பயங்கரவாதம்

வன்முறையின் மூலம் பதற்றத்தை உருவாக்கல்

பயங்கரவாதம் (Terrorism) என்பது ஒரு மரபுசாராப் போர்முறையும், உளவியற் போர்முறையும் ஆகும். இச்சொல் அரசியலோடும் உணர்வுகளோடும் தொடர்புபட்டிருப்பதால் இதனைச் சரியாக வரையறுப்பது கடினமானது. 1988 ஆம் ஆண்டில், ஐக்கிய அமெரிக்கப் படைத்துறை நடத்திய ஓர் ஆய்வின்படி பயங்கரவாதத்துக்கு நூற்றுக்கு மேற்பட்ட வரைவிலக்கணங்கள் இருப்பது கண்டறியப்பட்டது. பயங்கரவாதத்தில் ஈடுபடும் ஒருவர் "பயங்கரவாதி" எனப்படுவார்.

பயங்கரவாதத்தைப் பல வகையான அரசியல் இயக்கங்கள் தமது நோக்கங்களை அடைவதற்காகப் பயன்படுத்துகின்றன. இவற்றுள் இடதுசாரி, வலதுசாரி இயக்கங்கள், மதக் குழுக்கள், புரட்சியாளர்கள், ஆளும் அரசுகள் போன்ற பலவும் அடங்கும். அரசு அல்லாத குழுக்கள் பரவலான ஆயுதப் போராட்டங்களில் ஈடுபட்டிருப்பது போர்ச் சட்டங்களைப் பயன்படுத்துவதில் பல சர்ச்சைகளைத் தோற்றுவித்துள்ளது.

பயங்கரவாதம், தீவரவாதம், அடிப்படைவாதம்

தொகு

பயங்கரவாதம், தீவிரவாதம் (Extremism) மற்றும் அடிப்படைவாதம் (Fundamentalism) ஆகியன ஒன்றோடு ஒன்று தொடர்புடையன. அடிப்படைவாதம் தமது கருத்தை பிறர் அடியொற்றி பின்பற்ற வேண்டுமெனும் நோக்கில் வன்முறை சார்ந்தோ அல்லது அதிகாரத்தின் வழியோ மேற்கொள்வது. தீவிரவாதம் எனப்படுவது அச்சமூட்டும் வன்முறை நடவடிக்கை. தீவிரவாதம் மென்பயங்கரவாதத்தின் குழந்தையாகும். மென் பயங்கரவாதம் அதிகரிக்கும் போது அதை எதிர் கொள்ள வேறு வழியின்றி நாடும் செயல்.

பயங்கரவாதம் என்பது யாருக்காகவோ அப்பாவிகள் பாதிக்கப்படுவர் என தெரிந்தே, முறையான அல்லது முறையற்ற அமைப்பாக இணைந்தோ தனித்தோ, மேற்கொள்ளும் கொடும் செயல் அல்லது நடவடிக்கை. பயங்கரவாத தாக்கம் வெளிப்படையாகவோ அல்லது மறைமுகமாகவோ இருக்கலாம். ஆயுதங்களைக் கொண்டு மேற்கொள்ளும் நடவடிக்கைகளில் பாதிப்புகள் வெளிப்படையானது. அதோடு அவை அப்பாவிகளின் உயிருக்கோ அல்லது உடைமைக்கோ உயிருடைமைக்கோ பாதிப்பை ஏற்படுத்தும் நோக்கோடு செயல்படுத்தப்படுவது. எனவே, பயங்கரவாத தாக்கம் வெளிப்படையாகவோ அல்லது மறைமுகமாகவோ இருக்கலாம். வெளிப்படையாக தெரியும் வகையில் அமைந்த நடவடிக்கைகளை "வன் பயங்கரவாதம்" (Hard-Terrorism) என அழைக்கலாம். இவை பெரும்பாலும் ஆயுத குழுக்களால் மேற்கொள்ளப்படுகிறது. அதே வேளையில், பயங்கரவாத தாக்கம் வெளியே தெரியாத வண்ணம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை "மென் பயங்கரவாதம்" (Soft-Terrorism) என அழைக்கலாம். இவை அதிக அளவில் பதவி மற்றும் அதிகாரத்தில் உள்ளவர்களாலேயே மேற்கொள்ளப்படுகிறது.

வன் பயங்கரவாதம்

தொகு

வன் பயங்கரவாதம் உயிர்ச் சேதத்தை ஏற்படுத்தும் வகையில் குண்டு வெடிப்பு, துப்பாக்கிச் சூடு, விமானக் கடத்தல் போன்ற செயல் வடிவமாக வெளிப்படுகிறது. இதன் பாதிப்பை அனைவரும் அறிய இயலும். இது, பொருண்மைக் கருவிகளைக் (ஆயுதங்களைக்) கொண்டு தனி நபராலோ அல்லது குழுக்களாலோ செய்யப்படுகிறது.

மென் பயங்கரவாதம்

தொகு

மென் பயங்கரவாதம் அதிகார மீறல், ஊழல், பாகுபடுத்தல், ஒருசார்பாய் நடத்தல், மதம், மொழி, கலாச்சாரம் போன்றவற்றைத் தாக்குதல், பொருளாதார அழிவுகளை ஏற்படுத்துதல் போன்ற செயல் வடிவமாக வெளிப்படுகிறது. இதன் பாதிப்பை அனுபவப்பட்டவரனறி பிறர் அறிய இயலாது வெளிப்படையாகத் தெரியாது. இது, பணம், அதிகாரம், பதவி, ஆசை எனும் கருவி கொண்டு, பொருண்மை கருவி துணையுடனோ அல்லது துணையின்றியோ, செயல் படுத்தப்படுகிறது.

இவ்வுலகில் அனைத்து உயிரினங்களும் தங்களால் தாங்கும் நிலைக்கு பொறுத்துப் போகின்றன. பொறுமை காப்பதனால் பலன் இல்லை எனும் நிலையில் அனைத்து உயிரினங்களுமே போராட துணிகின்றன. ஏனெனில், அவை போரடாவிட்டல் வாழ்க்கை என்பதே இல்லாது உணரப்படுகிறது. சமத்துவமின்மை நிலவும் போது இது பயங்கரவாதமாகவோ அல்லது தீவிரவாதமாகவோ வெளிப்படுகிறது.

பயங்கரவாதம் என்பது, சிறப்பாகக் கட்டாயப்படுத்தும் நோக்கில் ஒழுங்கமைந்த முறையில் அச்சமூட்டலைப் பயன்படுத்துவது ஆகும். இதற்கு, உலக அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட வரைவிலக்கணம் கிடையாது. பயங்கரவாதத்தின் மிகப் பொதுவான வரைவிலக்கணங்கள், கருத்தியல் சார்ந்த இலக்கொன்றை அடைவதற்காகப் பயத்தை உருவாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடல், போரில் ஈடுபடாதவர்களை வேண்டுமென்றே இலக்குவைத்தல் அல்லது அவர்களது பாதுகாப்பைப் பொருட்படுத்தாது விடுதல் போன்றவற்றை உள்ளடக்குகின்றன. சில வரைவிலக்கணங்கள், சட்டத்துக்குப் புறம்பான வன்முறை, போர்கள் என்பவற்றையும் சேர்த்துக்கொள்கின்றன. பல நாடுகளும் இயக்கங்களும், தாம் அல்லது தமது கூட்டாளிகள் இதே நடவடிக்கைகளில் ஈடுபடும்போது அதை வேறுபெயர்கள் சொல்லி அழைத்து நியாயப்படுத்துவதும், அதனை ஊக்குவிப்பதும் தமக்கு வேண்டாதவர்கள் செய்யும்போது அதைப் பயங்கரவாதம் என்பதும் உலக நடைமுறையாக உள்ளது.

மத பயங்கரவாதம்

தொகு

ஒரு குறிப்பிட்ட நம்பிக்கைகளை அமலாக்கவும், மத நம்பிக்கைகளை பரப்பவும் மத பயங்கரவாதம் உலகளவில் பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக செப்டம்பர் 11 தாக்குதலுக்கு முன்பு வரை உலக அளவில் தேசியவாதத்தை முன்னிறுத்திய தீவிரவாத குழுக்களே அதிக வன்முறைகளில் ஈடுபட்டன. ஆனால் செப்டம்பர் தாக்குதலுக்கு பிறகு மத தீவிரவாத தாக்குதல்கள் 5 மடங்காக பெருகின. குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளில் போகோ ஹரம்,  ஐஎஸ்ஐஎஸ், அல்-காய்தா, தாலிபான் போன்ற அமைப்புகள் உலக அளவில் மத தீவிரவாத போக்கிற்கு வழிவகுத்தன. 

இந்த தீவிரவாத குழுக்கள் குறிப்பாக ஈராக், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நைஜீரியா, சிரியா போன்ற நாடுகளில் மிக தீவிரமாக செயல்படுகின்றனர். தீவிரவாதத்தில் உயிரிழந்தவர்களில் 80 சதவீதம் பேர் மேலே குறிப்பிட்ட ஏதோ ஒரு நாட்டை சேர்ந்தவராகவே உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இரட்டை கோபுர தாக்குதல்கள்

தொகு

செப்டம்பர் 11, 2001 அன்று அமெரிக்காவின் உலக வர்த்த மைய கட்டிடம், ராணுவ தலைமையகம் (பென்டகன்) ஆகியவற்றின் மீது அல் கைடா அமைப்பு விமானத்தை மோதி தற்கொலைபடை தாக்குதல் நடத்தியது. இதில் 3000 பேர்வரை உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பின்பு பயங்கரவாதத்துக்கு எதிரான உலக நாடுகளின் செயல்பாடுகளில் பெரியளவில் மாற்றங்கள் ஏற்பட்டன. அமெரிக்கா ஆப்கானிஸ்தான் மீது போர்தொடுத்ததும், சில ஆண்டுகளுக்கு பிறகு  அல் கைடா தலைவர் ஒசாமா பின்லேடன் சுட்டுகொல்லப்பட்டதும் தீவிரவாதத்திற்கு எதிரான அமெரிக்காவின் புதிய நிலைப்பாட்டை உறுதிசெய்தன. 

சுற்றுலா உடனான தொடர்பு 

தொகு

1970 வதுகளில் பயங்கரவாதிகளின் இலக்கு பொதுவாக காவல்துறை அதிகாரிகள் மற்றும் அரசியல் வாதிகள் தான். ஆனால் சமீப காலங்களில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பயங்கரவாத தாக்குதலுக்கு அதிகம் இலக்காகின்றனர். லூக் ஹோவெய் என்பவர் பயங்கரவாதத்தை பற்றி குறிப்பிடும் பொழுது, பயங்கரவாதிகளின் குறிக்கோள் ஒட்டுமொத்த நாகரீகத்தையும் அழிப்பதல்ல, தங்கள் செயல்பாடுகள் மூலம் ஒரு வித பய உணர்வை பரப்பி தங்கள் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ள செய்வதேயாகும். 

பயங்கரவாதிகளின் குறிக்கோள் மக்களின் கவனத்தை ஈர்ப்பதும் தான் என்பதால் வெளிநாட்டு பயணிகள் குறிவைக்கப்படுகின்றனர். காரணம் ஊடங்கள் வெளிநாட்டு பயணிகள் மீதான தாக்குதல்களுக்கு பெரிய முக்கியத்துவம் தருகின்றன. [1]

நிதி ஆதாரங்கள் 

தொகு

பயங்கரவாதிகள் பல நேரங்களில் அரசாங்களாலேயே ஊக்குவிக்கப்படுகின்றனர். உதாரணமாக பாலஸ்தீன விடுதலை இயக்கம் போன்றவை சோவியத் போன்ற நாடுகளால் நிதி உதவி செய்யப்படுகின்றன. பொதுவாக பயங்கரவாதிகள் தங்களுக்கான நிதியை சிறு சிறு தொகைகளாகவே பெறுவதால் அவற்றை கண்காணிப்பதும் உலக நாடுகளுக்கு பெரிய சவாலாக உள்ளது.தீவிரவாத குழுக்கள் பல நேரங்களில் போதைப்பொருள் கடத்தல், ஆட்களை கடத்தி பணம்பெறுதல், ஹவாலா பரிமாற்றம் போன்றவற்றில் ஈடுபட்டும் நிதியை பெறுகின்றனர்.[2].

இன்று உலகை அச்சுறுத்தும் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள் தங்கள் நிதிதேவைக்காக சிரியா மற்றும் ஈராக்கில் தாங்கள் கைப்பற்றிய பகுதிகளில் உள்ள பழங்கால கலை பொருட்களை கடத்தி உலக சந்தைகளில் கள்ளத்தனமாக விற்க துவங்கினர்.[3] அல் காயிதா போன்ற பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி வழங்குவதாக கூறி அமெரிக்கா, சவுதி, பஹரைன், யுஏஈ போன்ற நாடுகள் கத்தார் நாட்டுடனான ராஜாங்க உறவை 2017 ஜூன் மாதத்தில் துண்டித்தன.[4]

யுத்திகள் 

தொகு

பயங்கரவாத தாக்குதல்கள் பொதுவாக மக்களிடம் பய உணர்வை ஏற்படுத்தவே நடைபெறுகிறது. பயங்கரவாதிகள் பொதுவாக வெடிகுண்டுகள் அல்லது விஷம் போன்றவற்றை தாக்குதலுக்கு பயன்படுத்துகின்றனர். பயங்கரவாத தாக்குதல்கள் பலநேரங்களில் முன்கூட்டியே திட்டமிடப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்ட தீவிரவாதிகளை கொண்டே நடத்தப்படுகிறது. 

பயங்கரவாதிகள் தங்கள் தகவல் தொடர்புக்கு இன்றைய நவீன கால வாட்ஸாப் முதல் பழமையான கூரியர் வரை அனைத்தையும் பயன்படுத்துகின்றனர். அரசு படைகளுடன் நேரடி யுத்தத்தில் வெற்றிபெற முடியாது என்பதால் பொதுவாக சமச்சீரற்ற போர் முறையே அதிகம் பயன்படுத்தப்படுகிறது. 

எதிர்வினைகள் 

தொகு

பயங்கரவாத எதிர்ப்பு சட்டங்கள், நாடுகடத்தல், போலீஸ் துறை நவீனமயமாக்கல், முன்னெச்சரிக்கை ராணுவ நடவடிக்கைகள், மேம்பட்ட உளவு நடவடிக்கைகள் போன்றவை பயங்கரவாதத்தை எதிர்கொள்ள உலக நாடுகளால் செயல்படத்தப்படும் நடவடிக்கைகளாகும். 

அமெரிக்கா

தொகு

செப்டம்பர் தாக்குதலுக்கு பிறகு அமெரிக்கா பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளை உலகளவில் முடுக்கிவிட்டது. குறிப்பாக இஸ்லாத்திய பயங்கரவாதத்தை எதிர்கொள்ள அமெரிக்காவின் இரண்டு கட்சிகளான குடியரசுக் கட்சி மற்றும் ஜனநாயக கட்சிகளிடையே கருத்துவேறுபாடுகள் உள்ளன. குடியரசு கட்சி புஷ் கோட்பாடு அதாவது மத்திய கிழக்கு நாடுகளில் ராணுவ நடவடிக்கை மூலம் ஜனநாயகத்தை உருவாக்கி தீவிரவாதத்தை வீழ்த்துவது என்ற கொள்கையை ஆதரிக்கிறது. ஆனால் ஜனநாயக கட்சி சட்ட அமலாக்கத்தின் மூலம் பிறநாடுகளுடன் நல்லுறவை பேணுவது மற்றும் உள்நாட்டு பாதுகாப்பை மேம்படுத்துவது என்ற கொள்கையை கொண்டுள்ளன. 

ஆராய்ச்சிகள்

தொகு

பயங்கரவாதம் மற்றும் பயங்கரவாத தடுப்பு என்பது கல்வித்துறையில் பெரிய ஆராய்ச்சி தலைப்புகளாக உள்ளன. இத்தகைய ஆராய்ச்சிகளின் நோக்கம் பயங்கரவாதத்தின் காரணத்தை புரிந்துகொள்வது, அவற்றை தடுப்பது மற்றும் பயங்கரவாதத்தின் விளைவுகளை புரிந்து கொள்வது போன்றவையாகும். பயங்கரவாத ஆராய்ச்சிகள் சிவில் மற்றும் ராணுவ சூழலில் நடத்தப்படுகின்றது. இன்டர்நேஷனல் சென்டர் பார் கவுன்டர் டேரரிசம் (ICCT) போன்றவை இத்தகைய ஆராய்ச்சி நிலையங்களாகும். [5]

பயங்கரவாத குழுக்களின் முடிவு

தொகு

ஆராய்ச்சி முடிவுகளின் படி 1968 முதல் 2006 ஆம் ஆண்டுவரை 648 தீவிரவாத குழுக்கள் செயல்பாட்டில் இருந்தன. 2006க்கு பிறகு அவற்றில் 136 மேலும் பல குழுக்களாக பிரிந்தும் 244 செயல்பாட்டிலும் இருப்பதாக கண்டறியப்பட்டது. 

செயல்பாடு அற்ற நிலையில் இருந்த தீவிரவாத குழுக்களில் 43 சதவீதம் குழுக்கள் வன்முறையை கைவிட்டனர், 40 சதவீதம் குழுக்கள் சட்டத்தின் மூலம் அடக்கப்பட்டன, 10 சதவீதம் வெற்றிபெற்றன, 7 சதவீதம் ராணுவ நடவடிக்கை மூலம் ஒழிக்கப்பட்டுள்ளன. 

ஒரு தீவிரவாத குழுவின் நடவடிக்கைகளை முடிவுக்கு கொண்டுவர ஆறு முக்கிய வழிமுறைகள் அறியப்பட்டுள்ளன. 

  1. குழுவின் தலைவர் பிடிபடுதல் அல்லது கொல்லப்படுதல்
  2. தீவிரவாத குழு வன்முறையை கைவிட்டு ஜனநாயக பாதைக்கு திரும்புதல்
  3. நோக்கம் நிறைவேறல் 
  4. மக்கள் ஆதரவு இல்லாமை 
  5. இரும்புக்கரம் கொண்டு அடக்குதல் 
  6. தீவிரவாதத்தில் இருந்து வேறு வன்முறை பரிமாணத்திற்கு மாற்றம் பெறுதல் 

மேற்கோள்கள்

தொகு
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2017-03-16. பார்க்கப்பட்ட நாள் 2017-06-19.
  2. https://www.un.org/sc/ctc/focus-areas/financing-of-terrorism/
  3. http://www.businessinsider.in/Heres-where-terrorist-groups-like-ISIS-and-Al-Qaeda-get-all-their-money-from/1-Taxation/slideshow/50076305.cms
  4. http://edition.cnn.com/2017/06/20/opinions/qatar-needs-to-change-its-behavior-opinion/index.html
  5. https://icct.nl/about/

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயங்கரவாதம்&oldid=3561873" இலிருந்து மீள்விக்கப்பட்டது