கருணாமிர்த சாகரம்

(கருணாமிர்தசாகரம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

கருணாமிர்த சாகரம் என்பது தமிழிசையை ஆழமாக ஆய்ந்து, தஞ்சாவூர் ராவ்சாகிப் மு. ஆபிரகாம் பண்டிதர் அவர்களால் எழுதப்பட்ட ஆய்வு நூல் ஆகும். இந்த நூல், கி.பி. 1917-ஆம் ஆண்டு 1346 பக்கங்களுடன் வெளிவந்தது. 12-ஆம் நூற்றாண்டில் இருந்து தேக்க நிலையில் இருந்த தமிழிசையை மீண்டும் தழைக்கும்படிச் செய்ய, இந்த நூல் உந்து சக்தியாக இருந்தது.[1]

பல நூற்றாண்டு கால நீண்ட இடைவெளிக்குப் பிறகு, தமிழிசையின் தொன்மை வரலாற்றை, முதன்முதலாக விவரித்து வெளிவந்தமையால், தற்கால இசை நூல்களுள், இதனையே முதல் நூலாகக் கருதுகின்றனர். தமிழிசையியல் என்னும் பெருங்கடலில் பயணம் செய்வோருக்குக் ‘கருணாமிர்த சாகரம்’ ஒரு கலங்கரை விளக்கமாகும்.

நூற்சிறப்புகள்

தொகு

‘தமிழிசை பற்றித் தமிழில் ஒன்றுமில்லை’ என்று கருதிய காலம் பண்டிதரின் காலம் ஆகும். இதனைப் பண்டிதர், ‘'சங்கீதத்திற்குச் சங்கீத ரத்னாகரர் எழுதிய நூலே, முதல் நூலென்றும், அது சிறந்ததென்றும், தமிழ் மக்களுக்குச் சங்கீதமே தெரியாதென்றும் சொல்லுகிறார்கள்’' என்று வேதனையுடன் குறிப்-பிடுகின்றார். இக்குறையைக் போக்கும் வகையில், பல ஆண்டுகள் இசை பயின்றும் இசை நூல்களைக் கற்றும் இசையறிஞர்களோடு கலந்துரையாடியும் பழந்தமிழ்ப் பனுவல்களைத் திரட்டியும் தமிழிசை குறித்த நீண்ட வரலாற்றையும் நுணுக்கங்களையும் ஆய்ந்து அறிந்து, கருணாமிர்த சாகரத்தை வெளியிட்டார்.

நூலமைப்பு

தொகு
  • இந்நூல்,நான்கு பாகங்களைக் கொண்டது. முதற்பாகம், மூன்று தமிழ்ச்சங்கங்கள், குமரிக் கண்டம், கடல்கோள் ஆகியன குறித்துப் பல்வேறு சான்றுகளுடன் மிகவும் விரிவாக விளக்குகின்றது. மேலும், அக்காலத்தில் வாழ்ந்த இசைப்புலவர்களின் பெயர்ப் பட்டியல் ஒன்றும் தரப்பட்டுள்ளது.
  • இரண்டாம் பாகம் இசை இயற்பியல் குறித்தவையாகும். இதில் சுருதிகளைப் பற்றி விளக்குகின்றது. இசைக்கான சுருதிகளின் எண்ணிக்கை 24 என்றும், 22 சுருதிகள் என்னும் இசையியல் கொள்கை தவறு என்றும் பல்வேறு நிலைகளில் விவாதித்து முடிவுரைக்கின்றது.
  • மூன்றாம் பாகத்தில் தமிழிசையியல் குறித்த செய்திகள், பல கிடைக்கின்றன. பெரும் பண்கள், திறப்பண்கள், பண்ணுப் பெயர்த்தல், ஆலாபனை, முற்காலப் பிற்கால நூற்களில் கூறியுள்ள இராகங்களின் தொகை, இணை, கிளை, பகை, நட்பு என்னுமட் பொருந்திசைச் சுரங்களைக் கண்டு கொள்ளும் முறைகள் ஆகியன பற்றி சிலப்பதிகாரம், சங்க இலக்கியம் வழி நின்று விளக்கப்படுகின்றது.
  • நான்காம் பாகத்தில் இளங்கோவடிகள் குறிப்பிட்ட வட்டப்பாலை, ஆயப்பாலை, சதுரப்பாலை, திரிகோணப்பாலை குறித்தும், மாந்தன் உடலுக்கும், யாழ்வடிவுக்கும் ஓப்பீடு, யாழ் வகைகள் குறித்தும் விளக்குகின்றது.தொல்காப்பியம், சிலப்பதிகாரம், சங்க இலக்கியம், பிற இலக்கியங்கள் வழிப் பெற்ற சான்றுகளின் அடிப்படையிலும், பிறமொழி நூல்கள், வல்லுநர்களின் கருத்துகளின் அடிப்படையிலும் மிகவும் ஆழ்ந்து, ஆய்வு செய்து எழுதப்பட்டது இப்பெருநூல் ஆகும்.

மேற்கோள்கள்

தொகு
  1. பி. டி. செல்லத்துரை. (2005). தென்னக இசையியல். திண்டுக்கல்: வைகறைப் பதிப்பகம். பக்கம்: 273.

இவற்றையும் பார்க்கவும்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கருணாமிர்த_சாகரம்&oldid=3291417" இலிருந்து மீள்விக்கப்பட்டது