்பதற்காக அங்கு கிராமங்கள் உருவாக்கப்பட்டன. தொடர்ந்து காட்டுப்பகுதி துண்டு துண்டாக சிதற ஆரம்பித்ததும் அடிவாரத்தில் இருந்து தனிமைப்படுத்தப்பட்டது.[2]
வரலாற்று ரீதியாக, பசுமையான மரங்களான போஜல் மூங்கில் (சூடோடாக்டைலம்) அங்கு பரவலாக காணப்பட்டது. நல்ல நிலையிலான காட்டுப்பகுதியை மேம்படுத்தும் நோக்கில் அங்கு 1924 ஆம் ஆண்டில் செயற்கை மீளுருவாக்கம் அறிமுகப்படுத்தப்பட்டது. இவ்வாறு அமைக்கப்பட்ட தோட்டங்கள் இயற்கை தாவரங்களுடன் இணைந்து தாவரங்கள் மற்றும் விலங்கினங்களைக் (பல்லுயிர்) கொண்ட ஒரு காட்டை உருவாக்கின. 1900 களில், காட்டுப்பகுதிகள் இவற்றுடன் சேர்க்கப்பட்டன. பின்னர் அதன் மொத்த பரப்பளவு 8.1 ச.மைல் ஆனது. இருப்பினும், 1997 ஆம் ஆண்டில் [2] சரணாலயம் ஐந்து தனித்தனி பிரிவுகளாகப் பிரிந்திருந்தது. 30 ஜூலை 1997 ஆம் நாளன்று அறிவிப்பு எண். FRS 37/97/31 இன்படி ஜோர்ஹாத் குடியியல் மாவட்டத்தில் கீழ் இந்த சரணாலயம் அமைக்கப்பட்டது. அஸ்ஸாமில் குல்லாக் மனிதக்குரங்குகளைக் அதிகமாகக் கொண்டிருப்பதாலும், அவ்வகையில் இது இந்தியாவில் உள்ள ஒரே சரணாலயமாக இது கருதப்படுவதாலும் அதற்கு "மனிதக்குரங்கு வனவிலங்கு சரணாலயம்" என்று பெயர் சூட்டப்பட்டது.[2] மே 25, 2004 ஆம் நாளன்று அசாம் அரசு அறிவிப்பு எண் FRP 37/97/20 மூலம் அதற்கு உலோங்காபர் மனிதக்குரங்கு சரணாலயம் என்று மறுபெயர் சூட்டியது.[1]
சுற்றியுள்ள பகுதி
தொகுஇந்த சரணாலயம் அதிகாரப்பூர்வமாக டிஸோய் பள்ளத்தாக்கு ஒதுக்கப்பட்ட காட்டுப்பகுதி, டிசோய் ஒதுக்கப்பட்ட வனப்பகுதி மற்றும் திரு ஹில் ஒதுக்கப்பட்ட காட்டுப்பகுதி வரை நீண்டுள்ளது. அவை இந்திய யானைகள் (எலிபாஸ் மாக்சிமஸ் இண்டிகஸ்) மற்றும் பிற விலங்குகளுக்கு பரவலாக உலவுகின்ற பகுதிகளாகக் காணப்படுகின்றன.[2] டிசோய், கோத்தல்குரி மற்றும் உலோங்குரி ஆகிய தோட்டங்களுக்குச் சொந்தமான மூன்று விரிவான தேயிலைத் தோட்டங்கள் உலோங்காபர் கிப்பன் சரணாலயம் மற்றும் நாகாலாந்தில் உள்ள அருகிலுள்ள காடுகள், டிசோய் பள்ளத்தாக்கு ஒதுக்கப்பட்ட காட்டுப்பகுதிகளுக்கு இடையே பரவியுள்ளன.[2]
தேயிலைத் தோட்டங்களில் கட்டோனிபரி, முர்முராய், செனிஜன், கோலியபானி, மெலெங், ககோஜன், திஹவெல்லியோகுரி, திஹிங்கபார், கோத்தல்குரி, டிஸோய் மற்றும் ஹூலோங்குரி ஆகிய பகுதிகள் அடங்கும். அண்டை கிராமங்களில் மதுபூர், இலக்கிபூர், இராம்பூர், பெசுவல் ஏ (மேற்கு பகுதி), பெசுவல் பி (கிழக்கு பகுதி), கட்டோனிபரி, புகுரை, வெல்லியோகுரி, அபோலமுக் மற்றும் கலியகான் ஆகியவை அடங்கும்.[2]
வாழ்விடம்
தொகுஉலோங்காபர் மனிதக்குரங்கு சரணாலயம் சில ஈரத்தன்மை கொண்ட பசுமையான காடுகளுடன் இணைந்து "அசாம் சமவெளி வண்டல் அரை பசுமையான காடுகள்" என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது.[2] இங்கு ஆண்டுக்கு சராசரியாக 249 செமீ (98 அங்குலம்) அளவு மழைப்பொழிவு உள்ளது. 100 முதல் 120 மீ (330 முதல் 390 அடி) உயரத்தில் அமைந்துள்ள இப்பகுதியின் நிலப்பரப்பு தென்கிழக்கு முதல் வடமேற்கு நோக்கி தாழ்வான நிலையில் செல்கிறது. போக்டோய் நதியின் காரணமாக சரணாலயத்தின் எல்லையில் அதிகமாக நீர் காணப்படுகிறது. அதனால் அங்கு பகுதி நீர்த்தாவரங்கள் அதிகம் காணப்படுகின்றன. அதன் காரணமாக அங்கு மூன்று தனித்துவமான வாழ்விட மண்டலங்கள் அல்லது மைக்ரோ சுற்றுச்சூழல் அமைப்புகள் அந்த பூங்காவில் அமைந்துள்ளன. அவை மேல்-சாய்வு மண்டலம், கீழ்-சாய்வு மண்டலம் மற்றும் வெள்ளப்பகுதி மண்டலம் என்பனவாகும்.[1]
விலங்கினங்கள்
தொகுஇந்த சரணாலயம் மிகவும் வளமான பல்லுயிர் தன்மையைக் கொண்டுள்ளது. மேலும் இந்தியாவில் உள்ள ஒரே மனிதக்குரங்குகளான குல்லாக் மனிதக்குரங்குகளைக் கொண்டுள்ளன.[2][1] மற்றும் வடகிழக்கு இந்திய மாநிலங்களில் காணப்படும் இந்தியாவின் ஒரே இரவு நேர முதன்மைப்பாலூட்டி இனமான வங்காள சுலோலோரிசும் உள்ளன.[3]
மற்ற பாலுட்டி இனங்களில் அடிக்கட்டை-வால் குரங்கு (மகாகா ஆர்க்டாய்ட்ஸ்), வடப்புற பன்றி வால் குரங்கு (மகாகா லியோனினா), கிழக்கு அஸ்ஸாமி குரங்கு (மகாகா அஸ்ஸாமென்சிஸ் அஸ்ஸாமென்சிஸ்), ரீசஸ் குரங்கு (மகாகா முலாட்டா), மற்றும் நீண்ட வால் உடைய குரங்கு (ட்ராசைபிதேசஸ் பிலீடஸ்) போன்றவை அடங்கும். இந்த சரணாலயத்தில் இந்திய யானைகள், புலிகள் (பாந்தெரா டைக்ரிஸ் ), சிறுத்தைகள் (பாந்தெரா பர்தஸ்) , காட்டுப்பூனைகள் (ஃபெலிஸ் சாஸ்), காட்டுப்பன்றி (சுஸ் ஸ்க்ரோபா), மூன்று வகையான மர நாய், நான்கு வகையான அணில் மற்றும் பல வகையான பாலூட்டிகள் உள்ளன. குறைந்தது 219 வகையான பறவை இனங்கள் மற்றும் பல வகையான பாம்புகள் பூங்காவில் வாழ்கின்றன.[1]
தாவர வகைகள்
தொகுஉலோங்காபர் மனிதக்குரங்கு சரணாலயத்தில் உள்ள பெரும்பாலான தாவரங்கள் பசுமைத் தன்மை கொண்டவையாகும். அவை பல அடுக்குகளில் அமைந்துள்ளன.[2] மேல் பகுதியில் பெரும்பாலும் 12 முதல் 30 மீ (39 முதல 98 அடி) உயரம் வரை வளர்ந்து நேராக தண்டுகளைக் கொண்ட டிப்டெரோகார்பஸ் மேக்ரோகார்பஸ் உள்ளன. மேலும் இங்கு சாம் (அட்ரோகார்ப்ஸ் சாப்லாஷா), அமாரி (அமோரா வாலிசி), சோபாஸ் (எம்செலியாய் எஸ்பிபி.), பெலு (டெட்ராமல்ஸ் முடிஃப்ளோரா), உடால் (ஸ்டெர்குலியா வில்லோசா ) மற்றும் ஹிங்கோரி (காஸ்டனோப்சிஸ் எஸ்பிபி.) போன்றவையும் காணப்படுகின்றன.[2]
நடுப்பகுதியில்நஹார் (மெசுவா ஃபெரியா) அதிகமாகக் காணப்படுகிறது. அதன் தலைப்பகுதியில் காணப்படுகின்ற கிரீட அமைப்பு காரணமாக பரந்த பகுதிக்கு அது நிழலைத் தருகிறது. நடுத்தரப்பகுதியில் மேலும் பாண்டோர்டிமா (டைசாக்லியம் ப்ரோசெரம்), துனா (சொனாரியம் ரீசினிபெரம்), பூமோரா (தென்மினலியா பெலிரிகா), புல் கோமாரி (ஜ்மேலினா எஸ்பி.) போன்போக்ரி (ப்டெரோஸ்பெர்மம் லாசியாபோலியம்), மோர்கல் (வாடிகா லான்சியாபோலியா), செல்லெங் (சாப்பியம் பாக்காடம்), சச்சி (அக்வாலாரி அகோலாச்சா), மற்றும் ஓடேன்கா (டில்லோனியா இண்டிகா) போன்ற பிற இன மரங்கள் காணப்படுகின்றன.[2] பலவிதமான பசுமையான புதர்கள் மற்றும் மூலிகைகள் கீழ்ப்பகுதியில் உள்ளன. இவற்றில் மிகவும் பொதுவானதாக டோலு மூங்கில் (டீனோஸ்ஸ்டாச்சியம் டல்லூவா), போஜல் மூங்கில் (சூடோஸ்டாச்சியம் பாலிமார்பம்), ஜெங்கு (கலாமஸ் எரெக்டஸ்), ஜடி பெட் (கலாமஸ் எஸ்பிபி), ஹெளக்கா பெட் (கலாமஸ் எஸ்பிபி.), டோரா (அல்பினியா அல்லுகாஸ்), கௌபாட் (ரைரைனியம் இம்பிரிகாட்டம்) மற்றும் சோரட் (லபோர்டட் க்ரீமுலாட்டாடா) ஆகியவை காணப்படுகின்றன.[2]
பாதுகாப்பு
தொகுஏராளமான தேயிலைத் தோட்டங்கள் இங்கு பூங்கா தனித்த நிலையில் அமைந்துள்ளது. அதன் காரணமாக வியியல் நிலையில் ஒரு இடைவெளி காணப்படுகிறது.[2] தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் வளர்ந்து வரும் மக்கள்தொகை வாழ்விடத்தை அச்சுறுத்துகிறது, ஏனெனில் அவர்கள் விறகு, பாரம்பரிய மருத்துவம் மற்றும் உணவு போன்றவற்றிற்காக காட்டையே நம்பி வாழ்கின்றனர்.[1] கால்நடைகளுக்கு தீவனமாக காடுகளில் இருந்து அதிக அளவிலான இலை தழைகள் மற்றும் புல் போன்றவை சேகரிக்கப்படுகின்றன. மழைக்காலங்களில், தேயிலைத் தோட்டங்களிலிருந்து வரும் களைக்கொல்லிகள் மற்றும் பூச்சிக்கொல்லிகள் சரணாலயத்தில் ஒட்டுமொத்தமாக கலந்து பரவிவிடுகின்றன.
தேயிலைத் தோட்டங்கள் யானைகளால் நாகாலாந்திற்கு இடம்பெயரும் பாதையாகப் பயன்படுத்தப்படுகின்றன, இதனால் அவை அடிக்கடி வேட்டையாடப்படுகின்றன. ரயில்வே தண்டவாளங்களும் பூங்காவை பிரிக்கின்றன, ஒரு சிறிய குழு மனிதக்குரங்குகள் தனித்தனியாகப் பிரிந்துவிடுகின்றன. சட்டவிரோத உள்நுழைவு மற்றும் தேயிலைத் தோட்டங்களால் பணிபுரியும் உள்ளூர் மக்கள் ஆக்கிரமிப்பு ஆகியவை வாழ்விடத்தின் தரத்தை குறைத்துவிட்டன.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 Ghosh Kumud, Birds of Hoollongapar Gibbon Sanctuary, Newsletter for Birdwatchers, 2007, volume 47, issue 3, pages 35–40
- ↑ 2.00 2.01 2.02 2.03 2.04 2.05 2.06 2.07 2.08 2.09 2.10 2.11 2.12 2.13 2.14 2.15 2.16 Envis: Hazarika Reneema, Gupta A.K., Wildlife and Protected Areas Resource Sharing by Hoolock Gibbon (Bunopithecus hoolock) with two primate species in Gibbon Wildlife Sanctuary, Assam, India, vol 8, 2005
- ↑ Nandini, Rajamani; Kakati, Kashmira; Ved, Nimesh (2009). "Occurrence records of the Bengal Slow Loris (Nycticebus bengalensis) in northeastern India" (PDF). Asian Primates Journal 1 (2): 12–18 இம் மூலத்தில் இருந்து 2012-03-03 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120303214230/http://www.primate-sg.org/PDF/APJ1.2.LorisIndia.pdf.