கரோல் விசுவநாதபிள்ளை

கரோல் விசுவநாதபிள்ளை (Caroll Visvanathapillai, 1820 - 1880) இலங்கைத் தமிழறிஞரும், இதழாசிரியரும் ஆவார்.[1][2]

வாழ்க்கைக் குறிப்பு

தொகு

விசுவநாதபிள்ளை 1820 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணம், சுதுமலையைச் சேர்ந்த மருத்துவரும், தமிழறிஞருமான வைரவநாதபிள்ளை என்பாருக்குப் பிறந்தார்.[1] இவர் தமிழை தனது தந்தையிடமிருந்தும், சமற்கிருதத்தை கங்கப் பட்டர் என்பவரிடம் இருந்தும் தனது 12-வது அகவையிலேயே கற்றுத் தேர்ந்தார். உயர் கல்விக்காக 1832 இல் வட்டுக்கோட்டை குருமடத்தில் சேர்ந்தார். அங்கு அவர் கிறித்தவராகத் திருநிலைப்படுத்தப்பட்டு டானியல் எல். கரோல் என்ற பெயரைப் பெற்றார்.[1] ஆங்கிலத்திலும், கணிதத்திலும் பெரும் புலமை பெற்றார். இளமையிலேயே வீசகணிதம் என்ற நூலை எழுதிப் புகழ் பெற்றார்.[3]

தனது உயர் கல்வியை முடித்த பின்னர் அங்கேயே கணித ஆசிரியராகப் பணியாற்றினார். இவருடன் ஆணல்ட் சதாசிவம்பிள்ளை, மோசசு வேலுப்பிள்ளை ஆகியோரும் பணியாற்றினர்.[1] இவரிடம் கல்வி கற்றுப் பின்னர் பெரும் புகழடைந்தவர்களுள் சி. வை. தாமோதரம்பிள்ளை குறிப்பிடத்தக்கவர். வட்டுக்கோட்டை குருமடத்தில் பணி புரிந்த காலத்திலேயே விசுவநாதபிள்ளை உதயதாரகை பத்திரிகையில் பல கட்டுரைகளை எழுதினார்.[3] 1847 முதல் ஆணல்ட் சதாசிவம்பிள்ளையுடன் இணைந்து அப்பத்திரிகையின் இணையாசிரியராகப் பணியாற்றினார். 1855 இல் வட்டுக்கோட்டை குருமடம் மூடப்பட்டது.[1]

தமிழகம் பயணம்

தொகு

செமனிறியின் பணிப்பின் பேரில் சென்னை சென்றார் விசுவநாதபிள்ளை அங்கே தினவர்த்தமானி என்ற பத்திரிகை நடத்தி வந்த பேர்சிவல் பாதிரியாரின் தொடர்புடன், அப்பத்திரிகையிலும் கட்டுரைகள் எழுதி வந்தார்.[3]

சென்னையில் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்ட போது, விசுவநாதபிள்ளையும், சி. வை. தாமோதரம்பிள்ளையும் அங்கு பயின்று 1857 இல் குரு, சீடன் இருவரும் ஒரே நேரத்தில் முதலாவது பட்டதாரிகளாக அங்கிருந்து வெளியேறினர்.[1][3] பின்னர் விசுவநாதபிள்ளை சென்னையிலேயே தங்கி மொழிபெயர்ப்புப் பணிகளில் ஈடுபட்டார்.[1] பல்கலைக்க்ழகத்தாரின் ஆங்கில நூல்கள் பலவற்றைத் தமிழில் மொழிபெயர்த்தார். பரீட்சகராகவும் பதவி உயர்வு பெற்றார்.[3]

நாவலருடன் தொடர்பு

தொகு

ஆறுமுக நாவலருக்கு இரு ஆண்டுகள் மூத்தவர் விசுவநாதபிள்ளை. விசுவநாதபிள்ளை பட்டிக்கோட்டா செமினறியில் ஆசிரியராகப் பணியாற்றிய காலத்தில், நாவலர் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றி வந்தார்.[3] இளைஞர்களாக இருந்த இருவரும் பொது விடயங்களில் வாதங்கள் செய்வதுண்டு. 1952 இல் நாவலர் சைவ தூசண பரிகாரம் என்ற கண்டனக் கட்டுரை ஒன்றை எழுதினார். அதற்கு மறுப்புத் தெரிவித்து விசுவநாதபிள்ளை சுப்பிரதீபம் என்ற கட்டுரையைத் தருக்கரீதியாக எழுதி வெளியிட்டார்.[3]

சிதம்பரத்தில் இருவரும் வாதம் செய்ய முற்பட்ட போது, அவர்களிடம் இருந்த அன்பு வெளிப்படலாயிற்று. விசுவநாதபிள்ளை நாவலரிடம் சென்று "என் சத்குரு நீரே" என்று கூறி வணங்கினார். சைவ சமயத்தை இழிவாகப் பேசியமைக்காக, தமது சட்டையில் இருந்த பொன்னூசியக் கழற்றி நெய் விளக்கில் காய்ச்சி தன் நாவில் சூடு போட்டுத் தம் குற்றத்திற்குப் பிராயச்சித்தம் செய்தார்.[1][3] இருவரும் பின்னர் நண்பர்களாயினர்.

1879 ஆம் ஆண்டில் பொன்னம்பலம் இராமநாதனை இலங்கை சட்டவாக்கப் பேரவையில் தமிழ் மக்களின் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்க நாவலருடன் விசுவநாதபிள்ளையும் இணைந்து பிரசாரம் செய்து அவரை வெற்றியடையச் செய்தார்.[3]

பஞ்சாங்கம் வெளியீடு

தொகு

அமெரிக்க மிசனரிமாரின் வேண்டுகோளுக்கிணங்க விசுவநாதபிள்ளை தமிழ்ப் பஞ்சாங்கம் ஒன்றையும் எழுதி வெளியிட்டார்.[3]

அகராதி தொகுத்தல்

தொகு

சென்னை மாகாணக் கல்வி அதிகாரியின் வேண்டுகோளுக்கிணங்க தமிழ்-ஆங்கில அகராதி ஒன்றைத் தொகுத்து வெளியிட்டார். கரோல் விசுவநாதபிள்ளை இயற்கணிதம் குறித்த நூலை தமிழில் எழுதியுள்ளார்.[1][3][4] தாவரவியல், உயிரியல், புவியியல், வானவியல், உடலியல், வேதியியல், இயற்பியல், மனவியல் ஆகிய துறைகளில் பல்லாயிரம் சொற்களைக் கொண்ட இவ்வகராதியின் ஐந்தாம் பதிப்பு 1929 ஆண்டில் வேப்பேரியில் உள்ள டயோசிசன் அச்சகத்தில் 676 பக்கங்களில் பிரசுரிக்கப்பெற்றது.[3]

நூல்கள்

தொகு
  • சுப்பிரதீபம்
  • வீசகணிதம்
  • காலதீபிகை
  • கலைஞானம்
  • அட்சர கணிதம்

மறைவு

தொகு

கரோல் விசுவநாதபிள்ளை 1880 கார்த்திகை மாதத்தில் தனது 60-வது அகவையில் காலமானார்.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 1.7 1.8 Arumugam, S. (1997). Dictionary of Biography of the Tamils of Ceylon. p. 253.
  2. Kolappan, B. (16-11-2015). "First Tamil-English dictionary by a Tamil". Archived from the original on 2020-04-19. பார்க்கப்பட்ட நாள் 19-04-2020. {{cite web}}: Check date values in: |access-date= and |date= (help)
  3. 3.00 3.01 3.02 3.03 3.04 3.05 3.06 3.07 3.08 3.09 3.10 3.11 குலரத்தினம், க. சி. (நவம்பர் 1980). "கரோல் விசுவநாதபிள்ளை". மில்க்வைற் செய்தி (59): பக். 5-8. http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF_1980.11. பார்த்த நாள்: 19 ஏப்ரல் 2020. [தொடர்பிழந்த இணைப்பு]
  4. "Madras Miscellany: A dictionary pioneer". The Hindu (in Indian English). 2016-08-06. பார்க்கப்பட்ட நாள் 2021-03-24.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கரோல்_விசுவநாதபிள்ளை&oldid=3928631" இலிருந்து மீள்விக்கப்பட்டது