கூகிள் வரலாறு

(கூகுள் வரலாறு இலிருந்து வழிமாற்றப்பட்டது)

கூகிள் ஒரு பிரபலமான தேடுபொறியாகும்.[1][2][3]

கூகிள் ஆரம்ப வரலாறு

தொகு

கூகிள் 1996 ஆம் வருடம் சனவரி மாதம், லாரி பேஜ் (Larry Page) மற்றும் அவரது சக மாணவரான சேர்ஜி பிரின் (Sergey Brin) என்பவரும் தங்கள் கலாநிதிப் பட்டப் படிப்பிற்காக (Ph.D.) கலிபோர்னியாவிலுள்ள ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தினால் வழங்கப்பட்ட ஆராய்ச்சிக்கான தலைப்பின் (இணையங்கள் இடையிலான கணித தொடர்பு) முடிவில் தோன்றியதாகும். ஆரம்பத்தில் லாரி பேஜின் ஆராய்ச்சிக்கான விடயமாக மட்டுமே இது இருந்த போதிலும், வெகு விரைவிலேயே சக மாணவரும் நெருங்கிய நண்பருமான சேர்ஜி பிரின் இணைந்து கொண்டார். இவர்கள் இருவரும் தமது ஆய்வை இணைய தேடுபொறிக்கான ஒரு ஆய்வாக முன்னெடுத்தனர். இவர்கள் தாம் சேகரித்த தகவல்களின்படி தேடுபொறியில் தேடப்படும் விடயம் எந்த இணைய பக்கங்களில் உள்ளது என்பதையும் அதன் தொடர்புகளையும் அலசி ஆராய்ந்து தேடுபதிலாக பட்டியலிடுவதே சிறந்த முறை எனவும் முடிவு செய்தனர். இது அப்போது பாவனையில் இருந்த தேடுபொறி தனது தேடும் விடயத்தை எந்த இணையப் பக்கம் அதிகம் கொண்டிருந்ததோ அதன் எண்ணிக்கை வரிசையில் (இறங்கு முகமான வரிசை) பதிலாக (கணினியின் திரையில்) கொடுத்ததை விட, தமது தேடுகருகியானது தேடிய விடையத்தின் பக்கங்களை அலசி தேடுபதிலாக வழங்கும் முறை சிறப்பான தொழினுட்பம் என்பதில் நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தார்கள். இவர்கள் தமது ஆராய்ச்சிக்கு சிறிய தேடு பொறி ராங்டெக்ஸ்(RankDex) வேலைத் திட்டத்தில் இறங்கியும் இருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.

தேடப்படும் விடயம் அடங்கிய இணையப் பக்கங்களினால் அதிகம் எந்த ஒரு இணையப் பக்கம் இணைக்கப்படுகின்றதோ அதுவே தேடப்படும் விடயத்தின் தொடர்பான பதில் என தமது ஆராய்ச்சியை நியாயப்படுத்தினர். இந்த ஆராய்ச்சி ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழக பட்டப் படிப்புடன் சம்பந்தமான ஆராய்ச்சி என்பதால் தமது விதிகளை அங்கு பரீட்சித்தும் பார்த்ததோடு கூகிள் தோன்றவும் அடிகோலினர். ஆரம்பத்தில் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் இணையப் பக்கங்களை தேடுவதற்காக google.stanford.edu என்ற பெயர் பாவிக்கப்பட்ட போதிலும் பின்னர் கூகிள்.கொம் (google.com) என 1997ம் ஆண்டு செப்ரம்பர் 15ம் நாள் பதிவு செய்யப்பட்டதுடன் 1998 செப்ரம்பர் 15ம் நாள் கூகிள் தனியார் நிறுவனமாகவும் பதியப்பட்டது. 1998 செப்ரம்பர் 7இல் நண்பர் ஒருவரின் கார்த் தரிப்பிட கொட்டகையில் கூகிள் வர்த்தக நோக்குடன் ஆரம்பிக்கப்பட்டது. புதிய நிறுவனத்திற்கு முதலிடுவதில் பலரையும் அணுகி ஒரு வழியாக இறுதியில் 1.1 மில்லியன் டொலர்களை சேர்த்து கொண்டனர்.

மேலும், இவர்கள் ஆரம்பத்தில் மிக தீவிரமாக கூகோல்.கொம் (googol.com) என பெயர் சூட்டுவதில் மிகுந்த ஆர்வமாக இருந்தனர். கூகோல் என்பதன் அர்த்தம் 1 ஐ தொடர்ந்து வரும் 100 பூச்சியங்கள் கொண்ட எண்ணைக் குறிக்கும் பெயராகும். ஆனால், அது சிலிக்கன் பள்ளத்தாக்கு (Silicon Valley) பொறியியலாளர் ஒருவரால் ஏற்கனவே பதிவுசெய்யப்பட்டிருந்ததுடன் அந்தபெயரை அவர் அப்போது விட்டுக் கொடுக்கவும் சம்மதிக்கவில்லை. எனவே, இவர்கள் தமது நிறுவனத்திற்கு தீவிரமாக பெயர் தேடும் போது தவறுதலாக தட்டச்சு செய்தபோது பிறந்ததே "கூகிள்" என்ற புதிய சொல். கார் கொட்டகையில் இருந்து இந்த நிறுவனத்தின் அலுவலகங்கள் 1999ஆம் மார்ச் மாதம் சிலிக்கன் பள்ளத்தாக்கிற்கு மாற்றலாகின. அங்கு வெவ்வேறு இரு இடங்களில் "கூகிள்" இயங்கிய போதிலும் விரைவான வருவாய், வளர்ச்சி காரணமாக பெரிய கட்டிட தொகுதிக்கு வாடகை அடிப்படையில் 2003இல் மாற்றலாயிற்று. அன்றிலிருந்து அதே இடத்திலேயே இருப்பதுடன் அக் கட்டிடத் தொகுதி கூகிள்பிளெக்ஸ் (googolplex) எனவும் பெயர் பெற்றது. பின்பு 2006 இல் 319 மில்லியன் டொலர்களை கொடுத்து அந்த கட்டிடத்தொகுதியை கூகிள் கொள்முதல் செய்து கொண்டது.

கூகிள் தனது எளிமையான தேடி மூலமாக அடிக்கடி உபயோகிக்கும் இணைய பாவனையாளர்களுடன் புதிது புதிதாகவும் பலரையும் கவரத் தொடங்கியது. தேடுபொறியில் தேடப்படும் சொற்களுடன் தொடர்பான விளம்பரங்களை 2000ஆம் ஆண்டில் இருந்து கூகிள் சேர்க்கத் தொடங்கியதோடு விளம்பரங்கள் இணைப் பக்கங்களின் அமைப்பை குலைக்காமலும், இணைப் பக்கங்கள் கணினி திரைகளில் விரைவாக தோன்று வதற்காகவும் ஆரம்பத்தில் எழுத்துருக்களில் மட்டும் வடிவமைக்கப் பட்டிருந்தன. தேடுபொறியில் தேடலை ஒத்த விளம்பரங்கள் கேள்வி மூலமாக அல்லது சொடுக்கப்படும் விகிதத்திலும் விற்கப்படுவதுடன் இவற்றின் ஆரம்ப விலை 0.05 டொலராகவும் உள்ளது. இந்த தேடு விடையத்தை ஒத்த விளம்பரத்தினை இணையத் தளங்களில் காண்பிக்கும் நுட்பமானது Goto.com என்ற நிறுவனமே முன்னோடிகளாக இருந்தார்கள். கோட்டு.கொம் என்ற இதன் பெயர் "ஒவேச்சர் சேர்விசஸ்" (Overture Services) ஆகவும் பின்நாளில் யாகூ! இனால் கொள்முதல் செய்யப்பட்டு "யாகூ சேர்ச் மாக்கெற்றிங்" (Yahoo! Search Marketing) ஆயிற்று. கூகிளுடன் போட்டி ஆகி இருந்த பல புதிய நிறுவனங்களும் இணையத்தள சந்தையில் தோற்று விட "கூகிள்" லாபமீட்டுவதுடன் உறுதியாக வெற்றியீட்டி வருகிறது.

ஆரம்பத்தில் "கூகோல்" (googol) என்பது அதன் அர்த்தம் கண்டு விரும்பப்பட்ட போதிலும் எழுத்துப் பிழைகளுடனான "கூகிள்" என்பது மிகப் பிரபலம் ஆயிற்று. இன்று பெரும்பாலும் ஒவ்வொரு மொழியிலும் அதிகம் பேசப்படும் வினைச் சொல்லாக மாறி விட்ட இதை ஒக்ஸ்ஃபோர்ட் அகராதி 2006இல் சேர்த்ததுடன் அதனை “கூகிள் தேடுபொறியைப் பாவித்து இணையத்தில் தகவல்களைப் பெறுதல்” என்று விளக்கமளிக்கிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. The Original GOOGLE Computer Storage (Page and Brin, 1996) பரணிடப்பட்டது அக்டோபர் 28, 2016 at the வந்தவழி இயந்திரம் Stanford Computer Science Computer History Display
  2. Fisher, Adam (July 10, 2018). "Brin, Page, and Mayer on the Accidental Birth of the Company that Changed Everything". Vanity Fair. பார்க்கப்பட்ட நாள் 23 August 2019.
  3. McHugh, Josh (1 January 2003). "Google vs. Evil". Wired. பார்க்கப்பட்ட நாள் 24 August 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கூகிள்_வரலாறு&oldid=3924099" இலிருந்து மீள்விக்கப்பட்டது