என்றி பவர் ஐயர்

ஹென்றி பவர் ஐயர் (திசம்பர் 18 1812 -1885) என்பவர் கிறித்துவர்களின் வேதநூலான வேதாகமத்தைத் (Bible) தமிழில் மொழிபெயர்த்த ஒரு குழுவின் தலைவராகச் செயல்பட்டவர். கிறித்தவ ஆன்மிகப் பணிகளுடன், சில தமிழ் இலக்கியப் படைப்புகளையும் செய்தவர்.

படிமம்:Henry bower.JPG
ஹென்றி பவர் ஐயர்

வேதாகம மொழிபெயர்ப்புதொகு

தமிழ் கிறிஸ்தவ வேதாகம மொழிபெயர்ப்புகளில் “சீகன்பால்க் மொழிபெயர்ப்பு”, ”பப்ரிசியுசின் மொழிபெயர்ப்பு”, ”இரேனியுஸ் மொழிபெயர்ப்பு”, ”பெர்சிவல்” அல்லது ”பரீட்சை மொழி பெயர்ப்பு” என பல இருக்கின்றன. சீகன் பால்க் மொழிபெயர்ப்பு வழக்கொழிந்து மறக்கப்பட்டுப் போனதாலும், பப்ரிசியுசின் மொழி பெயர்ப்பிலும், இரேனியுஸ் மொழி பெயர்ப்பிலும் குறைபாடுகள் இருந்த காரணத்தாலும், சென்னை வேதாகமச் சங்கம், எல்லா புரோட்டஸ்தாந்து சபைகளும் ஏற்றுக் கொள்ளும் விதமாக ஒரு புதிய தமிழ் மொழி பெயர்ப்பை உருவாக்கும் எண்ணத்தில், ஹென்றி பவர் ஐயர் என்பவரைத் தலைமை மொழி பெயர்ப்பாளராகவும், அவருக்கு உதவியாக மற்ற சபைகளைச் சேர்ந்த ஏழு பேரைக் கொண்ட ஒரு குழுவையும் நியமித்தது. இந்தக் குழுவில், டாக்டர் கால்டுவெல், சார்ஜென்ட் ஐயர், திரேசி ஐயர், திரு. முத்தையா ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். இன்று தமிழ் பேசும் கிறித்தவர்கள் கைகளில் தவழ்ந்து கொண்டிருக்கும் வேதாகமம் ஹென்றி பவரின் மொழிபெயர்ப்புதான். இது ”பவர் மொழிபெயர்ப்பு”, அல்லது ”ஐக்கிய மொழிபெயர்ப்பு” என்று அழைக்கப்படுகிறது.

ஹென்றி பவர்தொகு

பிரான்கோயிஸ் பூவியர் (Francois Bouvier) ஒரு பிரஞ்சுப் போர் வீரர். இந்தியாவில் நடைபெற்ற சண்டையில் கைதியானவர். இந்தியப் பெண்ணான ஜஸ்ட்டீனா (Justina) வை திருமணம் செய்து இந்தியாவிலேயே வாழ்ந்து மறைந்தவர். இத்தம்பதியர்களுக்கு, சென்னை , சிந்தாதிரிப்பேட்டையில் இருக்கும் சீயோன் ஆலயத்தை அடுத்துள்ள இல்லத்தில் ஹென்றி பவர் ஐயர் பிறந்தார். (அருட்திரு.ஹென்றி பவர், 1813ஆம் ஆண்டு, ஜனவரி 17ம் தேதி பிறந்ததாக ஜார்ஜ் கோட்டையில் உள்ள தூய.மேரி ஆலயப் பதிவேடு கூறுகிறது. ஆனால் பவர் குடும்பத்தார், 1812ஆம் ஆண்டு, டிசம்பர் 18ம் தேதியையே பவரின் பிறந்த நாளாகக் கொண்டாடி வருகிறார்கள். பவர் ஐயரின் கல்லறையில், 18-12-1812ல் பிறந்ததாகவும், 2-9-1885ல் இறந்ததாகவும் பொறிக்கப்பட்டுள்ளது.). இவர் பட்டாளத்தார் அனாதையர் ஆண் ஆசிரமத்தில் (Military Male Orphan Asylum) கல்வி பயின்றார். சென்னை ஆளுநரின் காரியதரிசி கர்னல். ஜான் கார்பிறே (Col. John Carfrae), இளைஞரான பவரை நேசித்ததால், பவருக்கு அநேக உதவிகளைச் செய்தார். மேலும், பேருபகாரியான கர்னல். ஜான் கார்பிறே, 1832ஆம் ஆண்டு, பவரை இங்கிலாந்துக்குத் தன்னோடு கூட்டிச் சென்றார். 1833ஆம் ஆண்டு, லண்டன் மிஷனெரி சங்கம் (LMS) நடத்தும் ஊழியரைப் பயிற்றுவிக்கும் கலாசாலையில் பவர் சேர்ந்து பயிற்சி பெற்றார். பின்பு, 1837ஆம் ஆண்டு, இந்தியா திரும்பினார்.

ஹென்றி பவர் குடும்பம்தொகு

அருட்திரு. ஹென்றி பவர் எம்மா டெய்லர் (Emma Taylor) என்ற பெண்ணை 09-05-1838 அன்று திருமணம் செய்தார். இவர்களுக்கு,

 1. அனா பவர் (Anna Bower) (18-09-1839 – 19-12-1857)
 2. ஜான் பவர் (John Bower) (29-09-1841 – 12-05-1913)

- என இரண்டு பிள்ளைகள் பிறந்தனர். பவரின் முதல் மனைவி 1844ஆம் ஆண்டு இறந்ததால், எலிசா ஜெஸி பிளக்கர் (Eliza Jessie Blacker) என்ற பெண்ணை 10-05-1847 அன்று மறுமணம் செய்தார். இவர்களுக்கு,

 1. ஹென்றி பிரான்சிஸ் பவர் (Henry Francis Bower) (11-02-1848 – 01-09-1895)
 2. வில்லியம் லோன் பவர் (William Loane Bower) (04-02-1849 - 08-05-1900)
 3. பிரடிரிக் கார்டான் பவர் (Frederick Gordon Bower) (07-04-1852) – (03-04-1853)
 4. அலெக்ஸாண்டர் ஜார்ஜ் பவர் (Alexander George Bower) (02-02-1854)
 5. எம்மா எலிசா பவர் (Emma Eliza Bower) (02-10-1855 – 17-04-1856)
 6. ராபர்ட் ஸ்டீபன் பவர் (Robert Stephen Bower) (15-03-1857)

என ஆறு பிள்ளைகள் என மொத்தம் எட்டு குழந்தைகள் இருந்தன.

ஹென்றி பவரின் ஆன்மிகப் பணிகள்தொகு

முதலில் திரிப்பசூரில் ஊழிய வேலையைத் துவக்கினார். பின்பு, 1838ஆம் ஆண்டு, புரசைவாக்கத்துக்குக் குடிபெயர்ந்தார்.1842 ஆம் ஆண்டு, சுவிசேஷப் பிரபல்ய சங்கத்தில் (SPG) சேர்ந்து, 1843 ஆம் ஆண்டு, உதவி குருவாகவும், 1845 ஆம் ஆண்டு, குருவாகவும் அபிசேகம் பெற்றார். பவர் ஐயர், தஞ்சாவூருக்கு அருகாமையில் கிறிஸ்தவ சமய ஊழியரைப் பயிற்றுவிக்கும் நிறுவனம் ஒன்றைத் தொடங்கி, அதற்கு ‘வேதியர்புரம்’ என்றும் பெயரிட்டார். 1858 ஆம் ஆண்டு, வேதியர்புரத்தை விட்டு நீங்கி, வேதாகம மொழி பெயர்ப்பில் தன்னை முழுவதுமாக ஈடுபடுத்திக் கொண்டார். 1864 ஆம் ஆண்டு, மொழிபெயர்ப்பு வேலையோடு வேப்பேரியிலுள்ள பரி. பவுல் ஆலயக் குருவாகவும் நியமனம் பெற்றார். 1871 ஆம் ஆண்டு, சென்னைப் பல்கலைக்கழகத்தின் சிறப்பு உறுப்பினர் பதவியை ஏற்றார். ஆங்கிலத் திருச்சபையின் (Church of England), ஜெபப்புத்தகத்தை மொழிபெயர்ப்பதற்கு ஏற்படுத்தப்பட்ட குழுவிலும் ஓர் அங்கத்தினர் ஆனார். இந்த வேலை இரண்டு வருடங்கள் நடை பெற்றது. ஜெபப்புத்தக மொழிபெயர்ப்பு வேலை நடைபெற்றுக் கொண்டிருக்கும் கால கட்டத்தில், அதாவது, 1872ஆம் ஆண்டு, திருச்சிராப்பள்ளிக்கு மாற்றப்பட்டு, பின்பு திருநெல்வேலிக்கு அனுப்பப்பட்டார். அங்கிருந்து மீண்டும் வேப்பேரி ஆலயத்திற்கு வந்தார். 1877ஆம் ஆண்டு, கான்டர்பெரி பேராயர், பவர் ஐயருக்கு ‘இறையியற் கலைஞர்’ (Doctor of Divinity), என்னும் பட்டத்தை வழங்கினார். பவர் ஐயர் ஆங்கிலத்தைக் காட்டிலும் தமிழில் ஊழியம் (ஆன்மிகப் பணி) செய்வதையே பெரிதும் விரும்பினார்.

ஹென்றி பவர் ஐயரின் இலக்கியப் படைப்புகள்தொகு

 • பவர் ஐயர், தமிழ், ஆங்கிலம், கிரேக்கம், லத்தீன், சமஸ்கிருதம், கன்னடம், இந்துஸ்தானி ஆகிய மொழிகளை அறிந்த பன்மொழிப் புலவர் ஆவார். தமிழ் மொழியைச் சமணப் புலவர் சாஸ்திரம் ஐயரிடம் ஆர்வமுடன் கற்றார். பல நூல்களைப் படைத்தவர்.
 • பகவத்கீதையையும், நன்னூலையும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர்.
 • 1868ஆம் ஆண்டு சீவகசிந்தாமணி என்னும் பெயர் பெற்ற காப்பியத்தின் முதல் இலம்பகமாகிய நாமகள் இலம்பகத்தை மட்டும், நச்சினார்கினியர் உரையுடனும், ஆங்கில முன்னுரை, குறிப்புகள், சாஸ்திரம் ஐயர் எழுதிய சமண சமய சித்தாந்தம் பற்றிய கட்டுரையின் ஆங்கில ஆக்கம், காவியச் சுருக்கம் ஆகியவற்றுடன் ஒரு நூலை ஆக்கினார். இந்நூல் சென்னை வேப்பேரி கிறிஸ்தவ அறிவு பரப்புதல் சங்க அச்சகத்திலிருந்து அதே ஆண்டு (1868) வெளியிடப்பட்டது. 1870ஆம் ஆண்டு, சென்னைப் பல்கலைக் கழகத்தில் பயின்ற பி. ஏ. மாணவர்களுக்கு இந்த நாமகள் இலம்பகம் பாடமாக வைக்கப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
 • வேதநாயக சாஸ்திரியாரை நேரில் அறிந்தவர் பவர் ஐயர். அன்னாரின் வாழ்க்கை வரலாற்றையும் எழுதியுள்ளார். சமயம் , தத்துவம் பற்றிய சொற்களுக்குப் பொருள் தரும் வேத அகராதியும், இவரது சொற்பொழிவுகள் அடங்கிய நூலும் இவரின் தொகுப்பு நூல்கள் ஆகும்.
 • சமய ஒப்பீடு, தர்க்கம், மொழியியல் இவைகள் பற்றிய கட்டுரைகளையும் இவர் எழுதியுள்ளார். கிறிஸ்து சபை வரலாறும் இவர் எழுதியுள்ளதாகத் தெரிகிறது.
 • 1851ஆம் ஆண்டு, இந்து சாதிகள் பற்றிய ஆங்கிலக் கட்டுரை நூல் ஒன்றை வெளியிட்டார்.
 • 1877ஆம் ஆண்டு, ‘நியாயப்பிரமாண விளக்கம்’, வெளியிடப் பெற்றது.
 • ‘விசுவாசப்பிரமாண விளக்கம்’, ‘இந்து மதத்திற்கும், பாப்பு மதத்திற்கும் இருக்கிற சம்பந்த விளக்கம்’, ‘தர்மசாஸ்திர சாரம்’ போன்ற நூல்களையும் இவர் எழுதியுள்ளார்.

- மேலும் ஹென்றி பவர் நன்னூலிடத்தும், திருக்குறளிடத்தும் அதிக ஈடுபாடு உடையவராயிருந்ததால், “தமிழ் இலக்கணம் என்றால் அது பவணந்தியாரின் நன்னூலே! தமிழ் முதல்தர இலக்கியம் என்றால் அது திருவள்ளுவரின் திருக்குறளே”, என்ற கருத்தினை குறித்து வைத்துள்ளார்.

ஹென்றி பவர் ஐயரின் மறைவுதொகு

படிமம்:Henry bower samathi.JPG
ஹென்றி பவர் கல்லறை

பவர் ஐயரின் ஆராதனைகள் சடங்காச்சாரமற்றவையாக உள்ளன என்ற சிலரின் குற்றச்சாட்டாலும், விரோதப் போக்காலும், வேப்பேரியிலிருந்து சாந்தோமுக்கு மாற்றப்பட்டார். அத்துடன் வேப்பேரி குருமனையை விட்டும் நீங்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டார். இவ்விதமான மாற்றங்களாலும், இன்னல்களாலும் பவர் உடல் நலக் குறைவுக்குள்ளானார். இறுதி காலத்தில் குற்றாலத்திற்கு வந்து, அங்கு சிறிது காலம் வசித்தார். அதன் பின்பு 1885 ஆம் ஆண்டு மரணமடைந்தார். அவரின் உடல் திருநெல்வேலி, பாளையங்கோட்டை , மிலிட்டரி லைன், கிறிஸ்து ஆலயக் கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=என்றி_பவர்_ஐயர்&oldid=3185689" இருந்து மீள்விக்கப்பட்டது