குலு தசரா என்பது வட இந்தியாவில் உள்ள ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதத்தில் கொண்டாடப்படும் புகழ்பெற்ற சர்வதேச மெகா தசரா திருவிழாவாகும். உலகம் முழுவதிலுமிருந்து நான்கு முதல் ஐந்து லட்சத்திற்கும் அதிகமான மக்கள் இந்த தசரா கொண்டாட்டத்திற்கு வருகை தருகின்றனர். இது குலு பள்ளத்தாக்கில் உள்ள தால்பூர் மைதானத்தில் கொண்டாடப்படுகிறது. குலுவில் தசரா சந்திரன் உதயமான பத்தாவது நாளில், அதாவது ' விஜயதசமி ' நாளில் தொடங்கி ஏழு நாட்கள் நடைபெறுகிறது. சுற்றுலாப் பயணிகளை அதிக அளவில் ஈர்க்கும் குலு தசராவுக்கு இமாச்சல மாநில அரசு சர்வதேச திருவிழா அந்தஸ்தை வழங்கியுள்ளது.[1]

குலு தசராவின் வரலாறு

தொகு

புராண கதைகளின் படி,, ஜம்தாக்னி மகரிஷி யாத்திரையிலிருந்து திரும்பிய பிறகு, மலானாவில் உள்ள அவரது அவரது இருப்பிடத்திற்கு செல்லும் படிக்கு, பதினெட்டு வெவ்வேறு கடவுள்களின் உருவங்களை ஒரு கூடையில் வைத்து தலைச்சுமையாக கொண்டு சென்றார். சந்தர்கானி கணவாய் வழியாக அவர் கடக்கும்போது கடுமையான புயல் அங்கே தாக்கியது. எங்கேயும் நிற்க இயலாத நிலையில், மகரிஷி ஜம்தாக்னியின் கூடை அவரது தலையில் இருந்து புயலினால் நாலாபக்கமும் தூக்கி எறியப்பட்டது, அந்த கூடையிலிருந்த கடவுள்களின் உருவ சிலைகள் பல தொலைதூர இடங்களுக்கு சிதறடிக்கப்பட்டன. மலைவாழ் மக்கள், இந்த உருவங்களைக் கண்டு, அவை கடவுளாக உருவம் எடுப்பதைக் கண்டு, அவற்றை வணங்கத் தொடங்கினர். இப்படியாகத்தான் குலு பள்ளத்தாக்கில் தெய்வ வழிபாடு தொடங்கியது என்று கூறுகிறது.[2]

ராஜா ஜகத் சிங் என்பவர் குலுவின் வளமான மற்றும் அழகான ராஜ்யத்தை ஆட்சி செய்து வந்த காலத்திலே அங்கே துர்கதத்தா என்ற விவசாயியும் வாழ்ந்து வந்தான். அவனிடம் பல அழகான முத்துக்கள் இருப்பதை அறிந்த அரசன், அவற்றை தன்வசப்படுத்தினால் நன்றாக இருக்குமே என எண்ணினான். துர்கதத்தாவிடம் இருந்த ஒரே முத்து அறிவு முத்துக்கள் என்றாலும், அந்த அரசனின் பேராசை விடவில்லை.  முத்துக்களை துர்கதத்தா அரசனிடம் ஒப்படைக்க வேண்டும் இல்லாவிட்டால் தூக்கிலிடப்படுவான் என்று கட்டளையிட்டான்.தனது விதியை நொந்த துர்காதத்தா வேறு எந்த வழியும் இல்லாமல் , "நீ உண்ணும் போதெல்லாம் உன் சோறு புழுவாகவும், நீ குடிக்கும் நீர் இரத்தமாகவும் மாறும்" என்று மன்னருக்கு சாபமிட்டு தீயில் பாய்ந்து இறந்தான். சாபத்தின் விளைவை அறிந்த மன்னரோ, அதை தவிர்க்க என்ன வழிமுறைகளை கைக்கொள்ளலாம் என்று எண்ணி ஒரு பிராமணரிடம் ஆலோசனை கேட்டார். இந்த சாபத்தை ஒழிக்க, ராமரின் ராஜ்யத்தில் இருந்து ரகுநாதரின் தெய்வத்தை கொள்ளையிட்டு குலுவிற்கு கொண்டு வந்து வழிபட்டால் மட்டுமே முடியும் என்று ஆலோசனை கூறினார், அதன்படியே ரகுநாதரை திருடிக்கொண்டு வர அந்த பிராமணனை அயோத்திக்கு அனுப்பினான். அவரும் அயோத்தியிலிருந்து தெய்வத்தைத் திருடிவிட்டு குலுவுக்குத் திரும்பினார். அயோத்தி மக்கள், தங்கள் அன்புக்குரிய ரகுநாதன் கடவுளின் சிலையைக் காணவில்லை என்பதைக் கண்டு, குலுவிற்கே அந்த பிராமணரைத் தேடிப் புறப்பட்டனர். சரயு நதிக்கரையில், அவர்கள் அந்த பிராமணரை அணுகி, ரகுநாத் கடவுளை ஏன் திருடிச்சென்றீர்கள் என்று கேட்டார்கள். பிராமணன் குலு மன்னனின் சாபத்தின் கதையைச் சொன்னான். ஆனால் அயோத்தியின் மக்களோ ரகுநாதரை தூக்கிச் செல்ல முயன்றனர், ஆனால் அவ்வாறு அயோத்தியை நோக்கி தூக்கி செல்லும் போது கனமாகவும், குலுவை நோக்கி செல்லும் போது மிக இலகுவாயும் அந்த சிலை காணப்பட்ட அதிசயத்தின் படி, அந்த தெய்வம் குலுவிற்கு செல்லவே விரும்புகிறது என கண்டுகொண்டனர். அதன்படி சிலை குலுவை அடைந்ததும் அரசனின் குலதெய்வமாக அர்ச்சிக்கப்பட்டு, நிலை நிறுத்தப்பட்டது. ரகுநாத் குலு ராஜ்ஜியத்தின் முதன்மை தெய்வமாக நிறுவப்பட்டார். ரகுநாதரின் குலதெய்வத்தை நிறுவிய பிறகு, ராஜா ஜகத் சிங் அந்த தெய்வத்தின் பிரசாதத்தை அருந்தினார், அதைத்தொடர்ந்து அவரின் சாபமும் நீங்கியது. குலுவில் தசராவில் இந்த தெய்வம் ரதத்தில் கொண்டு செல்லப்படும் சடங்கிற்கு இந்த புராணக்கதையும் ஒரு காரணமாகும். இது 1606 இல் தொடங்கி இன்றுவரை தொடர்கிறது

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=குலு_தசரா&oldid=3742163" இலிருந்து மீள்விக்கப்பட்டது