காட்சிக் கலை

(கட்புலக் கலை இலிருந்து வழிமாற்றப்பட்டது)

காட்சிக் கலை (Visual arts) என்பது காட்சி அம்சத்துக்கு முதன்மை கொடுக்கும் கலை வடிவத்தைக் குறிக்கும். வரைதல், ஓவியம், சிற்பம், வடிவமைப்பு, கைப்பணி, நவீன காட்சிக் கலைகள் (ஒளிப்படம், நிகழ்படம், திரைப்படம்), கட்டிடக்கலை என்பன காட்சிக் கலைகளுக்கு எடுத்துக்காட்டுகள். நிகழ்த்து கலை, கருத்துருசார் கலை, நெசவுக் கலை போன்ற பல்வேறு பிற கலைத்துறைகளும், பிற அம்சங்களுடன் சேர்த்துக் காட்சி அம்சங்களையும் கொண்டிருப்பதனால், இந்த வரைவிலக்கணத்தை இறுக்கமாக எடுத்துக்கொள்ள முடியாது. காட்சிக் கலைகளுள், தொழிற்றுறை வடிவமைப்பு, வரைகலை வடிவமைப்பு, உள்ளக வடிவமைப்பு, அலங்கரிப்புக் கலை போன்ற பயன்படு கலைகளும் அடங்குகின்றன.[1][2]

காட்சிக் கலைகளுள் ஒன்றான சிற்பக்கலை. தமிழ்நாட்டில் உள்ள மாமல்லபுரத்துச் சிற்பங்களுள் ஒன்று
காட்சிக் கலைகளுள் ஒன்றான ஓவியக்கலை. 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சீனத்து ஓவியம்.

மேலே குறிப்பிட்டபடி, காட்சிக் கலை என்பது தற்காலத்தில் நுண்கலைகளையும், அதனுடன் சேர்த்து, பயன்படு கலைகள் போன்றவற்றையும் உள்ளடக்கினாலும், எல்லாக் காலத்திலுமே இதே நிலை இருந்ததில்லை. 20 நூற்றாண்டுத் தொடக்கத்தின் கலை கைவினை இயக்கக் காலத்துக்கு முன், பிரித்தானியாவிலும் மேற்குலகின் பிற இடங்களிலும், கலைஞன் என்னும் சொல் ஓவியம், சிற்பம் போன்ற நுண்கலைகளில் ஈடுபடுபவர்களை மட்டுமே குறித்தது. இது கைவினையையோ அல்லது பயன்படு கலைகளையோ குறிக்கவில்லை. நாட்டார் கலை வடிவங்களையும், உயர் கலை வடிவங்களையும் ஒரு சேர மதித்த "கலை கைவினை இயக்கக்" கலைஞர்கள் அவற்றுக்கிடையேயான வேறுபாட்டையும் வலியுறுத்தத் தவறவில்லை. அக்காலக் கலைப் பள்ளிகளும், இரண்டையும் வேறுவேறாக நோக்கியதுடன், கைவினைஞர்கள் கலைத்தொழில் செய்பவர்களாகக் கொள்ளமுடியாது என்னும் கொள்கையைக் கொண்டிருந்தன. எனவே கைவினை, பயன்படு கலைகள் போன்றவை கலை என்ற வரம்புக்குள்ளேயே வராதபோது காட்சிக் கலைகள் என்ற வகைப்பாட்டுக்குள் இருந்திருக்க முடியாது.[3]

கல்வியும் பயிற்சியும்

தொகு

முற்காலத்தில் காட்சிக் கலைகள் தொடர்பான கல்வி ஒருவருக்குக் கீழ் தொழில் பயிலுனராக வேலை செய்வதன் மூலமே பெறப்பட்டது. மறுமலர்ச்சிக்கால ஐரோப்பாவில், கலைஞர்களுக்கான மதிப்பைக் கூட்டு முகமாக, "அக்கடமி" முறை மூலம் காட்சிக் கலைகள் உட்பட்ட கலைகளைப் பயில்வோருக்குக் கல்வி புகட்டினர். இந்தியா, இலங்கை போன்ற கீழை நாடுகளில், காட்சிக் கலைகள் தலைமுறை தலைமுறையாக குறிப்பிட்ட சாதி அல்லது குழுவினராலேயே பயிலப்பட்டு வந்தது. நுட்பங்கள் இரகசியமாகவே பாதுகாக்கப்படுவதும் உண்டு. மாணவர்கள், தந்தையிடம் அல்லது நெருங்கிய உறவினரிடம் இருந்து இக் கலைகளின் நுட்பங்களைப் பயின்றனர். தற்காலத்தில் பெரும்பாலான மாணவர்கள் மூன்றாம் நிலைக் கல்வியாகக் காட்சிக் கலைக் கல்வியைக் கலைப் பள்ளிகளில் பயில்கின்றனர். இக்காலத்தில், காட்சிக் கலைகள் பெரும்பாலான கல்வி முறைகளில், ஒரு தெரிவுப் பாடமாக உள்ளது. எனினும், குறிப்பாகக் கீழை நாடுகளில், மரபுவழிக் காட்சிக் கலைகளைத் தொழில் பயிலுனராகச் சேர்வதன் மூலம் பெற்றுக்கொள்ளும் வழக்கம் இன்னும் நிலவுகிறது.[4][5]

வரைதல்

தொகு
 
பிரான்சின் லாசுகாக்சில் உள்ள பழங்கற்காலக் குகையில் உள்ள ஒரு வரைதல்

வரைதல் என்பது பல வகைகளாகக் காணப்படும் கருவிகள், நுட்பங்கள் என்பவற்றுள் ஏதாவது ஒன்றையோ பலவற்றையோ பயன்படுத்திப் படிமங்களை உருவாக்கும் முறையாகும். பொதுவாக ஒரு மேற்பரப்பில் அடையாளத்தை ஏற்படுத்தக்கூடிய கருவி ஒன்றை அம் மேற்பரப்பில் வைத்து அழுத்திக் கீறுவதன் மூலம் இது செய்யப்படுகிறது. வரைதல் பொதுவாகத் தாளொன்றில் கோடு கீறுவதுடனும், பரப்புக்களுக்குச் சாயை கொடுத்தலுடனும் தொடர்புள்ளது. காரீயக் கோல், பென்சில், பேனாவும் மையும், நிறப் பென்சில்கள், கரி, வண்ணப்பசை போன்றவை இத்தகைய கருவிகள். தற்காலத்தில், வரைவதற்கு, எண்மியக் கருவிகளும் பயன்படுகின்றன. பல்வேறு வகை வரைதலுக்கான மென்பொருள்களும் உள்ளன. வரைதலுக்கான நுட்பங்களில் கோட்டு வரைதல், கோட்டு நிரப்பல், குறுக்குக் கோட்டு நிரப்பல், கிறுக்கல், புள்ளி நிரப்பல் முதலியன அடங்கும். வரைதல் தொழில் புரிபவரை வரைவாளர் அல்லது வரைஞர் என அழைப்பர்.

வரைதல், குறைந்தது 16,000 ஆண்டுகளுக்கு முந்திய பழமையுடையது. பல்வேறு வகையான விலங்குகளைக் காட்டும் வரைதல்களைப் பிரான்சின் லாசுகோக்சு என்னும் இடத்திலும், இசுப்பெயினின் ஆல்ட்டமிராவிலும் உள்ள பழங்கற்காலக் குகைகளில் கண்டுபிடித்துள்ளனர். பண்டை எகிப்தில், பப்பிரசுத் தாள்களில் மையினால் வரைந்த மனிதர்களைக் காட்டும் வரைதல்கள், ஓவியங்களுக்கும், சிற்பங்களுக்கும் முதற்கட்ட மாதிரியாகப் பயன்பட்டுள்ளன. கிமு 7 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கிரேக்கப் பூஞ்சாடிகளில் வரைதல்களை வரைந்துள்ளனர். இவை முதலில் வடிவவியல் கோலங்களாகவும், பின்னர் மனித உருவங்களைக் கொண்டவையாகவும் அமைந்திருந்தன. கிமு 7 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இத்தகைய பூஞ்சாடிகள் கறுப்பு உருவ மட்பாண்டங்கள் எனப்பட்டன.

கிபி 15 ஆம் நூற்றாண்டளவில், கடதாசித் தாள்கள் தாராளமாகக் கிடைக்கத் தொடங்கிய பின்னர், ஐரோப்பாவில் சான்ட்ரோ பொட்டிசெல்லி, ராஃபேல், மைக்கேலாஞ்செலோ, லியோனார்டோ டா வின்சி போன்றோர் வரைதலை ஓவியத்துக்கோ சிற்பத்துக்கோ ஒர் தொடக்கக் கட்டமாக மட்டும் கருதாமல் அவற்றைத் தனியான ஒரு கலை வடிவமாகவே பயன்படுத்தினர். இந்தியா, இலங்கை போன்ற கீழைத்தேச நாடுகளில் பனையோலை ஏடுகளில் எழுதப்பட்ட நூல்களுக்கு இடையே சில சமயங்களில் வரைதல்கள் வரையப்பட்டன.

ஓவியம்

தொகு

ஓவியம் என்பது, வண்ணத்தூள், ஊடகம், பிணைக்கும் பொருள் ஆகியவற்றால் ஆன நிறக்கூழைப் பயன்படுத்தி, தாள், கன்வசு, சுவர் போன்ற மேற்பரப்புக்களில் பூசுவதன் மூலம் பெறப்படுவது ஆகும். எனினும் வெறுமனே பூசுவது ஓவியம் ஆகாது. பல்வேறு கலை நுட்பங்களைப் பயன்படுத்திக் கருத்துரு சார்ந்த நோக்கங்களை அழகியல் நோக்குடன் கலைஞன் வெளிப்படுத்தும்போதே ஓவியம் உருவாகிறது.

 
1520ல் ராஃபேல் வரைந்த ஓவியம்Raphael: உருவமாற்றம் (Transfiguration) (1520)

ஓவியமும் நீண்ட வரலாறு கொண்டது. பழமையான பழங்கற்காலக் குகைகளில் ஓவியங்கள் உள்ளன. தெற்கு பிரான்சில் உள்ள சோவெட், லாசுகாக்சு போன்ற இடங்களில் காணப்படும் ஓவியங்கள் இவற்றுக்கு எடுத்துக்காட்டு. சிவப்பு, மண்ணிறம், மஞ்சள், கறுப்பு ஆகிய நிறங்களைக் கொண்டு குகைச் சுவர்களிலும், விதானங்களிலும் இவ்வோவியங்கள் வரையப்பட்டுள்ளன. பெரும்பாலும் விலங்குகளே இவற்றின் கருப்பொருளாக உள்ளன. மனித உருவங்களைக் கருப்பொருளாகக் கொண்ட ஓவியங்கள் பண்டை எகிப்துக் கல்லறைகளில் காணப்படுகின்றன. இரண்டாம் ராம்செசுவின் பெரிய கோயிலில் உள்ள ஒரு ஓவியத்தில் ஐசிசுக் கடவுள், ராம்செசுவின் மனைவி அரசி நெஃபெர்த்தாரியை அழைத்துச் செல்லும் காட்சி ஓவியமாக வரையப்பட்டு உள்ளது. கிரேக்கர்களின் காலத்திலும், ரோமப் பேரரசுக் காலத்திலும் ஓவியங்கள் வளர்ச்சியுற்றன. இவ்விரு நாகரிகங்களும், பைசன்டைன் நாகரிகக் காலத்து ஓவியக்கலை வளர்ச்சிக்குப் பங்களிப்புச் செய்துள்ளன.

 
கியூபியக் கலைக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டு பிக்காசோ வரைந்த ஓவியம். தலைப்பு: "மூன்று இசைக்கலைஞர்கள்" (Three Musicians)

பின்னர் மறுமலர்ச்சிக் காலத்தில் இத்தாலியில், 13 ஆம் நூற்றாண்டில் தொடங்கி 16 ஆம் நூற்றாண்டுவரை, கியோட்டோ, லியோனர்டோ டா வின்சி, ராஃபேல் போன்றோர் ஓவியக் கலையின் வளர்ச்சிக்குப் பெரும் பங்களிப்புச் செய்தனர். இத்தாலிய ஓவியக்கலையின் பொற்காலம் எனக் கருதப்படும் இக் காலகட்டத்தில், "கியாரோசுக்குரோ" என அழைக்கப்படும் "ஒளி-இருள்" நுட்பம் மூலம் முப்பரிமாண உணர்வைக் கொடுக்கக்கூடிய ஓவியங்கள் வரையப்பட்டன. வடக்கு ஐரோப்பிய ஓவியர்களும் இத்தாலிய ஓவியக் கலைச் செல்வாக்குக்கு உட்பட்டனர். பெல்சியத்தைச் சேர்ந்த சான் வான் எய்க், நெதர்லாந்தின் மூத்த பீட்டர் புரூகெல், செருமனியரான இளைய ஆன்சு ஒல்பெயின் என்போர் அக்காலத்தில் வெற்றிகரமான ஓவியர்களாகத் திகழ்ந்தனர். அவர்கள் மினுக்கும் நுட்பத்தைப் பயன்படுத்தி ஓவியத்துக்கு ஆழத்தையும் ஒளிர்வையும் கொடுத்தனர். 17 ஆம் நூற்றாண்டில், நெதர்லாந்தில் புகழ் வாய்ந்த ஓவியர்கள் உருவாகினர். ரெம்பிரான்ட் விவிலியம் காட்சிகளுக்காகப் பெயர் பெற்று விளங்கினார், வெர்மீர் உள்ளகக் காட்சிகளை வரைவதில் சிறந்து விளங்கினார்.

19 ஆம் நூற்றாண்டிலும் அதற்குப் பின்னரும் ஐரோப்பாவில் பல ஓவியப் பாணிகள் தோன்றி ஓவியக் கலைக்குப் புதிய பரிமாணங்களைக் கொடுத்தன. 19 ஆம் நூற்றாண்டில், பிரான்சில் உணர்வுப்பதிவியம் என்னும் கோட்பாட்டின் அடிப்படையில் ஓவியங்கள் வரையப்பட்டன. குளோட் மொனெட், பியரே-அகசுத்தே ரெனோயிர், பால் செசான்னே போன்றோர் இக் கோட்பாட்டைப் பின்பற்றியவர்களில் முக்கியமானவர்கள். 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் உணர்வுப்பதிவியத்தை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்லும் விதமாக பின்-உணர்வுப்பதிவியம் என்னும் கலைக் கோட்பாடு உருவானது. தொடர்ந்து குறியீட்டியம், வெளிப்பாட்டியம், கியூபிசம் போன்ற கலைக் கோட்பாடுகள் உருவாகி அவற்றின் அடிப்படையில் நவீன ஓவியங்கள் வரையப்பட்டன.

மேற்கோள்கள்

தொகு
  1. "Centre for Arts and Design in Toronto, Canada". Georgebrown.ca. 2011-02-15. Archived from the original on 28 October 2011. பார்க்கப்பட்ட நாள் 2011-10-30.
  2. Different Forms of Art – Applied Art பரணிடப்பட்டது 2017-06-23 at the வந்தவழி இயந்திரம். Buzzle.com. Retrieved 11 December 2010.
  3. Art History: Arts and Crafts Movement: (1861–1900). From World Wide Arts Resources பரணிடப்பட்டது 13 அக்டோபர் 2009 at the Portuguese Web Archive. Retrieved 24 October 2009.
  4. Ulger, Kani (2016-03-01). "The creative training in the visual arts education" (in en). Thinking Skills and Creativity 19: 73–87. doi:10.1016/j.tsc.2015.10.007. பன்னாட்டுத் தர தொடர் எண்:1871-1871. http://www.sciencedirect.com/science/article/pii/S187118711530033X. 
  5. Adrone, Gumisiriza (in en). School of industrial art and design. https://www.academia.edu/35097884. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=காட்சிக்_கலை&oldid=4041163" இலிருந்து மீள்விக்கப்பட்டது