குருதிப்பெருக்கு
குருதிப்பெருக்கு இரத்த ரோகம் அல்லது இரத்த ஒழுக்கு என்பது உடற்கலங்கள் (உடலின் உயிரணுக்கள்) பாதிக்கப்பட்டுக் குருதிச் சுற்றோட்டத்தொகுதியில் குருதிக் கலன்களுக்கு (குழாய்களுக்கு) வெளியே குருதி வெளியேறுவது ஆகும்[1]. இது எளிமையாக குருதி வெளியேறல் எனவும் அழைக்கப்படுகிறது. இரத்தக் குழாய் தமனி, சிரை, தந்துகி என மூவகைப் படுவதால் இரத்த ஒழுக்கும் தமனி ஒழுக்கு, சிரை ஒழுக்கு, தந்துகி ஒழுக்கு என மூவகைப்படும். உடல் நலமுள்ள அல்லது ஆரோக்கியமான உடல்நிலை கொண்ட ஒருவர் எந்த மருத்துவ பிரச்சனைகளுமின்றி, தன்னுடலிலிருந்து 10-15% குருதியை இழக்கலாம் எனவும், 8-10% குருதியை குருதி வழங்கலில் (blood donation) இழக்க முடியும் எனவும் அறியப்பட்டுள்ளது[2]. தமனி ஒழுக்கு மற்ற இரு ஒழுக்குகளைவிட ஆபத்து மிக்கது. ஒருவர் உடலில் இருந்து இரத்தம் வெளியேறுவதால் அவருடைய உடலின் சமநிலை (Homeostasis) பாதிக்கப்படும்.
குருதிப்பெருக்கு | |
---|---|
இரத்த ஒழுக்கு ஏற்பட்ட மனித விரல் | |
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள் | |
சிறப்பு | அவசர மருத்துவம் |
ஐ.சி.டி.-10 | R58. |
ம.பா.த | D006470 |
குருதிபெருக்கின் வகைகள்
தொகுஉட்புறக் குருதிப் பெருக்கு, வெளிப்புறக் குருதிப் பெருக்கு என குருதிப் பெருக்கு இரண்டு வகைப்படும்.
உட்புறக் குருதிப் பெருக்கு
தொகுஉடற்கலங்கள் பாதிக்கப்பட்டு உடலிற்கு உள்ளே குருதிப் பெருக்கு ஏற்படுமாயின் அது உட்புறக் குருதிப் பெருக்கு எனப்படும். இதனை இலகுவாக அடையாளம் கண்டு கொள்ளல் கடினம். உட்புறக் குருதிப் பெருக்கில் பின்வரும் மாற்றங்கள் நிகழும்.
- வீக்கம்
- நிறம் மாறுதல்
- வலி
- இடம் சூடாதல்
வெளிப்புறக் குருதிப் பெருக்கு
தொகுஉடற்கலங்கள் பாதிக்கப்பட்டுக் உடலிற்கு வெளியாக குருதி வெளியேறுமாயின் அது வெளிப்புறக் குருதிப் பெருக்கு எனப்படும். இவ்வகையான குருதிப்பெருக்கு, வாய், மூக்கு, காது, யோனி, குதம் போன்ற இயற்கையாக அமைந்த துவாரங்கள் மூலமாகவோ, அல்லது தோலில் ஏற்படும் பிளவுகள் மூலமாகவோ ஏற்படலாம். வெளிப்புறக் குருதிப் பெருக்கை நேரடியாகப் பார்த்து அறிந்து கொள்ள முடிவதால், குருதி வெளியேறும் அளவைப் பார்த்து மதிப்பீடு செய்து, தகுந்த சிகிச்சையை மேற்கொள்ளலாம். இரத்தம் கசியும் பொழுது இரத்த இழப்பைத் தடுக்க இரத்தத்தில் உள்ள இரத்தத் தட்டுகள் ஒரு வலைப்போல பின்னி இரத்தம் உறைதல் ஏற்பட்டு இரத்தம் வெளியேறுதலைத் தடுக்கிறது.
உலக சுகாதார நிறுவனம்
தொகுஇரத்த ஒழுக்கின் தீவிரத்தை அளவிட உலக சுகாதார நிறுவனம் செந்தர தரவரிசை அளவீடுகளை உருவாக்கியுள்ளது[3].
தரம் 0 | குருதிப்பெருக்கு இல்லை |
தரம் 1 | சிறுதுளி இரத்தம் சிந்தல் |
தரம் 2 | மிதமான ஆனால் குறிப்பிடத்தக்க அளவு இரத்த இழப்பு |
தரம் 3 | பெருமளவு இரத்த இழப்பு (இரத்தம் ஏற்றல் தேவைப்படும் தீவிர நிலை) |
தரம் 4 | மரணத்துடன் தொடர்புடைய, கண், பெருமூளையைச் செயலிழக்கச் செய்யும் இரத்த இழப்பு |
நோய் மூலங்கள்
தொகு- வாய்
- இரத்த வாந்தி (Hematemesis)
- இரத்தச்சளி (Hemoptysis)
- குதம்
- இரத்தமலம் - (Hematochezia)
- சிறுநீர்ப்பாதை
- இரத்தச் சிறுநீர் (Hematuria)
- தலையின் மேற்பக்கம்
- மண்டையோட்டுள்ளான குருதிப் பெருக்கு (Intracranial hemorrhage)
- பெருமூளை இரத்த ஒழுக்கு (Cerebral hemorrhage)
- பெருமூளையுள் குருதிப் பெருக்கு (Intracerebral hemorrhage) இரத்தக்கசிவு வாதம்
- வலையுறையடி குருதிப் பெருக்கு (Subarachnoid hemorrhage; SAH) நோய்வாய்ப்பட்டதினால் மூளை நடு உறை-தண்டுவட உறைக்கு இடைப்பட்ட பகுதியில் இரத்தக் கசிவு
- நுரையீரல்
- நுரையீரலில் இரத்தக் கசிவு (Pulmonary hemorrhage)
- மகப்பேறு சம்பந்தமானவை
- யோனி குருதிப் பெருக்கு
- குழந்தைப் பிறந்தபின் இரத்த ஒழுக்கு (Postpartum hemorrhage)
- ஊடுருவிய இரத்த ஒழுக்கு (Breakthrough bleeding)
- கருமுட்டையக இரத்த ஒழுக்கு (Ovarian bleeding). இவ்வகைக் குருதிப்பெருக்கு பெருங்கேடு விளைவிக்கவல்லவை. மெலிவான பலவுறை அண்ட நோய்கூட்டறிகுறி நோயாளிகளில் யோனியூடான அண்டச்செல்களை மீட்கும்போது இத்தகு இரத்த ஒழுக்கு ஏற்படுவது அரிதான ஒன்று அல்ல[4].
- யோனி குருதிப் பெருக்கு
- இரையக குடலியத் தொடர்புடையவை
- மேற்பக்க இரையக குடலிய குருதிப் பெருக்கு
- கீழ்பக்க இரையக குடலிய குருதிப் பெருக்கு
- புதிரான இரையக குடலிய குருதிப் பெருக்கு
காரணங்கள்
தொகுபுறவழிக் காயங்களினாலோ, மருத்துவ காரணங்களினாலோ, அல்லது இவை இரண்டுமிணைந்தக் காரணங்களினாலோ குருதிப் பெருக்கு ஏற்படுகிறது.
பேரதிர்ச்சி குருதிப் பெருக்கு (Traumatic bleeding) புறவழிக் காயங்களினால் ஏற்படுகின்றது. பல வகையான காயங்கள் இத்தகு குருதிப்பெருக்கை உருவாக்கலாம்:
- சிராய்ப்பு (Abrasion) - இவை, வெளிப்பொருள்கள் நம் தோலின் மீது குறுக்காக உரசும்போது ஏற்படுபவை. மேல்புறத்தோலை இவ்வகைக் காயங்கள் ஊடுருவுவதில்லை.
- தோல் உரிதல் (Excoriation)
- இரத்தக் கட்டு (Hematoma)
- கீறல் (Laceration)
- வகுடல் (Incision) - அறுவைச் சிகிச்சைக்கான வெட்டுக்கீறல்.
- விபத்துக்காயம் (puncture wound)
- ஊமைக்காயம் (Contusion)
- நசுங்கும் காயங்கள் (Crushing Injuries)
- உந்துகை காயங்கள் (Ballistic trauma)
முதலுதவி
தொகுகுருதிப்பெருக்கில், குருதி வெளியேறும் அளவு, குருதிபெருக்கு ஏற்பட்ட இடம் போன்ற நிலைகளைப் பொறுத்து முதலுதவி முறைகளும் வேறுபடும்.
- உடலில் பொருட்கள் ஏதேனும் குத்திய நிலையில் இருப்பின், அதிலிருந்து குருதிப்பெருக்கு ஏற்படும் ஆபத்தைத் தவிர்க்க, அதை அகற்றாமல் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.
- வெளிப்புறக் குருதிப்பெருக்கு இலகுவாக அடையாளம் காணப்படக் கூடியது. காயமேற்பட்ட இடத்தை உயர்த்தி வைத்திருத்தல் வேண்டும்.
- வெளிப்புறக் குருதிப்பெருக்கு அதிகளவில் இருப்பின், மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.
- உட்புறக் குருதிப்பெருக்கு ஏற்பட்டிருக்கக் கூடிய சூழ்நிலையில், நோயாளி சுயநினைவுடன் இருந்தால், குருதிப்பெருக்கின் விளைவால், மயக்கத்தில் நோயாளி கீழே விழுந்துவிடாமல் தடுக்க கிடையாகப் படுக்கவைத்து வைத்தியசாலைக்குக் கொண்டு செல்ல வேண்டும்.
- நோயாளி சுயநினைவு இல்லாமல் இருப்பினும், சுவாசிப்பாராயின் முதலில் சுவாசம் தடைப்படாமல் மீளுயிர்ப்பு நிலைக்கு நோயாளியைக் கொண்டுவருதல் வேண்டும். அதன் பின்னரேயே குருதிப் பெருக்கைக் கட்டுப்படுத்தல் வேண்டும்.
- நோயாளி சுயநினைவு இல்லாமல், சுவாசமும் இல்லாமல் இருந்தால் முதல் சுவாசம் திரும்பும் வரை மீளுயிர்ப்புச் சுவாசம் வழங்கவேண்டும். அதன் பின்னரேயே குருதிப் பெருக்கைக் கட்டுப்படுத்த வேண்டும்.
மூளை இரத்த ஒழுக்கு (cerebral Haemorrhage)
உட்புற இரத்த ஒழுக்கில் மூளை இரத்த ஒழுக்கு மிகவும் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. இது மூளையில் அடிபட்டும் வரும். அடிபடாமலும் வரும். இரத்தக் கொதிப்பு நோயாளிகளுக்கு மூளை தந்துகிகள் அழுத்தம் தாங்காமல் சிதைவுறும்பொழுது இரத்தக்கசிவு ஏற்படும். இதனால் வரும் அறிகுறிகள்
- மயக்கம்
- சுயநினைவின்மை
- கை கால் செயலிழத்தல்
- இடது மூளையின் பேச்சு பகுதியின் இரத்தக்கசிவால் பேசமுடியாமை
இரத்த அழுத்தத்திற்கான மருந்துகளை மருத்துவரின் ஆலோசனையுடன் விடாமல் உட்கொண்டால் மேற்கொண்ட விபத்தை தவிர்த்துக் கொள்ளலாம்.
அடிக்குறிப்புகள்
தொகு- ↑ "Bleeding Health Article". Healthline. Archived from the original on 2012-09-04. பார்க்கப்பட்ட நாள் 2007-06-18.
- ↑ "Blood Donation Information". UK National Blood Service. Archived from the original on 2007-09-28. பார்க்கப்பட்ட நாள் 2007-06-18.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help) - ↑ Webert KE, Cook RJ, Sigouin CS, et al. The risk of bleeding in thrombocytopenic patients with acute myeloid leukemia. haematologica 2006;91:1530-1537
- ↑ Liberty G, Hyman JH, Eldar-Geva T, Latinsky B, Gal M, Margalioth EJ (December 2008). "Ovarian hemorrhage after transvaginal ultrasonographically guided oocyte aspiration: a potentially catastrophic and not so rare complication among lean patients with polycystic ovary syndrome". Fertil. Steril. 93 (3): 874–879. doi:10.1016/j.fertnstert.2008.10.028. பப்மெட்:19064264.