குள்ள முதலை

குள்ள முதலை
மேற்காபிரிக்கக் கருமுதலை
CITES Appendix I (CITES)[2]
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
துணைத்தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
Osteolaemus

இனம்:
O. tetraspis
இருசொற் பெயரீடு
Osteolaemus tetraspis
கோப், 1861
துணையினங்கள்
  • கூர்ங்கருமுதலை (O. t. tetraspis) வெர்முத் & மார்ட்டின்ஸ் (1961)
  • கவசக்கருமுதலை (O. t. osborni) (சிமித்து (1919)) வெர்முத் & மார்ட்டின்ஸ் (1961)
கருமுதலைகளின் பரம்பல் பச்சை நிறத்தில்

குள்ள முதலை (Osteolaemus tetraspis) என்பது மேற்காபிரிக்கப் பகுதிகளில் காணப்படும் முதலையினம் ஆகும். இதுவே இன்று உலகில் காணப்படும் மிகச்சிறிய பருமனுடைய முதலையினமாகும். அண்மையில் நடத்தப்பட்ட மரபணு ஆய்வொன்று இவ்வினத்தில் மூன்று வெவ்வேறு துணையினங்கள் காணப்படுவதை அடையாளப்படுத்தியுள்ளது. எனினும், இவை துணையினங்களாகவன்றித் தனியினங்களாக வரையறுக்கப்பட வேண்டுமெனச் சிலர் கருதுகின்றனர்.

இயல் தோற்றம்

தொகு
 
இண்டியானாபோலிசு சிறுவர் அருங்காட்சியகம் கொண்டுள்ள கருமுதலை மண்டையோடு

வளர்ந்த குள்ள முதலையொன்று பொதுவக 1.5 மீட்டர் (5 அடி) நீளம் உள்ளதாகக் காணப்படும். இதன் ஆகக் கூடிய வளர்ச்சி 1.9 மீட்டர் (6.2 அடி) எனப் பதியப்பட்டுள்ளது. இவ்வினத்தின் வளர்ந்த முதலைகள் தம் மேற்புறத்திலும் பக்கவாட்டிலும் தனிக் கறுப்பாகக் காணப்படுவதுடன் கீழ்ப்பகுதியில் கறுப்புத் திட்டுக்கள் நிறைந்த மஞ்சள் நிறத்தில் காணப்படும். இவற்றின் குஞ்சுகள் உடலில் சற்றுக் கபிலமான வளையங்களும் தலையில் மஞ்சள் திட்டுக்களும் கொண்டிருக்கும்.

இதன் சிறிய பருமனும் கொன்றுண்ணிகளுக்கு எளிதாக அகப்படும் தன்மையும் காரணமாக இந்த முதலையினத்தின் கழுத்து, முதுகு, வால் ஆகிய பகுதிகளில் தோல் மிகத் தடித்து கவசம் போல் காணப்படுகின்றன. அத்துடன் இவற்றின் வயிற்றிலும் கழுத்தின் கீழ்ப்புறத்திலும் முட்தோல் அமைப்புக் காணப்படும்.

குள்ள முதலைப் பேரினம் குறுகிய, கூர்மையற்ற ஆனால் தன் நீளத்துக்கேற்ற அகலம் கொண்ட மூஞ்சைக் கொண்டு கிட்டத்தட்ட கேமன் குள்ளன் போன்று காட்சியளிக்கும். அதற்குக் காரணம் இவ்விரு வகையும் ஒரே மாதிரியான சூழல் வாழிடத்தைக் கொண்டிருப்பதாக இருக்கலாம். இதன் முன்மண்டையெலும்பில் 4 பற்களும் மண்டையோட்டில் 12 அல்லது 13 பற்களும் தாடையெலும்பில் 14 அல்லது 15 பற்களும் கொண்டதாக இதன் பல்லமைப்புக் காணப்படும்.

குள்ள முதலைகளில் கூர்ங்குள்ள முதலை (O. tetraspis) நிறங் குறைந்தும் மூஞ்சுப் பகுதி நீண்டு, ஒடுங்கி, கூரிய அமைப்பைக் கொண்டும் காணப்படும். கவசக் குள்ளமுதலை (O. osborni) ஏனையவற்றை விடக் கூடுதலாக முட்தோல் கவச அமைப்புக்களைக் கொண்டிருக்கும்.

வாழிடமும் பரவலும்

தொகு

குள்ள முதலைகள் சகாராப் பாலைவனத்தை அண்டிய மேற்காபிரிக்கா மற்றும் நடு ஆபிரிக்காவின் மேற்குப் பகுதி என்பவற்றின் அயனமண்டலத் தாழ்நிலங்களில் பரவிக் காணப்படுகின்றன. மேற்கில் செனெகல் முதல் கிழக்கில் மத்திய ஆபிரிக்கக் குடியரசு மற்றும் தெற்கில் அங்கோலா வரை பரவிக் காணப்படும் இவ்வினம் கூர்மூஞ்சு முதலை வாழும் அதே இடங்களிலேயே காணப்படுகிறது. இதன் துணையினமான கூர்ங்குள்ள முதலை (O. t. tetraspis) இப்பரவல் மண்டலத்தின் மேற்குப் புறமாகக் காணப்படும் அதேவேளை கவசக் குள்ள முதலை (O. t. osborni) பெரும்பாலும் கொங்கோ மக்களாட்சிக் குடியரசின் மழைக்காடுகளிலேயே காணப்படுகிறது.

குள்ள முதலை இனத்தின் தனியன்கள் உவர் சதுப்பு நிலங்களில் நிலையாக உள்ள குளங்களிலும் மழைக்காடுகளில் உள்ள மெதுவாக ஓடும் ஆறுகளிலும் காணப்படுகின்றன. எனினும், கருமுதலைகள் சவன்னா வெளியில் ஆங்காங்கே காணப்படும் குட்டைகளிலும், குழிகளிலும் சிலவேளைகளில் காணப்படுவதாகக் கூறப்படுகிறது.

சூழலும் நடத்தையும்

தொகு

குள்ள முதலை மெதுவான நடத்தையுடையதும் கோழைத்தனமானதும் பொதுவாக இரவில் உலவுவதுமான ஊர்வன விலங்காகும். ஏனைய இன முதலைகளைப் போலவே குளௌள முதலையும் முள்ளந்தண்டுளிகள், மூட்டுக்காலிகள் போன்ற பெரும் முள்ளந்தண்டிலிகள் என்பவற்றையும் ஏற்கனவே செத்துக் காணப்படும் விலங்குகளின் இறைச்சியையும் உட்கொள்ளும். சற்று உள்ளார்ந்த நிலப் பகுதிகளில் சிலவேளைகள் இரை தேடலில் ஈடுபட்ட போதிலும் முதன்மையாக இவை இரை தேடுவது நீர்நிலைகளுக்கு அருகிலாகும். மழைக் காலங்களில் இவை திடீரென உள்ளார்ந்த நிலப் பகுதிகளில் இரை தேடும் சாத்தியமும் உள்ளது.

கொங்கோ வடிநிலப் பகுதியில் வாழும் குள்ள முதலைத் துணையினம் மழைக் காலங்களில் ஏற்படும் வெள்ளப் பெருக்கினால் அடித்து வரப்படும் மீன்களை உட்கொள்வதனால் அது காலத்துக்கேற்ற உணவுப் பழக்கத்தைக் கொண்டுள்ளது. உணவு குறைவாகக் கிடைக்கும் வறட்சியான காலங்களில் அவ்வினம் மூட்டுக்காலிகளை உட்கொள்ளும். அப்போது அது உள்ளெடுக்கும் உணவின் அளவு ஏனைய காலங்களிலும் குறைவாகக் காணப்படும்.

இரவில் உலவும் தன்மை காரணமாக, குள்ள முதலைகள் பகற்பொழுதில் குழிகளைத் தோண்டி அவற்றில் தம்மை மறைத்துக்கொள்ளும். சிலவேளைகளில் அவ்வாறான குழிகள் ஒன்றுடனொன்று இணைந்த வழிகள் காணப்படுவதுண்டு. அவ்வாறு தம்மை மறைத்துக் கொள்வதற்குத் தேவையான தகவு நிலைகள் காணப்படாதவிடத்து, இவை வாழும் குளங்களுக்கு மேலாக வளர்ந்து தொங்கும் மர வேர்களினிடையே மறைந்துகொள்ளும்.

இனப்பெருக்கம்

தொகு
 
வட கரொலைனா விலங்கினக் காட்சியகத்திலுள்ள கருமுதலையொன்று

இவை இனப்பெருக்கக் காலத்தின்போது மாத்திரமே ஒன்றுக்கொன்று நெருங்கித் தொடர்புறும். மே-யூன் காலப் பகுதியில் ஏற்படும் மழைக் காலம் தொடங்கும்போது கருமுதலைப் பெண் விலங்குகள் கூடுகளை அமைத்துக்கொள்ளும். நீர்நிலைகளுக்கு அருகில் இலை தழைகளைக் கொண்டு அமைக்கப்படும் அக்கூடுகளில் தாவரப் பகுதிகள் உக்கும்போது வெளியேறும் வெப்பம் காரணமாக முட்டைகள் பொரிக்கும். பொதுவாக கிட்டத்தட்ட 10 முட்டைகள் என பெண் கருமுதலைகள் பொதுவாக மிகக் குறைந்த எண்ணிக்கையான முட்டைகளையே இடும். எனினும் சிலவேளைகளில் 20 முட்டைகள் வரையிலும் இடுவதுண்டு. முட்டைகள் பொரிப்பதற்கு 85 முதல் 105 நாட்கள் வரை செல்லும்.

முட்டையிலிருந்து வெளிவரும்போது குஞ்சின் நீளம் 28 சதம மீட்டர் இருக்கும். அடைகாக்கும் காலத்தில் பெண் விலங்கே கூட்டைக் காக்கும். குஞ்சுகள் பொரித்த பின்னர் ஏனைய முதலை இனங்களைப் போலவே கொன்றுண்ணிகளான பறவைகள், மீன்கள், முலையூட்டிகள், ஊர்வன மற்றும் ஏனைய முதலைகள் என்பவற்றிடமிருந்து குறிப்பிடத் தக்க காலம் வரையில் தன் குஞ்சுகளைப் பாதுகாக்கும்.

பாதுகாப்பு

தொகு

ஏனைய முதலை இனங்களைப் போலன்றி, குள்ள முதலைகள் பற்றி மிகக் குறைவாகவே அறியப்பட்டுள்ளது. அதன் காரணமாக, பெருகி வரும் சனத் தொகைக்குத் தேவையான வகையில் சூழற் பகுதிகள் மாற்றப்படும் போது அதற்கேற்றாற்போலக் குள்ள முதலைகளை எவ்வாறு பாதுகாப்பதென்பதைக் காப்பாளர்கள் சரிவர அறியாதுள்ளனர். கணக்கெடுப்புத் தரவுகள் கிடைக்கும்போது, இறைச்சிக்காக வேட்டையாடப்படுதல் மற்றும் காடழித்தலினால் ஏற்படும் வாழிட இழப்பு என்பன காரணமாக இவற்றின் எண்ணிக்கை குறைவடைந்திருப்பதைக் காணக்கூடியதாக உள்ளது. எனினும், இது பெரிதும் பரவி வாழ்வதாலும் ஏராளமான எண்ணிக்கையிற் காணப்படுவதாலும் ஏனைய காட்டு விலங்குகளைப் போல் வேகமாக அருகும் சாத்தியம் இல்லை.

உள்ளூர்த் தோற் கைத்தொழில்களில் இவற்றின் தோல் பயன்படுத்தப்பட்ட போதிலும் அவ்வுற்பத்திகள் மிகவும் தரம் குறைந்தனவாகவே காணப்படுகின்றன. அதனால், இவற்றைக் காப்பகத்தில் வளர்த்தல் அல்லது இவற்றைச் சரியாகப் பயன்படுத்துதற் திட்டங்கள் வெகுவாக வெற்றியளிப்பதில்லை.

வகைப்படுத்தல்

தொகு
 
எகிப்தின் அஸ்வான் பகுதியில் உள்ள நூபிய கிராமமொன்றில் காணப்படும் இரு கருமுதலைகள்

கருமுதலைகளில் மூன்று இனங்கள் அடையாளங் காணப்பட்டுள்ளன. அவற்றுள் கூர்ங்கருமுதலை, கவசக்கருமுதலை தவிர்ந்த மற்றைய இனம் இன்னும் சரியாகப் பெயர் குறிக்கப்படவில்லை.

இருசொற் பெயர்க் காரணம்

தொகு

குள்ள முதலைப் பேரினத்தின் விலங்கியற் பெயரீடு இலத்தீன் மொழியில் Osteolaemus என்று, அதாவது "என்புத் தொண்டையன்" என்றே காணப்படுகிறது. இச்சொல் பண்டைய கிரேக்க மொழியில் οστεον (எலும்பு) என்பதையும் λαιμος (தொண்டை) என்பதையும் இணைத்துப் பெறப்பட்டதாகும். இப்பெயரீட்டுக்குக் காரணம் இவற்றின் கழுத்திலும் வயிற்றிலும் காணப்படும் செதில்களுக்குக் கீழே முட்தோல் அமைப்புக் காணப்படுவதனாலாகும்.

இவ்வினத்துக்கான பெயரில் காணப்படும் 'tetraspis என்பதன் பொருள் "நான்கு கேடயங்கள்" என்பதாகும். இச்சொல்லும் பண்டைய கிரேக்க மொழியில் τετρα (நான்கு) என்பதையும் ασπις (கேடயம்) என்பதையும் இணைத்துப் பெறப்பட்டதாகும். இதற்குக் காரணம் இவற்றின் கழுத்துக்குப் பின்புறமாக கேடயங்கள் போன்ற நான்கு பெருஞ் செதில்கள் காணப்படுவதாகும்.

குறிப்புக்களும் கூடுதல் வாசிப்பும்

தொகு
 
விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Osteolaemus tetraspis
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
  1. Crocodile Specialist Group (1996). "Osteolaemus tetraspis". IUCN Red List of Threatened Species 1996: e.T15635A4931429. doi:10.2305/IUCN.UK.1996.RLTS.T15635A4931429.en. https://www.iucnredlist.org/species/15635/4931429. பார்த்த நாள்: 19 November 2021. 
  2. "Appendices | CITES". cites.org. பார்க்கப்பட்ட நாள் 2022-01-14.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குள்ள_முதலை&oldid=3603853" இலிருந்து மீள்விக்கப்பட்டது