ஒலிம்பிக்கு விளையாட்டுகள்

அனைத்துலக விளையாட்டு போட்டிகள்
(ஒலிம்பிக் போட்டி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஒலிம்பிக்கு விளையாட்டுகள் (Olympic Games அல்லது Olympics) என்பது இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை கோடை காலத்திலும் குளிர் காலத்திலும் மாற்றி மாற்றி பல்வேறு விளையாட்டுகளுக்கு நடத்தப்படும் அனைத்துலகப் போட்டி ஆகும். இதில் ஆயிரக்கணக்கான விளையாட்டு வீரர்கள் பங்கு பெறுகின்றனர். உலகின் முதன்மையான விளையாட்டுப் போட்டியாகக் கருதப்படும் ஒலிம்பிக்கில் 200 நாடுகளுக்கு மேல் கலந்து கொள்கின்றன.[1] பண்டைய கிரீஸ் நாட்டில் இந்தப் போட்டிகளை நடத்தும் வழக்கம் இருந்து வந்தது. பின்னர், பியர் ஃபிரெடி, குபர்த்தென் பிரபு என்ற பிரான்ஸ் நாட்டு பிரபுவால் (nobleman) 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இந்தப் போட்டிகளை நடத்தும் வழக்கம் மீண்டும் வந்தது. இவர் 1894 ஆம் ஆண்டு அனைத்துலக ஒலிம்பிக்கு குழுவை உருவாக்கினார். இதன் அமைப்பும், அதிகாரமும் ஒலிம்பிக்கு பட்டயத்தினால் வரையறுக்கப்படுகின்றன. அனைத்துலக ஒலிம்பிக்கு குழுவே ஒலிம்பிக்கு இயக்கத்தை நிர்வகித்து வருகிறது. உலகப் போர் நடைபெற்ற ஆண்டுகள் தவிர்த்து, 1896 முதல், நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை கோடை ஒலிம்பிக்கு விளையாட்டுக்கள் நடைபெற்று வருகின்றன. ஆதி கால ஒலிம்பிக்ஸ் போட்டிகள் கி.மு.776 இல் கிரேக்க நாட்டிலுள்ள ஒலிம்பியாவில் தொடங்கி கி.பி.393 வரை நடைபெற்றன. கிரேக்க கவிஞர் பானாஜியோடிஸ் ஸௌட்ஸாஸ் கி.பி.1833இல் எழுதிய "இறந்தவர்களின் உரையாடல்" என்னும் கவிதை இப்போட்டிகளை மீண்டும் தொடங்கும் ஆர்வத்தை உருவாக்கியது.

இந்த ஐந்து ஒலிம்பிக்கு வளையங்களும் 1913ல் வடிவமைக்கப்பட்டு, 1914ல் அங்கீகரிக்கப்பட்டு, 1920 கோடை ஒலிம்பிக்கு விளையாட்டுகளில் முதன் முதலில் பயன்படுத்தப்பட்டன

20 ஆம் 21 ஆம் நூற்றாண்டுகளில் ஏற்பட்ட ஒலிம்பிக்கு இயக்கத்தின் வளர்ச்சி ஒலிம்பிக்கு விளையாட்டுகளில் பல மாற்றங்களை ஏற்படுத்தியது. குளிர்கால ஒலிம்பிக்கு போட்டிகள், ஊனமுற்றோருக்கான மாற்றுத் திறனாளர் ஒலிம்பிக்கு விளையாட்டுகள், பதின்ம வயதினருக்கான இளையோர் ஒலிம்பிக்கு விளையாட்டுகள் என்பன தொடங்கப்பட்டமை இம் மாற்றங்களுட் சில. பனிக்கால விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் பொருட்டு 1924 முதல் குளிர்கால ஒலிம்பிக்கு விளையாட்டுகள் நடத்தப்படுகின்றன. தொடக்கத்தில் கோடை கால மற்றும் குளிர் கால ஒலிம்பிக்கு விளையாட்டுகள் ஒரே ஆண்டில் நடத்தப்பட்டு வந்தன. 1994 முதல் கோடைக்கால ஒலிம்பிக்கு விளையாட்டுகள் முடிந்து இரண்டு ஆண்டுகள் கழித்து குளிர் கால ஒலிம்பிக்கு விளையாட்டுகள் நடத்தப்படுகின்றன. பொருளாதாரம், அரசியல், தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் ஏற்பட்ட வளர்ச்சிகளுக்கு ஏற்ப ஒலிம்பிக்கு குழுவும் பல்வேறு மாற்றங்களைச் செய்யவேண்டியிருந்தது. இது, தொழில்முறை சாராத போட்டியாளர்கள் பங்குபெறும் போட்டியாக இருக்கவேண்டும் என்றே இவ்வியக்கத்தை உருவாக்கிய கூபேர்ட்டின் எண்ணியிருந்தார். ஆனாலும், ஒலிம்பிக்கு குழு இந்த விதியை மாற்றித் தொழில்முறை விளையாட்டு வீரர்களையும் போட்டிகளில் பங்குபற்ற அனுமதித்தது. மக்கள் ஊடகங்களின் முக்கியத்துவம் வளர்ந்து வந்தபோது, நிறுவன விளம்பர ஆதரவு முறை உருவாகி இப்போட்டிகள் வணிகமயமாக்கப்பட்டன. 1916, 1940, 1944 ஆகிய ஆண்டுகளில் நடைபெற வேண்டிய ஒலிம்பிக்கு போட்டிகள் உலகப் போரினால் நடைபெறவில்லை. பனிப்போர்க் காலத்தில் பல நாடுகள் இப்போட்டியைப் புறக்கணித்ததனால், 1980, 1984 ஆண்டுகளில் இடம்பெற்ற போட்டிகள் மட்டுப்படுத்தப்பட்ட பங்கேற்புடனேயே நடைபெற்றன.

ஒலிம்பிக்கு இயக்கம் அனைத்துலக விளையாட்டுகள் கூட்டமைப்பு, தேசிய ஒலிம்பிக்கு குழுக்கள், ஒவ்வொரு ஒலிம்பிக்கு போட்டிகளுக்குமான ஏற்பட்டுக் குழுக்கள் என்பவற்றை உள்ளடக்குகிறது. முடிவுகளை எடுக்கும் அமைப்பு என்ற அளவில், அனைத்துலக ஒலிம்பிக்கு குழு எந்த நகரில் போட்டிகளை நடத்துவது என்பது குறித்து முடிவு எடுக்கின்றது. இவ்வாறு தெரிவு செய்யப்படும் நகரம், ஒலிம்பிக்கு பட்டயத்துக்கு ஏற்றவகையில், போட்டிகளை ஒழுங்கு செய்வதற்கும், நிதி வழங்குவதற்குமான பொறுப்பை ஏற்கவேண்டும். போட்டிகளில் இடம்பெறும் விளையாட்டுகளை உள்ளடக்கிய நிகழ்ச்சி நிரலைத் தீர்மானிக்கும் பொறுப்பும் அனைத்துலக ஒலிம்பிக்கு குழுவிடமே உள்ளது. ஒலிம்பிக்கு கொடி, தீப்பந்தம் போன்ற சின்னங்களும், தொடக்கவிழா, நிறைவுவிழா போன்ற நிகழ்வுகளும் ஒலிம்பிக்கு போட்டிகளின் பகுதிகளாக உள்ளன. கோடைகால ஒலிம்பிக்கிலும், குளிர்கால ஒலிம்பிக்கிலும் 33 வெவ்வேறு விளையாட்டுக்கள் தொடர்பில் இடம்பெறும் ஏறத்தாழ 400 போட்டிகளில் 13,000க்கு மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் பங்கேற்கின்றனர். ஒவ்வொரு போட்டியிலும் முதலாம், இரண்டாம், மூன்றாம் இடங்களைப் பெறும் வீரர்களுக்கு முறையே தங்கப் பதக்கம், வெள்ளிப் பதக்கம், வெண்கலப் பதக்கம் ஆகிய பதக்கங்கள் வழங்கப்படுகின்றன.

ஏறத்தாழ உலகில் உள்ள எல்லா நாடுகளுமே பங்கேற்கும் அளவுக்கு ஒலிம்பிக்கு போட்டி வளர்ச்சி அடைந்துள்ளது. இத்தகைய வளர்ச்சி, புறக்கணிப்புகள், போதை மருந்துப் பயன்பாடு, கையூட்டு, பயங்கரவாதச் செயல்கள் போன்றவை தொடர்பான பல சவால்களுக்கு முகம் கொடுக்கவேண்டிய நிலையையும் ஏற்படுத்தியுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் போட்டிகளும், அது தொடர்பான ஊடக விளம்பரமும் பல விளையாட்டு வீரர்கள் தேசிய அளவிலும் சில சமயங்களில் பன்னாட்டு அளவிலும் கூடப் புகழ் பெறுவதற்கான வாய்ப்பை வழங்குகின்றன. அத்துடன் போட்டிகளை நடத்தும் நகரமும், நாடும் தம்மை உலகுக்கு வெளிப்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்பையும் ஒலிம்பிக்கு ஏற்படுத்துகிறது.

பண்டைக்கால ஒலிம்பிக்கு விளையாட்டுகள்

தொகு

பண்டைக்கால ஒலிம்பிக்கு விளையாட்டுப் போட்டி நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை கிரீசு நாட்டின் ஒலிம்பியாவில் இருந்த சேயுசு கோவிலடியில் சமயமும், விளையாட்டும் சார்ந்த விழாவாக இடம்பெற்றது. இது அக்காலக் கிரீசில் இருந்த நகர அரசுகள், இராச்சியங்கள் என்பவற்றைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களுக்கு இடையேயான போட்டியாகும். பெரும்பாலும் தடகள விளையாட்டுக்களே இடம்பெற்றாலும், மற்போர், குதிரைப் பந்தயம், தேர்ப் பந்தயம் போன்ற சண்டை சார்ந்த போட்டிகளும் நடைபெற்றன. இவ்விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும் காலங்களில் நகர அரசுகளுக்கு இடையேயான பிணக்குகள் அனைத்தும் போட்டிகள் முடியும்வரை ஒத்திவைக்கப்பட்டதாகப் பலரும் எழுதி உள்ளனர். இது ஒலிம்பிக்கு அமைதி அல்லது ஒலிம்பிக்கு போர் நிறுத்தம் என அறியப்பட்டது. ஆனால் இது தற்காலத்தில் எழுந்த ஒரு உண்மையல்லாத கருத்து. கிரேக்கர்கள் என்றுமே தமக்கு இடையேயான போர்களை ஒத்திவத்தது இல்லை.

ஒலிம்பிக்கின் தோற்றம் பற்றிச் சரியாகத் தெரியாவிட்டாலும், அது குறித்துப் பல கதைகள் உள்ளன. சேயுசுக் கடவுளின் மகனான ஏராக்கிள்சு தனது தந்தையைக் கௌரவிப்பதற்காக ஒலிம்பிக்கு விளையாட்டு அரங்கைக் கட்டினானாம். இது முடிவடைந்ததும், ஒரு நேர்கோட்டில் இருநூறு அடிகள் நடந்து அத் தூரத்தை ஒரு இசுட்டேடியன் என அறிவித்தான். இது பின்னர் தூரத்தின் அளவாகக் கொள்ளப்பட்டது. கிமு 776 ஆம் ஆண்டில் ஒலிம்பிக்கு விளையாட்டுகள் தோன்றியதாகப் பரவலாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. அக்கால ஒலிம்பிக்கு போட்டிகளில் ஓட்டப் போட்டிகளுடன், பாய்தல் போட்டிகள், வட்டம் எறிதல், ஈட்டி எறிதல், மற்போர், குதிரை ஓட்டம் போன்ற போட்டிகளும் இடம் பெற்றன.[2][3] மரபுக் கதைகளின்படி எலிசு என்னும் நகரைச் சேர்ந்த கொரோயெபசு என்னும் பெயர் கொண்ட சமையற்காரன் ஒருவனே முதல் வெற்றியாளன் ஆவான்.[4]

அக்கால ஒலிம்பிக்சு அடிப்படையில் சமய முக்கியத்துவம் கொண்டது. இதில், விளையாட்டு நிகழ்வுகளுடன் சேயுசுக் கடவுளையும், தேவ வீரனும், தொன்மங்களில் ஒலிம்பியாவின் அரசனாகக் குறிப்பிடப்படுபவனும் ஆகிய பெலோப்சுவையும் கௌரவிக்கும் முகமாகச் சடங்கு சார்ந்த வேள்விகளும் இடம்பெற்றன. விளையாட்டு நிகழ்வுகளில் வெற்றி பெற்றவர்கள் குறித்துக் கவிதைகள் இயற்றப்பட்டதுடன், சிலைகளையும் அமைத்து அவர்களைப் பெருமைப்படுத்தினர்.[5]

ஒலிம்பிக்கு விளையாட்டு கிமு ஆறாம், ஐந்தாம் நூற்றாண்டுகளில் அதன் உச்சநிலையில் இருந்தது. உரோமரின் பலம் அதிகரித்துக் கிரேக்க நாட்டில் அவர்களின் செல்வாக்கு வலுப் பெற்றபோது ஒலிம்பிக்கின் முக்கியத்துவமும் படிப்படியாகக் குறையத் தொடங்கிற்று. இவ்விளையாட்டுக்கள் எப்போது நிறுத்தப்பட்டன என்பது குறித்து அறிஞரிடையே ஒத்த கருத்து இல்லாவிட்டாலும், முதலாம் தியடோசியசு எல்லாச் சிலை வணக்கச் சமயங்களையும், அவை தொடர்பான சடங்குகளையும் தடை செய்த ஆண்டான கிபி 393ல் நிறுத்தப்பட்டது என்பதே பெரும்பான்மைக் கருத்தாகும். அவனது வாரிசான இரண்டாம் தியடோசியசு, எல்லாக் கிரேக்கக் கோயில்களையும் இடிக்கக் கட்டளையிட்டான்.

ஒலிம்பிக்சு நடந்த இடங்கள்

தொகு
வருடம் இடம் ஆண்டு இடம்
1896 ஏதென்ஸ், கிரேக்கம் 1900 பாரிஸ், பிரான்சு
1904 செயிண்ட் லூயிஸ், ஐக்கிய அமெரிக்கா 1908 இலண்டன், இங்கிலாந்து
1912 ஸ்டாக்ஹோம், சுவீடன் 1920 ஆண்ட்வெர்ப், பெல்ஜியம்
1924 பாரிஸ், பிரான்சு 1928 ஆம்ஸ்டர்டாம், ஹாலந்து
1932 லாஸ் ஏஞ்சலீஸ், ஐக்கிய அமெரிக்கா 1936 பெர்லின், ஜெர்மனி
1948 லண்டன், இங்கிலாந்து 1952 ஹெல்சின்கி, பின்லாந்து
1956 மெல்போர்ன், ஆஸ்திரேலியா 1960 ரோம், இத்தாலி
1964 டோக்கியோ, ஜப்பான் 1968 மெக்ஸிகோ சிட்டி, மெக்சிக்கோ
1972 ம்யூனிச், ஜெர்மனி 1976 மாண்ட்ரீல், கனடா
1980 மாஸ்கோ, சோவியத் ஒன்றியம் 1984 லாஸ் ஏஞ்சல்ஸ், ஐக்கிய அமெரிக்கா
1988 சியோல், தென் கொரியா 1992 பார்சிலோனா, எசுப்பானியா
1996 அட்லாண்டா, ஐக்கிய அமெரிக்கா 2000 சிட்னி, ஆஸ்திரேலியா
2004 ஏதென்ஸ், கிரேக்கம் 2008 பெய்ஜிங், மக்கள் சீனக் குடியரசு
2012 இலண்டன், ஐக்கிய இராச்சியம் 2016 ரியோ டி ஜனேரோ, பிரேசில்

உலகப் போர் சமயங்களில் மட்டும் (1916, 1940 & 1944) ஒலிம்பிக்ஸ் நடைபெறவில்லை.

இன்றைய ஒலிம்பிக்ஸ் 1896ல் ஏதென்ஸ் நகரில் தான் துவங்கியது. அடுத்த கோடை கால ஒலிம்பிக்கு விளையாட்டுக்கள் 2016ம் ஆண்டில் பிரேசில் நாட்டின் ரியோ டி ஜனேரோ நகரில் நடந்தது. 2020ம் ஆண்டில் ஜப்பான் நாட்டின் டோக்கியோ நகரில் நடக்கவுள்ளது.

பனி ஒலிம்பிக்ஸ் நடந்த இடங்கள்

தொகு
வருடம் இடம் ஆண்டு இடம்
1924 சாமொனிக்ஸ், பிரான்ஸ் 1928 செயிண்ட் மோரிட்ஜ், ஸ்விட்சர்லாந்து
1932 ப்ளாசிட் ஏரி, ஐக்கிய அமெரிக்கா 1936 கார்மிஷ்ச், ஜெர்மனி
1948 செயிண்ட் மோரிட்ஜ், ஸ்விட்சர்லாந்து 1952 ஆஸ்லோ, நார்வே
1956 கார்டினா, இத்தாலி 1960 ஸ்குவாவ் வேலி, ஐக்கிய அமெரிக்கா
1964 இன்ஸ்ப்ரக், ஆஸ்திரியா 1968 க்ரெநோபில், பிரான்ஸ்
1972 சாப்போரோ, ஜப்பான் 1976 இன்ஸ்ப்ரக், ஆஸ்திரியா
1980 ப்ளாசிட் ஏரி, ஐக்கிய அமெரிக்கா USA 1984 சாராஜெவோ, யுகோஸ்லாவியா
1988 கால்கேரி, கனடா 1992 ஆல்பர்ட்வில்லே, பிரான்ஸ்
1994 லில்லேஹாம்மர், நார்வே 1998 நாகானோ, ஜப்பான்
2002 சால்ட் லேக் சிட்டி, ஐக்கிய அமெரிக்கா 2006 தோரீனோ, இத்தாலி
2010 வான்கூவர், கனடா
2014 சோச்சி, இருசியா

உலகப் போர் சமயங்களில் மட்டும் (1940 & 1944) பனி ஒலிம்பிக்ஸ் நடைபெறவில்லை.

1992 வரை பனி ஒலிம்பிக்சும் கோடைக்கால ஒலிம்பிக்சும் ஒரே ஆண்டிலேயே நடைபெற்று வந்தது. இதை மாற்ற வேண்டி 1994ல் மீண்டும் ஒரு பனி ஒலிம்பிக்சை நடத்தினார்கள். அதன்படி தற்பொழுது கோடைக்கால ஒலிம்பிக்சு நடந்து 2 ஆண்டுகள் கழித்து பனி ஒலிம்பிக்சு நடக்கும்.

அடுத்த பனி ஒலிம்பிக்சு, 2014ல் இருசியாவின் சோச்சி நகரில் நடந்து முடிந்தது. அதன் பின்னர் 2018 ல் தென்கொரியாவின் ப்யாங்சங்க் நகரில் நடந்து முடிந்தது . அடுத்த பனி ஒலிம்பிக்கு சினாவின் பீஜிங்கில் 2022 ஆண்டு நடக்க இருக்கிறது.

குறிப்புகள்

தொகு
  1. "Overview of Olympic Games". Encyclopædia Britannica. பார்க்கப்பட்ட நாள் 4 June 2008. {{cite web}}: Cite has empty unknown parameter: |coauthors= (help)
  2. Crowther 2007, ப. 59–61.
  3. "Ancient Olympic Events". Perseus Project of Tufts University. பார்க்கப்பட்ட நாள் 29 April 2009.
  4. Golden 2009, ப. 24.
  5. Swaddling 1999, ப. 90–93.

வெளி இணைப்புகள்

தொகு