கனகலதா கிருஷ்ணசாமி

(கனகலதா கிருஷ்ணசாமி ஐயர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

லதா எனப்படும் கனகலதா கிருஷ்ணசாமி ஐயர் சிங்கப்பூரைச் சேர்ந்த தமிழ் எழுத்தாளர் ஆவார். இவர் இலங்கையில் பிறந்து, சிறுவயதிலேயே சிங்கப்பூரில் குடியேறியவர். சிங்கப்பூர் தேசிய நாளிதழான தமிழ் முரசில் நீண்ட காலம் துணையாசிரியராகப் பணியாற்றுபவர். இவர் எழுதிய நான் கொலை செய்த பெண்கள் என்ற புத்தகத்திற்கு 2008 ஆம் ஆண்டுக்கான சிங்கப்பூர் இலக்கிய விருது (தமிழ்) வழங்கப்பட்டது[1].

கனகலதா கிருஷ்ணசாமி ஐயர்
பிறப்புநீர்கொழும்பு, இலங்கை
இருப்பிடம்சிங்கப்பூர்
தேசியம்சிங்கப்பூரர்
கல்விநீர்கொழும்பு விஜயரத்தினம் மகா வித்தியாலயம்,
யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி
பணிஊடகவியலாளர்
பணியகம்தமிழ் முரசு
அறியப்படுவதுஎழுத்தாளர், கவிஞர்

வாழ்க்கைக் குறிப்பு தொகு

இலங்கையில் நீர்கொழும்பில் பிறந்த கனகலதா நீர்கொழும்பு விஜயரத்தினம் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்றார். 1983 ஆம் ஆண்டில் நாட்டில் இடம்பெற்ற இனக்கலவரத்தை அடுத்து குடும்பத்துடன் யாழ்ப்பாணத்திற்கு இடம்பெயர்ந்து யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியில் தனது கல்வியைத் தொடர்ந்தார். அதன் பின்னர் சிங்கப்பூருக்கு இடம்பெயர்ந்தார். 20 ஆண்டுகளாக தமிழ் முரசு பத்திரிகையில் செய்தி ஆசிரியராகப் பணியாற்றுகிறார்.

எழுத்துப் பணி தொகு

சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகக் கலைகள் மன்றம் வெளியிட்டுள்ள கவிதைத் தொகுதியிலும் (1995), தேசியக் கலைகள் மன்றம் தொகுத்த நூற்றாண்டுக்கால சிங்கப்பூர்க் கவிதைகள் பன்மொழித் தொகுப்பிலும் (2000), 'கனவும் விடிவும்' என்ற இந்திய சாகித்திய அகாதமி வெளியிட்ட தற்காலத் தமிழ்ப் பெண் கவிஞர்கள் தொகுப்பிலும் இவரது கவிதைகள் இடம் பெற்றுள்ளன. இவர் சிறுகதைகளும் எழுதி வருகிறார்.

கனகலதாவின் கவிதைகள் மற்றும் சிறுகதைகள் கணையாழி, காலச்சுவடு, உயிர்நிழல், மற்றும் சரிநிகர் போன்ற இதழ்களில் வெளிவந்துள்ளன. இவரது தீவெளி நூல் தமிழ்நாடு பெரியார் பல்கலைக்கழகத்தின் இலக்கியப் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. இவரது ஆக்கங்கள் ஆங்கிலம், பிரெஞ்சு, செருமானிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

சிங்கப்பூர் இலக்கிய விருது தொகு

2008 ஆம் ஆண்டுக்கான தமிழ் மொழிக்கான சிங்கப்பூர் இலக்கிய விருது கனகலதாவுக்கு நான் கொலை செய்த பெண்கள் என்ற நூலுக்காக வழங்கப்பட்டது. இவ்விருதோடு $10,000 வரை ரொக்கமும் இவருக்குக் கிடைத்தது. சிங்கப்பூரின் சமூக வளர்ச்சி, இளையர் விளையாட்டுத்துறை அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் 2008 டிசம்பர் 3 ஆம் நாள் நடந்த விழாவில் விருதை வழங்கினார்.

இவரது நூல்கள் தொகு

  • தீவெளி (கவிதைகள், 2003)
  • பாம்புக் காட்டில் ஒரு தாழை (கவிதைகள், 2004)
  • நான் கொலை செய்த பெண்கள் (சிறுகதைத் தொகுப்பு)
  • The Goddess in the Living Room (புதினம்)

மேற்கோள்கள் தொகு

  1. முரசு செய்தி ஆசிரியர் கனகலதாவுக்குச் சிங்கப்பூர் இலக்கிய விருது[தொடர்பிழந்த இணைப்பு]

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கனகலதா_கிருஷ்ணசாமி&oldid=3238133" இலிருந்து மீள்விக்கப்பட்டது