குறும்பர் (பழங்குடி)
குறும்பர் (Kurumbas) என்பவர்கள் இந்திய மாநிலங்களான கருநாடகா, கேரளா மற்றும் தமிழ்நாட்டில் வாழுகின்ற ஒரு பழங்குடி மக்கள் ஆவர். இவர்கள் தமிழ்நாட்டில், நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள மலைப்பகுதியில் வாழுகின்றனர்.[2][3] இப்பகுதியில் இவர்களைப்போல் கோத்தர், தோடர், இருளர், பனியர் மற்றும் காட்டு நாயக்கர் போன்ற பழங்குடி மக்களும் வாழுகிறார்கள். இவர்கள் காட்டில் கிடைக்கும் பொருட்களைச் சேகரித்துத் தங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்கிறார்கள். இவர்களின் மொழி குறும்பா மொழி, எழுத்துவடிவில் இல்லாமல் பேச்சு வடிவிலேயே உள்ளது. அதனால் குன்னூர் பள்ளி ஆசிரியர்கள் இவர்களுக்காக அகரமுதலி ஒன்றை உருவாக்கி வெளியிட்டுள்ளனர்.[4]
மொத்த மக்கள்தொகை | |
---|---|
88,750[1] (2011 கணக்கெடுப்பின் படி) | |
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் | |
கேரளம், கருநாடகம், தமிழ்நாடு | |
மொழி(கள்) | |
குறும்பா மொழி | |
சமயங்கள் | |
ஆன்ம வாதம், இந்து | |
தொடர்புள்ள இனக்குழுக்கள் | |
திராவிடர், தமிழர் |
தோடர்களும் படுகர்களும் ஒன்று சேர்ந்து குறும்பர்களுக்கு அடிக்கடி தொல்லை கொடுப்பதுண்டு. குறும்பர்கள் வாழும் ஊர்களில் புகுந்து, கூட்டங் கூட்டமாக அவர்களைக் கொன்றுவிடுவார்கள். இத்தகைய படுகொலைகள், கி. பி. 1824, 1835, 1875, 1882, 1900 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்றிருக்கின்றன.[5] குறும்பர்கள் சிறந்த வில்லாளிகள். கோட்டையம் மன்னருக்கும், ஆங்கிலேயருக்கும் போர் ஏற்பட்ட போது, கோட்டைய மன்னரின் சார்பிலிருந்து குறும்பர்கள் வீரப்போர் புரிந்தனர்.[5] தற்போது கோவை மாவட்டத்தில் மதுக்கரை அருகில் உள்ள குளத்துப்பாளையம், குரும்பபாளையம், வேடபட்டி அருகிலுள்ள குரும்பபாளையம், பெரியநாயக்கன்பாளையம் அருகில் உள்ள பூச்சியூர், தேவையம்பாளையம், கஸ்தூரிபாளையம் ஆகிய ஊர்களிலும் வசித்து வருகின்றனர்.
பிரிவுகள்
இம்மக்கள் குறும்பர், ஊர்க்குறும்பர், ஜேன் குறும்பர் என மூன்று பிரிவினராகப் பிரிந்து வாழ்கின்றனர். நீலகிரிப் பீடபூமியில் குறும்பர்களும், நெல்லியாளத்தைச் சுற்றி ஊர்க்குறும்பர்களும் வாழ்கின்றனர். ஜேன் குறும்பர்கள், 'ஷோலா நாயக்கர்'கள் என்றும் அழைக்கப்படுகின்றனர். இவர்கள் வயநாட்டிலும், குறிப்பாக மதுமலைப் பகுதியிலும் வாழ்கின்றனர். ஜேன் குறும்பர்கள் மலை இடுக்குகளில் உள்ள மலைத் தேனீயின் கூட்டை அழித்துத் தேன் எடுப்பதில் வல்லவர்கள், இதை இவர்கள் தொழிலாகவும் கொண்டிருக்கிறார்கள். ஜேனு என்றால் கன்னடத்தில் தேன் என்று பொருள். ஆகையினால் இக்குறும்பர்கள் தங்களைத் “தேனெடுக்கும் காட்டுத் தலைவர்கள்" (ஜேனு கொய்யோ ஷோலா நாயகா) என்று அழைத்துக் கொள்கிறார்கள்.[5] ஜேன் குறும்பர்கள் மந்திரதந்திரத்தில் வல்லவர்களாகக் கருதப்படுகின்றனர். அவர்கள் நினைத்தபோது காட்டானைகளை அழைக்கும் ஆற்றல் மிக்கவர்களென்றும், சில மர்மமான மூலிகைகளை வீசிப் பாறைகளைக்கூடப் பொடி செய்து விடுகிறார்கள் என்றும் கதை கூறப்படுகின்றன. சமூகச் சட்டங்களை அமுல் நடத்த ஒவ்வொரு ஊரிலும் ஒரு பஞ்சாயத்து உள்ளது. அப் பஞ்சாயத்தின் தலைவர் 'எசமான்' என்று அழைக்கப்படுகிறார்.
உடல் தோற்றம்
குறும்பர்கள் கருநிறமும், குள்ளமான உருவமும், ஒற்றை நாடி உடலும் பெற்று, தோற்றத்தில் இருளர்களைப்போல் விளங்குகிறார்கள். இவர்கள் தலையிலுள்ள மயிர் தடிப்பாகவும் சுருண்டும் இருக்கும்; தலையைச் சுற்றிப் புதர் போலப் பரவி முளைத்திருக்கும்.[5]
சமய வாழ்வு
குறும்பர்கள் கல்லாத்தா (பெண் தெய்வம்), ஐரு பில்லி, காடுபில்லாலா என்ற மூன்று தெய்வங்களை வணங்குகின்றனர். ஐருபில்லியும், காடுபில்லாலாவும் மலையாளத்திலிருந்து வயநாட்டில் குடிபுகுந்த தெய்வங்களாகக் கருதப்படுகின்றன.
மேற்கோள்கள்
- ↑ "A-11 Individual Scheduled Tribe Primary Census Abstract Data and its Appendix". www.censusindia.gov.in. Office of the Registrar General & Census Commissioner, India. பார்க்கப்பட்ட நாள் 2017-11-03.
- ↑ State wise Scheduled Tribes TAMIL NADU
- ↑ "நீலகிரி பழங்குடியினரின் பாரம்பரிய கதிர் அறுவடை திருவிழா!". புதிய தலைமுறை (26 அக்டோபர், 2017)
- ↑ "பழங்குடியினர் மொழிக்கான அகராதி தயாரித்த ஆசிரியைகள்: அரசு அங்கீகரிக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை". தி இந்து தமிழ் (20 செப்டம்பர், 2016)
- ↑ 5.0 5.1 5.2 5.3 "தமிழகத்தில் குறிஞ்சி வளம், நூல், கவிஞர் முருகு சுந்தரம், பக்கம், 95-208". பழனியப்பா பிரதர்ஸ். பார்க்கப்பட்ட நாள் 17 நவம்பர் 2020.