ஊர் (மெசொப்பொத்தேமியா)

இக் கட்டுரையில், ஊர் (சுமேரியம்: Urim;[1] சுமேரிய ஆப்பெழுத்து: 𒋀𒀕𒆠 URIM2KI or 𒋀𒀊𒆠 URIM5KI;[2] அக்காடியம்: Uru;[3] அரபு மொழி: أور‎; எபிரேயம்: אור‎) என்பது, பண்டைய மெசொப்பொத்தேமியாவில் இருந்த முக்கியமான ஒரு நகர அரசு ஆகும். இது, தெற்கு ஈராக்கில் உள்ள "டி கர்" ஆளுனரகத்தில் உள்ள தற்காலத்து தெல் எல்-முக்காயர் என்னும் இடத்தில் அமைந்துள்ளது.[4] ஒரு காலத்தில் ஊர், யூப்பிரட்டீசு ஆற்றுக் கழிமுகத்துக்கு அண்மையில் பாரசீகக் குடாக் கரையில் அமைந்த ஒரு கரையோர நகரமாக இருந்தபோதும், கரை வெளிநோக்கி நகர்ந்த காரணத்தால் நகரம் இப்போது கரையில் இருந்து உள்நோக்கி யூப்பிரட்டீசின் தென்கரையில் உள்ளது. இது ஈராக்கின் நசிரியா என்னும் இடத்தில் இருந்து 16 கிலோமீட்டர்கள் (9.9 மைல்கள்) தொலைவில் அமைந்துள்ளது.[5]

ஊர்
𒋀𒀕𒆠 or 𒋀𒀊𒆠 Urim (சுமேரியம்)
𒋀𒀕𒆠 Uru (அக்காடியம்)
أور ʾūr(அரபி)
ஊர் நகரத்தின் அழிபாட்டின் பின்னணியில் ஊரின் சிகூரட்
ஊர் (மெசொப்பொத்தேமியா) is located in ஈராக்
ஊர் (மெசொப்பொத்தேமியா)
Shown within Iraq
இருப்பிடம்தெல் எல்-முக்காயர், டி கர் ஆளுனரகம், ஈராக்
பகுதிமெசொப்பொத்தேமியா
ஆயத்தொலைகள்30°57′47″N 46°6′11″E / 30.96306°N 46.10306°E / 30.96306; 46.10306
வகைகுடியேற்றம்
வரலாறு
கட்டப்பட்டதுகிமு 3800
பயனற்றுப்போனதுகிமு 500 க்கு முன்
காலம்உபைதுகள் காலம் - இரும்புக் காலம்
கலாச்சாரம்சுமேரியன்
பகுதிக் குறிப்புகள்
அகழாய்வு தேதிகள்1853–1854, 1922–1934
அகழாய்வாளர்யோன் யோர்ச் டெய்லர், சார்லசு லெனார்டு வூலி
யுனெசுக்கோ உலக பாரம்பரியக் களம்
அலுவல்முறைப் பெயர்ஊர் தொல்லியல் நகரம்
பகுதிதெற்கு ஈராக்கின் அவார்
கட்டளை விதிகலப்பு: (iii)(v)(ix)(x)
உசாத்துணை1481-006
பதிவு2016 (40-ஆம் அமர்வு)
பரப்பளவு71 ha (0.27 sq mi)
Buffer zone317 ha (1.22 sq mi)
ஊரின் சிகூரட்டில் அமெரிக்கப் படைகள்

இந்நகரம், உபைதுகள் காலத்தில் கிமு 3800 இலிருந்து உள்ளது. இது கிமு 26 ஆம் நூற்றாண்டில் இருந்து ஒரு நகர அரசாக இருந்தது பற்றிய எழுத்து மூல வரலாற்றுப் பதிவுகள் உள்ளன. பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் முதல் அரசர் மெசன்னெபாதா (Mesannepada) ஆவார். சுமேரிய, அக்காடிய நிலவுக் கடவுளான நன்னா, இந்நகரத்தின் காவல் தெய்வம். நகரத்தின் பெயரும் தொடக்கத்தில் இக்கடவுளின் URIM2KI என்னும் பெயரைத் தழுவியே ஏற்பட்டதாகத் தெரிகிறது.[6]

இந்நகரத்தில் நன்னா கடவுளின் கோயிலைக் கொண்டிருந்த ஊரின் சிகூரட் எனப்படும் கட்டிட அமைப்பு தற்போது பகுதியாகத் திருத்தப்பட்ட நிலையில் காணப்படுகின்றது. 1930 ஆம் ஆண்டில் இந்த அமைப்பை அகழ்வாய்வு மூலம் வெளிக் கொண்டுவந்தனர்.[7] கோயில் கிமு 21 ஆம் நூற்றாண்டில், மூன்றாவது ஊர் வம்ச மன்னர் ஊர்-நம்முவின் ஆட்சிக் காலத்தில் ஊரின் சிகூரட் கோயில் கட்டப்பட்டது. இது பின்னர் கிமு 6 ஆம் நூற்றாண்டில், அசிரியாவில் பிறந்த புது பாபிலோனியப் பேரரசின் இறுதி மன்னரான நபோடினசுவால் திருத்தி அமைக்கப்பட்டது.

ஊர் நகரின் பதாகை

இதன் அழிபாடுகள் வடமேற்கு - தென்கிழக்குத் திசையில் 1,200 மீட்டர்களும் (3,900 அடிகள்), வடகிழக்கு - தென்மேற்குத் திசையில் 800 மீட்டர்களும் (2,600 அடிகள்) கொண்ட நிலப்பகுதியில் அமைந்துள்ளது. அத்துடன், இதன் உயரம் தற்போதைய நில மட்டத்தில் இருந்து 20 மீட்டர்களாக (66 அடிகள்) உள்ளது.[8] தொல்லியல் நகரமான ஊர் நகரம் உலகப் பாரம்பரியக் களங்களில் ஒன்றாக உள்ளது.

தள அமைவு

தொகு

ஊர்-நம்முவினால் திட்டமிடப்பட்டதாகக் கருதப்படும் இந்நகரம் குடியிருப்புப் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருந்ததாகத் தெரிகிறது. இவ்வாறான ஒரு பகுதியில் வணிகர்களும், இன்னொரு பகுதியில் கைப்பணியாளரும் வசித்தனர். அங்கே அகலமானதும் ஒடுக்கமானதுமான சாலைகள் இருந்ததுடன், மக்கள் கூடுவதற்காகத் திறந்த வெளிகளும் காணப்பட்டன. நீர்வள மேலாண்மை, வெள்ளக் கட்டுப்பாடு போன்றவற்றுக்கான அமைப்புக்கள் பலவும் இருந்ததற்கான சான்றுகள் காணப்படுகின்றன.[9]

வீடுகள் மண் கற்களாலும், குழை மண் சாந்தினாலும் கட்டப்பட்டிருந்தன. முக்கியமான கட்டிடங்களில், கற்கட்டுமானம் நிலக்கீல், புல் என்பன கொண்டு வலுவூட்டப்பட்டிருந்தது. பெரும் பகுதியில், அடித்தளப் பகுதிகள் மட்டுமே இன்று எஞ்சியுள்ளன. இறந்தவர்களைத் தனித்தனியாகவே அல்லது ஒன்றாகவோ வீடுகளுக்குக் கீழ் அமைந்த சிறிய அறைகளில் புதைத்தனர். சிலவேளைகளில் உடல்களை அணிகலன்கள், மட்பாண்டங்கள், ஆயுதங்கள் போன்றவற்றுடன் சேர்த்துப் புதைக்கும் பழக்கமும் இருந்துள்ளது.[9]

ஊர், 8 மீட்டர் உயரமும், 25 மீட்டர் அகலமும் கொண்ட சரிவான மண் அரண்களால் சூழப்பட்டிருந்தது. சில இடங்களில் செங்கற் சுவர்களும் காணப்பட்டன. பிற இடங்களில் கட்டிடங்களும் அரண்களோடு சேர்த்துக் கட்டப்பட்டிருந்தன. நகரின் மேற்குப் பகுதியில், யூப்பிரட்டீசு ஆறு அதற்கு அரணாக அமைந்திருந்தது.[9]

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. S. N. Kramer (1963). The Sumerians, Their History, Culture, and Character. University of Chicago Press, pages 28 and 298.
  2. Literal transliteration பரணிடப்பட்டது 2016-01-15 at the வந்தவழி இயந்திரம்: Urim2 = ŠEŠ. ABgunu = ŠEŠ.UNUG (𒋀𒀕) and Urim5 = ŠEŠ.AB (𒋀𒀊), where ŠEŠ=URI3 (The Electronic Text Corpus of Sumerian Literature.)
  3. The Cambridge Ancient History: Prolegomena & Prehistory. Vol. 1, Part 1. p. 149. Accessed 15 Dec 2010.
  4. Tell el-Muqayyar in Arabic Tell means "mound" or "hill" and Muqayyar means "built of bitumen." Muqayyar is variously transcribed as Mugheir, Mughair, Moghair, etc.
  5. Erich Ebeling, Bruno Meissner, Dietz Otto Edzard (1997). Meek - Mythologie. Reallexikon der Assyriologie. (செருமன் மொழி) p. 360 (of 589 pages). பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-11-014809-1.
  6. Ur, ANCIENT CITY, IRAQ
  7. UR, IRAQ
  8. Zettler, R.L. and Horne, L. (eds.) 1998. Treasures from the Royal Tombs of Ur, University of Pennsylvania Museum of Archaeology and Anthropology
  9. 9.0 9.1 9.2 Joan Goodnick Westenholz, "Ur – Capital of Sumer"; in Royal Cities of the Biblical World, ed. Joan Goodnick Westenholz; Bible Lands Museum Jerusalem, 1996. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 965-7027-01-2
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஊர்_(மெசொப்பொத்தேமியா)&oldid=3732262" இலிருந்து மீள்விக்கப்பட்டது