கொட்டகுளம் வீமன் நன்னன்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
கொ.வீ.நன்னன்-கொட்டகுளம் வீமன் நன்னன் (K. V. Nannan, பிறப்பு: செப்டம்பர் 16, 1934) ஓர் இந்திய அரசியல்வாதியும், எழுத்தாளரும் ஆவார். இவர் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தீவிர தொண்டரும், செங்கம் சட்டப்பேரவை தொகுதியின் முன்னாள் உறுப்பினருமாவார். இவர் 1996, மே 22 இல் செங்கம் தொகுதியின், சட்டப்பேரவை உறுப்பினராக பொறுப்பேற்றார். கொ. வீ. நன்னன், தமிழ் நாடகம், கதை, கவிதை பணிகளில் ஈடுபாடு கொண்டவர். பாவலர் என்று அன்போடு அழைக்கப்படுகின்றார். புரட்சிப்பாவலர் என்ற பட்டம் பெற்றவர்.[சான்று தேவை] இன்றும் இலக்கியப்பணியில் தீராத ஆர்வத்துடன் பல புதிய நூல்களை இயற்றிவருகிறார்.
இளமைப்பருவம்
தொகுதிருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டம், புதுப்பாளையம் ஒன்றியம், கொட்டகுளம் கிராமத்தில் 1934 நவம்பர் 16ம் தேதி வீமன் மற்றும் முத்தாலம்மாள் தம்பதிக்கு முதலாவது மகனாக பிறந்தார். இவரது தாத்தா முத்துவின் ஊக்கத்தின் காரணமாக தமிழ் இலக்கியத்தின் மீது ஆர்வம் செலுத்தத் தொடங்கினார். இளம்வயது முதல் கவிதை புனைவதில் திறன் கொண்டவராகத் திகழ்ந்தார். கொட்டகுளம் அரசு ஆரம்பப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரை படித்தார். வறுமையின் காரணமாக மேலே படிக்க முடியாத சூழ்நிலையில் பள்ளிப்படிப்பை நிறுத்திக் கொள்ள நேர்ந்துள்ளது.
அரசியல்
தொகுசமுதாயத்தில் காணப்படும் ஏற்றத்தாழ்வுகளை போக்குவதற்காக சமூக சீர்த்திருத்தங்களில் ஈடுபாடு கொண்டு செயல்படத் தொடங்கினார். ஆரம்ப காலத்தில் தந்தை பெரியாரின் பேச்சால் ஈர்க்கப்பட்டு, திராவிடர் கழகத்தில் தன்னை இணைத்து கொண்டார். பெரியாரின் கொள்கைகள், தத்துவங்கள், சமூகசீர்த்திருத்த சிந்தனைகளை பரப்புவதற்காக நாடகம், பாடல்கள், கவிதைகள் இயற்றி கிராமம் கிராமமாக சென்று பிரசாரம் செய்தார். தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் செய்து திராவிடர் இயக்கக் கொள்கைகளைப் பரப்பிவந்தார்.
பின்னர், அறிஞர் அண்ணா தலைமையில் அமைந்த திராவிடர் முன்னேற்றக் கழகத்துடன் தன்னை இணைத்துக் கொண்டு சமூகப்பணிகளுடன் அரசியல் பணிகளிலும் ஈடுபடத் தொடங்கினார். 1970களில் அழகிரி கலைக்குழுவை அமைத்து அன்பானந்தம், கோபால் ஆகியோருடன் இணைந்து ஊர் ஊராக சென்று திராவிட இயக்க கொள்கைகளை பாடல்கள், நாடகம், கவிதைகள் மூலம் பிரசாரம் செய்துவந்தார்.
1983ல் செங்கம் நகர பொருளாளராக நியமிக்கப்பட்டார். 1996ம் ஆண்டு நடந்த தேர்தலில், திராவிட முன்னேற்றக்க கழக வேட்பாளராக, செங்கம் தொகுதியில் போட்டியிட்டு 26 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக கூட்டணி வேட்பாளர் செ. கு. தமிழரசனை தோற்கடித்தார். நன்னன் கட்சியின் மாவட்ட துணைப்பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார்.
குடும்பம்
தொகுகொட்டகுளம் கிராமத்தை சேர்ந்த வெள்ளையம்மாளை 1971ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு முத்துமணி என்ற மகன் உள்ளார். 1974ம் ஆண்டு இவரது மனைவி வெள்ளையம்மாள் நோய்வாய்ப்பட்டு இறந்தார். இவரது தந்தை வீமன், இராணுவ வீரர். 107 வயது வரை வாழ்ந்து மறைந்தவர். 1919 ஆம் ஆண்டு பிறந்த தாய் முத்தாலம்மாள், திசம்பர் 23, 2010 அன்று காலமானார். நன்னன் மற்றும் வெள்ளையம்மாள் தம்பதிக்கு முத்துமணி என்ற மகன் உள்ளார். இவர் பி. எஸ். சி. படித்துவிட்டு பத்திரிகையாளராக பணியாற்றி வருகிறார். முத்துமணி பதிப்பகத்தின் மூலம் தனது தந்தை நன்னன் எழுதிய 'அருள்மழையாய்', 'சிகப்புக்குயில்',' வெள்ளிக்குடம்' ஆகிய நூல்களை வெளியிட்டுள்ளார். நன்னனின் மருமகள் கல்யாணி புகழ்பெற்ற கல்வியாளர்.
புத்தகங்கள்
தொகுதிராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான கலைஞர் மு.கருணாநிதியை பாராட்டி 'அருள்மழையாய்' என்ற நூலை 2010 ஆம் ஆண்டில் இயற்றியுள்ளார். இதை தொடர்ந்து சமூகத்தில் ஜாதியால் ஏற்படும் தீமைகளை விளக்கும் 'சிவப்புக்குயில்' மற்றும் 'வெள்ளிக்குடம்' ஆகிய குறுங்காவிய நூல்களை 2012 ஆம் ஆண்டில் வெளியிட்டுள்ளார். ஏப்ரல் 15, 2012 அன்று செங்கத்தில் நடந்தவிழாவில் இந்நூல்களை இலக்கியச்செல்வர் சிலம்பொலி செல்லப்பன் வெளியிட்டார். மூன்று நூல்களையும் பெங்களூரை சேர்ந்த முத்துமணி பதிப்பகம் வெளியிட்டுள்ளது.