கமில் சுவெலபில்

(கமீல் ஜீவலபில் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

கமில் வாச்லவ் சுவெலபில் (Kamil Vaclav Zvelebil, நவம்பர் 17, 1927 - ஜனவரி 17, 2009) செக் நாட்டில் பிறந்து தமிழுக்குச் சிறந்த தொண்டாற்றிய மொழியியல் வல்லுநர்களில் ஒருவர். தமிழ், தமிழர் பற்றிப் பிறமொழியினருக்குச் சிறப்பாக அறிமுகம் செய்துவைத்தவர்களில் இவருக்கு முக்கிய பங்கு உண்டு.

கமில் வாச்லவ் சுவெலபில்
பிறப்புநவம்பர் 17, 1927
பிராகா,  செக் குடியரசு
இறப்புஜனவரி 17, 2009
 பிரான்சு
பணிபேராசிரியர்
பெற்றோர்கமில் சுவெலபில்
மரியம்மா
வாழ்க்கைத்
துணை
நீனா சுவெலபில்

வாழ்க்கைக் குறிப்பு

தொகு

கமில் சுவெலபில் பிராகா மாநகரில் பிறந்தவர். தந்தை கமில் சுவெலபில் தாயார் மரியம்மா[1]. பிராகாவில் அமைந்துள்ள சார்ல்சு பல்கலைக்கழகத்தில் 1946-52 வரை கல்வி பயின்றார். 1952 இல் நீனா என்னும் அம்மையாரை மணந்தார். இவர்களுக்கு மூன்று பிள்ளைகள். இந்தியவியல், ஆங்கில இலக்கியம், சமற்கிருதம், தத்துவம் பயின்றவர். சமற்கிருதத்தில் 1952 ஆம் ஆண்டில் முனைவர் பட்டம் பெற்றார். பின்னர் திராவிட மொழியியலில் 1959 ஆம் ஆண்டில் இரண்டாவது முனைவர் பட்டத்தையும் பெற்றார். 1952 முதல் 1970 வரை செக்கோசுலவாக்கியாவில் அமைந்துள்ள கீழையியல் துறையில் தமிழ் திராவிட மொழியியல் பிரிவில் ஆய்வாளராகப் பணிபுரிந்தார். கிரேக்கம், இலத்தீன், செருமன், ஆங்கிலம், உருசியன், சமற்கிருதம், தமிழ் முதலிய மொழிகள் நன்கு தெரியும். மலையாளம், இந்தி, பிரெஞ்சு, இத்தாலியன், போலந்து மொழி, உள்ளிட்ட மொழிகளையும் அறிவார்.

தமிழ் மொழி ஆர்வம்

தொகு

செக் நாட்டில் தூதுவரகத்தில் பணிபுரிந்த தமிழ் அன்பர் ஒருவர் வழியாக தமிழ் கற்கத் தொடங்கிய கமில் வானொலி வழியாகவும் நூல்கள் வழியாகவும் தமிழ் படிக்கத் தொடங்கினார். தமிழ் பற்றி பிரஞ்சுமொழியில் பியாரே மெய்லே (Perre Meile) என்பவர் எழுதிய Introduction an Tamoul என்ற நூல் வழியாகவும் தமிழ் அறிமுகம் கிடைத்தது. தென்னிந்தியாவிற்கு பலமுறை களப்பணி ஆய்வுக்காக வந்துள்ளார். சென்னைக்கு இவர் வருகை தரும்பொழுது தமிழகத்து அறிஞர்கள் இவருக்கு வரவேற்பு நல்கியும் பாராட்டு வழங்கியும் பன்முறை ஊக்குவித்துப் போற்றியுள்ளனர்.

கமில் கற்கவும் கற்பிக்கவும் பல வெளிநாடுகளுக்குச் சென்று வந்தவர். அவ்வகையில் 1965-66 இல் அமெரிக்காவில் சிக்காக்கோ பல்கலைக்கழகத்திலும், 1967-68 இல் செருமனி கெய்டல்பெர்க் பல்கலைக்கழகத்திலும் வருகைதரு பேராசிரியராகப் பணிபுரிந்தவர். 1968 இல் சார்லசு பல்கலைக்கழகத்தில் இணைப்பேராசிரியராகப் பணியுயர்வு பெற்றார். 1970 இல் பிரான்சில் வருகைதரு பேராசிரியராகப் பணிபுரிந்தார். லெய்டன் பல்கலைக் கழகத்திலும் பேராசிரியராகப் பணிபுரிந்துள்ளார். நெதர்லாந்து யூட்ரிச் பல்கலைக்கழகத்திலும் பேராசிரியராகப் பணிபுரிந்தவர்.

தமிழ்க்கடவுளான முருகனிடத்து இவருக்கு மிகுந்த ஈடுபாடு உண்டு. திருமுருகன் பற்றி இவர் எழுதியுள்ள ஆங்கில நூலில் முருகப்பெருமான் குறித்த அனைத்துச் செய்திகளும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. தமிழ் யாப்புப் பற்றி அறிஞர் சிதம்பரநாதன் செட்டியார் அவர்கள் வழியாக ஈடுபாடு வரப்பெற்ற கமில் சுவலபில் தமிழ் யாப்புப் பற்றியும் விரிவாக ஆங்கிலத்தில் எழுதியுள்ளார். இவர்தம் யாப்பு குறித்த பல நூல்களை முனைவர் பொற்கோ அவர்கள் மதிப்பீடு செய்திருக்கிறார். தமிழ்-சப்பானிய மொழி உறவு குறித்த கருத்தில் நல்ல கருத்து கமில் சுவலபில் அவர்களுக்கு இருந்துள்ளது. நீலகிரிப் பகுதியில் பேசப்படும் இருளர் மொழி பற்றிய ஆய்வில் கமில் சுவலபில் அவர்கள் தம்மை ஈடுபடுத்திக்கொண்டவர். இருளர் மொழியை மொழியியல் நோக்கில் ஆராய்ந்து வெளிப்படுத்தியவர்.

திராவிட மொழியியல், சங்க இலக்கியம் பற்றி விரிவாக ஆங்கிலத்தில் எழுதியவர். தமிழ் வழக்குச் சொற்கள் பற்றியும் எழுதியுள்ளார்.

பிற்காலம்

தொகு

1992 இல் தம் பேராசிரியர் பணியிலிருந்து ஓய்வு பெற்று பிற்காலத்தில் பிரான்சு தலைநகரம் பாரிசுக்கு அருகில் ஒரு சிற்றூரில் வாழ்ந்து வந்தார். உடல்நலக்குறைவு ஏற்பட்டபொழுதும் எழுதுவதிலும் படிப்பதிலும் கவனம் செலுத்தினார். ஜனவரி 17, 2009 -ல் மரணமடைந்தார்.

கமில் சுவலபில் நூல்கள் சில

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. சுவெலபில் என்பதற்கு To make everything better,to make everything more perfect:more beautiful என்பது பொருளாகும். எனவே பின்னாளில் சைவசித்தாந்த நூற்பதிப்புகழக ஆட்சியர் வ.சுப்பையா பிள்ளை அவர்கள் நிரம்ப அழகியர் என்ற பெயரைக் கமில் சுவெலபிலுக்குத் தமிழில் சூட்டினார்

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கமில்_சுவெலபில்&oldid=3606053" இலிருந்து மீள்விக்கப்பட்டது