கிறித்தியான் ஐகன்சு

(கிறிஸ்டியான் ஹைஜன்ஸ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

கிறித்தியான் ஐகன்சு (Christiaan Huygens, கிறிஸ்டியான் ஹைகன்ஸ், ஏப்ரல் 14, 1629ஜூலை 8, 1695) ஒரு டச்சு கணிதவியலாளர், வானியலாளர், மற்றும் இயற்பியலாளர் ஆவார். ஒளியானது அலைகளாகப் பரவுகிறது என்ற அலைக் கொள்கை (Wave Theory) மூலம் உலக அறிவியல் புரட்சியில் பங்கேற்றவர் ஆவார். கோள்கள், இயந்திரவியல், ஒலியியல், இயற்பியல், கணிதம், வானவியல் ஆகிய துறைகளில் இவர் பெருமை தரும் பல பங்களிப்புகளைச் செய்துள்ளார்.

கிறித்தியான் ஹைகன்ஸ்
Christiaan Huygens
கிறிஸ்டியான் ஐகன்சு
பிறப்பு(1629-04-14)ஏப்ரல் 14, 1629
ஹேக், நெதர்லாந்து
இறப்புசூலை 8, 1695(1695-07-08) (அகவை 66)
ஹேக், நெதர்லாந்து
வாழிடம்நெதர்லாந்து, பிரான்ஸ்
தேசியம்டச்சு
துறைவானவியலாளர்,இயற்பியலாளர், கணிதவியலாளர்
பணியிடங்கள்லண்டன் ரோயல் கழகம்
பிரெஞ்சு அறிவியல் அகாடமி
கல்வி கற்ற இடங்கள்லைடன் பல்கலைக்கழகம்
ஒரேஞ்ச் கல்லூரி
ஆய்வு நெறியாளர்பிரான்ஸ் வான் ஷூட்டன்
ஜோன் பெல்
அறியப்படுவதுஊசல் மணிக்கூடு
ஃகைகன்சு–விரனெல் தத்துவம்
தாக்கம் 
செலுத்தியோர்
ரெனே டேக்கார்ட்
பிரான்ஸ் வான் ஷூட்டன்
பின்பற்றுவோர்கொட்ஃபிரீட் லைப்னிட்ஸ்

வாழ்வும் பணியும்

தொகு

நெதர்லாந்தில் டென் ஹாக் நகரில் கொன்ஸ்டன்டீன் ஹைகன்ஸ் என்பவருக்குப் பிறந்தவர். லைடன் பல்கலைக்கழகத்தில் சட்டம், மற்றும் கணிதம் படித்தார். அதன் பின்னரே அறிவியல் படிக்க ஆரம்பித்தார்.

கண்வில்லை

தொகு

ஹைஜன்ஸ் தொலைநோக்கியின் கண்வில்லையைக் கண்டறிந்தார். அதனைக் கொண்டு வான்பொருள்களை நுட்பமாக ஆய்வு செய்தார். இன்றளவும் விலை குறைந்த தொலை நோக்கிகளில் பயன்படுத்தப்படும் எளிய கண்வில்லை ஹைஜன்ஸ் வடிவமைத்ததே ஆகும்.

ஒளி அலைகள்

தொகு

ஒளியானது அலைகளாகப் பரவுகிறது இன்ற அலைக் கொள்கை காரணமாக உலக அளவில் அவர்பால் கவனம் ஈர்க்கப்பட்டது. ஹைகன்ஸ் கூறிய கருத்து, ஒளியானது துகள் (particle) மற்றும் அலை (wave) என இருமைப் பண்பு கொண்டது என்ற அலை-துகள் இரட்டைத்தன்மையைப் பின்னர் விளக்க உதவியது. "ஓர் அலை முகப்பின் ஒவ்வொரு புள்ளியும் இரண்டாம் கட்ட சிற்றலைகளின் ஆரம்பப் புள்ளியாகக் கருதலாம். இப்படித் தோன்றும் இரண்டாம் கட்டச் சிற்றலைகள் அனைத்துத் திசைகளிலும் சீராக முதல் அலையின் வேகத்திலேயெ பயணிக்கும்" என்பது ஹைஜென்ஸின் புகழ் பெற்ற கண்டுபிடிப்பாகும். இதனை ஹைஜன்ஸ் தத்துவம் என்று அழைக்கிறார்கள்.

கோள்கள் குறித்த ஆய்வுகள்

தொகு

1655 ஆம் ஆண்டில் சனிக் கோளின் மிகப் பெரிய துணைக்கோளான டைட்டானைக் கண்டுபிடித்தார். புதன் கோளை விட பெரியதான இது சூரியக் குடும்பத்தின் துணைக்கோள்களில் மிகப்பெரிய துணைக்கோளாகும். (இதற்கு முன் பெரிய துணைக்கோளாக வியாழனின் "கானிமீட்" இருந்தது). அத்துடன் சனிக் கோளின் வளையங்களை ஆராய்ந்து அவை சிறு சிறு பாறைகளினால் ஆனவை என்பதை 1656 இல் கண்டறிந்தார். அமெரிக்காவின் நாசா நிறுவனம் அனுப்பிய டைட்டன் பற்றிய வானவியல் ஆய்வுக்கான இறங்கு கலனிற்கு டைட்டனைக் கண்டறிந்த ஹைஜன்ஸின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. புவியின் வளி மண்டலம் பல இலட்சக்கணக்காண ஆண்டுகளுக்கு முன் எப்படி இருந்ததோ அது போல அடர்ந்த வளிமண்டலத்தைக் கொண்ட டைட்டனை ஆய்வு செய்ய இக்கலம் அனுப்பப்பட்டுள்ளது.

விண்மீன் குறித்த ஆய்வுகள்

தொகு

ஹைஜன்ஸ் 1659 ஆம் ஆண்டில் ஓரியோன் என்ற தொலை விண்மீன் தொகுதியை (Nebula) ஆய்வு செய்து அதன் மாதிரிப் படத்தையும் வரைந்தார். ஓரியான் தொகுதியின் முதல் வரைபடமாக விளங்குவது இவரது ஓவியமே ஆகும். அவரது தொலைக்காட்டியின் மூலம் ஓரியான் வாயுத்திரளின் வேறுபட்ட பகுதிகளைப் பிரித்துக் குறிப்பிட்டு அதனைக் குறித்த தெளிவான விளக்கங்களை 17ஆம் நூற்றாண்டிலேயே வகுத்துக் கொடுத்தார். இப்பணியைப் போற்றும் விதமாக ஓரியோன் திரளின் ஒளிமிக்க நடுப்பகுதிக்கு இவரது நினைவாக "ஹைஜன்ஸ் பகுதி" எனப் பெயரிடப்பட்டது.

இயற்பியல் ஆய்வுகள்

தொகு

காலத்தைக் கண்டறிய உதவும் ஊசல் கடிகாரத்தைக் கண்டு பிடித்தவரும் ஹைஜன்ஸ் தான் என்ற கருத்தும் நிலவுகிறது. நெகிழக்கூடிய ஒரே ஆதாரத்தில் கட்டப் படக்கூடிய இரு ஊசல் குண்டுகளில் ஒன்றை மட்டும் இயக்கினாலும் அந்த இயக்கம் அடுத்த ஊசல் குண்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டு ஒத்த அதிர்வும், எதிர் அதிர்வும் மாறி மாறி நிகழ்வதையும் இவர் கண்டுபிடித்தார். பரிவதிர்வு ஊசல் என்ற இது இன்றும் அறிவியல் மையங்களில் காணப்படுகிறது.
ஐசாக் நியூட்டனின் இரண்டாம் இயக்க விதியை இருபடிச் சமன்பாடாக மாற்றி எழுதியவரும் இவரே.

இலாய்சி பாஸ்கலின் வேண்டுகோளுக்கிணங்க நிகழ்தகவுத் தத்துவம் குறித்த ஒரு நூலை எழுதி 1657 ஆம் ஆண்டில் வெளியிட்டார்[1].

கணிதம்

தொகு

தற்காலத் தொகையீட்டு மற்றும் வகையீட்டு நுண்கணித வளர்ச்சிக்கு இவரது பங்களிப்பு முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

மறைவு

தொகு

பிரான்சிய நாட்டில் சில காலம் கழித்தபின் நெதர்லாந்தின் ஹாக் நகருக்குத் திரும்பிய ஐகன்சு கி.பி. 1695 ல் மறைந்தார்.

இவரது ஞாபகார்த்தமாகப் பெயரிடப்பட்டவை

தொகு

அறிவியல்த் துறை

தொகு
  • ஹையன்ஸ் குழி, செவ்வாயில் உள்ள ஒரு பெரிய குழி.
  • மொன்ஸ் ஹையன்ஸ், சந்திரனில் உள்ள ஒரு மலைத்தொடர்.
  • 2801 ஹையன்ஸ், சிறுகோள்.
  • ஹையன்ஸ் மென்பொருள், நுணுக்குக்காட்டிப் படிம செயலாக்கத் தொகுப்பு.
  • ஹையன்ஸ் ஆய்வுகூடம், நெதர்லாந்திலுள்ள லெய்டன் பல்கலைக்கழகத்தின் இயற்பியல் திணைக்களத்தில் உள்ளது.

இவற்றையும் பார்க்க

தொகு

மேற்கோள்கள்

தொகு

முனைவர் ப. ஐயம்பெருமாள், தமிழ்நாடு அறிவியல் தொழில் நுட்பமைய செயல் இயக்குநர். அறிவியல் ஒளி, மே.2008. இதழில் வந்துள்ள வானவியல் முன்னோடிகள் என்ற கட்டுரை.

  1. "I believe that we do not know anything for certain, but everything probably." —Christiaan Huygens, Letter to Pierre Perrault, 'Sur la préface de M. Perrault de son traité del'Origine des fontaines' [1763], Oeuvres Complétes de Christiaan Huygens (1897), Vol. 7, 298. Quoted in Jacques Roger, The Life Sciences in Eighteenth-Century French Thought, ed. Keith R. Benson and trans. Robert Ellrich (1997), 163. Quotation selected by W.F. Bynum and Roy Porter (eds., 2005), Oxford Dictionary of Scientific Quotations பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-858409-1 p. 317 quotation 4.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிறித்தியான்_ஐகன்சு&oldid=3366147" இலிருந்து மீள்விக்கப்பட்டது