கே. ஆர். கௌரி அம்மா
கே. ஆர். கௌரி அம்மா (K. R. Gowri Amma, பிறப்பு:14 சூலை 1919 - இறப்பு:11 மே 2021) கேரளாவைச் சேர்ந்த அரசியல்வாதி ஆவார். ஜனாதிபத்திய சம்ரக்ஷண சமிதி (மக்களாட்சிப் பாதுகாப்புப் பேரவை, JSS) கட்சியின் தலைவர். இக்கட்சி தொடங்குவதற்கு முன்னதாக கேரள கம்யூனிஸ்ட் கட்சியில் முனைப்பாக ஈடுபட்டிருந்தார். ஈழவர் இன மக்களில் சட்டம் படித்த முதல் பெண் இவராவார். 1957, 1967, 1980, 1987 ஆண்டுகளில் கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சியிலும் 2001 முதல் 2006 வரை காங்கிரஸ் கட்சியின் ஆட்சியிலும் அமைச்சர் பதவி வகித்தார்.[1] கே. ஆர். கௌரியம்மா தனது 99வது பிறந்தநாளை 1 சூலை 2018 அன்று ஆலப்புழாவில் கொண்டாடினார்.[2]
கே. ஆர். கௌரி அம்மா | |
---|---|
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | சூலை 14, 1919 பட்டணக்காடு, ஆலப்புழா, கேரளா, இந்தியா |
இறப்பு | 11 மே 2021 திருவனந்தபுரம் |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | தலைவர் ஜனாதிபத்திய சம்ரக்ஷண சமிதி |
துணைவர் | டி. வி. தாமஸ் (மணமுறிவு) |
வேலை | அரசியல்வாதி |
வாழ்க்கைக் குறிப்பு
தொகுகேரளாவின் ஆலப்புழா மாவட்டத்தைச் சேர்ந்த பட்டணக்காடு கிராமத்தில் கே. ஏ. ராமன், பார்வதி அம்மா ஆகியோருக்கு ஏழாவது மகளாகப் பிறந்தார்.[3] தனது பள்ளிப் படிப்பைத் துறவூர் மற்றும் சேர்த்தலா ஆகிய ஊர்களிலுள்ள பள்ளிகளிலும், பட்டப்படிப்பை எர்ணாகுளத்திலுள்ள மகாராஜா கல்லூரியிலும் படித்தார். சட்டக் கல்வியை எர்ணாகுளம் அரசு சட்டக் கல்லூரியில் பயின்றார்.[3]
அரசியல் வாழ்க்கை
தொகுகேரளாவின் பழம்பெரும் அரசியல்வாதிகளில் கௌரி அம்மாவும் ஒருவர்.[1] பெண்கள் அரசியலில் பங்கேற்பது அரிதாக இருந்த அக்காலத்தில் தொழிற்சங்கத் தலைவரான தனது மூத்த சகோதரர் சுகுமாரனது தாக்கத்தால் அரசியலில் ஈடுபாடு கொண்டார். தொழிற்சங்கம் மற்றும் உழவர் இயக்கங்களில் செயற்பாடுகளில் பங்கேற்றுத் தன் அரசியல் வாழ்க்கைத் தொடங்கினார். அரசியல் போராட்டங்களில் பங்கேற்றுப் பலமுறை கைதாகி சிறையில் அடைக்கப்பட்டார்.[4]
1952 மற்றும் 1954 ஆண்டுகளில் திருவிதாங்கூர் சட்டப் பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1957 இல் ஈ. எம். எஸ். நம்பூதிரிப்பாட்டின் கேரள அமைச்சரவையில் நிதியமைச்சராக இருந்தார். அதே ஆண்டில் கேரளாவின் மற்றொரு முக்கிய அரசியல்வாதியும் அமைச்சருமாக இருந்த டி. வி. தாமசை மணந்தார். மார்ச் 1967 முதல் அக்டோபர் 1969 வரை மீண்டும் ஆட்சி அமைத்த ஈ. எம். எஸ் அமைச்சரவையில் அமைச்சராக பொறுப்பேற்றிருந்தார். இவரது முக்கியமான அரசியல் சாதனைகளில் கேரள நிலச் சீர்திருத்தம் ஒன்றாகும்.
1964 இல் கம்யூனிஸ்ட் கட்சி இரண்டாகப் பிளவுபட்டபோது கௌரி அம்மா புதிதாகத் தொடங்கப்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் இணைந்தார். ஆனால் அவரது கணவர் பழைய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்தார்.[1] இதனால் இருவருக்குமிடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டு இருவரும் வாழ்க்கையில் பிரிய நேரிட்டது.
சனவரி 1980 முதல் அக்டோபர் 1981 வரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சியில் அமைச்சராகப் பதவி வகித்தார். 1987 தேர்தலில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் முதல் அமைச்சருக்கான வேட்பாளராக முன்னிருத்தப்பட்டாலும், தேர்தலில் அக்கட்சி வெற்றி பெற்ற பின்னர் முதலமைச்சராக்கப்படாமல் அவருக்கு அமைச்சர் பொறுப்பு மட்டுமே வழங்கப்பட்டது.
1994 இல் கட்சிக்கு எதிராக செயற்பட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு இவர் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்[3] இதைத் தொடர்ந்து இவர் ஜனாதிபத்திய சம்ரக்ஷண சமிதி (JSS) என்ற புதுக்கட்சியைத் தொடங்கினார்.[5] இவரது கட்சி இடதுசாரி ஜனநாயக முன்னணிக்கு எதிரான ஐக்கிய ஜனநாயக முன்னணியுடன் கூட்டணி அமைத்தது. ஏ. கே. அந்தோணி மற்றும் உம்மன் சாண்டி இருவரின் அமைச்சரவையிலும் அமைச்சராகப் பொறுப்பேற்றிருந்தார்.[6]
1952 மற்றும் 1954 ஆம் ஆண்டுகளில் திருவாங்கூர்-கொச்சின் சட்டப் பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து இவர் 1957 இல் கேரள சட்டப் பேரவை உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதிலிருந்து தொடர்ந்து இவர் கேரள சட்டப் பேரவை உறுப்பினராக 1960, ’67, ’70, ’82, ’87, ’91, மற்றும் 2001 ஆண்டுகளில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இவர் ஏற்றுக்கொண்டிருந்த வேறுசில பொறுப்புகள்:
- கேரள விவசாயிகள் சங்கத் (Kerala Karshaka Sangam) தலைவர் (1960-1984).
- கேரள மகிளா சங்கத் தலைவர் (1967-1976)
- கேரள மகிளா சங்கச் செயலாளர் (1976-1987)
- சிபிஐ கட்சியின் மாநிலக் குழுவின் செயல் உறுப்பினர்
- ஜனாதிபத்திய சம்ரக்ஷண சமிதி -கட்சி உருவாக்கம் (1994)
- ஜனாதிபத்திய சம்ரக்ஷண சமிதி கட்சியின் பொதுச் செயலாளர்.
மறைவு
தொகுகே. ஆர். கௌரி அம்மா தமது 101 அகவையில் வயது மூப்பு நோயால் 11 மே 2021 அன்று திருவனந்தபுரம் மருத்துவமனையில் காலமானார்.[7][8]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 "The Pioneers: K.R. Gouri Amma". Frontline. 24 May 2008. Archived from the original on 2 ஜூன் 2011. பார்க்கப்பட்ட நாள் 12 February 2010.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ Veteran communist leader K R Gouri celebrates 99 yrs
- ↑ 3.0 3.1 3.2 "K.R GOWRI AMMA". webindia123.com. பார்க்கப்பட்ட நாள் 12 February 2010.
- ↑ "MINISTER FOR AGRICULTURE AND COIR". niyamasabha.org. பார்க்கப்பட்ட நாள் 12 February 2010.
- ↑ "86-year-old Kerala minister ready for battle". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 24 March 2006. http://timesofindia.indiatimes.com/articleshow/1463071.cms. பார்த்த நாள்: 12 February 2010.
- ↑ "K.R. Gowri Amma success story". mahilalu.com. Archived from the original on 4 பிப்ரவரி 2010. பார்க்கப்பட்ட நாள் 12 February 2010.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ கேரளா மூத்த பொதுவுடமைக் கட்சித் தலைவர் கௌரி அம்மாள் மறைவு
- ↑ Kerala: Legendary Communist leader K R Gowri Amma passes away
வெளி இணைப்புகள்
தொகு- முதல் கேரள அரசின் 50 ஆவது ஆண்டு பரணிடப்பட்டது 2013-09-15 at the வந்தவழி இயந்திரம்