கி. தனவேல்

Dr.K. Dhanavel, Ph.D., I.A.S

கி. தனவேல் என்பவர் இந்திய ஆட்சிப் பணி அதிகாரி மற்றும் தமிழ் கவிஞர் ஆவார். கடலூர் மாவட்டம் புதுகூரைப்பேட்டை என்கிற ஊரைச் சேர்ந்த இவர் தற்போது[எப்போது?] சென்னையில் இந்திய ஆட்சிப்பணி அதிகாரியாகப் பணியாற்றி வருகிறார். இவர் கி. தனவேல் மற்றும் பொன்தனா என்கிற பெயர்களில் கவிதை நூல்களை எழுதி வெளியிட்டிருக்கிறார்.

கி. தனவேல்
K. Dhanavel
பிறப்புகி. தனவேல்
மார்ச் 14, 1956
புதுகூரைப்பேட்டை
கடலூர் மாவட்டம்
தமிழ்நாடு,
 இந்தியா.
இருப்பிடம்சென்னை
தேசியம்இந்தியர்
மற்ற பெயர்கள்பொன் தனா
கல்விஇந்திய ஆட்சிப்பணி
பணிஇந்திய ஆட்சிப்பணி அதிகாரி
பணியகம்தமிழ்நாடு அரசு
சமயம்இந்து
பெற்றோர்ரெ. கிருஷ்ணசாமி (தந்தை),
குப்பாயி அம்மாள் (தாய்)
வாழ்க்கைத்
துணை
கற்புக்கரசி
பிள்ளைகள்வேலவன் (மகன்),
இளவரசி (மகள்)

தனவேல் 1956ஆம் ஆண்டு கடலூர் மாவட்டம் பழைய கூரைப்பேட்டை (நெய்வேலி) கிராமத்தில் பிறந்தார். நெய்வேலி நிலக்கரி நிறுவனம் அமைப்பதற்காக வேறு சில கிராமங்களுடன் சேர்த்து இந்த கிராமம் முழுவதும் அரசால் கையகப்படுத்தப்பட்டதால், 1957-ஆம் ஆண்டில் இவ்வூரார் அனைவரும் குடிபெயர்ந்து, விருத்தாசலம் அருகில் புதிதாக அமைக்கப்பட்ட புது கூரைப்பேட்டை கிராமத்தில் குடியேறி வசித்து வருகிறார்கள்.

கல்வி

தொகு

இவர், தொடக்கக் கல்வியை கிராமத்திலும், பின்னர் விருத்தாசலம் அரசு உயர்நிலைப் பள்ளியில் 11-ஆம் வகுப்பு வரையிலும் பயின்றார். விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கலைக் கல்லூரியில் புகுமுக வகுப்பு பயின்றார்.  சென்னை பச்சையப்பன் கல்லூரியில் இளம் அறிவியலில் (B.Sc.) வேதியியல் பட்டமும் (1973-76), சென்னை சட்டக் கல்லூரியில் B.L. பட்டப் படிப்பினையும் (1976 -79) பயின்றார். பணியில் சேர்ந்த பிறகு அஞ்சல்வழிக் வழிக் கல்வியின் மூலம் பயின்று, முதுகலை (M.A.) தமிழ் இலக்கியத்திலும், முதுகலை வணிக மேலாண்மை (M.B.A.) பட்டமும் பெற்றார்.

இவர், சென்னைப் பல்கலைக்கழகத்தில், “தமிழ்நாட்டின் வேளாண்மை விரிவாக்க மேலாண்மையில் தகவல் தொழில்நுட்பத்தின் பயன்பாடு” என்ற தலைப்பில் ஆராய்ச்சியை மேற்கொண்டு, பணி ஓய்விற்கு பின் 2018-ஆம் ஆண்டில் முனைவர் (Ph.D.) பட்டம் பெற்றார்.

இவர், இங்கிலாந்து, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, சீனா, ஜெர்மனி, பிரான்சு, சுவிட்சர்லாந்து, நார்வே, ஸ்வீடன், தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட 21 நாடுகளில் அரசு முறைப் பயணங்கள் மேற்கொண்டு முப்பதுக்கும் மேற்பட்ட உலகப் பல்கலைக்கழகங்களைப் பார்வையிட்டுள்ளார். நாற்பதுக்கும் மேற்பட்ட பன்னாட்டுக் கருத்தரங்குகளில் கலந்து கொண்டுள்ளார்.  அமெரிக்காவின் ‘ஹார்வார்டு’ பல்கலைக் கழகத்தில் (2006) குறுகிய கால மேலாண்மைப் பயிற்சி பெற்றுள்ளார்.  2010-ஆம் ஆண்டில் தென்கொரியாவில் கொரியா வளர்ச்சி நிறுவனத்தில் (KDI -Seoul)  நிருவாகப் பயிற்சியினையும், தாய்லாந்து நாட்டில் (ADPC-Bangkok) ‘பேரிடர் மேலாண்மை’ குறித்த சிறப்புப் பயிற்சியினையும் பெற்றுள்ளார்.  

அரசுப்பணி

தொகு

இவர், தொடக்கத்தில் இந்தியன் வங்கியில் ஆறு ஆண்டு காலம் (1979-85) பணியாற்றியுள்ளார். பின்னர் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் (குரூப் -I) துணை ஆட்சியராகத் தேர்வு செய்யப்பட்டு 1985 ஆகஸ்ட் மாதம், (பயிற்சி) துணை ஆட்சியராக தஞ்சாவூர் மாவட்டத்தில் தனது அரசுப் பணியைத் தொடங்கினார். அதன் பின்னர் கீழ்க்காணும் பதவிகளையும் வகித்து வந்துள்ளார்.

 1. வருவாய்க் கோட்ட அலுவலர், நாமக்கல் மாவட்டம்
 2. மாவட்ட உணவுப் பொருள் வழங்கல் அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்
 3. மாவட்ட உணவுப் பொருள் வழங்கல் அலுவலர், வேலூர் மாவட்டம்
 4. முதுநிலை மண்டல மேலாளர், தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழகம், தஞ்சாவூர் மாவட்டம்
 5. மாவட்ட வருவாய் அலுவலர், தஞ்சாவூர் மாவட்டம்
 6. தனி அலுவலர், கூட்டுறவு சர்க்கரை ஆலை, அலங்காநல்லூர், மதுரை மாவட்டம்

இந்திய ஆட்சிப்பணி

தொகு

தனவேல் 1996ஆம் ஆண்டு இந்திய ஆட்சிப் பணிக்கு தேர்வு செய்யப்பட்டு, சென்னை வணிக வரித்துறையில் துணை ஆணையராக பதவி ஏற்றார். அதன் பிறகு 1998 முதல் 2001 வரை 3 ஆண்டுகளுக்கு மேல் திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவராக பதவி வகித்தார்.

பின்வரும் உயர் பதவிகளையும் இவர் வகித்து வந்துள்ளார்:

 1. இணை ஆணையர், வருவாய் நிர்வாகம், சென்னை
 2. இயக்குர், தோட்டக் கலைத் துறை, சென்னை
 3. அரசுச் செயலாளர், வருவாய்த்துறை
 4. அரசுச் செயலாளர், பொதுப்பணித்துறை [1]
 5. உறுப்பினர் - செயலாளர், மாநிலத் திட்டக் குழு [2]
 6. மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம்
 7. அரசுச் செயலாளர், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை.[3]

கவிதை நூல்கள்

தொகு
 1. வழி விடுங்கள் - முதல் பதிப்பு - மே, 1996, இரண்டாம் பதிப்பு - செப்டம்பர், 2012)
 2. வேணு கானம் - செப்டம்பர், 2012)
 3. தேவதை உலா - செப்டம்பர், 2012)
 4. செம்புலச் சுவடுகள்-ஆகத்து, 2013)
 5. ஊமைச் சங்கு

விருதுகள்

தொகு

அரசு விருதுகள்

தொகு

1) இவர் திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவராக (1998-2001) முனைப்புடன் பணியாற்றி, பல்வேறு அரசுத் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தியமைக்காக, சென்னையில் நடைபெற்ற மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மாநாட்டின் பொழுது, இவருக்கு அன்றைய முதலமைச்சர் கலைஞர் மு. கருணாநிதி அவர்களால் ஐந்து சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டு, சிறந்த மாவட்ட ஆட்சித் தலைவர் என்ற பாராட்டுதலைப் பெற்றார்.

2) தமிழ் தட்டச்சுப் பொறியின் விசைப் பலகையில் நடைமுறைக்குத்தேவையான பல்வேறு குறியீடுகள் இல்லாத நிலையை ஆராய்ந்து இவர் அரசுக்கு அனுப்பிய கருத்துரு ஏற்றுக் கொள்ளப்பட்டு, 1997-ஆம் ஆண்டில் திருவள்ளுவர் திருநாளன்று (15-01-1997) இவருக்கு தமிழக அரசின் பணப்பரிசும் பாராட்டுச் சான்றிதழும் அன்றைய முதலமைச்சர் கலைஞர் மு. கருணாநிதி அவர்களால் வழங்கப்பட்டது.  இவரது பரிந்துரை தமிழக அரசால் ஏற்கப்பட்டு அரசாணை மூலம் தமிழ் தட்டச்சுப் பொறிகளில் நடைமுறைப் படுத்தப்பட்டது. 

3) எழுத்தறிவு இல்லாதவர்களுக்கு எழுத்தறிவு புகட்டும் அறிவொளி இயக்கத்தினை, திருநெல்வேலி மாவட்டத்தில் சிறப்பாக செயல்படுத்தியமைக்காக இவருக்கு 1999- 2000 ஆம் ஆண்டிற்கான மாநில அளவிலான டாக்டர் மால்கம் ஆதிசேஷய்யா விருது வழங்கப்பட்டது.

4) இவர் (குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின்) அரசுச் செயலாளராக (2013-14) சிறப்பாகப் பணியாற்றியதன் விளைவாக  தமிழ்நாடு, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் வளர்ச்சியில் இந்தியாவிலேயே முதல் நிலை மாநிலமாக தேர்வு செய்யப்பட்டு, நடுவண் அரசின் சிறப்பு விருதைப் பெற்றது.  அதற்காக அன்றைய முதலமைச்சர் செல்வி. ஜெ. ஜெயலலிதா அவர்களது பாராட்டினையும் இவர் பெற்றுள்ளார்.


அமைப்புகளின் விருதுகள்

தொகு

1) இளைஞர் நலத்திற்காக இவர் ஆற்றிய சேவைக்காக, 12.01.2000 அன்று நடந்த (இளையோர் எழுச்சி ஆண்டு-2000) தேசிய இளையோர் தினவிழாவில் நெல்லை ரோட்டரி சங்கம் இவருக்கு “இளைய பாரதி” என்ற பட்டத்தை வழங்கி சிறப்பித்துள்ளது.

2) இவரது, தமிழார்வத்தையும், பேச்சாற்றலையும் பாராட்டித் தென்காசி திருவள்ளுவர் கழகம் இவருக்கு ‘தமிழ் முகில்’ என்ற பட்டத்தை வழங்கி சிறப்பித்தது. இப்பட்டத்தை முனைவர் வா.செ. குழந்தைசாமி அவர்கள் வழங்கி இவரைப் பாராட்டியுள்ளார்.

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கி._தனவேல்&oldid=3717177" இலிருந்து மீள்விக்கப்பட்டது