ஏழாவது மனிதன்
ஏழாவது மனிதன், (Ezhavathu Manithan) 1982 ஆம் ஆண்டு கே. அரிகரன் இயக்கத்தில் வெளிவந்த தமிழ்த் திரைப்படம். இப்படத்தின் இசையமைப்பாளர் எல். வைத்தியநாதன். நடிகர் ரகுவரன் முதலாவதாக திரையுலகுக்கு அறிமுகமான படம் இது. இத்திரைப்படத்தின் பல பாடல்கள் பாரதியாரின் பாடல்களாக அமைந்துள்ளது இதன் சிறப்பாகும். இப்படம் சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய விருதை 1983 ஆம் ஆண்டு பெற்றுள்ளது. இதுவே தமிழின் முதல் சுற்றுச்சூழல் திரைப்படம் எனப்படுகிறது.[1]
ஏழாவது மனிதன் | |
---|---|
இயக்கம் | கே. அரிகரன் |
தயாரிப்பு | பாலை என். சண்முகம் |
இசை | எல். வைத்தியநாதன் |
நடிப்பு | ரகுவரன் |
ஒளிப்பதிவு | தர்மா டிஎஃப் டெக் |
வெளியீடு | 1982 |
ஓட்டம் | 125 நிமிடங்கள் |
மொழி | தமிழ் |
கதைக்கரு
தொகுதமிழ்நாட்டின், திருநெல்வேலி ஏழாவுதுபுரத்துக்கு தொடர்வண்டியில் ஒரு பொறியியல் கல்லூரி பட்டதாரி வந்து சேர்கிறார். அவருக்கு அங்கிருக்கும் சீமைகாரை தொழிற்சாலையில் பொறியாளராக வேலை கிடைக்கிறது. அதனால் அந்த ஊரிலேயே தங்கி வேலைக்குப் போகிறார். இதற்கிடையில் அவரது வீட்டிற்கு பால் கொண்டுவரும் பால்காரியுடன் காதல் மலர்கிறது. அந்தத் தொழிற்சாலையால் அங்கு வேலை செய்யும் தொழிலாளர்களும், ஊர் மக்களும் உடல் நலப் பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். இது குறித்து தொழிற் சாலை உரிமையாளரின் மகனான, நண்பரிடம் முறையிடுகிறார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் முற்றுகிறது. தொழிலாளர் நலனில் அவர் காட்டும் அக்கறை தொழிலாளர்களின் போராட்டத்தில் கொண்டுபோய் விடுகிறது. அதில் கிராமத்து மக்களும் கலந்துகொள்கின்றனர். இதற்கிடையில் தொழிற்சாலைக்கு குண்டுவைத்து அப்பழியை ஊர்மக்கள் மீது போட்டு முதலாளி தப்பிக்க திட்டமிடுகிறார். ஒரு வழக்குரைஞரின் உதவியால் அத்தொழிற்சாலையின் முதலாளிகளின் திட்டங்கள் வெளிச்சத்துக்குக் கொண்டுவருகிறார் பொறியாளர். இறுதியில் தொழிற்சாலையை மக்களே ஏற்று நடத்துவதற்கு வழிசெய்கிறார்.
பாடல்கள்
தொகுஇத்திரைப்படத்தில் பாரதியாரின் பாடல்களுக்கு எல். வைத்தியநாதன் இசையமைத்திருந்தார்.
பாடல் | பின்னணிப் பாடகர்கள் |
---|---|
ஆடுவோமே பள்ளு பாடுவோமே | தீபன் சக்ரவர்த்தி, மாதங்கி, பி. சுசீலா, சாண்டில்யன் |
அச்சமில்லை அச்சமில்லை | எஸ். பி. பாலசுப்பிரமணியம் |
எந்த நேரமும் | கே. ஜே. யேசுதாஸ் |
காக்கை சிறகினிலே | கே. ஜே. யேசுதாஸ் |
மனதில் உறுதி வேண்டும் | நீரஜா |
நல்லதோர் வீணை செய்தேன் | ராஜ்குமார் பாரதி |
நெஞ்சில் உரமும் இன்றி | ராஜ்குமார் பாரதி |
ஓடி விளையாடு பாப்பா | கே. ஜே. யேசுதாஸ், சாய்பாபா |
செந்தமிழ் நாடெனும் | பி. சுசீலா |
வீணையடி நீ எனக்கு | கே. ஜே. யேசுதாஸ், நீரஜா |
வீணையடி நீ எனக்கு | நீரஜா |
விருதுகள்
தொகு- 1983 -மாஸ்கோ சர்வதேச திரைப்பட விழாவில் இப்படம் (கே. ஹரிகரன்) தங்கப் பரிசுக்கு பரிந்துரை செய்யப்பட்டது.
- சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய விருது -வெள்ளித் தாமரை விருதினை இப்படம் 1983 இல் வென்றது.
- சிறந்த திரைப்படத்துக்கான தமிழக அரசின் திரைப்பட விருது - மூன்றாவது இடம்
மேற்கோள்கள்
தொகு- ↑ "தமிழின் முதல் சுற்றுச்சூழல் திரைப்படத்துக்கு 40 வயது". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2022-07-16.